என் மலர்
நீங்கள் தேடியது "Uthirakosamangai Temple"
- பல்வேறு அபிஷேகங்களுக்கு பின்னர் பச்சை மரகத நடராஜர் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அருள்பாலித்தார்.
- மரகத நடராஜர் பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று முன்தினம் அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டிருந்த சந்தனம் களையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்படி காலையில் சந்தனம் களையப்பட்டு, பல்வேறு அபிஷேக தீபாராதனைகளுக்கு பின்னர் பச்சை மரகத நடராஜர் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அருள்பாலித்தார்.
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி நடைபெற்றது. பின்னர் நடைசாத்தப்பட்ட நிலையில் அதிகாலை 3 மணி அளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டது.
அதிகாலை 4.30 மணி அளவில் அருணோதய காலத்தில் அபூர்வ பச்சை மரகத நடராஜர் திருமேனி மீது புதிய சுத்தமான சந்தனம் பூசப்பட்டது. பச்சை மரகத நடராஜர் சிலை முழுவதும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நன்கு அரைக்கப்பட்ட சந்தனம் மென்மையாக பூசி வைக்கப்பட்டது. இதன்பின்னர் மரகத நடராஜருக்கு ஆருத்ரா சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
மேலும் மரகத நடராஜர் மனோரஞ்சிதம் உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சந்தனம் பூசப்பட்ட மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவிலில் கூத்தர் பெருமாள் திருவீதி உலாவும், மாலை பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
இரவு 9 மணிக்கு மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்து, பஞ்சமூர்த்தி புறப்பாடு வெள்ளி ரிஷப சேவை நடைபெற்றது. சிவனுக்கு உகந்தநாளாக கருதப்படும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜரை தரிசிப்பது விஷேசம் என்பதாலும், விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததாலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.
ஆருத்ரா தரிசன ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று மரகத நடராஜரின் மீது மீண்டும் சந்தனக்காப்பு பூசப்படுகிறது.
ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணிய தலமான திருஉத்தரகோசமங்கை கோவில். உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற பெருமை உடைய இந்த கோவிலில் மங்களநாதர், மங்களநாயகி எழுந்தருளி உள்ளனர். இங்கு நடராஜருக்கு தனிசன்னதி அமைந்துள்ளது. இந்த நடராஜர் சன்னதியில் ஆடும் திருக்கோலத்திலான ஒரே மரகத கல்லினால் ஆன அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது. மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து காப்பதற்காக மரகத நடராஜர் சிலை மீது ஆண்டு முழுவதும் சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.
வருடத்தில் ஒருநாள் சிவனுக்கு உகந்த நாளான திருவாதிரைக்கு முதல்நாள் இந்த சந்தன காப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவது வழக்கம். இதன்படி நேற்று ஆருத்ரா தரிசன விழாவையொட்டி மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று காலை 7.45 மணிக்கு நடராஜர் கோவில் நடைதிறக்கப்பட்டு 8மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தன காப்பு களையப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து மரகத நடராஜருக்கு சந்தனாதி தைலம், நெய், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், நெல்லிபொடி, பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அப்போது ஆபூர்வ மரகத நடராஜரின் திருமேனியில் ஆண்டு முழுவதும் பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் மிகுந்தது என கருதப்படுவதால் இந்த சந்தனத்தை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
அதிகாலை முதலே பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சந்தனம் களையப்பட்ட அபூர்வ பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். உள்ளூர் பக்தர்கள் தவிர வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். ரூ.10, 50, 100, 200 கட்டண தரிசன வரிசைகளில் ஏராளமான நின்று சென்று தரிசனம் செய்ததை காணமுடிந்தது.
விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி நாச்சியார் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல்பாண்டியன் தலைமையிலான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். காலை சந்தனக்காப்பு களைந்தது முதல் இரவு மீண்டும் சந்தனகாப்பு பூசும் வரை பக்தர்கள் வரிசையில் நின்று அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழாவின் நிறைவாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் அருணோதய காலத்தில் அபூர்வ மரகத நடராஜரின் மீது மீண்டும் சந்தனக்காப்பு பூசப்படுகிறது. இதையடுத்து நடராஜருக்கு பல்வேறு ஆராதனைகள் நடத்தப்படும்.
- ஆண்டுதோறும் 1 நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதி திறக்கப்படும்.
- நடராஜருக்கு 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது.
- 6-ம்தேதி மாலை மீண்டும் நடராஜர் சன்னதியானது மூடப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். இந்த கோவில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையான கோவிலாகும். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும்.
இந்த நிலையில் திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் இந்த ஆண்டின் ஆருத்ரா திருவிழாவானது கடந்த 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியதில் இருந்து தினமும் சுவாமி-அம்பாள் மற்றும் நடராஜர் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
ஆருத்ரா திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி அளவில் மரகத நடராஜர் சன்னதியானது திறக்கப்படுகின்றது. தொடர்ந்து நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனங்கள் முழுவதுமாக களையப்படுகிறது. பின்னர் நடராஜருக்கு பால், பன்னீர், மாபொடி, மஞ்சப்பொடி, திரவியப்பொடி, தேன், இளநீர் உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு 11 மணி அளவில் மீண்டும் ஆருத்ரா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெறுகின்றது. அபிஷேகம் முடிந்து 6-ம் தேதி அன்று காலை சூரிய உதய நேரத்தில் நடராஜருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகின்றன. 6-ம்தேதி மாலை மீண்டும் நடராஜர் சன்னதியானது மூடப்படுகிறது.
நாளை 5-ம் தேதி காலையிலிருந்து 6-ம் தேதி மாலை வரையிலும் மட்டும் மரகத நடராஜர் சன்னதியில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை கோவிலில் நாளை பகல் மற்றும் இரவு முழுவதும் சென்னை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கிறது.
நாளை நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜராஜேஸ்வரி நாச்சியார் ஆகியோர் மேற்பார்வையில் திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
அதுபோல் நாளை மறுநாள் திரு உத்தரகோசமங்கை கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்காக மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 1 நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதியானது பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- வருகிற 28-ந் தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- ஆண்டு முழுவதும் மரகத நடராஜர் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணியதலமான திருஉத்தரகோசமங்கை கோவில். பூலோகத்தில் தோன்றிய முதல் கோவிலான இங்கு மங்களநாதர், மங்களநாயகி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
மேலும், இங்கு எழுந்தருளி உள்ள ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை ஒலி, மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் மரகத சிலை அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.
வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இதன்படி வருகிற 28-ந் தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி காலை மரகத நடராஜர் மீது பூசப்பட்டு இருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக தொடர்ந்து பால், பன்னீர், திரவியம், தேன், மஞ்சள் பொடி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பகல் முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் களையப்பட்ட அபூர்வ மரகத நடராஜர் வைக்கப்பட்டிருக்கும்.
பின்னர் அன்றைய தினம் இரவு 11 மணிக்குமேல் ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி மறுநாள் 6-ந் தேதி அதிகாலை அருணோதய காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னதாக மீண்டும் நடராஜர் மீது சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற வரலாற்று சிறப்பு மிக்கது.
- இங்கு ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் மங்களநாதர் திருக்கோவில் உள்ளது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் மங்களநாதர் மற்றும் மங்களநாயகி அம்மன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது.
மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஆண்டு முழுவதும் இந்த சிலையின் மீது சந்தன கவசம் பூசப்பட்டு வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்தன்று சந்தனம் களைந்து பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இந்த மங்களநாதர் கோவில் சாமி சன்னதியின் முதல் பிரகாரம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முழுமை பெறாமல் காட்சி அளித்து வந்தது.
குறிப்பாக சாமி சன்னதி பிரகாரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியிலும் வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலும் பெரும் பாலான தூண்கள் மற்றும் மேல் தளங்களில் கற்கள் இல்லாமலும் முழுமை பெறாமலேயே காட்சி அளித்து வந்தது. இந்தநிலையில் பல ஆண்டுகளுக்கு மேலாக முழுமை பெறாமல் காட்சி அளித்து வந்த சாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் கோவிலின் நிரந்தர அறங்காவலர் ராமநாதபுரம் ராணி பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி நாச்சியார் முயற்சியின் பேரில் பக்தர் ஒருவரின் நன்கொடை மூலம் ரூ.1 ½ கோடி நிதியில் திருப்பணிகள் நடைபெற்றன.
கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இந்த திருப்பணியில் முதல் பிரகாரத்தில் முழுமை பெறாமல் இருந்த இடத்தில் கருங்கல்லினால் ஆன தூண்கள் வைக்கப்பட்டு உள்ளது. 4 ஆண்டுகள் முடிவில் தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளது.
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் மேற்பார்வையில் நடைபெற்று வந்த இந்த திருப்பணியில் சாமி சன்னதி முதல் பிரகாரத்தில் சுமார் 18 அடி உயரம் கொண்ட கருங்கல்லினால் ஆன 40-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டன. இதனிடையே கோவிலின் சாமி சன்னதி பிரகாரத்தை சுற்றி அமைக்கப்பட்ட தூண்களை சுற்றி கருங்கற்களினால் ஆன மேல்தளங்களும் முழுமையாக கட்டி முடித்து திருப்பணிகள் தற்போது முடிவடைந்து உள்ளன.
கோவில் உருவான காலத்தில் இருந்தே முழுமை பெறாமல் காட்சி அளித்து வந்த திருஉத்தரகோசமங்கை திருக்கோவிலில் சாமி சன்னதி பிரகாரம் தற்போது கருங்கற்களினால் ஆன தூண்கள் மற்றும் மண்டபங்கள் அமைக்கப்பட்டு முழுமை பெற்ற நிலையில் மிக அழகுற காட்சி அளிக்கிறது.
- இந்த கோவில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
- இந்த கோவிலில் மிகவும் அபூர்வ மரகத கல்லால் செய்யப்பட்ட நடராஜர் சிலை உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோச மங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் மிகவும் அபூர்வ மரகத கல்லால் செய்யப்பட்ட நடராஜர் சிலை ஒன்று உள்ளது. இதற்கு தனி சன்னதியும் இந்த கோவிலில் அமைந்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள மிகவும் தொன்மையான மற்றும் பழமையான இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தினமும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடந்த சில நாட்களாக கோவிலின் வளாகத்தில் வீடுகள் அமைப்பு போன்று ஓட்டுக் கற்களை வரிசையாக அடுக்கி வைத்து செல்கின்றனர். இதுபற்றி கோவில் குருக்கள் ஒருவர் கூறியதாவது:-
மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளதால் இங்கு வரக்கூடிய பக்தர்கள் சொந்தமாக வீடுகட்ட வேண்டும்.
தங்களது சொந்த வீடு கனவு இல்லம் ஆசை நிறைவேற மங்களநாதரிடம் பிரார்த்தனை செய்து வளாகத்தில் கற்களால் வீடுகட்டி வேண்டிக்கொள்கின்றனர். பலருக்கு வீடுகட்டும் ஆசையும் நிறைவேறி உள்ளதால் அதன் நம்பிக்கையில் பக்தர்கள் கோவில் வளாகத்தில் கற்களை வீடு போன்று அடுக்கி வைத்து செல்கின்றனர்.
இவர் அவர் கூறினார்.
- 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் பச்சை மரகதக் கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது.
- நந்தி மண்டபத்தில் உள்ள தூண்கள் புதுப்பொலிவுடன் பிரகாசமாக காட்சி அளித்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் பச்சை மரகதக் கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. தனி சன்னதியில் அமைந்துள்ள இந்த நடராஜரை தரிசிக்க திருவாதிரை ஆருத்ரா அன்று ஒரு நாள் மட்டுமே சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில் திரு உத்தரகோசமங்கை கோவிலில் உள்ள பழமையான நந்தி மண்டப பிரகாரத்தில் திருப்பணிகள் செய்யும்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நந்தி மண்டபத்தை சுற்றி உள்ள கருங்கற்களினால் ஆன தூண்களில் இருந்த பாசிகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டு பழமை மாறாமல் இருக்க சுண்ணாம்புக்கல், கடுக்காய், கருப்பட்டி உள்ளிட்டவைகளை கொண்டு அரைக்கப்பட்ட கலவையை வைத்து மண்டபத்தின் பிரகாரத்தில் உள்ள தூண்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 4 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் நந்தி மண்டபத்தின் திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இறுதி கட்டத்தை எட்டி திருப்பணிகள் செய்யப்பட்டு உள்ளதால் நந்தி மண்டபத்தில் உள்ள தூண்கள் புதுப்பொலிவுடன் பிரகாசமாக காட்சி அளித்து வருகிறது. இதை கோவிலுக்கு வரும் பக்தர்களும் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்து செல்கின்றனர்.
அடுத்த கட்டமாக சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கருங்கற்களினால் ஆன தூண்களில் திருப்பணிகள் செய்யும் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திருப்பணிகள் அனைத்தும் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் மேற்பார்வை மற்றும் ஆலோசனைப்படி நடைபெற்று வருகிறது.