search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிவது எப்போது?: பக்தர்கள் எதிர்பார்ப்பு
    X

    பகவதி அம்மன் கோவில் கருவறையின் மேற்கூரை சீரமைப்பு பணி நடைபெறுவதை படத்தில் காணலாம்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிவது எப்போது?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

    • இந்த கோவிலின் மாசிக்கொடை விழா தான் சிறப்பு.
    • திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. கடற்கரையோரமாக அமைந்துள்ள இந்த கோவில் தென்னந்தோப்புகள், மரங்கள் நிறைந்த தோட்டங்கள், வயல்வெளிகளுக்கு மத்தியில் இயற்கை எழில் சூழ்ந்து, அழகுற காட்சி அளிக்கிறது. இந்த ஊரின் பெயரைக் குறித்த விளக்கம் கோவிலுடன் தொடர்புடையதாக உள்ளது. மணல்+தைக்காடு=மண்டைக்காடு ஆனது என்றும் மந்தைகள்+ காடு= மந்தைக்காடு என்பது மருவி மண்டைக்காடு ஆனது என்றும் கூறப்படுகிறது.

    இந்த கோவிலில் நடந்த தீ விபத்தில் சேதம் அடைந்த ஓடுகளால் ஆன மேற்கூரை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியும், இன்னும் பல பணிகளும் தற்போது ரூ.1 கோடிக்கு மேல் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் நிறைவடைந்ததும் வருகிற தை மாதம் கலசாபிஷேகம் நடத்த திட்டமிட்டு குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி வினிஷ் குருக்கள் (வயது 36) கூறியதாவது:-

    இந்த கோவிலில் எங்கள் குடும்பத்தினர் தான் பரம்பரை, பரம்பரையாக பூஜை செய்து வருகிறோம். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் புற்று வடிவில் உள்ளது. புற்று வடிவான அம்மன் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்துள்ளார். பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் இந்த கோவிலின் மாசிக்கொடை விழா தான் சிறப்பு. அம்மனை நினைத்து வேண்டினால் என்ன வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    கை, கால் முடக்கம் போன்ற பிரச்சினைகளுக்கும் அம்மனை வேண்டினால் தீர்வு கிடைக்கும். தீ விபத்து சம்பவத்தின் காரணமாக அம்மன் கருவறை மேற்கூரை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. பிரசன்னம் பார்த்ததில் அம்மனுக்கு எந்த குறையும் இல்லை என்றும், அம்மனின் புகழ் உலகம் முழுவதும் பரவுவதற்காகவும், தன்னை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த தீ விபத்து நடந்துள்ளது என தெரிய வந்தது. எனது முன்னோர்கள் காலத்தில் இந்த கோவிலின் புற்று வளர்ந்து மேற்கூரையை தட்டும்போது அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களின் கனவில் அம்மன் தோன்றி எனது தலை தட்டுவதால் கோவில் மேற்கூரையை மாற்றித்தருமாறு கூறியதாக தெரிவித்திருக்கிறார்கள் என்றார்.

    கருங்கல் அருகே உள்ள தொழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண் பக்தர் பத்மலதா (வயது 55) கூறியதாவது:-

    நான் இந்த கோவிலுக்கு சிறுவயதில் இருந்தே வந்து வழிபாடு செய்கிறேன். வருடந்தோறும் பொங்கல் வழிபாட்டில் கலந்து கொள்வேன். கடந்த ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவில் பங்கேற்று பொங்கலிட்டேன். திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். எனக்கும் பல்வேறு காரியங்கள் நடந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது திருப்பணிகள் நடந்து வருவது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பணிகள் முடிந்து விரைவில் கலசாபிஷேகம் நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×