search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருப்பெயர்ச்சி"

    • குருபகவான் ஒரு முழு சுககிரகம் ஆவார்.
    • 1-ந் தேதி லட்சார்ச்சனையும், 2, 3 ஆகிய தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடக்கிறது.

    தஞ்சையை அடுத்த திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற இந்த கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும், சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர்.

    பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடப்படுகிறது. ஆனால் திட்டை கோவிலில் வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு குருபகவான் அருள்பாலித்து வருகிறார்.

    குருபகவான் ஒரு முழு சுககிரகம் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் மிக கடுமையான பாவங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தால் காப்பாற்றும் சக்தியாக குருபகவான் விளங்குகிறார். அதனால் தான் குருபார்க்க கோடி நன்மை என்பதும், குரு பார்க்க தோஷம் விலகும் என்பதும் பழமொழிகள் ஆகும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைவார். அப்போது திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.21 மணிக்கு குருபகவான் பிரவேசித்தார். இந்த நிகழ்ச்சியில் வசிஷ்டேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், தக்கார் ஆசைத்தம்பி மற்றும் கோவில் பணியாளர்கள், கிராமமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    குருப்பெயர்ச்சி விழா நேற்று இரவு நடந்தாலும் நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர். நேரம், ஆக, ஆக பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. குருப்பெயர்ச்சி விழாவுக்காக திட்டைக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    குருப்பெயர்ச்சியையொட்டி வருகிற 1-ந் தேதி(திங்கட்கிழமை) லட்சார்ச்சனையும், 2, 3 ஆகிய தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடக்கிறது.

    • குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.27 மணிக்கு பெயர்ச்சியடைந்தார்.
    • குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

    திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடந்து வருகிறது.

    இந்த ஆண்டும் குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.27 மணிக்கு பெயர்ச்சியடைந்தார். இதனையொட்டி இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடந்தது.

    முன்னதாக உலக நன்மை வேண்டி குருபகவானுக்கு 2-வது கால குருபரிகார ஹோமம் நடந்தது. அதனைத்தொடர்ந்து குருபகவானுக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது. பின்னர் குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

    மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ தெட்சிணாமூர்த்தி பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு சரியாக 11.27 மணிக்கு குருபகவான் பெயர்ச்சியடைந்த நேரத்தில் மூலவர் குருபகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்டவரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர்.

    இதேபோல தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    குருப்பெயர்ச்சி விழா நேற்று இரவு நடந்தாலும் காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர்.

    • குரு வழிபாட்டின் மூலம் குதூகலமான வாழ்க்கை அமையும்.
    • குருவை கோவிலுக்குச் சென்று நேரில் பார்த்து வழிபடுவதே சிறப்பு.

    குருப்பெயர்ச்சியன்று குருவை நாம் ஒவ்வொருவரும் கோவிலுக்குச் சென்று நேரில் பார்த்து வழிபடுவதே சிறப்பு. அதிகாலையில் சான்றோர்கள், பெரியோர்கள், ஆசிரியர்கள், குருவாக நம்மை வழிநடத்திச் செல்பவர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் ஆசி பெறுவது நல்லது.

    நமது ஜாதகத்தில் குரு வரப்போகும் இடத்தைப் பொறுத்து பெயர்ச்சிக்கு முன்னதாக அல்லது பெயர்ச்சியன்றோ எப்படி, எப்போது எங்கு வழிபடுவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எல்லா கிரகங்களையும் பெயர்ச்சிக்குப் பின்னால் தான் வழிபடுவர். 'குரு' சுபகிரகம் என்தால் நாம் பெயர்ச்சி அன்று அல்லது அதற்கு முன்னால் நமது ஜாதகப்படி யோகபலம் பெற்ற நாளில் சென்ற வழிபட்டு வரவேண்டும் என்பர். அவ்வாறு வழிபட்டால் நாளும் நல்லதே நடக்கும்.

    எல்லா தெய்வங்களுக்கும் உதவியாளர்களைக் கொண்டு அர்ச்சனைகள் செய்யலாம். ஆனால் குருவிற்கு மட்டும் தாங்களே சென்று வழிபட்டால் தான் 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப கோடி நன்மைகள் நம்மைத் தேடிவரத் தொடங்கும். இல்லையேல் யார் வழிபடச் செல்கின்றார்களோ அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

    குருப்பெயர்ச்சி பலன் அறிய இங்கே கிளிக்செய்யவும்... https://www.maalaimalar.com/rasipalan

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • தியானத்தில் இருந்து இதைச்சொல்வது நல்லது.
    • 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது.

    தேவனாம்ச ரிஷனாம்ச

    குரும் காஞ்சன ஸந்திபம்!

    புத்தி, பூதம் த்ரிலோகேஸம்

    தம் நமாமி ப்ரஹஸ்பதிம்!

    குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப் பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச்சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர் செல்வர்) படத்தின் முன்னால் வழிபாடு செய்யலாம். 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது. திருமணத் தம்பதியர் ஜோடி விளக்கு ஏற்றுவது நல்லது.

    • ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும்.
    • குரு வழிபாட்டின் மூலம் குதூகலமான வாழ்க்கை அமையும்.

    புராண காலத்தில் குருவால் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைக்கும் பாடலைப் பாருங்கள்....

    ஜென்ம ராமல் வனத்திலே

    சீதையைச் சிறை வைத்ததும்,

    தீதிலா தொரு மூன்றிலே

    துரியோதனன் படை மாண்டதும்

    இன்மை எட்டினில் வாலி

    பட்டமிழந்து போம் படியானதும்

    ஈசனார் ஒரு பத்திலே

    தலையோட்டிலே யிரந்துண்டதும்

    தருமபுத்திரர் நாலிலே

    வனவாசம் அப்படிப் போனதும்

    சத்திய மாமுனி ஆறிலே

    இரு காலிலே தளை பூண்டதும்

    வன்மை யற்றிட ராவணம் முடி

    பனிரெண்டினில் வீழ்ந்ததும்

    மன்னும் மாகுரு சாரி

    மாமனை வாழ்விலா துறமென்பவே!

    இந்தப்பாடல் மூலம் நாம் அறிந்து கொள்வது ராமர் வனவாசம் சென்ற பொழுது அவருக்கு ஜென்ம குரு ஆதிக்கம் இருந்திருக்கின்றது. அதுதான் வனவாசம் சென்றதற்கு காரணம்.

    ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும். ஆதிபத்யம் நன்றாக இருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. வழிபாடே வளர்ச்சி கூட்டும். இப்படியிருக்குமோ, அப்படியிருக்குமோ என்று மனக்குழப்பம் அடைய வேண்டாம். எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்க்கவும். நேர்மறைச் சிந்தனைகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். குரு வழிபாட்டின் மூலம் குதூகலமான வாழ்க்கை அமையும்.

    • சிறுகனூர் அருகே உள்ளது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்.
    • தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த தலமாக விளங்குகிறது.

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ளது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில். தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த தலமாக விளங்கும் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இதையொட்டி பிரம்மா மற்றும் தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்களுக்கு சிறப்பு யாகம் நாளை மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் கடம் புறப்பாடும், மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.

    இரவு 11.27 மணிக்கு குருப்பெயர்ச்சி மகா தீபாராதனை நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்து வருகின்றனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • குருப்பெயர்ச்சி நாளை மீன ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

    சோழவந்தான் அருகே குருவித்துறையில் சித்திரரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் குருபகவான் சுயம்புவாக இந்த கோவிலில் வீற்றிருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.

    இங்கு ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி நாளை(சனிக்கிழமை) இரவு 11.24 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு இடம் பெயருவதால் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று காலை 10.45 மணிக்கு மேல் ஸ்ரீதர்பட்டர், ரெங்கநாதபட்டர், சடகோபபட்டர், ஸ்ரீபாலாஜிபட்டர், ராஜாபட்டர், கோபால்பட்டர் உள்பட 12 பேர் லட்சார்ச்சனை நடத்தினர். லட்சார்ச்சனையுடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்கியது.

    நேற்று வியாழக்கிழமை என்பதால் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசித்தனர். விழாவையொட்டி சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி லட்சார்ச்சனை நடைபெறும். அதன்பிறகு இரவு 9 மணிக்கு பரிகார மகாயாகம் நடைபெறுகிறது. இரவு 11.24 மணி அளவில் மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு குரு ப்பெயர்ச்சி ஆவதால் குரு பகவானுக்கு 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் பரிகார யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெறும்.

    இதையொட்டி காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய் துறை, தீயணைப்புத் துறை, அரசு போக்குவரத்துதுறை மற்றும் அறநிலையத்துறை குருப்பெயர்ச்சிவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார்.
    • நாளை இரவு 11.24 மணிக்கு மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார்.

    சுபஸ்ரீ சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9-ந் தேதி (22.4.2023) சனிக்கிழமையன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளில் பதிகின்றது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப, குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார்.

    குரு பகவான் 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப்படுத்துவார். அந்த இடங்களின் மூலம் நமக்கு அதிகப்பலன்கள் கிடைக்கும். மேஷத்திற்கு குருப்பெயர்ச்சியாகும் நேரத்தில் சூரியன் உச்சம் பெற்று புதனுடன் இணைந்து புத-ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகின்றார். சுக்ரன் மற்றும் சனி தங்களது சொந்த வீடுகளில் பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்கள். இந்த குருப்பெயர்ச்சி நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மை அளிக்கும் பெயர்ச்சியாகவே அமையும்.

    குருவின் பார்வையைப் பெறும் மூன்று ராசிகள்: சிம்மம், துலாம், தனுசு.

    குரு தன ஸ்தானத்தைப் பார்க்கும் ராசிகள்: கடகம், கன்னி, விருச்சிகம். மேற்கண்ட ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். பணவரவு திருப்தி தரும். பதவி வாய்ப்பு கைகூடும். செல்வாக்கு உயரும்.

    மேஷத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் இடையில் வக்ரமும் பெறுகின்றார். வக்ர காலத்தில் சிலருக்கு நன்மை ஏற்படும். சிலருக்கு வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். இதற்கிடையில் ராகு-கேதுக்களின் பெயர்ச்சியும் 8.10.2023-ல் ஏற்படுகின்றது.

    ஜென்ம குருவாக மேஷத்திற்கும், அஷ்டமத்து குருவாக கன்னிக்கும், அர்த்தாஷ்டம குருவாக மகரத்திற்கும், விரய குருவாக ரிஷபத்திற்கும் இந்த குருப்பெயர்ச்சி அமைவதால் மேற்கண்ட ராசியில் பிறந்தவர்கள் தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் திசாபுத்தி பலம்பார்த்து, அதற்குரிய அனுகூலம் தரும் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வீடு கட்டும் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவற்றில் உள்ள தடைகள் அகன்று தக்க விதத்தில் பலன் கிடைக்கும்.

    இப்பொழுது பெயர்ச்சியாகும் குரு பகவான் சூரியன்- ராகு சேர்க்கை பெற்ற வீட்டிற்குள் வருகின்றார். ராகுவோடு குரு இணைவதால் குருவிற்குரிய முழுமையான பலன்கள் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னரே கிடைக்கும்.

    நோய் தொற்று ஆபத்து

    இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக நோய்த் தொற்றுகள் கொஞ்சம் தீவிரமாகப் பரவும் சூழல் உருவாகலாம். சனியின் பார்வையும் ராகு மீது பதிவதால் சனி மீண்டும் 24.8.2023-ல் மகரத்திற்கு வக்ரமாகி வரும் வரை மக்கள் அனைவரும் மிகமிக கவனத்தோடு இருக்க வேண்டும்.

    சூரியனோடு ராகு இணைந்திருப்பதால் உஷ்ணாதிக்க நோய், காய்ச்சல் போன்றவை வேகமாகப் பரவக்கூடிய சூழ்நிலை உண்டு. முகக்கவசம் அணிவது மட்டுமல்லாமல் சுகாதாரத்துறை சொல்லும் வழிமுறைகளையும் கடைப்பிடிப்பதோடு, ஜூரஹரேஸ்வரர் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.

    விலை உயரும்

    குருப்பெயர்ச்சியின் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உண்டு. உணவுப் பொருள், காய்கறிகள், வெள்ளை நிறப் பொருட்களின் விலைகளும் உயரலாம். தங்கம், வெள்ளியின் விலை எப்பொழுதும் போல ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும். இரும்பு, மருந்து, மரம், கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் லாபம் குவிப்பர். எழுத்துத் துறை, பத்திரிக்கைத் துறை, கலைத்துறை சம்பந்தப்பட்டவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயரக்கூடிய வாய்ப்பே உண்டு.

    குருவின் வக்ர காலம் மற்றும் செவ்வாய்-சனி பார்வைக் காலங்களில் இயற்கை சீற்றங்கள், நில நடுக்கங்கள், மழை வெள்ளம், நெருப்புப் பாதிப்பு போன்றவைகளில் இருந்து நாம் விடுபட கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொள்வது நல்லது. அல்லது அவரவர் எல்லை தெய்வங்களை முறையாக வழிபடுவதும் பலனளிக்கும்.

    மேஷ குருவின் சஞ்சாரம்

    (22.4.2023 முதல் 1.5.2024 வரை)

    22.4.2023 முதல் 22.6.2023 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் (கேது சாரம்)

    23.6.2023 முதல் 11.9.2023 வரை பரணி நட்சத்திரக்காலில் குரு பகவான் (சுக்ர சாரம்)

    12.9.2023 முதல் 21.11.2023 வரை பரணி நட்சத்திரக்காலில் வக்ர இயக்கத்தில் குரு பகவான் ( சுக்ர சாரம்)

    22.11.2023 முதல் 20.12.2023 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் (கேது சாரம்)

    21.12.2023 முதல் 5.2.2024 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் (கேது சாரம்)

    6.2.2023 முதல் 16.4.2024 வரை பரணி நட்சத்திரக்காலில் குரு பவான் (சுக்ர சாரம்)

    17.4.2024 முதல் 1.5.2024 வரை கார்த்திகை நட்சத்திரக்காலில் குரு பகவான் (சூரிய சாரம்)

    12.9.2023 முதல் 20.12.2023 வரை குரு பகவான் வக்ரம் பெறுகின்றார். (அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக்கால்களில்)

    1.5.2024-ல் ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிச் செல்கின்றார்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    குருப்பெயர்ச்சி பலன் அறிய இங்கே கிளிக்செய்யவும்... https://www.maalaimalar.com/rasipalan

    • இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி வருகிற 22-ந் தேதி இரவு நடைபெறுகிறது.
    • மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார்.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் குரு பெயர்ச்சியை யொட்டி வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி வருகிற 22-ந் தேதி இரவு நடைபெறுகிறது. மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். இதையொட்டி 23-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு ஹோம பூஜை நடக்கிறது.

    5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. கோவிலில் பக்தர்கள் பரிகாரங்கள் செய்யும் வகையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலைமாலை, வெள்ளை அரளிமாலை, மஞ்சள் நிற துண்டு, முல்லை பூ மாலை மற்றும் தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்து பயன்பெறலாம். என குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதேபோல் சுசீந்திரம் தாழக்குளம் பிள்ளையார் கோவில், களியல் மகாதேவர் கோவில், நாகர்கோவில் வடசேரி சோழராஜா கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவில், தெரிசனங்கோப்பு ராகவேசுவரா கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர்கோவில், தாழக்குடி ஜெகதீஸ்வரர் கோவில், திருப்பதிசாரம் சடையப்பர் கோவில், அழகிய பாண்டியபுரம் மகாதேவர் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், களியங்காடு சிவன் கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் குமரி மாவட்டத்தில் குரு பகவான் சன்னதி உள்ள கோவில்களில் குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • குரு தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்ர சத சங்காபிஷேகம் நடக்கிறது.
    • அபிஷேக சேவையில் பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் காலத்தில் குரு தட்சிணாமூர்த்தியை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

    இந்த வருடம் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுவதையொட்டி வருகிற 23-ந்தேதி உலக நன்மைக்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்ர சத சங்காபிஷேகம் நடக்கிறது.

    இந்த அபிஷேக சேவையில் பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 22-ந் தேதி முதல் மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.
    • கோவிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு சித்திர ரத வல்லப பெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக இருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார். ஒவ்வொரு குருப்பெயர்ச்சி அன்றும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது முன்னிட்டு குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக 3 நாட்கள் நடைபெறும்.

    இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து குரு பகவானைத் தரிசித்து செல்வார்கள்.

    இந்த நிலையில் வருகிற 20-ந் தேதி வியாழக்கிழமை காலை 10.45 அளவில் லட்சார்ச்சனை தொடங்குகிறது. 22-ந் தேதி சனிக்கிழமை மதியம் 12 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும். இரவு 9 மணி அளவில் யாகசாலை தொடங்கி 11.24 மணிக்குள் பரிகார மகா யாகம், மகாபூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    குருப்பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாலமுருகன், தக்கார் இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம், தீயணைப்பு நிலைய அலுவலர் ரூபன் ஆகியோர் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • காலகாலேஸ்வரர் கோவில் குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது.
    • இந்த கோவில் கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    கோவை கோவில்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சுமார் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது. இந்த கோவில் கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற 22-ந்தேதி குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் நடைபெறுகிறது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் அருண் பிரசாத் பிரகாஷ் கூறியதாவது:-

    குரு பகவான் வருகிற 22-ந் தேதி இரவு 11.26 மணிக்கு மேல் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார். குரு பெயர்ச்சியையொட்டி இரவு 9 மணிக்கு சிறப்பு யாக பூஜை தொடங்கப்பட்டு பூஜைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு குருபகவானுக்கு சிறப்பு கலச அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையுடன் இரவு 11.26 மணிக்கு குரு மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையுடன் குரு பெயர்ச்சி விழா தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது.

    அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. குரு பெயர்ச்சியையொட்டி மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யலாம். விழாவில் ரூ.400 செலுத்தி பக்தர்கள் பங்கு பெறலாம்.விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளி நாணயம் மற்றும் லட்சார்ச்சனை பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செயல் அலுவலர் அருண் பிரகாஷ், தக்கார் வெற்றிச்செல்வன் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×