search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    குரு பார்க்க கோடி நன்மை: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்...
    X

    குரு பார்க்க கோடி நன்மை: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்...

    • குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார்.
    • நாளை இரவு 11.24 மணிக்கு மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார்.

    சுபஸ்ரீ சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9-ந் தேதி (22.4.2023) சனிக்கிழமையன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளில் பதிகின்றது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப, குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார்.

    குரு பகவான் 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப்படுத்துவார். அந்த இடங்களின் மூலம் நமக்கு அதிகப்பலன்கள் கிடைக்கும். மேஷத்திற்கு குருப்பெயர்ச்சியாகும் நேரத்தில் சூரியன் உச்சம் பெற்று புதனுடன் இணைந்து புத-ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகின்றார். சுக்ரன் மற்றும் சனி தங்களது சொந்த வீடுகளில் பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்கள். இந்த குருப்பெயர்ச்சி நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மை அளிக்கும் பெயர்ச்சியாகவே அமையும்.

    குருவின் பார்வையைப் பெறும் மூன்று ராசிகள்: சிம்மம், துலாம், தனுசு.

    குரு தன ஸ்தானத்தைப் பார்க்கும் ராசிகள்: கடகம், கன்னி, விருச்சிகம். மேற்கண்ட ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். பணவரவு திருப்தி தரும். பதவி வாய்ப்பு கைகூடும். செல்வாக்கு உயரும்.

    மேஷத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் இடையில் வக்ரமும் பெறுகின்றார். வக்ர காலத்தில் சிலருக்கு நன்மை ஏற்படும். சிலருக்கு வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். இதற்கிடையில் ராகு-கேதுக்களின் பெயர்ச்சியும் 8.10.2023-ல் ஏற்படுகின்றது.

    ஜென்ம குருவாக மேஷத்திற்கும், அஷ்டமத்து குருவாக கன்னிக்கும், அர்த்தாஷ்டம குருவாக மகரத்திற்கும், விரய குருவாக ரிஷபத்திற்கும் இந்த குருப்பெயர்ச்சி அமைவதால் மேற்கண்ட ராசியில் பிறந்தவர்கள் தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் திசாபுத்தி பலம்பார்த்து, அதற்குரிய அனுகூலம் தரும் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வீடு கட்டும் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவற்றில் உள்ள தடைகள் அகன்று தக்க விதத்தில் பலன் கிடைக்கும்.

    இப்பொழுது பெயர்ச்சியாகும் குரு பகவான் சூரியன்- ராகு சேர்க்கை பெற்ற வீட்டிற்குள் வருகின்றார். ராகுவோடு குரு இணைவதால் குருவிற்குரிய முழுமையான பலன்கள் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னரே கிடைக்கும்.

    நோய் தொற்று ஆபத்து

    இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக நோய்த் தொற்றுகள் கொஞ்சம் தீவிரமாகப் பரவும் சூழல் உருவாகலாம். சனியின் பார்வையும் ராகு மீது பதிவதால் சனி மீண்டும் 24.8.2023-ல் மகரத்திற்கு வக்ரமாகி வரும் வரை மக்கள் அனைவரும் மிகமிக கவனத்தோடு இருக்க வேண்டும்.

    சூரியனோடு ராகு இணைந்திருப்பதால் உஷ்ணாதிக்க நோய், காய்ச்சல் போன்றவை வேகமாகப் பரவக்கூடிய சூழ்நிலை உண்டு. முகக்கவசம் அணிவது மட்டுமல்லாமல் சுகாதாரத்துறை சொல்லும் வழிமுறைகளையும் கடைப்பிடிப்பதோடு, ஜூரஹரேஸ்வரர் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.

    விலை உயரும்

    குருப்பெயர்ச்சியின் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உண்டு. உணவுப் பொருள், காய்கறிகள், வெள்ளை நிறப் பொருட்களின் விலைகளும் உயரலாம். தங்கம், வெள்ளியின் விலை எப்பொழுதும் போல ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும். இரும்பு, மருந்து, மரம், கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் லாபம் குவிப்பர். எழுத்துத் துறை, பத்திரிக்கைத் துறை, கலைத்துறை சம்பந்தப்பட்டவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயரக்கூடிய வாய்ப்பே உண்டு.

    குருவின் வக்ர காலம் மற்றும் செவ்வாய்-சனி பார்வைக் காலங்களில் இயற்கை சீற்றங்கள், நில நடுக்கங்கள், மழை வெள்ளம், நெருப்புப் பாதிப்பு போன்றவைகளில் இருந்து நாம் விடுபட கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொள்வது நல்லது. அல்லது அவரவர் எல்லை தெய்வங்களை முறையாக வழிபடுவதும் பலனளிக்கும்.

    மேஷ குருவின் சஞ்சாரம்

    (22.4.2023 முதல் 1.5.2024 வரை)

    22.4.2023 முதல் 22.6.2023 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் (கேது சாரம்)

    23.6.2023 முதல் 11.9.2023 வரை பரணி நட்சத்திரக்காலில் குரு பகவான் (சுக்ர சாரம்)

    12.9.2023 முதல் 21.11.2023 வரை பரணி நட்சத்திரக்காலில் வக்ர இயக்கத்தில் குரு பகவான் ( சுக்ர சாரம்)

    22.11.2023 முதல் 20.12.2023 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் (கேது சாரம்)

    21.12.2023 முதல் 5.2.2024 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் (கேது சாரம்)

    6.2.2023 முதல் 16.4.2024 வரை பரணி நட்சத்திரக்காலில் குரு பவான் (சுக்ர சாரம்)

    17.4.2024 முதல் 1.5.2024 வரை கார்த்திகை நட்சத்திரக்காலில் குரு பகவான் (சூரிய சாரம்)

    12.9.2023 முதல் 20.12.2023 வரை குரு பகவான் வக்ரம் பெறுகின்றார். (அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக்கால்களில்)

    1.5.2024-ல் ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிச் செல்கின்றார்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    குருப்பெயர்ச்சி பலன் அறிய இங்கே கிளிக்செய்யவும்... https://www.maalaimalar.com/rasipalan

    Next Story
    ×