search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஜராத் டைட்டன்ஸ்"

    • குஜராத் அணி தரப்பில் சுப்மன் கில் 72 ரன்களை எடுத்திருந்தார்.
    • ராஜஸ்தான் தரப்பில் குல்தீப் சென் 3 விக்கெட்டுகளையும் சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 24-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 196 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 76, சஞ்சு சாம்சன் 68 ரன்களும் எடுத்திருந்தனர்.

    இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- சாய் சுதர்சன் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய சுதர்சன் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூ வேட் 4, மனோகர் 1, விஜய் சங்கர் 16 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் அரை சதம் அடித்தார். அவர் 72 ரன்னில் வெளியேறினார். இம்பேக்ட் பிளேயராக வந்த ஷாருக்கான் 8 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ராகுல் தெவாட்டியா- ரஷித்கான் ஜோடி அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றது. இறுதி ஓவரில் குஜராத் அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 3 பந்தில் ரஷித்கான் 10 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் 1 ரன் எடுத்தார். 5-வது பந்தில் தெவாட்டியா 3 ரன்கள் எடுக்க முயற்சித்து 2 ரன்னில் ரன் அவுட் ஆனர். கடைசி பந்தில் குஜராத் அணிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ரஷித்கான் அந்த பந்தை பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார்.

    ராஜஸ்தான் தரப்பில் குல்தீப் சென் 3 விக்கெட்டுகளையும் சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    • ரஷித் கான் பந்தில் இரண்டு முறை ரியான் பராக் அவுட்டில் இருந்து தப்பினார்.
    • சஞ்சு சாம்சன், ரியான் பராக் அரைசதம் விளாசினர்.

    ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி ஜெய்ஸ்வால், பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 4.2 ஓவரில் 32 ரன்னாக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 19 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். இவர் இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.

    அடுத்த ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் பட்லர் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரியான் பராக் இந்த ஓவரின் கடைசி பந்தில் ரன்ஏதும் எடுக்காத நிலையில் கேட்ச் கொடுத்தார். விக்கெட் கீப்பர் வேட் டக்அவட்டில் இருந்து தப்பினார்.

    8-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் ரியான் பராக் மீண்டும் கேட்ச் கொடுத்தார். இந்த முறையும் வேட் கேட்ச் பிடிக்க தவறினார். இதனால் 7 ரன்னில் இருந்து மீண்டும் ஒரு முறை தப்பினார்.

    அதன்பின் சாம்சன்- ரியான் பராக் ஜோடி ஆட்டமிழக்காமல் விளையாடியது. 2 விக்கெட் மட்டுமே இழந்தாலும் அதிரடியாக ரன்கள் அடிக்க முடியவில்லை.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12.4 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது. ரியாக் பராக் 34 பந்தில் அரைசதம் அடித்தார். 16.5 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் 150 ரன்னைத் தொட்டது. அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சஞச்சு சாம்சன் 31 பந்தில் அரைசதம் அடித்தார்.

    19-வது ஒவரில் ரியான் பராக் 48 பந்தில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 18.4 ஓவரில் 172 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஹெட்மையர் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 19 ஓவர் முடிவில் 177 ரன்கள் எடுத்திருந்தது.

    உமேஷ் யாதவ் கடைசி ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 196 ரன்கள் குவித்துள்ளது. சஞ்சு சாம்சன் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் ஆடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • குஜராத் டைட்டன்ஸ் தான் ஆடிய 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மழை காரணமாக டாஸ் போட தாமதமானது. இரவு 7.25 மணிக்கு டாஸ் போடப்பட்டடது.

    டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது.

    • நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் வலம் வருகிறது.
    • குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் வலம் வருகிறது. ராஜஸ்தான் அணி 20 ரன் வித்தியாசத்தில் லக்னோவையும், 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவையும் அடுத்தடுத்து சாய்த்தது. ஒவ்வொரு ஆட்டத்திலும் வெவ்வேறு வீரர் ஜொலித்து வெற்றிக்கு கணிசமான பங்களிப்பை அளித்ததோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்றனர்.

    பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ரன் மழை பொழிகிறார்கள். முதல் 3 ஆட்டங்களில் ஏமாற்றம் அளித்த ஜோஸ் பட்லர் கடந்த ஆட்டத்தில் சதம் விளாசி பார்முக்கு திரும்பி இருக்கிறார். தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் தொடர்ந்து சொதப்புகிறார். முதல் 4 ஆட்டங்களில் 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். துருவ் ஜூரெல், ஹெட்மயர் போதுமான பங்களித்தால் மிடில் வரிசை மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், நன்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல் மிரட்டுகிறார்கள். உள்ளூர் சூழல் அவர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.

    குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. தனது முதலாவது ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய குஜராத் அணி அடுத்த ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பந்தாடியது. கடந்த இரு ஆட்டங்களில் முறையே 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடமும், 33 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடமும் தோற்றது.

    குஜராத் அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், சாய் சுதர்சனும், பந்து வீச்சில் மொகித் ஷர்மா, உமேஷ் யாதவும் நல்ல நிலையில் உள்ளனர். டேவிட் மில்லர், விருத்திமான் சஹா காயத்தால் அவதிப்படுவது சற்று பின்னடைவாகும். அதே சமயம் வில்லியம்சன், விஜய் சங்கர், ரஷித் கான், நூர் அகமது ஆகியோர் தங்களது முழுதிறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் ராஜஸ்தானின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இல்லாவிட்டால் சிக்கல் தான்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டத்திலும், ராஜஸ்தான் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், ஆர்.அஸ்வின், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், நன்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல்.

    குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), வில்லியம்சன், ஷரத் அல்லது விருத்திமான் சஹா, விஜய் சங்கர் அல்லது அபினவ் மனோகர், ராகுல் திவேதியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், நூர் அகமது, தர்ஷன் நல்கண்டே.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

    • குஜராத் தரப்பில் சாய் சுதர்சன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • லக்னோ அணி தரப்பில் யாஸ் தாகூர் 5 விக்கெட்டும், குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றின.

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி லக்னோ அணிக்கு பேட்டிங்கில் துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் குவிண்டன் டி காக் 6 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் ஏழு ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

    எடுத்ததும் இரண்டு விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணிக்கு கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மார்கஸ் ஸ்டாயினிஸ் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். கே.எல். ராகுல் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஸ்டாயினிஸ் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

    இறுதியில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், தர்ஷன் நல்கண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் - சுதர்சன் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது. மெதுவாக விளையாடி கில் 21 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வில்லியம்சன் 1 ரன்னில் வெளியேறினார்.

    அதனை தொடர்ந்து குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். சரத் 2, விஜய் சங்கர் 17, நல்கண்டே 12, ரஷித்கான் 0, உமேஷ் யாதவ் 2, என விக்கெட்டுகளை இழந்தனர். அதிரடியாக விளையாடிய தெவாட்டியா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் குஜராத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் எடுத்தது. இதனால் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி தரப்பில் யாஸ் தாகூர் 5 விக்கெட்டும், குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றின. 

    • 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது.
    • இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 ஆட்டங்களிலுமே குஜராத் அணியே வாகை சூடியுள்ளது.

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 ஆட்டங்களிலுமே குஜராத் அணியே வாகை சூடியுள்ளது.

    • அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் அரை சதம் விளாசினார்.
    • குஜராத் தரப்பில் ரூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது லீக் போட்டியில் குஜராத்- பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் கடைசி வரை அவுட் ஆகாமல் 89 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டும் ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் - பேர்ஸ்டோவ் களமிறங்கினர். தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் பேர்ஸ்டோவ் பவர்பிளேயில் சிறப்பாக ரன்களை சேர்த்தனர்.

    பவர் பிளே முடிந்த முதல் ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்டோவ் 22 ரன்னில் போல்ட் ஆனார். அடுத்து வந்த சாம் கரண் 5 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 35 ரன்னிலும் ராசா 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து ஜிதேஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்து அணியின் வெற்றிக்காக போராடினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 39 ரன்கள் குவித்தது. ரஷித்கான் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசிய ஜிதேஷ் சர்மா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் அரை சதம் விளாசினார்.

    அடுத்து வந்த அசுதோஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி பஞ்சாப் வெற்றிக்கு போராடினர். இறுதியில் 12 பந்துக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தனர். 19-வது ஓவரில் இந்த ஜோடி 18 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை தர்ஷன் நல்கண்டே வீசினார். முதல் பந்தில் அசுதோஷ் சர்மா கேட்ச் ஆனார். அடுத்த பந்தை அகல பந்தாக வீசினார். 3-வது பந்தில் ஹர்ப்ரீத் 1 ரன் எடுத்தார்.

    இதனால் கடைசி 3 பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ஷஷாங்க் சிங் பவுண்டரி அடித்து ஸ்கோரை சமன் செய்தார். அடுத்த பந்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.

    இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் ரூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • குஜராத் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 1-ல் தோல்வி அடைந்துள்ளது.
    • பஞ்சாப் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் தோல்வியும் 1-ல் வெற்றி பெற்றுள்ளது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 17-வது லீக் போட்டியில் பஞ்சாப்- குஜராத் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேயத்தில் நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    குஜராத் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 1-ல் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் தோல்வியும் 1-ல் வெற்றி பெற்றுள்ளது.

    • முதலில் ஆடிய ஐதராபாத் 162 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய குஜராத் 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக

    அபிஷேக் சர்மா மற்றும் அப்துல் சமது ஆகியோர் தலா 29 ரன்கள் எடுத்தனர்.

    குஜராத் சார்பில் மோகித் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விரித்திமான் சகா 13 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 28 பந்தில் 36 ரன்கள் குவித்தார். சாய் சுதர்சன் 45 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில் குஜராத் அணி 19.1 ஓவரில் 168 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மில்லர் 44 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய ஐதராபாத் 162 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் அபிஷேக் சர்மா மற்றும் அப்துல் சமது 29 ரன்கள் எடுத்தனர்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்களை சேர்த்தது.

    மயங்க் அகர்வால் 16 ரன்னும், டிராவிஸ் ஹெட் 19 ரன்னும், அபிஷேக் சர்மா 29 ரன்னும், மார்கிரம் 17 ரன்னும், கிளாசன் 24 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் 6-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷபாஸ் அகமது, அப்துல் சமத் ஜோடி அதிரடியில் மிரட்டியது. இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஷபாஸ் அகமது 22 ரன்னில் அவுட்டானார்.

    குஜராத் அணி சார்பில் மோகித் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

    • ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் சிஎஸ்கே 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சிவம் துபே 52 ரன்கள் விளாசினார். இதனை தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக குஜராத் அணி மெதுவாக பந்து வீசியதாக அந்த அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உள்ளூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டு அமர்க்களமாக தொடங்கி இருக்கும் சென்னை அணி அந்த உத்வேகத்தை தொடரும் முனைப்புடன் களம் இறங்குகிறது.
    • 2-வது வெற்றியை ருசிக்க சென்னை, குஜராத் அணிகள் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் குலுக்கல் மூலம் தேர்வான ஒரு அணியுடன் மட்டும் 2 முறையும் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

    நடப்பு சாம்பியன் சென்னை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் 174 ரன் இலக்கை 8 பந்துகள் மீதம் வைத்து சென்னை அணி எட்டிப்பிடித்து அசத்தியது.

    சென்னை அணியில் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபேவும், பந்து வீச்சில் கடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வீழ்த்தி அசத்திய முஸ்தாபிஜூர் ரகுமான், தீபக் சாஹர், தீக்ஷனா, ரவீந்திர ஜடேஜாவும் நல்ல நிலையில் உள்ளனர். பெங்களூருவுக்கு எதிராக விக்கெட் இன்றி 47 ரன்கள் கசிய விட்ட வேகப்பந்து வீச்சாளர் துஷர் தேஷ்பாண்டே முன்னேற்றம் கண்டால் பந்து வீச்சு மேலும் வலுப்பெறும். தசைப்பிடிப்பு காயத்தில் இருந்து மீண்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பதிரானா சென்னை அணியினருடன் இணைந்து இருக்கிறார். அவர் இம்பேக்ட் வீரராக விளையாட வாய்ப்புள்ளது.

    உள்ளூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டு அமர்க்களமாக தொடங்கி இருக்கும் சென்னை அணி அந்த உத்வேகத்தை தொடரும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

    இதேபோல் குஜராத் அணி தனது சொந்த மண்ணில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த போட்டியில் கால் பதிக்கிறது.

    குஜராத் அணியில் பேட்டிங்கில் விருத்திமான் சஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், டேவிட் மில்லர், ராகுல் திவேதியாவும், பந்து வீச்சில் அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், உமேஷ் யாதவ், ரஷித் கான், சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், மொகித் ஷர்மாவும் வலுசேர்க்கிறார்கள்.

    சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை நன்கு அறிந்த தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன், விஜய் சங்கர், சாய் கிஷோர் ஆகியோர் குஜராத் அணியில் அங்கம் வகிப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

    2-வது வெற்றியை ருசிக்க சென்னை, குஜராத் அணிகள் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 தடவையும் வென்று இருக்கின்றன. கடைசியாக நடந்த 2 மோதலிலும் (கடந்த ஆண்டு இறுதிப்போட்டி, முதலாவது தகுதி சற்று) சென்னை அணியே வென்றுள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.

    சென்னையில் நடைபெறும் 2-வது ஆட்டம் இதுவாகும். இங்கு கடந்த 22-ந் தேதி நடந்த தொடக்க லீக் ஆட்டத்தை காண ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். இதேபோல் இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்டும் விற்று தீர்ந்து விட்டன. இதனால் இந்த ஆட்டத்திலும் ரசிர்கர்களின் ஆர்ப்பரிப்பும், ஆதரவும் சென்னை அணிக்கு பக்கபலமாக இருக்கும் எனலாம்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

    ×