search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்று மாசு"

    • மாசற்ற காற்று, மனிதர்களுக்கு மட்டுமல்ல பூமியின் அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத தேவையாகும்.
    • சர்வதேச தூய காற்று தினம் 2020-ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் 2023-ஐ முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தினை கலெக்டர் ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    காற்று மாசுபாடு பூமியின் சுற்றுச்சூழல், பல்லுயிர் மற்றும் காலநிலை ஆகியவற்றை மோசமாக பாதிக்கிறது. மாசற்ற காற்று, மனிதர்களுக்கு மட்டுமல்ல பூமியின் அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத தேவையாகும்.

    ஆகவே 2019-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அதன் நிலையான வளர்ச்சி குறித்த தனது 74-வது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ந் தேதி நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

    இதன் நோக்கமானது 2030-ம் ஆண்டுக்குள் காற்று, நீர் மற்றும் மண்ணில் உள்ள வேதிப்பொருட்கள் போன்ற மாசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் நோய்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்து அதன் மூலம் அனைவருக்கும் சுத்தமான காற்று என்ற தீர்மானத்தை ஐ.நா. ஏற்றுக்கொண்டது. எனவே காற்றின் தரம் மற்றும் கழிவு மேலாண்மை மூலம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை குறைக்க நாமும் நமது பங்களிப்பினை வழங்க வேண்டியது அவசியமாகும்.

    இந்த ஆண்டுக்கான செப்டம்பர் 7-ந் தேதி கொண்டாடப்படும் நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினத்தின் கருப்பொருளான "தூய காற்றிற்காக ஒன்றி னைவோம்" என்பதை நாம் அனைவரும் நடைமுறைப் படுத்தி நீலவானின் தூய காற்றினை பெற்றிடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி சுற்றுசூழல் பொறியாளர் சுகுமார், உதவி பொறியாளர் சுற்றுசூழல் ஜெபா , உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • விருதுநகர்-ராமநாதபுரம் மாவட்டங்களில் காற்று மாசை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅமைச்சர் கூறினார்.
    • ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் சார்பில் "கார்பன் சமநிலை ராஜபாளையம்" என்னும் புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹீ, சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் தீபக் பில்ஜி, துணை இயக்குநர் (ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திலீப் குமார், தனுஷ் குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் "கார்பன் சமநிலை" என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 38 மாவட்டங்களிலும் காலநிலை மாற்ற இயக்கங் கள் அமைக்கப்பட்டுள்ளன.முன்னோடி மாவட்டங்க ளான கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட் டங்களை தேர்ந்தெடுத்து கார்பன் சமன்படுத்தப்பட்ட காலநிலை ஸ்மார்ட் மாவட்டம், நகர செயல் திட்டங்களை உருவாக்கி நிறுவனங்களின் பங்களிப்பு டன் காற்று மாசை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படு கிறது.

    கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கார்பன் சமநிலை பயிற்சி பட்டறைகளுக்கு பிறகு மாநிலத்தின் வரிசையில் 3-தாக நடைபெற்ற "கார்பன் சமன்படுத்தப்பட்ட ராஜபாளையம்" திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

    காற்று மாசை குறைப்பதற் கான தீர்வுகளை வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். காலநிலை மாற்றத்தால் பருவங்கள் மாறி வருகின்றன. சரியான நேரத்தில் மழை பொழிவு இல்லாமலும், பருவநிலை இல்லாத நேரத்தில் மழை பெய்வதுமாக இருக்கின்றது. இந்த காலநிலை மாற்றத்திற்கு காரணம் நாம் தான். அனைவரும் நமது வீட்டில் ஒரு மரமாவது வளர்க்க வேண்டும். நம்முடைய எதிர்கால சந்ததியினர்களுக்கு நல்ல உலகத்தை விட்டு செல்வதற்கான உறுதி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி, காலநிலை மாற்ற ஆளுகைக் குழு உறுப்பினர் நிர்மலா ராஜா (ராம்கோ நிறுவனம்), மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பேச்சியம்மாள், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் ராமராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விசாலாட்சி, ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னையில் தூத்துக்குடியைவிட இருமடங்கு அதிகமாக காற்று மாசு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
    • மாசுவை குறைக்க கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவது மூலம் காற்று மாசுவை குறைக்கலாம்

    சென்னை:

    பெங்களூருவில் செயல்பட்டு வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையம் 2019-20-ம் ஆண்டில் சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெளியேற்றப்படும் மாசு தொடர்பான ஆய்வை மேற்கொண்டது.

    இதில், தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகள் இருப்பதால் மாசு அதிகமாக இருப்பதும், சென்னையில் தூத்துக்குடியைவிட இருமடங்கு அதிகமாக காற்று மாசு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    மாசுவை குறைக்க நடவடிக்கைகள் எடுக்காமல் தற்போது உள்ளபடியே தொழில் நடவடிக்கைகளை தொடர்ந்தால் 2030-ம் ஆண்டு சென்னை, திருச்சியில் அதிகபட்சமாக 27 சதவீதமும், மதுரையில் 20 சதவீதமும், தூத்துக்குடியில் 16 சதவீதமும் மாசு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    முன்னுரிமை அடிப்படையில் காற்று மாசுவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் 2030-க்குள் மாசு வெளியேற்றத்தின் அளவை தற்போதுள்ள நிலையில் இருந்து திருச்சியில் 36 சதவீதமும், மதுரை, சென்னையில் 27 சதவீதமும், தூத்துக்குடியில் 20 சதவீதமும் குறைக்க முடியும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளர் பிரதிமாசிங் கூறும்போது, 'எரிபொருள் பயன்பாட்டை நிலக்கரியில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற்றுவது, தரமான சாலை உள்கட்டமைப்பு, தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்தில் வெளியாகும் மாசுவை குறைக்க கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் காற்று மாசுவை குறைக்கலாம்' என்றார்.

    • காற்று மாசை பொறுத்தவரையில் ஒரு கனமீட்டருக்கு 15 மைக்ரோ கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • சென்னையில் காற்றின் தரம் மோசமாகி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் காற்றின் தரம் எப்படி உள்ளது என்பது பற்றி நேஷனல் கிளீன் ஏர் புரோகிராம் (என்.சி.ஏ.பி.) விரிவான ஆய்வு நடத்தியது.

    இந்த ஆய்வில் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் காற்று மாசு அதிகமாக உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஆலந்தூர் பஸ் டெப்போ இருக்கும் பகுதிக்கு யாரும் சென்றுவிடாதீர்கள் என்று எச்சரிக்கும் அளவுக்கு காற்றின் மாசு மிகவும் அசுத்தமாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    புழுதி பறந்த காற்று மூச்சுமுட்டவைக்கும் வகையில் மிகவும் அசுத்தமாக ஆலந்தூர் பகுதியில் வீசிக்கொண்டிருப்பது கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காற்று மாசை பொறுத்தவரையில் ஒரு கனமீட்டருக்கு 15 மைக்ரோ கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் காற்றின் மாசு அளவு பல மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. ஆலந்தூர் பஸ் டெப்போ பகுதியில் 102 என்கிற அளவில் காற்று மாசு அதிகரித்துள்ளது. பெருங் குடியில் 89, எண்ணூர் காந்திநகரில் 81, கொடுங்கை யூரில் 75, சி.பி.சி.பி. என்கிற அளவிலும் காற்றின் மாசு அதிகரித்துள்ளது. அரும்பாக்கம், வேளச்சேரி, மணலி, ராயபுரம் உள்ளிட்ட இடங்களிலும் காற்றின் மாசு அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளில் ஒருவர் கூறும்போது, 'சென்னையில் காற்றின் தரம் மோசமாகி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது' என்று தெரிவித்தார்.

    சென்னை மாநகர சாலைகளில் பெரும்பாலான வற்றில் குழிகள் தோண்டப் பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளின் போது தூசி பறக்காமல் இருக்க துளி அளவு கூட நடவடிக் கைகள் எடுப்பது இல்லை.

    அதேநேரத்தில் குண்டும் குழியுமாக மாறி மணல் சூழ்ந்திருக்கும் சாலைகளும் அதிகம் உள்ளன. இது போன்ற சாலைகளில் இருந்துதான் அதிக அளவில் தூசி பறந்து காற்று மாசு படுகிறது. இதுபோன்ற சாலைகளை சீரமைத்து காற்று மாசை தடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் ஆய்வு மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து காற்று மாசை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சென்னை, திருச்சி, தூத்துக் குடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களை மாசு இல்லாத நகரமாக மாற்றுவதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. நகர பகுதிகளில் திறந்த வெளி பூங்காக்கள் மற்றும் தோட்டங்களை உருவாக்கி அதில் காற்று மாசை கட்டுப்படுத்தும் வரையிலான தாவரங்களை நடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொது இடங்களில் கழிவுகளை கொட்டி எரிப்பதை தடுப்பது போன்ற பல்வேறு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கலெக்டர்கள் தீவிரமாக மேற்கொண்டால் காற்று மாசு தடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • காட்டுத் தீ மற்றும் விவசாய எச்சங்களை எரிப்பதே என நேபாள அரசாங்கம் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    • புற்றுநோய், பக்கவாதம், ஆஸ்துமா மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

    காத்மாண்டு:

    உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐக்யூ ஏர்-இன் கூற்றுப்படி, காத்மாண்டுவில் காற்றின் தரக் குறியீடு 190 ஐத் தாண்டியுள்ளது. அந்நகரை புகைமூட்டம் சூழ்ந்துள்ள நிலையில், உள்ளூர் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த வார தொடக்கத்தில், காத்மாண்டு மற்றும் நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிகரித்து வரும் மாசுபாட்டிற்குக் காரணம் காட்டுத் தீ மற்றும் விவசாய எச்சங்களை எரிப்பதே என நேபாள அரசாங்கம் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கட்டுமானப் பணிகளால் ஏற்படும் தூசி, பழைய, மோசமாகப் பராமரிக்கப்படும் வாகனங்களின் புகை, நிலக்கரி, செங்கல் சூளைகளின் புகை ஆகியவை காத்மாண்டு நகரை சூழ்ந்துள்ளது. இதனால் புற்றுநோய், பக்கவாதம், ஆஸ்துமா மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

    • ஆண்டுதோறும் 7 லட்சம் குழந்தைகள் மாசுபட்ட காற்றினால் ஏற்படும் குறைந்த சுவாச பாதை நோய்த்தொற்றுகளால் இறக்கின்றனர்.
    • குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி குறைகிறது.

    திருப்பதி:

    வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுப் புகைகளால் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    உலகம் முழுவதும் சுத்தமான காற்று கிடைப்பது அரிய பொருளாக மாறி வருகிறது. இதன் விளைவாக நுரையீரலில் அதிக மாசு ஏற்படுகிறது. இது முக்கியமாக குழந்தைகளை பாதிக்கிறது. குழந்தைகள் வளரும் நிலையில் அவர்களின் சுவாசம் மற்றும் நரம்பு மண்டலங்களை சேதப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது. காற்று மாசுபாடு குறைந்த பகுதியில் உள்ள குழந்தைகளின் நுரையீரல் திறன் மேம்பட்டுள்ளது என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

    காற்று மாசுபாடு அதிகமாக இருந்தால், குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி குறைகிறது. ஆஸ்துமா ஆபத்து அதிகரிக்கிறது. குழந்தை பருவத்தில் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் மாசுபட்ட காற்றை அதிகமாக சுவாசிப்பதால் அவர்களுக்கு முன்கூட்டியே குழந்தை பிறக்கலாம். குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம்.

    உலகளவில் ஆண்டுதோறும் 7 லட்சம் குழந்தைகள் மாசுபட்ட காற்றினால் ஏற்படும் குறைந்த சுவாச பாதை நோய்த்தொற்றுகளால் இறக்கின்றனர். குழந்தை பருவத்தில் அதிக அளவு காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு முதிர்ந்த வயதில் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

    கடந்த 20 ஆண்டுகளில், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் காற்று மாசுபாடு கணிசமாகக் குறைந்துள்ளதாக கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

    2002-04-ம் ஆண்டை விட 2016-19 ஆம் ஆண்டில் காற்று மாசுபாடு 40 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    நல்ல காற்றின் தரம் உள்ள பகுதிகளில் இளைஞர்களின் நுரையீரல் செயல்பாடு மேம்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    மாசு பாதிப்பை சிறிதளவாவது குறைக்க முடிந்தாலும் நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டு குழந்தை பருவத்தில் இருந்து இளமைப் பருவம் வரை வளர்ச்சி காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

    • கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பமடைய விரும்புவோர் காற்று மாசுபாட்டிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்
    • நடந்து செல்லும் தூரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

    சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பல்வேறு நாடுகளில் வெவ்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தற்போது காற்று மாசுபாடு குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.

    காற்று மாசுபாடு கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவை 50 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், காற்று மாசுபாட்டிற்கும், கருச்சிதைவுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்து வந்தனர்.

    இந்தக் குழு, 2009 முதல் 2017 வரை சீன தலைநகரில் வசிக்கும் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவ பதிவுகளை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டது. காற்று மாசுபாட்டின் அதிகரிப்பு காரணமாக கருச்சிதைவு ஏற்பட 52 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களால் உருவாகும் நச்சு ரசாயனங்களின் அளவிற்கும் இதுவரை ஏற்பட்ட கருச்சிதைவுகளுக்கும் இடையே உள்ள நேரடி தொடர்பையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஆய்வின் தலைமை ஆசிரியருமான, லிகியாங் ஜாங், கர்ப்பத்திற்கு முன்னால் சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் கருச்சிதைவுகளை தடுக்க அல்லது குறைக்க சாத்தியமான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    "கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பமடைய விரும்புவோர் காற்று மாசுபாட்டிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும், இது அவர்களின் சொந்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அவர்களின் கருவின் ஆரோக்கியத்திற்கும் கூட அவசியமாகிறது" என தெரிவித்துள்ள பேராசிரியர் ஜாங் மேலும் கூறுகையில், இந்த விவகாரத்தில் இன்னும் தொடர் ஆய்வுகள் தேவை என்று கூறியுள்ளார்.

    ''காற்றை சுத்தப்படுத்த தற்போது காற்று சுத்திகரிப்பு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு யாராலும் காற்று மாசிலிருந்து தப்பிக்க இயலாது. மேலும் காற்று சுத்திகரிப்பு கருவிகள் வாங்குவதைப்பற்றி ஏழை எளிய மக்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஏனென்றால் அவை விலை உயர்ந்தவை. அதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் இயன்ற அளவு முயற்சிக்க வேண்டும். நடந்து செல்லும் தூரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்'' என்றார்.

    எரிபொருட்களால் உருவாகும் நச்சு ரசாயனங்களின் அளவிற்கும் இதுவரை ஏற்பட்ட கருச்சிதைவுகளுக்கும் இடையே உள்ள நேரடி தொடர்பையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    • இந்தியா கடந்த ஆண்டு 5வது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு 8வது இடத்திற்கு சரிந்துள்ளது.
    • இந்த பட்டியலில் 7,300க்கும் மேற்பட்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை சுவிட்சர்லாந்தின ஐக்யுஏர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 131 நாடுகளில், 30,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்ட்டுள்ளது.

    மாசுபட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 5வது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு சரிந்துள்ளது. இந்தியாவில் தீங்கு விளைவிக்கக்கூடிய PM 2.5 என்ற காற்று மாசு நுண்துகள் செறிவு 53.3 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டராக குறைந்திருந்தாலும், உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள பாதுகாப்பு வரம்பை விட 10 மடங்கு அதிகமாகும்.

    இந்த பட்டியலில் 7,300க்கும் மேற்பட்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில், இந்திய நகரங்கள் முன்னிலையில் உள்ளன. மிகவும் மாசுபட்ட முதல் 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. டாப்-10 நகரங்களில் 6 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதிக மாசுபட்ட நகரங்களில் முதல் இரண்டு இடங்களில் பாகிஸ்தானின் லாகூர், சீனாவின் ஹோடான் நகரங்கள் உள்ளன. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பிவாடி, டெல்லி ஆகிய நகரங்கள் உள்ளன. 

    • அதிகரித்து வரும் காற்று மாசால் டெல்லி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • டெல்லியில் இயங்கும் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக, குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குவதால் டெல்லியில் காற்று மாசு சீராகும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தேசிய தலைநகரின் நிலைமை, வானிலை துறை மற்றும் காற்றின் தரக் குறியீட்டின் மதிப்பீடு செய்தது. அதன்படி, டெல்லியில் கட்டுமான பணிகள் மற்றும் தொழில்துறை செயல்பாடுகளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.

    • மும்பை நகர மக்கள் சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
    • தற்போது குளிர்காலம் என்பதால் காற்றின் வேகம் குறைவாக உள்ளது.

    மும்பை :

    நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமாகி வருவது வாடிக்கையாகி விட்ட நிலையில், நாட்டின் நிதி தலைநகராக விளங்கும் மும்பையிலும் காற்றின் தரம் கடந்த சில நாட்களாக மோசமாகி வருகிறது.

    காற்றின் தரம் ஏ.கியூ.ஐ. என்ற அளவை கொண்டு கணக்கிடப்படுகிறது. அது 1 முதல் 100 வரையிலான ஏ.கியூ.ஐ. ஆக இருந்தால் நல்லது என்று அர்த்தம். 100 முதல் 200-க்குள் இருந்தால் பரவாயில்லை எனலாம். 200 முதல் 300 வரை இருந்தால் மோசம் என்றும், 300-க்கும் மேல் இருந்தால் மிகவும் மோசம் என்றும் அளவிடப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று மும்பையில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையை எட்டியது. அதாவது நகரில் நேற்று காற்றின் தரம் 309 ஏ.கியூ.ஐ. (மிகவும் மோசம்) என்ற அளவில் பதிவாகி இருந்தது. அதே நேரத்தில் நேற்று டெல்லியில் காற்றின் தரம் 249 ஏ.கியூ.ஐ. (மோசம்) என்ற அளவில் தான் பதிவாகி இருந்தது. இதனால் காற்றின் தரத்தில் மும்பை மாநகரம் தலைநகர் டெல்லியை மிஞ்சி விட்டது.

    நேற்று முன்தினத்தை பொறுத்தவரை மும்பையில் 315 ஏ.கியூ.ஐ. என்ற அளவில் காற்றின் தரம் பதிவாகி இருந்தது. அன்றைய தினம் டெல்லியில் காற்றின் தரம் 262 ஏ.கியூ.ஐ. என்ற அளவில் தான் இருந்தது.

    இதனால் மும்பை நகர மக்கள் சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

    மும்பையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள், கடற்கரை சாலை பணிகள், எண்ணில் அடங்காத கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மேலும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதுபோன்ற காரணங்களால் தான் நகரில் காற்று மாசு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

    தற்போது குளிர்காலம் என்பதால் காற்றின் வேகம் குறைவாக உள்ளது. இதனால் காற்றில் சேரும் மாசு நகராமல் இருப்பதால், காற்று மாசு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு நகரில் காற்றின் தரம் மோசமாக இருக்கும் என வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்தநிலையில் மும்பையில் காற்றின் தரம் மோசமாக இருப்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் கூறியதாவது:-

    கட்டுமான பணிகளால் காற்று மாசு அதிகரித்து இருப்பது என்பதை ஏற்க முடியாது. கட்டுமான பணிகள் பல மாதங்களாக நடக்கிறது. மும்பையில் உள்ள பாரத் பெட்ரோலியம், ஆர்.சி.எப், எச்.பி.சி.எல். போன்ற நிறுவனங்கள் அதிகளவில் கழிவுகளை வெளியேற்றுகின்றன. அதுதான் காற்று மாசு அதிகரிக்க காரணம். இந்த பிரச்சினை தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சகத்திடம் பேசி உள்ளோம்.

    மும்பையில் சில நாட்களில் ஜி20 மாநாடு கூட்டங்கள் நடக்க உள்ளன. இதற்காக வெளிநாட்டில் இருந்து பிரதிநிதிகள் வர உள்ளனர். எனவே காற்று மாசு பிரச்சினை குறித்து பெட்ரோலிய அமைச்சகத்துடன் பேசி உள்ளோம். இதன் மூலம் பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குறைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காற்று மாசுபாட்டால் நொய்டாவில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டது.
    • காற்று மாசால் டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பயிர் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிகழ்வு போன்றவற்றால் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு அபாயகர கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், மனித உயிருக்கு டெல்லியில் நிலவும் காற்று மாசு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், மனிதனின் ஆயுட்காலம் குறைவதாகவும் வெளியான பத்திரிகை செய்தி அடிப்படையில், இதை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    ஆணையத்தின் உத்தரவின் பேரில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், காற்று மாசு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வருமாறு டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வரும் 10-ம் தேதி நேரிலோ அல்லது காணொலி மூலமோ ஆஜராகுமாறு அதில் தெரிவித்துள்ளது.

    • காற்று மாசுக்கு தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
    • காற்று மாசு கருவில் வளரும் சிசு தொடங்கி முதியவர்கள் வரைக்கும் சுகாதாரக் சீர் கேட்டை ஏற்படுத்தும்.

    புதுடெல்லி :

    அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் ஆற்றல் கொள்கை நிறுவனம் காற்றின் தரம் மனித வாழ்வு, ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை விரிவான ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்தியாவின் கங்கை சமவெளி பகுதிதான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதி என்பது தெரியவந்துள்ளது.

    பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்காளம் வரை நீளும் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளதாக அந்த அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதிக மாசு கொண்ட நாடுகளில் பங்களாதேஷிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

    காற்று மாசுக்கு தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டு இந்தியாவில் கோவிட் லாக்டவுன் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அப்போது பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையிலும், நாட்டின் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.

    இந்த காற்று மாசு கருவில் வளரும் சிசு தொடங்கி முதியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் சுகாதாரக் சீர் கேட்டை ஏற்படுத்தும் என இந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே நிலை நீட்டித்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 வயது வரை குறையும். உலக அளவில் நிலவும் காற்று மாசுவை பார்த்தால், மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 2.2 ஆண்டுகள் குறையும்.

    காற்று மாசுவின் அதிக பாதிப்பு இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ் ஆகிய தெற்காசிய நாடுகளில் தான் காணப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின் படி இந்தியாவில் டெல்லி, பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் தான் மிக மோசமான காற்று மாசு பிரச்சினை உள்ளது. தற்போதை நிலை தொடர்ந்தால் டெல்லி மக்களின் ஆயுட்காலம் 10.1 ஆண்டுகளும், உத்தரப் பிரதேச மக்களின் ஆயுட்காலம் 8.9 ஆண்டுகளும், பீகார் மக்களின் ஆயுட்காலம் 7.9 ஆண்டுகளும் குறையும் என அறிக்கை கூறியுள்ளது.

    ×