search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜர்"

    • எம் கருப்புத் தலைவனோ... எங்களுக்கு பாதுகாப்பான... கூரையைத் தந்தான்...
    • பெருந்தலைவனே.. கருப்பாயிருந்தாலும் நீ விளக்கு... நீ வெளிச்சம்...

    எங்கள் பூட்டன் பாட்டன்களின் சரித்திரம்

    புராதன அழுக்கைக் கொண்டது

    சிமினி விளக்கை ஏற்றியும்

    லாந்தரைக் கொளுத்தியும் அகலாதது

    அவர்களைச் சூழ்ந்த இருள்

    புழுதியும் சேறும்தான்

    அவர்களுடைய பகல்

    அத்தைகளைக் கட்டிக்கொடுக்க

    வாங்கிய ஆயிரம் ரூபாய்க்கு

    அவர்களது இடக்கை பெருவிரல்

    வண்டிப்பசை பூசியது

    தெருவுக்கு வந்த வெளிச்சத்திலும்

    அவர்கள் கண்கள் மூடியேக் கிடந்தது

    போய்ச் சேர பேருந்தின்

    வண்ணங்களை ஒடுக்குகளை

    அடையாளம் கண்டவர்கள்

    பாட்டிகள் அத்தைகளின் கதையோ

    இன்னும் மோசம்

    விறகுப் புகையில் இருமி

    பிள்ளைப் பேற்றில்

    செத்துப் போனார்கள்

    குக்கிராமங்களில்

    விலங்குகளைப்போல்

    வாழ்ந்த

    இவர்களைச் சிந்தித்தான்

    ஒரு தலைவன்

    அவனும் படிக்காதவன்

    ஏழை பாழைகளின்..

    பஞ்சைப் பராரிகளின்..

    ஏக்கங்களை..

    பெருமூச்சை..

    கண்ணீரை..

    குருதியைப்

    படித்த மா மேதை

    மண்சுவர் கொண்டு

    கூரை வேய்ந்து

    ஒரு கோவில் செய்தான்

    அதில் ஒரு தண்டவாளத்

    துண்டை மாட்டினான்

    வயிற்றுத் தீயை

    இரண்டு உருண்டை

    சோற்றுப் பருக்கைகளால்

    அணைத்து வைத்தான்

    ஒவ்வொரு குடிசையிலும்

    ஔவைப் பாட்டி

    வலதுகாலெடுத்து வைத்தாள்

    வள்ளுவர் வந்தார்

    கம்பர் வந்தார்

    ஷேக்ஸ்பியர் வந்தார்

    அல்ஜிப்ரா வந்தது

    நியூட்டன் வந்தார்

    குடிசையிலிருந்து

    அப்பா ஆசிரியராய்

    வெளிவந்தார்

    அக்காக்களுக்கு

    டீச்சர் ட்ரைனிங் கனவு

    மருமகள்களுக்கு

    மருத்துவக் கனவு

    எங்களை தெய்வங்கள்கூட

    சற்று தூரத்தில்

    இடுப்பில் துண்டைக் கட்டி

    நிற்க வைத்தது

    எம் கருப்புத் தலைவனோ

    எங்களுக்கு பாதுகாப்பான

    கூரையைத் தந்தான்

    ஆண்களோடு பெண்கள்

    சமமாக அமர

    நாற்காலி தந்தான்

    சாதியைக் காட்டி

    பிடுங்கிக் கொண்ட

    பாடப் புத்தகங்களை

    அவனே மீட்டுக் கொடுத்தான்

    வேறெப்படி சொல்லமுடியும்

    பெருந்தலைவனே..

    கருப்பாயிருந்தாலும்

    நீ விளக்கு

    நீ வெளிச்சம்

    சுயமரியாதை கூடிய

    இத்தலைமுறை

    வாழ்வு நீ தந்தது!

    -கவிஞர் கரிகாலன்

    • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்தார்.
    • த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கட்சி அலுவலகத்தில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது நினைவிடம், தி.நகரில் உள்ள அவரது இல்லம், ஜிம்கானா கிளப் ஆகிய இடங்களில் உள்ள அவரது சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    சென்னை ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு தெலுங்கானா மற்றும் புதுவை கவர்னர் டாக்டர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்தார். முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தலைமையில் ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு கட்சியினர் மரியாதை செலுத்தினார்கள்.

    இதில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, கோகுலஇந்திரா, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, முன் னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, டி.சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். அவருடன் துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர்கள் விஜய் ஆனந்த், காளிதாஸ், சாய்சத்யன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அமைந்தகரையில் காமராஜர் தொடங்கி வைத்த மாநகராட்சி பள்ளியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதை தொடர்ந்து அங்கு படிக்கும் 300 மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரங்கபாஷ்யம், வசந்தராஜ், குலாம், சீனிவாசன், எம்.ஆர்.ஏழுமலை, ராகுல், கொளத்தூர் ரஞ்சன், மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரும் மாநகராட்சி கவுன்சிலருமான சிவராஜ சேகரன் ஜாம்பஜாரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் காமராஜர் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

    காமராஜர் பிறந்தநாளையொட்டி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கல்வியிலும், தொழில் துறையிலும் தமிழ்நாடு இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கான அடித்தளத்தை அறுபதாண்டுகளுக்கு முன்பே அமைத்துக் கொடுத்த பெருந்தலைவர் காமராஜருக்கு இன்று 121-ம் பிறந்தநாள். தமிழ் நாட்டை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் வழி நடத்தியதுடன், பிரதமர்களுக்கு எல்லாம் தலைவராக திகழ்ந்தவர் அந்த கர்ம வீரர். அவரது பிறந்தநாளில் அவரது நேர்மையையும், தேசப்பற்றையும் நினைவு கூர்ந்து போற்றுவோம்.

    தமிழ்நாட்டு முன்னேற்றத்தின் முகம் அவர் தான். எனது வளர்ச்சி அரசியலுக்கான முன்னோடியும் அவர் தான். அவரது வழியில் ஆட்சி நடத்தினால் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறுவதை தடுக்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்து தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி வழங்கிய அவரது வழியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்தும் நிலையை உருவாக்க இந்த நாளில் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • நினைவு இல்லத்திற்கு சென்ற கலெக்டர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்‌.
    • விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பதிவு வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது என்றார்.

    விருதுநகர்:

    பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா அவரது பிறந்த ஊரான விருதுநகரில் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம், மணி மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர் ஜெயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து நினைவு இல்லத்திற்கு சென்ற கலெக்டர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தமிழக அரசு சார்பில் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர சபை தலைவர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து ரெங்கப்ப நாயக்கன்பட்டி கிராமிய நூற்பு நிலையம் சார்பில் பெண்கள் நூற்பு வேள்வி நடத்தினர். அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தபின் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், பெருந்தலைவர் காமராஜர் நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றியவர். அவரது வழியில் தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பதிவு வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது என்றார். விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜ் சிலைக்கு நகர சபை தலைவர் மாதவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கமிஷனர் லீனா சைமன், துணைத் தலைவர் தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு தனியார் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

    • காமராஜர் பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
    • நங்கநல்லூர் அரசு பள்ளியில் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    சென்னை:

    காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்தது.

    அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டும் 15.7.2023 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சிறப்பாக கொண்டாட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னை நங்கநல்லூர் அரசு பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    காமராஜரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தனக்கு பரிசாக கிடைத்த 7,740 புத்தகங்களை அரசு பொது நூலகங்களுக்கு மு.க.ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.

    • தமிழகத்தின் கல்விக் கண்ணைத் திறந்துவிட்ட காமராஜர், நாட்டின் வளர்ச்சிக்காக தொழிற்சாலைகளையும் திறந்துவைத்தார்.
    • காமராஜர் ஆட்சியின்போதுதான் பெரியார், குந்தா நீர்மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டன

    "ஊர் ஊராக வந்து மதிய உணவுத் திட்டத்திற்கு பிச்சை எடுக்க சித்தமாக இருக்கிறேன்"என்று ஒரு விழாவில் பேசினார், பெருந்தலைவர் காமராஜர்.

    மறுநாள், அதாவது 13-7-1956 அன்று நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், மதிய உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்தார், அவர்.

    எங்கு தெரியுமா?

    வயிற்றுக்கு சோறிட வேண்டும்-இங்கு

    வாழும் மனிதருக்கு எல்லாம்;

    பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்

    பாரை உயர்த்திட வேண்டும் - என்று

    பாடிய தீர்க்கதரிசி கவிஞன் பாரதி பிறந்த எட்டயபுரம் மண்ணில், அந்தப் பாரதி படித்த பள்ளிக்கூடத்தில், அந்த முன்னோடித் திட்டம் முதல்முறையாகத் தொடங்கிவைக்கப்பட்டது.

    எவ்வளவு பொருத்தம் பாருங்கள்?

    வயிற்றுப் பசியை ஆற்றிவிட்டு, கல்வி அறிவை ஊட்டு. பிறகு நாட்டை உயர்த்திக் காட்டு என்று பாரதி எழுதிய அந்தப் 'பாட்டுச் சட்டத்தை' தமிழ்நாட்டில் அப்படியே அடிபிறழாமல் அமல்படுத்தி காட்டியவர் அல்லவா, அந்தப் படிக்காத மேதை!

    இன்று கல்வித்துறையில் தமிழகம் எட்டியிருக்கும் வளர்ச்சிக்கு வித்திட்டவர், அவரே.

    குலக்கல்வித் திட்டத்தை மூதறிஞர் ராஜாஜி கொண்டுவந்த போது, காங்கிரசில் எதிர்ப்பு வலுக்க, அவர் பதவி விலகவே,1954-ம் ஆண்டு புதிய முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றவுடன் காமராஜர் முதலில் சிந்தித்தது, ஏழைப் பிள்ளைகளின் வயிற்றுப் பசியை தீர்த்து, கல்வி அறிவை எவ்வாறு ஊட்டுவது என்பது பற்றித்தான்.

    500 பேர் வசிக்கும் கிராமத்துக்கு ஒரு பள்ளிக்கூடம். பள்ளி இறுதி வகுப்புவரை அனைவருக்கும் இலவச கல்வி. இலவச சீருடை போன்ற முன்னோடி திட்டங்களை முன்னெடுத்தார்.

    நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றால், சிறந்த ஆசிரியர்கள் தேவை என்பதை உணர்ந்தார்.

    1955-56 வரவு செலவு திட்டத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வு ஊதிய திட்டத்தை நாட்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்தினார். பிறகு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும், 1961-ல் கல்லூரி ஆசிரியர்களுக்கும் அதை விரிவுபடுத்தினார்.

    வட்டம், மாவட்டங்கள் தோறும் நூலகங்களை நிறுவினார். பொது நூலகத்திற்கு என்று நாட்டிலேயே முதல் முறையாக சட்டம் இயற்றினார்.

    இவ்வாறு தமிழகத்தின் கல்விக் கண்ணைத் திறந்துவிட்ட காமராஜர், நாட்டின் வளர்ச்சிக்காக தொழிற்சாலைகளையும் திறந்துவைத்தார்.

    'பாய்லர்' என்று சொல்லப்படுகிற ராட்சத கொதிகலன் தயாரிக்கும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்துத்தர செக்கோஸ்லோவாக்கியா நாடு முன்வந்தது. அதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார், காமராஜர்.

    மத்திய அரசு அதிகாரிகளும், அந்த வெளிநாட்டு நிறுவனத்தினரும் இணைந்து அந்தத் தொழிற்சாலையை தமிழகத்தில் எந்த இடத்தில் அமைக்கலாம் என்று அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    பரந்த சமவெளியான இடம், சுத்தமான தண்ணீர், தடையில்லா மின்சாரம், போக்குவரத்துக்கு ரெயில் வசதி போன்ற அடிப்படை கட்டமைப்புகளைக் கொண்ட இடம்தான் அந்தத் தொழிற்சாலைக்குத் தேவை என்று வெளிநாட்டு நிறுவனத்தினர் கூறினர்.

    அத்தனை வசதிகளையும் கொண்ட ஓர் இடத்தை தமிழக அதிகாரிகளால் அவர்களுக்குச் சுட்டிக் காட்டமுடியவில்லை. தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்துவிட்டு, சோர்ந்து போன வெளிநாட்டு நிறுவனத்தினர் தொழிற்சாலை அமைக்க தமிழகத்தில் தகுந்த இடமில்லை என்ற முடிவோடு கிளம்பத் தயாரானார்கள்.

    அதை அறிந்த காமராஜர், தமிழக அதிகாரிகளையும், வெளிநாட்டு நிறுவனத்தினரையும் அழைத்து, "எந்தெந்த இடங்களுக்கு எல்லாம் சென்று பார்த்தீர்கள்?" என்று விசாரித்தார்.

    தமிழக அதிகாரிகள் தாங்கள் அழைத்துச்சென்று காட்டிய இடங்களை பட்டியலிட்டதுடன், வெளிநாட்டு நிறுவனத்தார் எதிர்பார்க்கும் வசதிகள் ஒருசேர அமைந்த இடத்தைக்காட்ட இயலவில்லை என்றனர்.

    தமிழகத்தின் ஒவ்வொரு தெருக்கோடியிலும் தனது காலடி பதிய பயணம் செய்தவராயிற்றே, காமராஜர், ஒரு கணம் சிந்தித்துவிட்டு "திருச்சி அருகே காவிரி ஆற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தை காட்டினீர்களா?" என்று கேட்க, அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள்.

    "ஏன்?... இவங்க கேட்கிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே... போய் முதல்ல அந்த இடத்தை காட்டிவிட்டு எங்கிட்ட வாங்க!" என்றார், அந்தப் படிக்காதமேதை.

    என்ன ஆச்சரியம்! அங்கே போய் பார்வையிட்ட வெளிநாட்டு நிறுவனத்தாருக்கு, அந்த இடம் பிடித்துப் போய்விட்டது. அது எல்லா வகைகளிலும் தொழிற்சாலை அமைக்கப் பொருத்தமானதாக இருந்தது. அந்த இடமே இறுதியாகத் தேர்வானது. ஏறக்குறைய 750 ஏக்கர் பட்டா நிலத்தையும், 2,400 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் மாநில அரசு அதற்காக ஒதுக்கிக் கொடுத்தது. அங்கே புதிய தொழிற்சாலை உருவானது.

    ஆரம்பத்தில் "ஹெல்" என்ற பெயரில் தொடங்கப்பட்டு, இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் "பெல்" என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பெல்) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமாக உயர்ந்து இருக்கிறது.

    1-5-1963-ம் ஆண்டு அதன் திறப்புவிழா நடைபெற்றது. அப்போதைய துணை ஜனாதிபதி ஜாகிர் உசேன் திருச்சி பெல் நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.

    பொருளாதார வளர்ச்சியின் ஆணிவேர் தொழில் வளர்ச்சி. தொழில் வளர தடையற்ற மின்சாரம் வேண்டும். இதில் நிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலையங்கள் வழியாகவே அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த அனல்மின் நிலையங்களை அமைக்க உதவுவதுதான் 'பெல்' நிறுவனத்தின் முதன்மைப் பணி. 'பெல்' நிறுவனத்தின் பங்களிப்பை எளிய மனிதனின் வார்த்தையில் சொன்னால், நம் வீட்டில் 4 விளக்குகள் எரிந்தால் அதில் 3 விளக்குகள் 'பெல்' நிறுவனத்தின் துணையோடுதான் எரிகின்றன என்பதே. உலக நாடுகளில் தொழில் புரட்சியை ஏற்படுத்தி வந்த 'மின்சாரம்' சென்னைக்கு தாமதமாக 1909-ம் ஆண்டுதான் வந்தது. சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேய அரசு மூன்று மின் திட்டங்களை நிறுவி இருந்தது. மூன்றுமே நீர்மின் திட்டங்களாக இருந்தன. அவைதான் பைக்காரா, மேட்டூர், பாபநாசம்.

    காமராஜர் ஆட்சியின்போதுதான் பெரியார், குந்தா நீர்மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டன. கீழ்பவானி, மணிமுத்தாறு, வைகை போன்ற பல நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டன. நீர்மின் திட்டங்களை போலவே மின்சார உற்பத்தியில் அனல்மின் திட்டங்களுக்கும் பெரிய பங்கு உண்டு. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி படிமம் கண்டறியப்பட்டு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் அமைந்தது. அது எவ்வாறு அமைந்தது என்பதை வரலாறு எளிதாக மறந்துவிடாது!

    கடலூரைச் சேர்ந்தவர் பெருநிலக்கிழார் ஜம்புலிங்க முதலியார். அவருக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தது.

    கடந்த 1932-33-ம் ஆண்டில் நெய்வேலியில் உள்ள தனது நிலத்தில் விவசாயத்திற்காக அவர், புதிய கிணறு வெட்டினார்.

    அப்போது, தண்ணீருடன் கரித்துகள்கள் கலந்து வருவதைக் கண்டார்.

    அதை அன்றைய ஆங்கிலேய அரசின் கவனத்திற்கு கொண்டுசென்றார். ஆனால் ஆங்கிலேய அரசு கண்டுகொள்ளவில்லை. பின்பு அவரே தன் சொந்தச் செலவில் ஆய்வுகளை மேற்கொண்டு நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்தார்.

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரை, ஜம்புலிங்கம் முதலியார் அணுகி நிலக்கரி இருப்பது குறித்து விளக்கிச் சொல்ல அவர், அப்போதைய பாரத பிரதமர் நேருவின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

    அதன்பிறகு நெய்வேலியைச் சுற்றிலும் பல இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கே, பெருமளவில் பழுப்பு நிலக்கரி இருப்பது தெரியவந்தது.

    அன்றைய தினம் நிலக்கரி நிறுவனம் தொடங்க ரூ.150 கோடி தேவைப்பட்டதால் அதற்கு நிதி உதவிதர இயலாது என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது.

    இருந்தாலும் காமராஜர் மனம் தளரவில்லை. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார்.

    ஜம்புலிங்கம் முதலியார், நிலக்கரி சுரங்கம் உருவாக தேவைப்படும் 620 ஏக்கர் நிலத்தை மாநில அரசுக்கு தானமாகக் கொடுத்தார். காமராஜருக்கு அது உற்சாகத்தைத் தந்தது. நிலக்கரி வெட்டி எடுத்து மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அவர் கையில் எடுத்தார்.

    மத்திய அரசின் உதவி இல்லாமல் காமராஜர் தலைமையிலான சென்னை மாநில அரசே, நிலக்கரியை வெட்டி எடுக்க முடிவு செய்தது. நெய்வேலியைச் சுற்றியுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், மின் உற்பத்தியும் செய்யலாம் என்ற உயரிய நோக்குடன் காமராஜர் அந்தப் பணியை முனைப்புடன் தொடங்க உத்தரவிட்டார்.

    அதற்குத் தேவையான ராட்சத உபகரணங்கள் ரஷிய நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டன. அங்கிருந்து கப்பல் மூலமாக சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் துறைமுகத்தில் இருந்து நெய்வேலிக்கு கொண்டுபோக போதிய வழித்தடம் இல்லை. அதனால் சென்னை துறைமுகத்திலேயே ராட்சத உபகரணங்களைச் சுமந்துகொண்டு கப்பல் ஓராண்டாக நின்றது.

    காமராஜர், மத்திய, மாநில பொறியாளர்களை அழைத்து ஆலோசனை கேட்டார். சரியான வழித்தடம் அமைத்தால் மட்டுமே உபகரணங்களை கொண்டு செல்ல முடியும் என்று அவர்கள் சொன்னார்கள். அதற்கு காமராஜர், "அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். உபகரணங்கள் கொண்டு செல்வதற்கு மட்டும் வழித்தடம் அமைக்காமல், காலம் காலமாக மக்கள் அதைப் பயன்படுத்தும் வகையில் வழித்தடம் அமையவேண்டும்" என்றார்.

    உடனடியாக அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கடற்கரை ஓரமாக ஒரே மாதத்தில் மண்சாலை அமைக்கப்பட்டது. (அந்தச் சாலைதான் காலத்தால் மறு உருப்பெற்று 'இ.சி.ஆர்.' சாலை என்று இன்றைக்கு அழைக்கப்படுகிறது) அந்த வழியாகத்தான் பல்வேறு வாகனங்களில் உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு நெய்வேலியில் நிறுவப்பட்டன.

    நெய்வேலியில் ஆரம்பத்தில் சுரங்கம் தோண்டி நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட போது, நீரூற்று காரணமாக சுரங்கம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் திறந்தவெளி சுரங்கங்கள் அமைக்கப்பட்டன.

    அதன்பிறகு மத்திய அரசு 1956-ம் ஆண்டில் நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் உற்பத்தி செய்ய ஓர் அமைப்பை ஏற்படுத்தியது.

    நெய்வேலி கிராமத்தில் முதன் முதலில் பழுப்பு நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டதால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) என பெயர் சூட்டப்பட்டது. அங்குள்ள சுரங்கத்தை கடந்த 20.5.1957 அன்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்தார்.

    என்.எல்.சி. தொடங்கியதோடு காமராஜரின் பணி முடியவில்லை. அவ்வப்போது நெய்வேலிக்கு சென்று சுரங்கத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அன்று காமராஜர் எடுத்த பெரும் முயற்சியால் இன்று என்.எல்.சி. ஆலமரமாய் வளர்ந்து, பல கோடி இல்லங்களில் விளக்கு எரிய காரணமாக அமைந்தது.

    அது மட்டுமா? சென்னை மாகாணத்தின் மின்சாரப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு 5 லட்சம் கிலோ வாட் மின் உற்பத்தி திறன்கொண்ட அணுமின் நிலையத்தை கல்பாக்கத்தில் அமைக்க காமராஜர் முயற்சிகள் மேற்கொண்டார். மத்திய அரசின் அணுமின் உற்பத்தித் துறையை அணுகி, அத்திட்டத்தை பெறுவதில் வெற்றியும் கண்டார். அதன் பயனை தமிழ்நாடு மட்டும் அல்ல; தென் மாநிலங்களே இன்று அனுபவித்து வருகின்றன.

    இவ்வாறு கல்வி வளர்ச்சியிலும், தொழில் வளத்திலும் நாட்டை முன்னெடுத்துச் சென்ற காமராஜர் 9 ஆண்டுகள் தமிழகத்தில் பேராளுமை முதல்வராக திகழ்ந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். 1964-ம் ஆண்டு பிரதமர் நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரி, புதிய பிரதமராகுவதற்கு உதவினார். சாஸ்திரியின் திடீர் மறைவுக்குப் பிறகு 1966-ம் ஆண்டில் இந்திராகாந்தியை பிரதமர் ஆக்கினார். அகில இந்திய அரசியலில் 'கிங் மேக்கர்' என அழைக்கப்பட்டார். 2-10-1975 அன்று தனது 78-வது வயதில் இந்த மண்ணைவிட்டு மறைந்தார். ஆனால் மக்கள் மனமெல்லாம் நிறைந்தார்.

    வாழ்ந்த காலங்களில் விருதுகளை விரும்பாத, அந்த விருதுப்பட்டி மகாராசனுக்கு இந்திய அரசு 'பாரத ரத்னா' விருதை அளித்து தன்னைக் கவுரவப்படுத்திக் கொண்டது. அவர் பிறந்த ஜூலை மாதம் 15-ம் நாளை (இன்று) கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி மகிழ்கிறது.

    • ‘காமராஜர் என்றாலே கல்வி’ என்ற நினைவு நமக்கு வரும்.
    • கர்மவீரா் காமராஜரை ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என்று மக்கள் புகழ்ந்து போற்றினர்.

    சென்னை:

    தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    'காமராஜர் என்றாலே கல்வி' என்ற நினைவு நமக்கு வரும். காரணம், அவா் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனே கிராமங்களுக்கும் பள்ளிக்கூடங்கள் வேண்டும் என்று, அதற்கு நல்ல திட்டங்கள் வடிவமைத்து செயல்படுத்தி வெற்றி கண்டார்.

    அதனால், கர்மவீரா் காமராஜரை 'கல்விக்கண் திறந்த காமராஜர்' என்று மக்கள் புகழ்ந்து போற்றினர். காமராஜர், கல்விக்கு மட்டுமல்ல, தொழில் துறைக்கும், வேளாண்மைக்கும் தனது திட்டங்களால் தமிழகத்தை தன்னிறைவு பெற்ற மாநிலமாக உயர்த்தினார். அத்தகைய புகழ்மிக்க தலைவர் காமராஜரை நினைவு கூர்வது நமது கடமையாகும். சிந்தனை சிற்பி செயல்வீரா் காமராஜர் புகழ் ஓங்குகவே!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காமராஜர் மறைவுக்கு பிறகு சென்னை காமராஜர் அரங்கில் இந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
    • வருகிற 15-ந் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் அரங்கத்திற்கு இந்த கார் திரும்ப அனுப்பப்படுகிறது.

    கிருஷ்ணகிரி:

    பெருந்தலைவர் காமராஜர் எம்.டி.டி.2727 என்ற எண் கொண்ட 1952-ல் அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லட் கருப்பு நிற காரை பயன்படுத்தி வந்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர் பயன்படுத்தி வந்த இந்த காரை முதலமைச்சர் ஆன பிறகும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.

    காமராஜர் மறைவுக்கு பிறகு சென்னை காமராஜர் அரங்கில் இந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள மெக்கானிக் ஷெட்டிற்கு கடந்த மாதம் கொண்டு செல்லப்பட்டு இந்த கார் தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது கண்ணாடி, உதிரிபாகங்கள், விளக்குகள் பொருத்தப்பட்டு புதுப்பொலிவுடன் உள்ள காரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்பி எடுத்து செல்கிறார்கள். வருகிற 15-ந் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் அரங்கத்திற்கு இந்த கார் திரும்ப அனுப்பப்படுகிறது.

    • "…என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...?"என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.
    • விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை, காமராஜரை மிகவும் வாட்டியது.

    பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார். போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்த பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா, என்பதால் அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்சொன்னார்.

    ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டு "என்ன காமராஜ்" என்று கேட்டார் ஜீவா.

    "என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?"என்று கேட்டு ஆதங்கப்பட்டார் காமராஜர்.

    உடனே ஜீவா, நான் மட்டுமா..? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத்தான் நானும் இருக்கேன் என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

    காமராஜரை, உட்கார வைக்க, ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள்.

    நீ அடிக்கல் நாட்டிய, பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன் என்றார் காமராஜர்.

    காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும் என்று ஜீவா மறுக்க,

    அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப்போக, கிளம்பு போகலாம் என்று அழைத்தார், காமராஜர்.

    அப்படின்னா, நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் என்று அனுப்பி வைத்தார்.

    கண்டிப்பாக வரணும் என்றார் காமராஜர்.

    விழாவுக்கு, அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா.

    "…என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...?"என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.

    உடனே ஜீவா, "நல்ல வேட்டி ஒண்ணு தாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு, காய வைச்சு, கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம். தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.

    உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

    விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை, காமராஜரை மிகவும் வாட்டியது.

    அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.

    ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான்..

    காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்..

    ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம்...? என்றார்.

    கூட்டத்தில் இருந்த ஒருவர், ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்" என்றார்.

    உடனே காமராஜர், ரொம்ப நல்ல யோசனை. ஆனா, நான் கொடுத்தா, அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விடமாட்டான்.

    அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, "வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே, நான் வேலை போட்டுத் தர்றேன்...

    ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது. அவன் முரடன், உடனே வேலையை விட வைச்சுடுவான் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

    அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு அரசு வேலை கொடுத்தார் காமராஜர். அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.

    காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது.

    நோய் வாய்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா.

    தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்..."காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...என்பது தான்.

    இனி எங்கே காண முடியும்..? இது போன்ற தலைவர்களை..

    -எச்.கே. சாம்

    • விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
    • தமிழக நாடார் சங்க நிர்வாகிகளுடன் மத்திய விமான போக்கு வரத்துத்துறை செயலாளர் ராஜீவ் பன்சாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தமிழக நாடார் சங்க நிர்வாகிகளுடன் மத்திய விமான போக்கு வரத்துத்துறை செயலாளர் ராஜீவ் பன்சாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலைய கட்டிடத்துக்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வருகிற 8-ந் தேதி புதிதாக திறக்கப்பட இருக்கும் விமான நிலைய கட்டிடத்தில் 'பெருந்த லைவர் காமராஜர் விமான நிலையம்' என்ற பெயர் பலகை இடம்பெற வேண்டும்.

    மற்ற விமான நிலை யங்களில் தலைவர்களுக்கு சிலை உள்ளது போல் சென்னை உள்நாட்டு விமான நிலைய வளாகத்தில் காமராஜருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைத்து தரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விஜய் வசந்த் எம்.பி.யுடன், தமிழ்நாடு நாடார் சங்கபொதுச் செயலாளர் வி.எல்.சி. ரவி, தலைமை நிலைய செயலாளர் பொன் ராஜ், கொள்கை பரப்பு செயலாளர் சுரேஷ்மாறன், மாநில ஒருங்கிணைப்பாளர் அனந்தகுமார், மராட்டிய மாநில் தலைவர் தெய்வ குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இளைஞர்கள் காமராஜர் போன்ற அரசியல்வாதிகளை தேட ஆரம்பித்து விட்டார்கள்.
    • காமராஜர் படத்தையும் புகழையும், இருட்டடிப்பு செய்து அவருடைய பெயரை உச்சரிக்காத அரசியல்வாதிகளை புறந்தள்ள தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு நடவடிக்கை குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்ட விளம்பரங்களில் பெருந்தலைவர் காமராஜர் படம் இடம் பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் சமயங்களில் மட்டும் காமராஜர் படத்தை சிறிய அளவில் பயன்படுத்தி காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மற்ற நேரங்களில் அவரது படத்தையும், பெயரையும் மறைக்கிறார்கள்.

    காமராஜர் பெயரையும், புகழையும் மறைக்க நினைக்கும் காங்கிரஸ்காரர்களின் எண்ணங்கள் காங்கிரஸ் கட்சியை அழிவு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதை உணர வேண்டும். இளைஞர்கள் காமராஜர் போன்ற அரசியல்வாதிகளை தேட ஆரம்பித்து விட்டார்கள். எனவே காமராஜர் படத்தையும் புகழையும், இருட்டடிப்பு செய்து அவருடைய பெயரை உச்சரிக்காத அரசியல்வாதிகளை புறந்தள்ள தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராகுலின் நடைப்பயணம் நேற்று நிறைவு பெற்றது.
    • காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.

    அரூர்,

    காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் முதல் ஜம்மு காஷ்மீரில் வரை நடைப்பயணம் மேற்கொண்டார். 12 மாநிலங்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற நடைப்பயணம் நேற்று நிறைவு பெற்றது.

    இதனையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் அரூர் பேருந்து நிலையம், கச்சேரி மேட்டில் ஆகிய இடங்களில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சி கொடியேற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    பின்னர் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தை ஒட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.  

    • ஒரே நேரத்தில் கல்வி புரட்சியும் தொழில் புரட்சியும் விவசாய புரட்சியும் மின்சார புரட்சியும் இன்னும் பல நன்மைகளும் நடப்பதற்கு காமராஜரின் ஆளுமையை காரணம்
    • காமராஜருடைய இடத்தில் வேறு எவரையும் வைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதீதமான நம்பிக்கை கொண்டிருந்தார் பெரியார்...

    காமராஜருடைய ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு நாள் பொழுதும் ஒரு பொற்காலமாய் தெரிந்தது தந்தை பெரியாருக்கு... காமராஜர் தமிழ்நாட்டு முதல் அமைச்சராக பொறுப்பேற்ற இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் எப்பேர்பட்ட நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு காமராஜரே தமிழக முதல்வராக இருந்துகொண்டு ஆண்டால், தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதலிடத்திற்கு கொண்டு வந்து விடுவார் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் பெரியார்...

    ஒரே நேரத்தில் கல்வி புரட்சியும் தொழில் புரட்சியும் விவசாய புரட்சியும் மின்சார புரட்சியும் இன்னும் பல நன்மைகளும் நடப்பதற்கு காமராஜரின் ஆளுமையை காரணம்... அவருடைய நேர்மையே காரணம்... தன்னலமற்ற சேவை மனப்பான்மையே காரணம்... நிர்வாகத் திறமையை காரணம்... எந்தவிதமான பந்தாக்கள் எதுவுமில்லாத எளிமையே காரணம்...

    இப்படிப்பட்ட நற்குணங்கள் கொண்ட ஒரு தலைவர் தமிழகத்திற்கு இனிமேல் கிடைப்பாரா? என்ற அளவுக்கு பெரியாரின் சிந்தனை இருந்தது... காமராஜருடைய இடத்தில் வேறு எவரையும் வைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதீதமான நம்பிக்கை கொண்டிருந்தார் பெரியார்...

    ஆனால் காமராஜருடைய சிந்தனை தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுக்க பரந்தும் விரிந்தும் இருந்தது... தமிழகத்திற்கு தம்மால் முடிந்ததை ஓரளவுக்கு செய்திருந்த திருப்தி இருந்தாலும் அகில இந்திய அளவில் நாடு அத்தனை செழிப்பாக இல்லையே.. பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவ்வளவு நிம்மதியாக இல்லையே என்ற கவலை காமராஜர் நெஞ்சிலே நிரம்பி இருந்தது. 1962-ம் ஆண்டு நடைபெற்று முடிந்திருந்த சீன போரிலே இந்தியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவால் நேரு மனமடைந்து போயிருந்தார். மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இயங்கிக்கொண்டிருந்த நேருவின் உடல்நிலையில் அது ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

    ஒரு ஆட்சி நன்றாக நடக்க வேண்டும் என்றால் அந்த ஆட்சிக்கு தலைமை ஏற்று இருக்கிற தலைவனது உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும். அவர் சார்ந்திருந்த கட்சியின் கட்டுக்கோப்பும் சீராக இருக்க வேண்டும். இப்படி இரண்டு வகையில் சீர்தூக்கி பார்த்து சிந்தித்தார் காமராஜர்.

    எனவே நேருவைப் பற்றியும் அவரது உடல் நிலையை சீராக்குவதிலும் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதிலும் கவனம் செலுத்தியாக வேண்டியது தனது கடமையாகும் என்று உணர்ந்திருந்தார் காமராஜர்.

    ஐதராபாத்திற்கு வந்திருந்த நேருவை போய் சந்தித்து நாட்டின் நிலை குறித்து விரிவாக கலந்து ஆலோசித்தார் காமராஜர்... அப்போது உருவானது தான் "கே" பிளான் திட்டம்... அந்த திட்டத்தின்படி மூத்த தலைவர்கள் பலர் தாங்கள் வகிக்கும் முதல்வர் பதவியில் இருந்து விலகி இளைஞர்களை பொறுப்பிலே அமர்த்திவிட்டு கட்சிப்பணி ஆற்ற வேண்டும் என்பதே காமராஜரின் திட்டமாகும்... அதுதான் பின்னர் "கே" பிளான் என்று அழைக்கப்பட்டது.

    நேருவும்... இப்பொழுது உள்ள சூழ்நிலையில் இது ஒரு நல்ல ஆலோசனை என்றும் மூத்த தலைவர்கள் பலருடன் ஆலோசனை கலந்து அவர்களுடைய இசைவில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நினைத்தார். முதற்கட்டமாக நானே பதவியை விட்டு விலகுகின்றேன் என்று முன்வந்தார் நேரு. ஆனால்... காமராஜர் உட்பட மூத்த தலைவர்கள் யாரும் நேரு பதவி விலகுவதை விரும்பவில்லை.

    இந்தத் திட்டத்தில் நேருவுக்கு மட்டும் விதிவிலக்கு என்று சொல்லி பதவி விலக முன்வந்த நேருவை சமாதானப்படுத்தி விட்டனர். ஏனென்றால் நேருவுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கும் உலகளவில் இருந்த மதிப்பும் மரியாதையும் வேறு எவருக்கும் இல்லை. அவரது ஆளுமைக்கு ஈடு சொல்ல எவரும் இல்லை என்ற எண்ணமே தலைவர்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது.

    இப்படி இந்த "கே" பிளான் பற்றிய செய்திகள் எல்லாம் பத்திரிக்கையில் வெளிவந்து அப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தின் முதல்வராக இருந்த காமராஜரும் இந்த "கே" பிளான் மூலம் பதவியை துறப்பார் என்ற செய்திகள் அடிபட தொடங்கியது.

    இதையெல்லாம் ஏடுகளின் மூலமாக அறிந்த தந்தை பெரியார் மிகுந்த கவலைக்குள்ளானார்... தமிழ்நாட்டின் நலன் கருதி இதை எப்படியாவது தடுத்தாக வேண்டுமே... அவரவர் சார்ந்திருக்கும் கட்சியை அவரவர் பலப்படுத்த நினைப்பதில் எந்த தவறும் இல்லை அது அவர்களின் நிலைப்பாடு. ஆனால் காமராஜரை போல ஒருவர் தமிழ்நாட்டுக்கு கிடைப்பாரா? இதுதான் பெரியாருடைய கேள்வி!

    யோசனையை கூறிவிட்டு நாம் பதவியில் இருப்பது நாகரிகமாகாது என்ற நினைப்பில் முதல்வர் பதவியில் இருந்து விலகுவது என்ற முடிவினை காமராஜர் எடுத்து இருப்பார் என்று நினைத்தார் பெரியார். உடல்நலிவு என்று வந்துவிட்டால் நோயாளி தான் மருந்து சாப்பிட வேண்டுமே தவிர டாக்டரே ஏன் சாப்பிட்டு காட்டக்கூடாது என்றெல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள் என்று விடுதலை நாளேட்டில் 10.8. 1963-ல் ஒரு தலையங்கத்தையே எழுதினார் பெரியார்.

    மேலும் அந்த தலையங்கத்தில் நெருக்கடியான இந்த நேரத்தில் நீடிக்க வேண்டியது நேருவின் தலைமையே என்று பலர் கருதுவது போல தமிழகத்தை பொறுத்தவரையில் காமராஜரின் தலைமையும் நீடித்தாக வேண்டும் என நினைத்தார் பெரியார்.

    இதை காங்கிரஸ் மேலிடத்தார் நன்கு உணர்ந்திட வேண்டும். ஒரு பிரச்சினையை தீர்க்கப் போய் புதிதாக பல பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வது புத்திசாலித்தனமான காரியமாகாது. கடைசியாக சொல்கிறேன் தமிழ்நாட்டின் நலனையே முதலில் காமராஜர் மனதில் கொள்ள வேண்டும். மூன்றரை கோடி மக்கள் நலனை கருத்தில் கொண்டே இதனை கூறுகிறோம். முதலில் நாட்டு நலன். பிறகுதான் கட்சி நலன். ஒளி வீசும் தமிழகம் மீண்டும் இருளுக்கு ஆளாகி விடக்கூடாது அது கேடு மட்டுமல்ல பெருங்கேடு என்று விடுதலையில் எழுதி இருந்தார் பெரியார்.

    இந்த சந்தர்ப்பத்தில் வேறு யாராவது ஆட்சியில் வந்து அமர்ந்தால் அவர்களால் சமாளிக்க முடியாமல் கேரளாவை போல் ஒரு நிலையற்ற ஆட்சி தமிழகத்திலும் ஏற்பட்டுவிடும் .இதனை ஒரு எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன் என்றெல்லாம் விடுதலை ஏட்டில் கோடிட்டு காட்டி இருந்தார் பெரியார்.

    மேலும் காமராஜருக்கு ஒரு தந்தியும் கொடுத்தார் பெரியார்...

    Either on your own accord or on the advice of others, your resignation of chiefminister ship will be sucidal to tamilians, Tamilnadu and yourself.

    தாங்களாகவோ அல்லது பிறரது ஆலோசனை காரணமாகவோ தமிழ்நாட்டு முதல் அமைச்சர் பதவியில் இருந்து தாங்கள் விலகினால் அது தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் தங்களுக்கும் தற்கொலைக்கு ஒப்பானதாகும்... என்பதுதான் பெரியார் கொடுத்திருந்த தந்தியாகும் .

    பெரியாரின் இந்த கணிப்பு பின்னாளில் அப்படியே நடந்தது, பலித்தது. காமராஜரின் இடத்திலே வந்து அமர்ந்து முதல்வராக ஆட்சி செய்த பக்தவச்சலம் அவர்களால் காமராஜரை போல செயல்பட முடியவில்லை. விலைவாசி உயர்வை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நமக்கே அரிசி தேவைப்பட்டிருந்த நேரத்தில் கேரளாவுக்கு அதை அனுப்பி வைத்ததால் இங்கே அரிசி பஞ்சம் ஏற்பட்டு அது ஒரு மாபெரும் பிரச்சினையாக உருவானது.

    இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ் நாடெங்கும் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பங்கேற்றதால் ஆங்காங்கே கலவரங்கள் நடைபெற்றது. இப்படி ஒன்றுக்கு மேல் ஒன்று வந்து காமராஜர் இல்லாத தமிழகம் எப்படி இருக்கும் என்று பெரியார் சொன்ன சொற்களை நிரூபித்து காட்டியது.

    இப்படி எல்லாம் நடைபெற்றதற்கு பின்னாலும் காமராஜரை ஆதரிப்பதை பெரியார் கைவிடவில்லை. காந்திஜி சென்னைக்கு வந்த நேரத்தில் காமராஜரை காந்திஜிக்கு அருகிலே செல்லவிடாமல் மாலை கூட போட விடாமல் தடுக்கப்பட்ட காலம் எங்கே... இப்போது காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கம்பீரமாக ஒரு தமிழர் கோலோச்சுகிற காலகட்டம் இங்கே என்றெண்ணி பெருமிதப்பட்டார் தந்தை பெரியார்..

    முனைவர் கவிஞர் இரவிபாரதி

    முனைவர் கவிஞர் இரவிபாரதி

     காமராஜர் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு புவனேஸ்வரம் மாநாட்டிலே அவர் தமிழிலேயே உரையாற்றியதை பெரிதும் வரவேற்று மகிழ்ந்தார். அதுமட்டுமல்ல திராவிட கழக மாநாட்டிலே பேங்குகளை தேசிய மயமாக்க வேண்டும், தொழில்களை தேசிய மயமாக்க வேண்டும், இன்சூரன்ஸ் கம்பெனிகளை அரசு எடுத்துக் கொள்வது என்று நாங்கள் போட்ட தீர்மானங்களை எல்லாம் புவனேஸ்வர் மாநாட்டிலே தீர்மானங்களாக கொண்டு வந்ததையும் பாராட்டி மகிழ்ந்தார் பெரியார்.

    இன்று உலகமே வியந்து போற்றுகிற இடத்திலே நமது காமராஜரை அமர்த்தி அழகு பார்த்து இருக்கிறார் ஜவஹர்லால் நேரு... இந்த நாட்டில் காமராஜருக்கு விரோதமாக எவனும் செயல்பட்டால் அவன் நாட்டுக்கு துரோகம் செய்கிறான் என்று பொருளாகும். தங்களுடைய சுயநலனுக்காக காமராஜர் காரியம் செய்து உதவவில்லை என்று பணக்காரர்களும் சுயநலவாதிகளும் அவரை ஒழிக்க வேண்டும் என்று முயல்கிறார்கள்... காமராஜர் திட்டம் வெற்றி பெற்றால் பணக்காரர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்பதற்காக அவரை செல்வ சீமான்கள் எல்லாம் கூட்டணி சேர்ந்து எதிர்க்கிறார்கள். எனவே நமது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று விடுதலை நாளிதழில் 13.2.1964-ந்தேதி எழுதினார் பெரியார்.

    ஜூன் 1963-ல் முதல்-அமைச்சர் பதவியை துறந்து காமராஜர் டெல்லிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஆனதற்கு பின்னாலே பெரியார் எழுதிய கட்டுரை இது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஆனதற்கு பின்னாலே காமராஜரின் 63-வது பிறந்தநாள் விழா நாடெங்கும் உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. நாமெல்லாம் காமராஜரை முதல்வர் பதவியிலே அமர்த்தி அழகு பார்த்தோம். இப்போது அகில இந்திய காங்கிரசுக்கே தலைவராக ஆகியிருக்கிறார். உலகமே போற்றுகிற பண்டித ஜவஹர்லால் நேருவுக்கே ஆலோசனை சொல்லுகிற இடத்திலே காமராஜர் அமர்ந்திருக்கிறார் என்று சொல்லி நமது கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஏற்பாட்டில் சென்னை நகரமே திணறுகிற அளவுக்கு விழாக்கள் அன்றைய தினம் நடைபெற்றன.

    இதற்கு முன்னாலே நமது தமிழர்கள் அகில இந்திய தலைமை பொறுப்பிலே ஒரு சிலர் இருந்திருக்கிறார்கள். அந்த காலகட்டம் என்பது வேறு. அப்போது மேல் சாதிக்காரர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் மட்டுமே அது கிட்டியது. அதுவே காங்கிரசில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகவும் இருந்தது. ஆனால் ஒரு ஏழை வீட்டிலே பிறந்து தனது கடினமான உழைப்பால் படிப்படியாக உயர்ந்து தமிழக முதல்வராக சிறப்பாக பணியாற்றி பேரெடுத்த ஒருவரான காமராஜர் இப்பதவிக்கு வந்ததை இந்திய நாடே வரவேற்றது என்பதே உண்மை.

    பெரும்பாலும் வட இந்திய தலைவர்கள் தென்னிந்திய தலைவர்களை அவ்வளவாக வரவேற்பதில்லை. இந்தியாவில் தாங்களே மற்றவர்களை விட மேலோர்கள் என்ற எண்ணம் வட இந்தியத் தலைவர்கள் அடி மனதிலே ஊறியிருந்தது .இப்போதும் அந்த எண்ணம் அவர்களிடம் இருக்கிறது. அந்த எண்ணத்தையும் தாண்டி காமராஜரை "காலா காந்தி" என்று அழைத்து வடஇந்திய தலைவர்கள் வரவேற்று பாராட்டி மகிழ்ந்தது ஒரு ஆச்சரியமான விஷயம் என்றே சொல்லலாம் .

    தந்தை பெரியாரின் ஒப்புதலோடு காமராஜர் பிறந்தநாளையொட்டி அப்போது விடுதலை நாளேட்டின் ஆசிரியராக இருந்த குத்தூசி குருசாமி அவர்கள் எழுதிய கட்டுரை மிக முக்கியமான கட்டுரையாகும்.

    "தமிழகத்தின் பொற்காலத்தை படைத்த தமிழர்களின் இரண்டாம் காவலரான நமது காமராஜர் அவர்களுக்கு இன்று 63-ம் ஆண்டு பிறக்கிறது"

    முல்லைக்கு தேர் கொடுத்தும் மயிலுக்கு போர்வை ஈந்தும் வள்ளலானவர்களுக்கு மத்தியில் கல்வி வள்ளல் என்று பெயர் எடுத்தவர் தான் நமது காமராஜர்... "தனக்கென வாழாப் பிறருக்குறியாளன் " என்ற தலைமைக்கு ஒரு இலக்கணம் வகுத்த, காமராஜர் தனது 50 ஆண்டு கால பொதுவாழ்வில் சேர்த்தது ஒன்றே ஒன்றுதான்... அதுதான் புகழ், மங்காத புகழ், மாசில்லா புகழ் ஆகும்.

    பதவிகளை தேடி அவர் சென்றது இல்லை அவரை தேடித்தான் பதவிகள் வந்துள்ளன. அப்பதவிகளால் அவர் பொலிவு பெற்றதில்லை, அவரால் தான் பதவிகள் பொலிவு பெற்றன. தர்மம் என்ற பெயரால் கொடிகட்டி பறந்த சாதிக்கு மரண அடி கொடுத்த மாமேதை அவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழுத்தப்பட்டு கிடந்த நம்மவர்களை மேலே கொண்டு வந்த மேன்மையாளர் தான் காமராஜர்.

    "அனுபவம் அவரது படிப்பு, நேர்மை அவரது நெறி, உழைப்பு அவரது பாதை, சம தர்மம் அவரது லட்சியம் "இதுவே அவரைப் பற்றிய நமது மதிப்பீடு ...

    அவரது சீரிய தலைமை இந்திய துணை கண்டத்திற்கு இன்றைய தேவையாகி இருக்கிறது. "வாழ்க காமராஜர், வருக சமதர்ம சமுதாயம்" என்ற சிறப்பு தலையங்கம் 15.7.1965 அன்று விடுதலையில் வெளிவந்து எல்லோரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. பெரியாரின் ஒப்புதலோடு கட்டுரை வெளிவந்தது என்பதை மகிழ்ச்சியோடு குறிப்பிட விரும்புகிறேன்.

    - முனைவர் கவிஞர் இரவிபாரதி

    ×