search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நினைவு நாணயம் பொதுப்புழக்கத்தில் விடப்படுமா? அல்லது தனிப்பட்ட பயன்பாட்டுக்கா? என்பது இன்னும் தெரியவில்லை.
    • நினைவு நாணயத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி, நினைவு நாணயம் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

    இது தொடர்பான கோரிக்கையை மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து ஒப்புதல் அளிக்கிறது. பிறகு இந்திய ரிசர்வ் வங்கி அந்த நாணயத்தை அச்சிடுகிறது.

    இந்நிலையில் ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி தமிழக அரசு விடுத்த கோரிக்கைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. நாணயத்தை வடிவமைக்கும் பணி தற்போது நிதி அமைச்சகத்தால் நடைபெற்று வருகிறது.

    நாணயத்தின் ஒருபுறத்தில் கருணாநிதியின் சிரித்த முகத்துடன், 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு 1924-2024' என ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ளது. மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா என ஆங்கிலத்திலும், பாரத் என இந்தியிலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த உத்தேச வடிவத்தில் தேவைப்படும் மாற்றங்களை மத்திய நிதியமைச்சகமே செய்யும். இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, நினைவு நாணயத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. நினைவு நாணயம் பொதுப்புழக்கத்தில் விடப்படுமா? அல்லது தனிப்பட்ட பயன்பாட்டுக்கா? என்பது இன்னும் தெரியவில்லை.

    தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இது போன்று நினைவு நாணயம் வெளியிடப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு முன்னாள் முதல்வர்களான கே.காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும் கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நினைவு நாணயம் வெளியிடப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் நினைவு நாணயம் வெளியிடும் முறை கடந்த 1964-ல் தொடங்கியது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்காக முதல் நினைவு நாணயம் வெளியானது. இதைத் தொடர்ந்து முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமின்றி முக்கிய நிகழ்வுகளுக்கும் நினைவு நாணயம் வெளியானது. இவற்றில் சில பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளன. பல நாணயங்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு என்றானது.

    தனிப்பட்ட பயன்பாட்டுக் கான நினைவு நாணயங்கள் அவை வெளியிடப்படும் மதிப்பை விட அதிகம். இவை ஒரு காசு முதல் ரூ.1,000 வரையிலான மதிப்பில் வெளியாகியுள்ளன.

    ஒவ்வொரு நினைவு நாணயமும் குறிப்பிட்ட அளவு, எடை, உலோகம், காசின் மதிப்பு, உருவம் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த நினைவுக் காசுக்கான தொகையை அச்சிடக் கோருவோர் செலுத்த வேண்டும்.

    • நான் கலைஞரின் வசனங்களை பேசி நடிப்பதா? நடக்காத காரியம்.
    • நான் கர்நாடகாவிற்கே ஓடிப்போய் மறுபடியும் பேருந்தில் டிக்கெட் விற்க ஆரம்பித்து விடலாம்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் நடிகர் ரஜினிகாந்த் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    தமிழ் திரை உலகின் இரண்டு ஜாம்பவான்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். ஆகியோர் புகழின் உச்சிக்குச் செல்ல முக்கியமான காரணமாக இருந்தவர் கலைஞர். அவர் எழுதிய "பராசக்தி" படத்தின் அற்புதமான, சமுதாய சீர்திருத்தும், புரட்சிகரமான வசனங்களை உணர்ச்சிகரமாக பேசி, நடித்து சிவாஜி கணேசன் ஒரே நாளில் உச்ச நட்சத்திரம் ஆனார். எம்.ஜி.ஆருக்கு "மருதநாட்டு இளவரசி","மந்திரிகுமாரி", "மலைக்கள்ளன்" போன்ற படங்களுக்கு வசனம் எழுதி அந்தப் படங்களை மிகப்பெரிய வெற்றிப்படங்களாக்கி எம்.ஜி.ஆரை நட்சத்திரமாக மாற்றினார்.

    1977-ம் ஆண்டு என்னுடைய பியட் காரை மியூசிக் அகாடமி பக்கம் ஓட்டிக் கொண்டிருந்தேன். பின்னால் ஒரு வண்டி வந்துகொண்டிருந்தது. வண்டியில் வந்துகொண்டிருந்தவரை என் கார் கண்ணாடி மூலம் உற்றுப்பார்த்தேன். நன்கு தெரிந்த முகம். கண்ணில் கருப்புக்கண்ணாடி. கலைஞர் என்று தெரிந்தது. நான் அப்படியே இடது பக்கமாக ஒதுங்கி வழி விட்டேன். எனது காரை கடக்கும் போது அவர் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்து கைகளை ஆட்டினார். காரில் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்த அந்த சிரிப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதுதான் நான் கலைஞரை முதல் முதலில் பார்த்தது.


    நான் 1980-ல் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைஞரின் நண்பர் மற்றும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர். அந்தத் திரைப்படத்தின் வசனங்கள் தயாரிப்பாளருக்கு திருப்தி தரவில்லை. படம் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் தயாரிப்பாளர் என்னிடம் வந்து "நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை சொல்கிறேன்... நம் படத்துக்கு கலைஞர் வசனம் எழுத ஒப்புக் கொண்டார்" என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

    எளிமையான தமிழ் வசனங்களை பேசி நடிப்பதற்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நான் கலைஞரின் வசனங்களை பேசி நடிப்பதா? நடக்காத காரியம்... இதற்கு நான் கர்நாடகாவிற்கே ஓடிப்போய் மறுபடியும் பேருந்தில் டிக்கெட் விற்க ஆரம்பித்து விடலாம். தயாரிப்பாளரிடம் முடியவே முடியாது என்று கூறினேன். இதைக் கேட்ட தயாரிப்பாளருக்கு இடி விழுந்த மாறி ஆயிற்று. அவர் வசனம் எழுத சம்மதித்ததே நமக்கு கிடைத்த பாக்கியம். அவர் வசனம் எழுதினால் நம் படம் மிகப்பெரிய வெற்றி அடையும். உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் இதற்கு ஒப்புக்கொள்ளுங்கள் இல்லையென்றால் அவர் எழுத சம்மதித்த பிறகும் நீங்கள் வேண்டாம் என்று கூறியதை அவரிடம் நான் எப்படி சொல்வது என்று திண்டாடினார். நான் அவரை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுங்கள், நானே அவரிடம் சொல்கிறேன் என்று கூறினேன். அவரும் வேண்டா வெறுப்பாக சரி என்று சொல்லி கலைஞரை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.

    கலைஞரை சந்திக்க கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்றேன். வாங்க என்று அவருக்கே சொந்தமான அந்த கரகரப்புக் குரலில் என்னை அழைத்து நலம் விசாரித்தார். பின்பு "கதையைக் கேட்டேன்... நன்றாக இருக்கிறது. சிறப்பாக வசனங்களை எழுதிடலாம்" என்றார். நான் அவரிடம் "சார் உங்கள் வசனங்களை நான் பேச முடியாது.


    எளிமையான தமிழை பேசவே நான் சிரமப்படுகிறேன். அப்படி இருக்கும் போது உங்கள் வசனங்களை எப்படி நான் பேசுவது? என்னால் முடியாது. தவறாக நினைக்க வேண்டாம்" என்று கூறினேன். அதற்கு அவர் சிரித்து "எனக்கு யாருக்கு எப்படி எழுதவேண்டும் என்று நன்றாகவே தெரியும். சிவாஜிக்கு எழுதுவது போல எம்.ஜி.ஆருக்கு எழுத மாட்டேன்... அதே போல எம்.ஜி.ஆருக்கு எழுதுவதைப்போல சிவாஜிக்கு எழுதமாட்டேன். உங்கள் படங்களை நான் பார்த்துள்ளேன். உங்கள் ஸ்டைலில் நான் எழுதுகிறேன்" என்று சர்வ சாதாரணமாக கூறினார். எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனை அந்த நொடியில் எனக்கு தோன்றியதற்கு நீ கெட்டிக்காரன்டா என்று நானே மகிழ்ந்து "சார் படப்பிடிப்பில் நாங்கள் சில வசனங்களை மாத்துவோம் சில வசனங்களை நீக்குவோம். அப்படி இருக்கும் போது உங்கள் வசனங்களை மாத்தவும் முடியாது நீக்கவும் முடியாது. அது சரியானதாகவும் இருக்காது" என்று கூறினேன்.

    அதற்கு அவர் "மாற்றுங்கள்.. ஒன்றும் தவறில்லை, அது என்ன திருக்குறளா?'' என்று கூறினார். அவர் அப்படி சொல்லுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய கெட்டிக்காரத்தனமெல்லாம் நொடியில் சாம்பல் ஆகி விட்டது. எனக்கு ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தேன். இதை கவனித்த கலைஞர் சிரித்துக்கொண்டே "முன்னால் யார் வசனங்களை எழுதினாரோ அவரே எழுதட்டும்... நான் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டேன்... நீங்கள் கவலைப்பட வேண்டாம்..." என்று கூறி தன் உதவியாளரிடம் தயாரிப்பாளரை அழைக்கும் படி கூறினார்.

    தயாரிப்பாளரிடம் "என்னுடைய வசனங்களை பேசுவதற்கு தனக்கு கஷ்டமாக இருக்கும் என்று ரஜினி கூறுகிறார். நான் அவருடைய பாணியிலேயே எழுதித் தருகிறேன் என்று சொன்னேன். அவரும் சம்மதித்தார். ஆனால் இந்த மாதம் 10-ந்தேதி படப்பிடிப்பு என்று ரஜினி கூறுகிறாரே... நான் அடுத்த மாதம் என்று தானே நினைத்துக் கொண்டிருந்தேன்... காலம் மிகவும் கம்மியாக இருக்கின்றது. எனக்கு ஏற்கனவே முன் நிர்ணயிக்கப்பட்ட வேலைகள் நிறைய இருக்கின்றன. ஆகையால் இந்தப் படத்திற்கு என்னால் வசனங்கள் எழுத முடியாது. அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறி தயாரிப்பாளரை அனுப்பி வைத்தார். பிறகு என்னைப் பார்த்து "என்ன ரஜினி இப்போ உங்களுக்கு திருப்தியா?" என்று கேட்டார்.


    தயாரிப்பாளரின் மனதையும் துன்புறுத்தாமல், என்னையும் திருப்திபடுத்திய அவருடைய செய்கையால் எனக்கு அவர் மீது இருந்த மதிப்பும், மரியாதையும் பல மடங்கு உயர்ந்தது. ஆனாலும் அவருடைய வசனங்களை பேசி நடித்திருக்கலாமோ? தவறு செய்து விட்டோமோ? என்ற ஒரு குற்ற உணர்ச்சி இன்றும் எனக்குள் இருந்து கொண்டே இருக்கின்றது.

    பல நேரங்களில் நான் அவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். அவர் எந்த ஒரு விஷயத்திற்கும் நான் அவரை கவனித்துப் பார்த்ததில் எந்த ஒரு முடிவையும் எடுத்தோமா கவிழ்த்தோமா என்று எடுக்கமாட்டார். அதற்கு சம்மந்தப்பட்டவர்களில் பல பேருடன் விசாரித்து, பேசி, விவாதித்து தான் எந்த ஒரு முடிவையும் எடுப்பார். அப்படி இருக்கும் போது எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கும் முக்கியமான முடிவை நிச்சயம் கலைஞர் பல பேரின் ஆலோசனைகளை கேட்டுதான் எடுத்திருப்பார்.

    எனக்கு தெரிந்த ஒருவர் எனக்கு ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்து "இதை யாரிடமும் கொடுக்க வேண்டாம். நீங்கள் மட்டும் கேட்டு பிறகு என்னிடமே திருப்பிக்கொடுத்து விடுங்கள்" என்று கூறினார். அது 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு அவருக்கும் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கும் நடந்த தொலை பேசி உரையாடல் ஆகும். அதில் எஸ்.எஸ்.ஆர். "அண்ணே... ஏதோ கெட்ட நேரம் அவசர அவசரமாக என்னென்னமோ நடந்து விட்டது. வருங்காலத்தில் கழகத்திற்கு இதனால் பெரிய இழப்பு ஏற்படும். வேறு யாரும் இல்லாமல் நீங்கள் இருவர் மட்டும் ஒரு பொது இடத்தில் சந்தித்து மனம் விட்டுப்பேசினால் எல்லாம் சரி ஆகிடும்.


    கலைஞரிடம் நான் பேசுகிறேன். எனக்காக இதை செய்யுங்கள்" என்று கூறுவார். அதற்கு எம்.ஜி.ஆர். "இல்லை தம்பி.. என்னுடைய விசுவாசிகள் எனக்கு ஆதரவாக போராட்டங்கள் செய்து என்னுடைய அபிமானிகள் என்று அடையாளம் காட்டிக் கொண்டு விட்டார்கள். நான் திரும்பி கட்சியில் சேர்ந்தால் என்னுடைய அபிமானிகளை கட்சியில் உள்ளவர்கள் முந்தைய மாதிரிப் பார்க்க மாட்டார்கள். அவர்களைத் தனிமைப்படுத்துவார்கள் அவர்கள் எல்லாம் உதிரிப்பூக்கள் ஆகிவிடுவார்கள். அவர்களுக்காகவே நான் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும். எனக்கு வேறு வழியில்லை. தப்பாக நினைத்துக் கொள்ளாதே" என்று அந்த உரையாடல் முடிந்திருக்கும்.

    அதன் பின் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கினார். அதன் பின் யார் யார் எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று சொன்னார்களோ.. அதில் பல பேர் ஒவ்வொருவராக கட்சில் இருந்து விலகி எம்.ஜி.ஆர். பக்கம் போனார்கள். அதனால் கலைஞரின் இதயம் எவ்வளவு வேதனையில் துடித்திருக்கும்?

    எதையும் தாங்கும் இதயம் என்று அண்ணா இவரை நினைத்து தான் சொன்னாரோ? எவ்வளவு வேதனைகள், சங்கடங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள் என அத்தனையும் தாண்டி தொண்டர்களுக்கு அவர் எழுதிய ஆயிரக்கணக்கான கடிதங்கள், கட்டுரைகள், சினிமாவில் எழுதிய வசனங்கள், அவர் செய்த சுற்றுப்பயணங்கள், மேடைப்பேச்சுகள், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் கட்டுக் கோப்பாக, ஒரு தனி ஆளாக கட்சியை வழி நடத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால் அது ஒரு மாபெரும் புரட்சி.

    கலைஞர் வாழ்ந்த அதே காலத்தில் நானும் வாழ்கிறேன், அவருடைய இதயத்தில் எனக்கென்று ஒரு தனி இடம் இருந்தது. அதனால்தான் எந்த ஒரு விழாவிலும் என்னை அவர் அருகில் அமர வைத்து மகிழ்வார் என்பதை நினைக்கும் பொழுது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அனைத்து பணிகளின் முன்னேற்றம் குறித்து எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
    • ‘தரமே நிரந்தரம்' என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    சென்னை:

    பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை வளாகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் நினைவிடம், மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் பாரம்பரிய கட்டிடங்களை புனரமைத்தல்.

    சுகாதாரத்துறை கட்டிட பணிகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலக கட்டிட பணிகள், பள்ளி, நீதிமன்ற கட்டிட பணிகள், நினைவகங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளின் முன்னேற்றம் குறித்து எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

    அரசு மருத்துவமனைகள் மற்றும் இதர முக்கிய அரசு கட்டிடங்களில் இயங்கி வரும் மின் தூக்கி, குளிர்சாதன வசதி மற்றும் இதர மின் வசதிகளை அவ்வப்போது முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    நினைவக கட்டிட பணிகள் மற்றும் சிலை அமைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து மேற்கொள்ளவும், பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு பணிகள் தொடங்குவதற்கு முன்பு பெறப்படவேண்டிய கட்டிட வரைபட அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றை பெற தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 'தரமே நிரந்தரம்' என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை என்ஜினீயர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா வழங்கினார்
    • அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோட் புக், பென்சில் பாக்ஸ் மற்றும் உபகரணங்கள் வழங்கினார்

    இரணியல் :

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தலக்குளத்தில் நடந்து.

    தலக்குளம் அங்கன்வாடி மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலக்குளம் தி.மு.க. செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். கிளை செயலாளர்கள் புலிமுகத்தையன்பிள்ளை, ஆண்றனி, மாஸ்டர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சசி வரவேற்றார்.

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பிஎஸ்பி சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோட் புக், பென்சில் பாக்ஸ் மற்றும் உபகரணங்கள் வழங்கினார். முன்னதாக கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தலக்குளம் ஊராட்சி நிர்வாகிகள் அங்கன்வாடி குழந்தைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அங்கன்வாடி ஆசிரியர் நிர்மலா நன்றி கூறினார்.

    • கால் கோள் விழா இந்த மாதம் 29-ந் தேதி நடக்கிறது.
    • பெங்களூர் சாலை காரையில் உள்ள விடுதலை பறவைகள் கட்சி அலுவலகம் அருகில் தங்கத்தில் சிலை அமைக்கப்படுகிறது.

    விடுதலை பறவைகள் கட்சி நிறுவன தலைவர் டெல்லி ராஜா சமூக நல அறக்கட்டளை சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பெங்களூர் சாலை காரையில் உள்ள விடுதலை பறவைகள் கட்சி அலுவலகம் அருகில் தங்கத்தில் சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக கால் கோள் விழா இந்த மாதம் 29-ந் தேதி நடக்கிறது.

    தங்க சிலை அமைக்க தமிழகம் முழுவதும் விடுதலை பறவைகள் கட்சி சார்பில் பல்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதியின் தங்க சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்கள் என்று கட்சியின் நிறுவன தலைவர் டெல்லி ராஜா கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக, உதயசூரியன் போன்று கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்பட உள்ளது.
    • கருணாநிதி நினைவிடத்தை அவரது நினைவு நாளான ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி திறக்க முதலில் திட்டமிடப்பட்டது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

    கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள் எழுத்தாற்றல், சிந்தனைகள், அரசியல் ஆளுமையை விளக்கும் வகையில் நினைவிடத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக, உதயசூரியன் போன்று கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் ஆகியவையும் அமைய உள்ளது.

    கருணாநிதி நினைவிடத்தை அவரது நினைவு நாளான ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி திறக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் வேலைகள் முடிவடையாததால் திறப்பு தள்ளி போனது.

    அதன் பிறகு இந்த மாதம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி திறக்கலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு பணிகள் முடிவடையாத காரணத்தால் அந்த தேதியும் தள்ளிப்போகிறது. செப்டம்பர் 15 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    இதனால் கருணாநிதியின் நினைவிடம் திறப்பு இன்னும் 2 மாதத்துக்கு தள்ளிப் போகும் என தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கச்சத்தீவு தாரைவார்ப்பினை தடுத்து நிறுத்த முதலமைச்சர் என்ற முறையில் கருணாநிதி எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
    • கச்சத்தீவு பிரச்சினையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க.தான்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    1974-ம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் மு.கருணாநிதி.

    கச்சத்தீவு தாரைவார்ப்பினை தடுத்து நிறுத்த முதலமைச்சர் என்ற முறையில் கருணாநிதி எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    இந்த வரலாற்றை படித்துத் தெரிந்து கொள்ளாமல், தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அதையும்மீறி கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது என்று கூறுவதும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. இதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கச்சத்தீவு பிரச்சினையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க.தான். கச்சத்தீவு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் மவுனம் காத்ததுதான் துரோகம்.

    வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து மீண்டும் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து இருக்கிறார் தி.மு.க. தலைவர். இது பலிக்காது. மக்கள் தி.மு.க.வை பற்றி நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். வருகின்ற மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வீழ்ச்சியை தி.மு.க. சந்திக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கருணாநிதியின் உருவச்சிலையை இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கழக நிர்வாகிகள் வரவேற்பு கொடுக்க உள்ளனர்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சிலை அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது.

    இதை உடனே செயல்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் குன்றத்தூர் கோவூர் அருகே பெரிய பணிச்சேரியில் கருணாநிதிக்கு சிலை அமைத்துள்ளார். அங்கு கலைஞர் படிப்பகமும் அமைக்கப்பட்டு உள்ளது.

    கருணாநிதியின் உருவச்சிலையை இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார். இதுகுறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் பெரிய பணிச்சேரியில் கழகத்திற்கு சொந்தமான இடத்தில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த திருவுருவச் சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை 6 மணிக்கு திறந்து வைக்கிறார்.

    எனது தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் குன்றத்தூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வந்தேமாதரம் வரவேற்று பேசுகிறார்.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் துரைசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. து.மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் விஸ்வநாதன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆ.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    விழாவில் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், கழக தீர்மானக்குழு செயலாளர் மீ.அ. வைத்தியலிங்கம், தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன், மற்றும் கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பகுதி கழக செயலாளர்கள், கழக அணிகளின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    முடிவில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபு நன்றியுரை கூறுகின்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கழக நிர்வாகிகள் வரவேற்பும் கொடுக்க உள்ளனர்.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறி உள்ளார்.

    • உடுமலைப்பேட்டை மத்திய பஸ் நிலையத்தில் சுமார் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டை மத்திய பஸ் நிலையத்தில் சுமார் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தங்கராஜ், தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் வக்கீல் பொன்ராஜ் , உடுமலைப்பேட்டை ரோட்டரி கேலக்ஸி சங்கத்தின் பொருளாளர் வக்கீல் நசீர் உசேன் மற்றும் சங்க ஒருங்கிணைப்பாளர் அனுசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல் வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல் தலைமை தாங்கி னார்.

    கருணாநிதி உருவப் படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணி வித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சி யில் மாவட்ட மாணவரணி கதிர் ராஜ்குமார், நகர செயலா ளர் கார்த்திகேயன், பேரூ ராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி, நாராய ணன், மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
    • தீர்ப்பாயத்தின் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்ததோடு இவ்வழக்கில் அரசு சார்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும், பேனா நினைவு சின்னம் உட்பட அனைத்து கட்டுமானங்களை தடை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பாயத்தின் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்ததோடு இவ்வழக்கில் அரசு சார்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைதளங்களில் கருணாநிதி பற்றி ரீல்ஸ்களை பதிவிட வேண்டும்.
    • சட்டத்துறை சார்பில் பேச்சு போட்டி நடத்த வேண்டும். பொறியாளர் அணி சார்பில் கல்லூரிகளில் கவியரங்கம், பட்டிமன்றம் நடத்த வேண்டும்.

    சென்னை:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காக தி.மு.க. தலைமை கழகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அணியினரும் எத்தகைய நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நடத்த வேண்டும் என்று தலைமை கழகம் வரையறுத்துள்ளது.

    அதற்கான பட்டியலை தி.மு.க. தலைமை கழகம் தற்போது வெளியிட்டு உள்ளது. தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் கடந்த 5-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு அணியினருக்கும் தி.மு.க. தலைமை கழகம் அளித்துள்ள நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

    தி.மு.க. இளைஞரணியினர் மாவட்ட வாரியாக பேச்சு போட்டி நடத்தி மாநில அளவில் 100 பேச்சாளர்களை கண்டறிந்து அவர்களை மாநில சொற்பொழிவாளர்களாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாரத்தான் தொடர் ஓட்டம் நடத்த வேண்டும்.

    தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைதளங்களில் கருணாநிதி பற்றி ரீல்ஸ்களை பதிவிட வேண்டும். யூடியூப்பில் கருணாநிதி வாழ்க்கை சாதனைகளை விளக்கும் காணொலிகளை பதிவிட வேண்டும்.

    மாணவர் அணியினர் சார்பில் மீண்டும் மாணவர் மன்றம் உருவாக்கப்பட்டு அனைத்து கல்லூரிகளிலும் பேச்சு போட்டி நடத்த வேண்டும். மகளிர் அணி சார்பில் அகில இந்திய அளவில் பெண் தலைவர்களின் கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும்.

    மருத்துவ அணி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும். இலக்கிய அணி சார்பில் கருணாநிதியின் இலக்கியங்கள் குறித்து தமிழறிஞர்கள் கலந்து கொள்ளும் ஆய்வரங்கங்கள் நடத்தப்பட வேண்டும். மேலும் கல்வியாளர்கள் பங்கேற்கும் சொல்லரங்கமும் நடத்தப்பட வேண்டும்.

    கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்களை மாவட்டம் தோறும் காட்சிப்படுத்த வேண்டும். விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி 38 மாவட்டங்கள் வழியாக கலைஞர் சுடர் தொடர் ஓட்டம் நடத்த வேண்டும்.

    சட்டத்துறை சார்பில் பேச்சு போட்டி நடத்த வேண்டும். பொறியாளர் அணி சார்பில் கல்லூரிகளில் கவியரங்கம், பட்டிமன்றம் நடத்த வேண்டும்.

    வர்த்தகர் அணி சார்பில் தூத்துக்குடி, மதுரை, கோவை, திருச்சி, வேலூரில் கருணாநிதி சாதனைகளை விளக்கும் கலைஇரவு நடத்த வேண்டும். தொண்டர் அணி சார்பில் சினிமா நடிகர்-நடிகைகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்த வேண்டும். சுற்றுச்சூழல் அணி சார்பில் 1000 இடங்களில் மரம் நட வேண்டும்.

    நெசவாளர் அணி சார்பில் கண்காட்சி நடத்த வேண்டும். மீனவர் அணி சார்பில் கடலோர பகுதிகளில் குறைதீர்க்கும் முகாம் நடத்தவேண்டும். ஆதிதிராவிடர் பிரிவு சார்பில் சமநீதி கோட்பாடுகளை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    மாவட்ட செயலாளர்கள் மூலம் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட வேண்டும். அனைத்து ஊர்களிலும் கொடி கம்பம் நிறுவ வேண்டும். மேலும் 234 சட்டசபை தொகுதி வாரியாக 234 இடங்களில் கருணாநிதிக்கு முழு உருவ சிலைகள் வைக்க இடங்களையும், தேதிகளையும் உறுதி செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது.

    ×