search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கச்சா எண்ணெய்"

    • ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய தடை
    • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் டாலருக்குப் பதிலாக யுவான் மூலம் எண்ணெய் இறக்குமதி

    உலக நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி- இறக்குமதி அனைத்திற்கும் அமெரிக்க டாலர் பயன்பாட்டை குறைத்து அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற அண்மைக்காலமாக சில முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவும் பங்கேற்றிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

    இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உட்பட சில இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள், ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு யுவான் (Yuan) எனப்படும் சீன நாணயத்தில் பணம் செலுத்தத் தொடங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பினால் விதிக்கப்பட்ட சர்வதேச தடைகளின் ஒரு பகுதியாக டாலர்கள் மற்றும் யூரோக்களில் பரிமாற்றங்கள் கையாளப்படுவதற்கு அனுமதிக்கப்படாததால், இதற்கு மாற்றாக யுவான் பயன்படுத்தப்பட தொடங்கியுள்ளது.

    இந்தியாவின் 3 தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களில் குறைந்தது 2 நிறுவனங்கள், ரஷிய இறக்குமதிகளுக்கு யுவானில் பணம் செலுத்துகின்றன என செய்திகள் தெரிவிக்கின்றன.

    பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை தங்களின் நாணய விருப்பங்களை விரிவுபடுத்தும் முயற்சியில் ரஷியாவின் கச்சா எண்ணெயை யுவானில் செலுத்த பரிசீலித்து வருகின்றன.

    ஜூன் மாதம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) மூலமாக ரஷியாவின் ரோஸ்நெஃப்ட் (Rosneft) எண்ணெய் நிறுவனத்திலிருந்து பெறப்படும் எண்ணெய்க்கான தொகையை யுவானில் செலுத்தியது. அப்போதிலிருந்து, சரக்குகளுக்கு பணம் செலுத்த அதே முறையை பயன்படுத்தியது.

    இந்தியன் ஆயில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ரஷிய ஆதரவு பெற்ற நயாரா எனர்ஜி மற்றும் ஹெச்பிசிஎல் மிட்டல் எனர்ஜி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இந்த விஷயத்தில் தாம் எடுத்திருக்கும் முடிவுகள் குறித்து மவுனமாக காத்துள்ளன.

    பிப்ரவரி 2022-ல் உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து ரஷியாவிடமிருந்து எண்ணெய் மற்றும் நிலக்கரி வாங்குவதை இந்தியா தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது.

    மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளதால், இந்தியா இறக்குமதி செய்யும் மொத்த கச்சா எண்ணெயில் ரஷ்யாவின் பங்கு 42% ஆகும். ஜூன் மாதம் இந்தியா ஒரு நாளைக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான பீப்பாய் கச்சா எண்ணெய்-ஐ தள்ளுபடி விலையில் ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்தது. இதுவரை இல்லாத அளவாக மே மாதம் ரஷியாவிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 21 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை வாங்கியது. இது முந்தைய அதிகபட்ச அளவை விட 15% அதிகமாகும்.

    எண்ணெய் இறக்குமதி மட்டுமல்லாது, இதே போல இந்தியாவின் மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தியாளரான அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம், அதன் நிலக்கரி இறக்குமதிக்கும் ஜூன் 2022-ல், யுவானில் பணம் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 30 சதவீத மானிய விலையில் வழங்கி ரஷியா முதலில் மறுப்பு தெரிவிப்பு
    • இந்த நாள் மாற்றத்திற்கான நாள் என பிரதமர் ஷெரீப் தெரிவித்துள்ளார்

    ரஷியா தள்ளுபடி விலையில் வழங்கும் கச்சா எண்ணெய்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் கராச்சி வந்தடைந்ததாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் தெரிவித்துள்ளார். கடும் பண வீழ்ச்சியால் விலைவாசி உயர்வு அதிகமாக காணப்படும் நிலையில், இது சற்று ஆறுதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாகிஸ்தானில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 262 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக ரஷியாவில் இருந்து 45 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கராச்சி வந்தடைந்துள்ளது.

    ''நான் வழங்கிய மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த முதல் சரக்கு கப்பல் ஞாயிற்றுக்கிழமை  பாகிஸ்தான் வந்தது என்பதை பெருமையாக அறிவித்துக்கொள்கிறேன். நாளையில் இருந்து வினியோகம் செய்யப்படும். இன்றைய நாள் மாற்றத்தை ஏற்படுத்தும் நாள். எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியில் ஒருபடி முன்னேறியுள்ளோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேரல் என்ற வகையில் பாகிஸ்தான் ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாகிஸ்தான்- ரஷியா இடையிலான பேச்சுவார்த்தையின்போது, கடந்த 2022-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதிநிதிகள் கச்சா எண்ணெய் விலையில் தள்ளுபடி அதிக அளவில் தரும்படி கேட்டுக்கொண்டது. ஆனால், ரஷியா 30 சதவீத தள்ளுபடி கொடுக்க மறுத்துவிட்டது.

    இந்த வருடம் தொடக்கத்தில் ரஷிய பிரதிநிதிகள் பாகிஸ்தான் சென்று காப்பீடு மற்றும் அடமானம் போன்ற தொழில்நுட்ப சிக்கல்களை தீர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ரஷியா திருப்தி அடைய, கச்சா எண்ணெய் வழங்க ரஷியா சம்மதம் தெரிவித்தது.

    கடந்த ஆண்டு பாகிஸ்தான் ஒரு நாளைக்கு 1,54,000 பேரல் என்ற வகையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. இதில் 80 சதவீதம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது.

    ஜூன் 2-ந்தேதி முடிவடைந்த நிலையில் பாகிஸ்தானின் மொத்த அன்னிய செலாவணி 3.9 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. மே மாதம் 38 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 36.4 சதவீதமாக அதிகரித்தது.

    ஏற்கனவே பொருளாதார சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானில் கடந்த வருடம் கனமழை பெய்து 33 மில்லியன் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது 12.5 பில்லியன் டாலர் வகையில் பொருளாதார சேதம் ஏற்பட்டது.

    • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
    • விரைவில் பெட்ரோல்-டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வந்தன.

    இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு பாதிவரை பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது.

    சில மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலை உச்சம் தொட்டதால் பொது மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்பிறகு கடந்த ஓராண்டுக்கு மேலாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை.

    இதன் காரணமாக இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பி.பி.சி.பி. கள் போன்ற நிறுவனங்கள் 20 ஆயிரம் கோடி வரை லாபம் பார்த்து உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 140 டாலருக்கு விற்கப்பட்ட ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக 75 டாலராக குறைந்துள்ளது. ஆனாலும் எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை விலையை குறைக்கவில்லை.

    எனவே இந்தியாவிலும் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.

    இது தொடர்பாக மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரம் கொரோனா தொற்று நோய் காலகட்டத்தில் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக ஏற்பட்ட இழப்புகளை தங்கள் நிறுவனம் இதுவரை ஈடுசெய்யவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் மத்திய அரசிடம் கூறப்பட்டுள்ளது.

    எண்ணெய் நிறுவனங்கள் 2022-2023-ம் நிதியாண்டில் 4-வது காலாண்டில் நல்ல லாபம் பார்த்துள்ளன. மேலும் 2023-2024-ம் நிதியாண்டிலும் முதல் காலாண்டில் நன்றாக இருந்தால் விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விரைவில் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கும்படி மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    எனவே விரைவில் பெட்ரோல்-டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மே மாதத்தில் தினசரி உற்பத்தி 10 மில்லியன் பேரல்கள்
    • ஜூலையில் இருந்து மேலும் ஒரு மில்லியன் பேரல்களை குறைக்கிறது

    உலகளவில் கச்சா எண்ணெய் ஏற்றமதியில் சவுதி முதல் நாடாக உள்ளது. உலகளவில் தற்போது கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் (barrel) சுமார் 77 முதல் 78 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது உலக சந்தையில் மந்தமான சூழ்நிலை நிலவி வருவதாலும், ஒபெக் கூட்டமைப்பு நாடுகள் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்ததாலும், ஏற்கனவே சவுதி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளது.

    கடந்த மாதம் ஒருநாளைக்கு 10 லட்சம் பேரல்கள் என்ற அளவில் உற்பத்தியை குறைத்துள்ளது. இந்த நிலையில் ஜூலை மாதம் முதல் மேலும் ஒரு மில்லியன் குறைத்து ஒரு நாளைக்கு 9 மில்லியன் பேரல்கள் ஆயில் உற்பத்தி செய்யப்படும் என சவுதி அறிவித்துள்ளது. இதனால் ஒரு நாளைக்கு சுமார் 1 மில்லியன் பேரல் உற்பத்தி நிறுத்தப்படும்.

    இதன்காரணமாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கச்சா எண்ணெய் விலை சுமார் 1 அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.

    அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மெடியட் கச்சா எண்ணெய் 1.41 டாலர் அல்லது இரண்டு டாலர் அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 73.15 டாலருக்கு இருந்த விலை, தற்போது 75.06 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    பிரிட்டனின் பிரென்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 1.51 டாலர் அல்லது 2 அதிரிகத்து 77.64 டாலரில் இருந்து 78.73 டாலராக உயர்ந்துள்ளது.

    சவுதி அரேபியாவின் இந்த அறிவிப்பால் ஜூலை மாதத்தில் சந்தை பற்றாக்குறை ஒரு நாளைக்கு 3 மில்லியன் பேரல்களை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதனால் வரவிருக்கும் வாரங்களில் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது.

    இந்த குறைப்பு சுமார் 6 மாதத்திற்கு நீடித்தால் 6 டாலர் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதேவேளையில் ரஷியா, நைஜீரியா, அங்கோலா நாடுகள் தங்களுடைய வழக்காமான உற்பத்தி அளவை எட்டினால் மிகப்பெரிய தாக்கம் இருக்காது எனவும் கூறப்படுகிறது.

    அதேவேளையில், தினசரி உற்பத்தியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 3.22 மில்லியன் வரை உயர்த்தவும் அனுமதி அளித்துள்ளது. உலகளாவிய எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு சுமார் 100 மில்லியன் பீப்பாய்கள் ஆகும்.

    • இந்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்.
    • கச்சா எண்ணெய் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்படுத்தும்.

    துபாய்:

    அரேபியா நாடுகள், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட சில நாடுகளாலேயே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அரேபிய நாடுகள் ஒபெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்த கூட்டமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அளவையும் நிர்ணயிக்கின்றன.

    இந்நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க உள்ளதாக ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    அதன்படி, கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள சவுதி அரேபியா தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 5 லட்சம் பீப்பாய்களாக குறைக்க உள்ளது.

    வரும் மே மாதம் முதல் இந்த ஆண்டு இறுதி வரை தினமும் 5 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. அதேபோல், ஒபெக் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளன.

    இதனால் ஒட்டுமொத்தமாக ஒபெக் கூட்டமைப்பில் இருந்து பெறப்படும் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியும் குறைய உள்ளது.

    கச்சா எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவே தன்னிச்சையாக இந்த உற்பத்தி குறைப்பை மேற்கொண்டுள்ளதாக சவுதி அரேபியா உள்ளிட்ட ஒபெக் நாடுகள் தெரிவித்துள்ளன.

    இந்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பட்டினச்சேரி கிராமத்தில் கடற்கரையில் பதிக்கப்பட்டுள்ள குழாய் கடந்த 2-ந்தேதி இரவு உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது.
    • சி.பி.சி.எல். அதிகாரிகள் 3 நாட்களாக போராடி கடந்த 5-ந்தேதி குழாய் உடைப்பை சீரமைத்தனர்.

    நாகூர்:

    நாகை மாவட்டம் நாகூரை அடுத்த பனங்குடியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம்(சி.பி.சி.எல்.) உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    கப்பல்களுக்கு கச்சா எண்ணெயை கொண்டு செல்ல பனங்குடியில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து சாமந்தான்பேட்டை வழியாக நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை கடற்கரையில் எண்ணெய் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பட்டினச்சேரி கிராமத்தில் கடற்கரையில் பதிக்கப்பட்டுள்ள குழாய் கடந்த 2-ந்தேதி இரவு உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது.

    இதனால் அப்பகுதி மீனவர்களுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து எண்ணெய் குழாய்களை முழுமையாக அகற்றக்கோரி மீனவர்கள் 5 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.பி.சி.எல். அதிகாரிகள் 3 நாட்களாக போராடி கடந்த 5-ந்தேதி குழாய் உடைப்பை சீரமைத்தனர்.

    மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் கடற்கரை வழியாக எண்ணெய் உள்ளிட்ட எந்தவித எரிவாயுக்களையும் குழாய் மூலம் கொண்டு செல்லக்கூடாது என கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இந்த நிலையில் சி.பி.சி.எல். நிறுவன அலுவலர்கள் நேற்று பட்டினச்சேரி கடற்கரைக்கு வந்து எண்ணெய் குழாய் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அலுவலர்கள், பம்பிங் செய்ததால் வானுயரத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தது.

    இதற்கிடையே முன்பு உடைப்பு ஏற்பட்ட இடத்திலேயே மீண்டும் குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தாசில்தார் ராஜசேகர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து சி.பி.சி.எல். அதிகாரிகள் கூறுகையில், குழாயை சுத்தம் செய்யும் பணியின்போது தண்ணீர் மட்டுமே வெளியானது என்றும், கச்சா எண்ணெய் செலுத்தவில்லை என்றும் தெரிவித்தனர்.

    நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் எண்ணெய் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • இரும்பு குழாய் உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது.
    • கடலில் கச்சா எண்ணெய் கலந்த சம்பவம் மீனவ கிராம பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரில் சி.பி.சி.எல். எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான 3 இரும்பு குழாய்கள் கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்றிரவு திடீரென ஒரு குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது.

    இதனால் நாகூர், பட்டினச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள மீனவ கிராம மக்களுக்கு சுவாச கோளாறு, கண் எரிச்சல் ஏற்படுவதுடன், மீன்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

    இதனைத் தொடர்ந்து கூடுதல் கலெக்டர் பிரித்விராஜ், சி.பி.சி.எல். அதிகாரிகள், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், தாசில்தார் ஆகியோர் எண்ணெய் மிதந்து வரும் கடற்கரை பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் அந்த கிராம மக்களுடன் சி.பி.சி.எல். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து டோனியர் விமானம் மூலமாக குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை இந்திய கடலோர காவல் படையினர் பார்வையிட்டு வருகின்றனர்.

    கடலில் கச்சா எண்ணெய் பரவி உள்ளதை நீக்குவதற்கான வழிமுறைகளான ஸ்பில் டிஸ்பரசன் பவுடர் மூலமாகவோ அல்லது குழாய் மூலம் எண்ணெயை நீக்குவதா அல்லது கடல் நீரை படிய வைத்து அதனை அகற்றுவதா என்பது குறித்தும் இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் மற்றும் டோனியர் விமானம் மூலம் ஆய்வு செய்தனர். மேலும் எவ்வளவு தூரம் எண்ணெய் பரவி உள்ளது என கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கடலில் எண்ணெய் பரவாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டினச்சேரி மீனவர்கள் கச்சா எண்ணெயை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கடலில் கச்சா எண்ணெய் கலந்த சம்பவம் மீனவ கிராம பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது.
    • குறைந்த விலையில் கிடைத்தால், அதை வாங்கியதற்காக இந்தியாவை நான் குறை சொல்ல முடியாது என தூதர் தகவல்

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதையடுத்து, ரஷியாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷியா, தன் நாட்டு கச்சா எண்ணெயை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது.

    ரஷியாவின் சலுகை விலை அறிவிப்புக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது.

    உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில், ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் நடவடிக்கையை மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன. ஆனால், எந்த நாட்டிடம் இருந்து நல்ல ஒப்பந்தம் கிடைக்கிறதோ அங்கிருந்தே எண்ணெய் வாங்குவோம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.

    இந்த விவகாரம் குறித்து இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் கூறியதாவது:-

    ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது, எங்கள் வர்த்தகம் அல்ல என்பதை நான் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளேன். அது இந்திய அரசு முடிவு செய்யும் விஷயம். மிகக் குறைந்த விலையில் கிடைத்தால், அதை வாங்கியதற்காக இந்தியாவை நான் குறை சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய் ஜனவரி மாதம் ஒரு நாளுக்கு 1.4 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது. இது டிசம்பர் மாத இறக்குமதியைவிட 9.2 சதவீதம் அதிகமாகும். ரஷியாவின் மாதாந்திர எண்ணெய் விற்பனையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஈராக் மற்றும் சவுதி அரேபியா உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • உள்நாட்டு கச்சா எண்ணெயை வைத்து லாபம் ஈட்டுவதற்கு வரி விதிக்கும் முறையை கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி மத்திய அரசு தொடங்கியது.
    • சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒரு தடவை வரி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    ஓ.என்.ஜி.சி. போன்ற நிறுவனங்கள் உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கின்றன. இத்தகைய உள்நாட்டு கச்சா எண்ணெயை வைத்து லாபம் ஈட்டுவதற்கு வரி விதிக்கும் முறையை கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி மத்திய அரசு தொடங்கியது.

    சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒரு தடவை வரி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதுபோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி வரியும் 15 நாட்களுக்கு ஒருதடவை மாற்றி அமைக்கப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் விலை குறைந்ததால், கடந்த மாதம் 17-ந் தேதி இந்த வரிகள் குறைக்கப்பட்டிருந்தன.

    இந்தநிலையில், சர்வதேச சந்தையில் விலை அதிகரித்ததால், தற்போது வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான லாப வரி டன்னுக்கு ரூ.1,900-ல் இருந்து டன்னுக்கு ரூ.5 ஆயிரத்து 50 ஆக உயர்த்தப்பட்டது.

    அதுபோல், டீசல் மீதான ஏற்றுமதி வரி, லிட்டருக்கு ரூ.5-ல் இருந்து ரூ.7.50 ஆக உயர்ந்தது. விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி, லிட்டருக்கு ரூ.3.50-ல் இருந்து ரூ.6 ஆக அதிகரித்தது.

    இந்த வரி உயர்வு கடந்த 4-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.

    ரிலையன்ஸ், நயரா எனெர்ஜி ஆகிய தனியார் நிறுவனங்கள், டீசல் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன.

    • இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் ரஷியா முதல் இடத்திற்கு முன்னேறியது.
    • 2021-ல் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு 1% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் ரஷியாவும் அடங்கும்.

    ஆகஸ்ட் மாதம் ரஷியாவிலிருந்து இந்தியாவுக்கு கொள்முதல் செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் அளவு 2.4% குறைந்து 8 லட்சத்து 55 ஆயிரத்து 950 பேரல்களாக இருந்தது. அதே நேரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு அதிகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்ததில் ஈராக் முதல் இடத்தையும், சவுதி அரேபியா 2வது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டன.

    இந்நிலையில், அக்டோபர் மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம், ஈராக் (20.5%), சவுதி அரேபியா (16%) நாடுகளின் பங்களிப்பை ரஷியா முந்தியது.

    இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் ரஷியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அக்டோபர் மாதம் ரஷியாவிலிருந்து இந்தியாவுக்கு கொள்முதல் செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் அளவு ஒரு நாளைக்கு 9 லட்சத்து 46 ஆயிரம் பீப்பாய்களாக உள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டில் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு 1 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    • டீசல் தட்டுப்பாட்டால், மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
    • இலங்கையில் இன்னும் 6 மாதங்களில் நிறைய உயிரிழப்புகள் ஏற்படலாம்.

    கொழும்பு :

    இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியவில்லை.

    இதற்கிடையே, 99 ஆயிரம் டன் கச்சா எண்ணையை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல், இலங்கையை நோக்கி வந்தது. கடந்த 20-ந் தேதி இலங்கை கடல் எல்லைக்குள் வந்தது. கொழும்பு துறைமுகம் அருகே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால், அந்த கச்சா எண்ணெயை பெற வேண்டுமானால், 70 லட்சம் டாலர் (ரூ.57 கோடி) செலுத்த வேண்டும். ஆனால் அவ்வளவு டாலர் இல்லாததால், இலங்கையால் வாங்க முடியவில்லை. அதனால் 3 வாரங்களாக அக்கப்பல் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது.

    அந்த கப்பலுக்கு தாமத கட்டணமாக நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் டாலர் அளிககப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, இலங்கை மிகப்பெரிய மனித பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஐ.நா. மனிதாபிமான விவகார ஒழுங்கிணைப்பு குழுவான 'ரிலீப்வெப்' தெரிவித்துள்ளது.

    அந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பு தீர்ந்து விட்டதால், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்க முடியவில்லை.

    3 ஆயிரத்து 500 படுக்கைகள் கொண்ட இலங்கை தேசிய ஆஸ்பத்திரியில், 60 அத்தியாவசிய மருந்துகள் மட்டுமே உள்ளன. மயக்க மருந்து வினியோகம் குறைவாக உள்ளது. அதனால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்பட முக்கியமான பொது அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    புற்றுநோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கும் மருந்துகள் கிடைக்கவில்லை. பேண்டேஜுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிராமப்புற ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு விட்டன. அவர்களை நகர ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்புவதால், அங்கு கூட்ட நெரிசல் நிலவுகிறது.

    டீசல் தட்டுப்பாட்டால், மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மருத்துவர்கள், நல்ல வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டது. மனித பேரழிவை நோக்கி செல்லும் இலங்கையில், இன்னும் 6 மாதங்களில் நிறைய உயிரிழப்புகள் ஏற்படலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இலங்கை சுற்றுலா தொழிலை வளர்ச்சி அடைய செய்ய உதவுவதாக இந்திய பயண முகவர்கள் சங்கம் உறுதி அளித்துள்ளது. அதன் தலைவர் ஜோதி மாயாள் கூறியதாவது:-

    இலங்கை, பார்க்க வேண்டிய நாடு. சில மாதங்களாக எண்ணற்ற சவால்களை சந்தித்து வரும் இலங்கைக்கு உதவுவது அவசியம் என்று கருதுகிறோம்.

    செலவழிக்கும் பணத்துக்கு மதிப்பு உடையது. இந்தியாவின் கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நாடு. எனவே, இலங்கையின் சுற்றுலா வளர்ச்சியை நோக்கி செல்ல உதவுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.
    • இந்த விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் இரட்டைவேடம் போடுவதாக ரஷிய தூதர் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ரஷியா, உக்ரைன் போரால் ரஷிய இறக்குமதிக்கு மேற்கத்திய நாடுகள் தடைவிதித்துள்ளன. கடந்த சில மாதமாக ரஷியாவிடம் இருந்து இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவருகிறது. இந்த கச்சா எண்ணெய், தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே, ரஷிய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவின் செயலை மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன.

    இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் செய்திநிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை விமர்சித்து வருகின்றன. இது அந்நாடுகளின் இரட்டை வேடத்தை, இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது.

    தங்களின் சொந்தக் குரலை இழந்து, அமெரிக்காவுக்கு ஏற்ப ஆடும் மேற்கத்திய நாடுகளின் செயலால் உலகளவில் எரிசக்தி விலை உயர்ந்திருக்கிறது. அதற்காக இந்தியா ஏன் விலை கொடுக்க வேண்டும்?

    ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் தடையைத் தாண்டி இந்திய-ரஷியா வர்த்தகம் வெகுவாக வளர்ந்து வருகிறது. இரு நாடுகளும் இன்னும் பரஸ்பர வர்த்தகத்தை வளர்க்கும் வாய்ப்புகள் உள்ளன. ரஷியா-உக்ரைன் போரில் இந்தியாவின் சீரான நிலையை ரஷியா மதிக்கிறது என தெரிவித்தார்.

    ×