search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டாலருக்குப் பதிலாக சீன யுவான் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனங்கள்
    X

    டாலருக்குப் பதிலாக சீன யுவான் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனங்கள்

    • ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய தடை
    • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் டாலருக்குப் பதிலாக யுவான் மூலம் எண்ணெய் இறக்குமதி

    உலக நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி- இறக்குமதி அனைத்திற்கும் அமெரிக்க டாலர் பயன்பாட்டை குறைத்து அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற அண்மைக்காலமாக சில முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவும் பங்கேற்றிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

    இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உட்பட சில இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள், ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு யுவான் (Yuan) எனப்படும் சீன நாணயத்தில் பணம் செலுத்தத் தொடங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பினால் விதிக்கப்பட்ட சர்வதேச தடைகளின் ஒரு பகுதியாக டாலர்கள் மற்றும் யூரோக்களில் பரிமாற்றங்கள் கையாளப்படுவதற்கு அனுமதிக்கப்படாததால், இதற்கு மாற்றாக யுவான் பயன்படுத்தப்பட தொடங்கியுள்ளது.

    இந்தியாவின் 3 தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களில் குறைந்தது 2 நிறுவனங்கள், ரஷிய இறக்குமதிகளுக்கு யுவானில் பணம் செலுத்துகின்றன என செய்திகள் தெரிவிக்கின்றன.

    பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை தங்களின் நாணய விருப்பங்களை விரிவுபடுத்தும் முயற்சியில் ரஷியாவின் கச்சா எண்ணெயை யுவானில் செலுத்த பரிசீலித்து வருகின்றன.

    ஜூன் மாதம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) மூலமாக ரஷியாவின் ரோஸ்நெஃப்ட் (Rosneft) எண்ணெய் நிறுவனத்திலிருந்து பெறப்படும் எண்ணெய்க்கான தொகையை யுவானில் செலுத்தியது. அப்போதிலிருந்து, சரக்குகளுக்கு பணம் செலுத்த அதே முறையை பயன்படுத்தியது.

    இந்தியன் ஆயில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ரஷிய ஆதரவு பெற்ற நயாரா எனர்ஜி மற்றும் ஹெச்பிசிஎல் மிட்டல் எனர்ஜி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இந்த விஷயத்தில் தாம் எடுத்திருக்கும் முடிவுகள் குறித்து மவுனமாக காத்துள்ளன.

    பிப்ரவரி 2022-ல் உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து ரஷியாவிடமிருந்து எண்ணெய் மற்றும் நிலக்கரி வாங்குவதை இந்தியா தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது.

    மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளதால், இந்தியா இறக்குமதி செய்யும் மொத்த கச்சா எண்ணெயில் ரஷ்யாவின் பங்கு 42% ஆகும். ஜூன் மாதம் இந்தியா ஒரு நாளைக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான பீப்பாய் கச்சா எண்ணெய்-ஐ தள்ளுபடி விலையில் ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்தது. இதுவரை இல்லாத அளவாக மே மாதம் ரஷியாவிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 21 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை வாங்கியது. இது முந்தைய அதிகபட்ச அளவை விட 15% அதிகமாகும்.

    எண்ணெய் இறக்குமதி மட்டுமல்லாது, இதே போல இந்தியாவின் மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தியாளரான அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம், அதன் நிலக்கரி இறக்குமதிக்கும் ஜூன் 2022-ல், யுவானில் பணம் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×