search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒற்றை தலைமை விவகாரம்"

    • அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகளால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
    • அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை என்பது ஒட்டுமொத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது.

    அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொண்டர்களில் 97 சதவீதம் பேர் ஆதரவை கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்ட த்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளன.

    மேலும் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கடைசி முயற்சியாக சென்னை ஐகோர்ட்டை நாடியுள்ளனர்.

    சென்னை ஐகோர்ட்டில் இன்று ஓ.பன்னீர் செல்வத்தின் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதுபோல சுப்ரீம் கோர்ட்டிலும் அ.தி.மு.க. விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

    அந்த மேல் முறையீட்டு விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகளால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை என்பது ஒட்டுமொத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாகும். இந்த நிலையில், ஒற்றைத் தலைமை கருத்து எழுந்தவுடன், கடந்த ஜூன் 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவை தடுக்க அவர் பல்வேறு வழிகளில் முயன்றார்.

    சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, பொதுக்குழுவுக்கு தடை விதிக்குமாறு ஆவடி காவல் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் பொதுக்குழு அமைதியாக நடந்தது.

    முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில் ஒற்றைத் தலைமையுடன் கட்சி சிறப்பாக வழி நடத்தப்பட வேண்டும் என்பதே கட்சி நிர்வாகிகளின் ஒருமித்த எண்ணமாகும். ஆனால் கட்சித் தொண்டர்கள், தங்களது உணர்வுகளையும், கருத்துகளையும் வெளிப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஓ.பன்னீர் செல்வம் செயல்படுகிறார்.

    உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 34 இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்த அவர் உரிய ஒத்துழைப்பை தரவில்லை. அது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுத்தும், அவர் பங்கேற்கவில்லை.

    கட்சியின் பொருளாளர் அவர்தான். கட்சி நிதியை அவர் விடுவிக்காததால், அ.தி.மு.க. அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பொருளாளர் கடமையை செய்யாமல், கட்சியின் நலனை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த ஜூன் 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் வாயிலாக ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கையும், நம்பிக்கையையும் முற்றிலுமாக இழந்து விட்டார். எனவேதான் அவர் எங்களுடன் இணைந்து செயல்பட மறுத்து வருகிறார்.

    வருகிற 11-ந்தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் 2 ஆயிரத்து 432 பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதம் மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் தனக்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக பொதுக்குழுவுக்கும் தடை கோருகிறார்.

    கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு, கட்சியின் செயல்பாடுகளையும், பொதுக்குழுவையும் முடக்க நினைக்கிறார். இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் இந்த மனுவுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபடுகிறார். கட்சி விதிகளை மீறி நடக்கிறார். கட்சியை நடத்தாமல் முடக்கும் செயல்பாடுகளாக அவரது நடவடிக்கைகள் உள்ளன.

    எனவே ஓ.பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து செயல்பட இயலாது. ஆகவே சென்னை ஐகோர்ட்டில் வெளியிடப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    • பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென்றால் தனி நீதிபதியிடம் முறையிட வேண்டும்.
    • ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் அரவிந்த பாண்டியன் வாதிட்டார்.

    சென்னை:

    அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 23- ந்தேதி சென்னை வானரகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    இந்த கூட்டத்தில், புதிய தீர்மானங்கள் எதுவும் இயற்றக்கூடாது என்று பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தடை கேட்ட மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    இதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை கொண்டு வர தடை விதித்து கடந்த மாதம் 23-ந்தேதி அதிகாலையில் உத்தரவிட்டனர்.

    ஆனால், தடையை மீறி புதிய தீர்மானம் இயற்றப்பட்டதாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். அதில், அ.தி.மு.க., பொதுக்குழுவில் ஐகோர்ட்டு தடையை மீறி, அ.தி.மு.க.வின் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேனை நியமித்து, புதிய தீர்மானம் இயற்றப்பட்டது.

    ஐகோர்ட்டு உத்தரவை மீறி தீர்மானத்தை இயற்ற காரணமான அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 11-ந்தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு அவசர வழக்காக எடுக்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு மட்டும் வருகிற 4-ந்தேதி விசாரிக்கப்படும். அந்த வழக்கில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விசாரிக்க முடியாது என்றனர்.

    இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆஜராகி பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தாண்டி வேறு தீர்மானங்கள் இயற்றக் கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அவைத் தலைவரை நியமித்து புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கோர்ட்டு உத்தரவை வேண்டுமென்றே அவ மதிப்பதாக உள்ளது.

    அது மட்டுமில்லாமல் மீண்டும் பொதுக்குழுவை 11-ந்தேதி கூட்டுவதாக அறிவித்துள்ளனர். இது சட்ட விரோதம். எனவே இந்த பொதுகுழுவுக்கு தடை விதிக்க வேண்டும்.

    அவைத் தலைவரை தேர்வு செய்த தீர்மானத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

    அதற்கு நீதிபதிகள், ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் பழைய வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.

    பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென்றால் தனி நீதிபதியிடம் முறையிட வேண்டும். டிவிஷன் பெஞ்சில் முறையிட முடியாது. தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து தரக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை மட்டுமே விசாரிக்கிறோம்.

    தடையை மீறி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினாலும் அவைத் தலைவர் இல்லாமல் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும்? எனவே இதில் கோர்ட்டு அவமதிப்பு என்ற கேள்வி எப்படி எழும்.

    எனவே வருகிற 11-ந்தேதி கூடும் பொதுக் குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் அரவிந்த பாண்டியன் வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 7-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • அ.தி.மு.க. பற்றி குறை கூற டி.டி.வி.தினகரனுக்கு தகுதி இல்லை.
    • சசிகலா தான் அரசியலில் இருப்பதை காண்பிக்கவே கருத்து தெரிவித்து வருகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வைத்திலிங்கம் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். அதனால் அவர் அ.தி.மு.க. பொதுக்குழு நடக்காது என்று கூறி வருகிறார்.

    அ.தி.மு.க. பற்றி குறை கூற டி.டி.வி.தினகரனுக்கு தகுதி இல்லை. தொடர்ந்து அவர் அ.தி.மு.க. பற்றி விமர்சனம் செய்தால் சட்ட படி நடவடிக்கை எடுப்போம். சசிகலா தான் அரசியலில் இருப்பதை காண்பிக்கவே கருத்து தெரிவித்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • வழக்கமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரது வீடுகளிலும் தினமும் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏராளமானவர்கள் திரளுவார்கள். ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி வீட்டில் மட்டும் கூட்டம் திரளுகிறது.
    • ஓ.பன்னீர்செல்வம் வீடு கிரீன்வேஸ் சாலையில் பறக்கும் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.விற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பும், இரட்டைத் தலைமைதான் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பிடிவாதம் காட்டியது.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே ஆதரவு பெருகியது. மொத்தம் உள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,400-க்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறார்கள்.

    அதே போல் 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தலைமை கழக நிர்வாகிகள் 74 பேரில் 65 பேர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறார்கள்.

    எனவே வருகிற 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

    வழக்கமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரது வீடுகளிலும் தினமும் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏராளமானவர்கள் திரளுவார்கள். ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி வீட்டில் மட்டும் கூட்டம் திரளுகிறது.

    ஓ.பன்னீர்செல்வம் வீடு கிரீன்வேஸ் சாலையில் பறக்கும் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் உள்ளது.

    வழக்கமாக தினமும் கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் திரண்டு நிற்கும். ஆனால் இப்போது தொண்டர்கள் வருகை மிகவும் குறைந்து விட்டது.

    எடப்பாடி பழனிசாமி வீட்டில் அதிகாலையிலேயே கூட்டம் திரண்டு விடுகிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் வீடு கொஞ்சம் கொஞ்சமாக களை இழந்தது. இன்று காலையில் முற்றிலும் ஒரு தொண்டர் கூட வரவில்லை.

    வெளிப்புற கேட் திறந்து இருந்தது. ஓ.பி.எஸ். வீட்டுக்குள் தனியாக இருந்தார். வெளியே ஒரு சில பத்திரிகையாளர்கள் மட்டும் நிற்கிறார்கள்.

    பகல் 11 மணிக்கு பிறகு வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், ரவீந்திரநாத் ஆகிய 4 பேரும் வந்தனர்.

    ஆனாலும் அடிமட்ட தொண்டர்கள் கூட வராதது அவருக்கு ஏமாற்றம் அளித்தது.

    • தற்போது பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இன்று அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.
    • இந்த அழைப்பு கடிதம், தற்போது ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் இருப்பதால் அவருக்கும் அனுப்பப்படும் என்று மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வருகிற 11-ந் தேதி மீண்டும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    ஒற்றைத்தலைமை என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அணியினர் கடந்த பொதுக்குழு கூட்டத்திலேயே அதை முடிவு செய்ய தீர்மானித்தனர்.

    ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கோர்ட்டு மூலம் போட்ட முட்டுக்கட்டையால் அது நிறைவேறாமல் போனது. கடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றுதான் முதலில் கையெழுத்து பெறப்பட்டது.

    ஆனால் கோர்ட்டு மூலம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கொடுத்த நெருக்கடியால் அதை முறியடிக்க ஒற்றைத்தலைமை வேண்டும் என்று கடைசி நேரத்தில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கினார்கள்.

    மொத்தம் உள்ள 2660 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 பேர் ஒற்றைத்தலைமைக்கு ஆதரவாக கையெழுத்திட்டு கடிதம் வழங்கினார்கள். அதை வைத்துதான் அன்றைய பொதுக்குழு கூட்டத்தில் கொண்டு வர இருந்த அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்து விட்டு 11-ந்தேதி கூட்டத்தை மீண்டும் கூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

    தற்போது பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இன்று அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த அழைப்பு கடிதத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தவறாமல் கலந்து கொள்ள அழைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு தலைமைக்கழக நிர்வாகிகள் அழைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த அழைப்பு கடிதம், தற்போது ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் இருப்பதால் அவருக்கும் அனுப்பப்படும் என்று மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பல்வேறு அதிரடி முடிவுகள் மேற்கொள்ளப்படலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க., தி.மு.க.வை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி. எம்.ஜி.ஆர்.காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி தி.மு.க.வை எதிர்க்கட்சி என்பதை விட எதிரி கட்சியாகவே பாவித்து அரசியல் நடத்தினார்கள்.

    அதனால்தான் தொண்டர்களும் இயக்கத்தில் பிடிப்புடன் இருந்தார்கள். ஆனால் இப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் கட்சி தொண்டர்களையே கோபப்படுத்தும் வகையில் அமைந்து விட்டது.

    அவர் சசிகலாவை ஆதரித்த போதுகூட தொண்டர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் கருணாநிதியை கலைஞர் என்று குறிப்பிட்டும், தான் அவரது ரசிகர் என்று குறிப்பிட்டும் தெரிவித்த கருத்துக்கள் தொண்டர்களுக்கு அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக எம்.பி. பதவியில் இருக்கும் அவரது மகன் ரவீந்திரநாத் முதல்-அமைச்சரை சந்தித்து பேசியது மட்டுமல்ல தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருப்பதாக பாராட்டியது கட்சியினரிடம் இருந்த கொஞ்சம் நஞ்ச மரியாதையையும் இழக்க செய்தது.

    அப்படி இருந்தும் கடந்த முறை பொதுக்குழுக்கூட்டம் கூடுவதற்கு ஒருநாள் முன்பு வரை சமரசம் செய்யப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை தலைமை தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன.

    கடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகாவது அமைதியாக இருந்திருந்தால் தொண்டர்களும் சகித்து கொண்டிருப்பார்கள். ஆனால் 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர் இறங்கியதால் கொஞ்சம் நஞ்சம் அவரிடம் இருந்த அவரது ஆதரவாளர்களும் அவரை விட்டு விலகி விட்டார்கள்.

    அதனால்தான் இப்போது 2400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய கோரி கடிதம் கொடுத்து இருக்கிறார்கள்.

    கடந்த முறையை விட இந்த முறை கூடுதல் எழுச்சியுடன் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். எப்படியாவது முட்டுக்கட்டை போட்டுவிடலாம் என்று மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டன. ஐகோர்ட்டும் தடை செய்ய முடியாது என்று அறிவித்து விட்டது.

    கொரோனாவை காரணம் காட்டியாவது கூட்டம் தடை செய்யப்படுமா? என்று நினைத்தார்கள். ஆனால் அதையும் சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தி விட்டார். பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கப்போவதில்லை. கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

    அதனால்தான் இந்த பொதுக்குழு, அரங்கத்திற்கு உள்ளே நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக வெளியே பந்தல் அமைத்து சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போடப்படுகிறது. பொதுக்குழுவுக்கு வரும் அனைவருக்கும் கிருமிநாசினிகள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன.

    வருகிற பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை முதலில் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்து அறிவிக்கப்பட உள்ளது.

    ஏனெனில் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கிய போது பொதுச்செயலாளரை கட்சியின் உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதியை உருவாக்கி வைத்துள்ளார். அந்த விதி இதுவரை திருத்தப்படவில்லை.

    எனவே தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்து விட்டு உறுப்பினர்கள் மூலம் தேர்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அப்போது பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்றால் போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்படுவார்.

    அதுமட்டுமல்ல கட்சியின் விதிகளில் திருத்தம் கொண்டு வரவும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. இதுவும் அ.தி.மு.க.வின் விதிகளில் உள்ளது. ஆனால் தற்போது ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக அதை உடனடியாக செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதால் சாதகமான தீர்ப்பு பொதுக்குழுவுக்கு முன்பு வந்துவிட்டால் விதிகளை திருத்தும் தீர்மானம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் மன நிலையை புரிந்து கொண்டு சமாதானமாக போனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிக்கும் ஆபத்து வராது. இல்லாவிட்டால் பொருளாளர் பதவியையும் பறிக்கும் தீர்மானம் கூட கொண்டு வரப்படலாம். அதுமட்டுமல்ல அ.தி.மு.க.வில் கட்சிக்கு விரோதமாக யாரேனும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கலாம் என்பது கட்சி விதி.

    இந்த விதிப்படியும் நடவடிக்கை எடுக்க முடியும். அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் அ.தி.மு.க.வில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி வெளியில் போக செய்ய முடியும். இதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

    கடந்த முறை கொண்டு வரப்பட்ட 23 தீர்மானங்களில் சில தீர்மானங்களை நீக்குவது மற்றும் சில தீர்மானங்களில் மாற்றம் கொண்டு வருவது, புதிய தீர்மானங்களை சேர்ப்பது பற்றி பொன்னையன் தலைமையிலான தீர்மானக்குழு அடுத்த ஓரிரு தினங்களில் விவாதித்து முடிவு செய்யும்.

    கண்டிப்பாக தி.மு.க. அரசின் சீர்கேடுகளை பற்றி ஒரு பட்டியல் தயாரித்து வெளியிடப்படும். அதை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தும் அறிவிப்பும் தீர்மானத்தில் இடம்பெற வாய்ப்பு உண்டு.

    • எடப்பாடி ஆதரவு மாவட்ட செயலாளர்கள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களாக உள்ள பொதுக்குழு உறுப்பினர்களிடம் பேசி வருகிறார்கள்.
    • இதன் மூலம் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வருகிற 11-ந்தேதிக்குள் ஒரு சிலரை தவிர அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுமே எடப்பாடி பழனிசாமியின் பக்கம் வந்து விடுவார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகி இருக்கும் பரபரப்பான சூழலில் வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் மொத்தம் 2,665 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் உள்ளனர். இந்த ஆதரவு பலத்துடன் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமை பதவியை கைப்பற்ற உள்ளார்.

    மொத்தம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கனவே 2,432 பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவினார்கள். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு 2,441 ஆக அதிகரித்து இருக்கிறது.

    இதற்கிடையே மீதம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களிலும் பெரும்பாலானவர்கள் இன்னும் சில தினங்களில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தே காணப்படுகின்றன. இதற்காக எடப்பாடி ஆதரவு மாவட்ட செயலாளர்கள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களாக உள்ள பொதுக்குழு உறுப்பினர்களிடம் பேசி வருகிறார்கள். இதன் மூலம் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வருகிற 11-ந்தேதிக்குள் ஒரு சிலரை தவிர அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுமே எடப்பாடி பழனிசாமியின் பக்கம் வந்து விடுவார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    எடப்பாடி பழனிசாமியை கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்வது தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தனித்தனியாக கையெழுத்து போட்டு ஆதரவு கடிதம் அளிக்க வேண்டும். இதற்கான பணிகளும் நடந்து முடிந்துள்ளன.

    எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. ஒற்றை தலைமை பதவிக்கு தேர்வு செய்வது தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு ஆதரவு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இதனால் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமை பதவிக்கு தேர்வு செய்யப்பட இருப்பது 100 சதவீதம் உறுதியாகி இருப்பதாக அவரது ஆதரவு மாவட்ட செயலாளர் ஒருவர் தெரிவித்தார்.

    கடந்த 24-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

    ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்படும் தீர்மானமும் அதில் இடம் பெற்றிருந்தது.

    இந்த தீர்மானத்தை தவிர மற்ற தீர்மானங்களை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்துள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வரும் ஒற்றை தலைமை தீர்மானமும் முக்கிய தீர்மானமாக பொதுக்குழுவில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுகிறார்.

    பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக தேர்வானதும் அதனை வெற்றிக் கொண்டாட்டம் போல் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்கனவே காலாவதியாகி விட்டதாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர். தற்போது அ.தி.மு.க. பொருளாளர் பதவியில் மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார்.

    அந்த பதவியையும் பறித்து ஓ.பன்னீர்செல்வத்தை முழுமையாக ஓரம் கட்டவும் எடப்பாடி பழனிசாமி அணியினர் காய் நகர்த்தி வருகிறார்கள். இது தொடர்பாகவும் பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து கட்சியை வழி நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் ஒற்றை தலைமை கோஷம் வலுவடைந்ததை தொடர்ந்து இரட்டை தலைமை முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த கட்டமாக பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

    இதன் மூலம் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தின் கை வீழ்ச்சியை சந்தித்து இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. தலைமை பதவி ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து கை நழுவிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் அது தொடர்பான பரபரப்பு இப்போதே பற்றிக் கொண்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வில் பொருளாளர் பதவி என்பது முக்கியமான பதவிகளில் ஒன்றாகும்.
    • பொருளாளர் பதவியை பிடிக்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டும் வேலைகளில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர்.

    அ.தி.மு.க.வில் பொருளாளர் பதவி என்பது முக்கியமான பதவிகளில் ஒன்றாகும். இந்த பதவியில் தற்போது ஓ.பன்னீர்செல்வ மே இருந்து வருகிறார்.

    ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறி இருக்கும் நிலையில் தற்போது ஓ.பன்னீர் செல்வத்திடம் பொருளாளர் பதவி மட்டுமே இருக்கிறது. இந்த பதவியையும் அவரிடமிருந்து பறிப்பதற்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்துள்ளனர்.

    11-ந்தேதி பொதுக்குழுவில் இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    அது போன்று ஓ.பன்னீர் செல்வம் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்படும் பட்சத்தில் புதிய பொருளாளர் யார்? என்கிற கேள்வியும் அ.தி.மு.க.வினர் மத்தியில் எழுந்துள்ளது.

    பொருளாளர் பதவியை பிடிக்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரது பெயர்கள அடிபடுகிறது. அதே நேரத்தில் மேலும் சில முன்னணி அ.தி.மு.க. நிர்வாகிகளும் பொருளாளர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார்கள்.

    இதனால் யாருக்கு பொருளாளர் பதவியை அளிக்கலாம் என்பது பற்றி எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஆலோசித்து வருகிறார். பொருளாளர் பதவியை கைப்பற்றுவதில் தனது ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த போட்டி எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்ததாக புதிய சிக்கலையும் சவாலயும் ஏற்படுத்தி உள்ளது.

    இதன் மூலம் யாருடைய மனமும் நோகாத அளவுக்கு புதிய பொருளாளரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 510 பதவி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
    • இதில் 40 ஊராட்சி தலைவர், 436 கிராம வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கட்சி சார்ந்த சின்னங்கள் ஒதுக்கப்படுவது இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

    இந்த நிலையில் இருவரும் கையெழுத்திட்ட படிவம் வழங்கப்படாததால் 9-ந்தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட 34 பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு அவர்களது சின்னங்கள் ஒதுக்கப்படும். அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் இந்த பதவிகளுக்காக போட்டியிடும் நிர்வாகிகளுக்கு பார்ம் ஏ மற்றும் பார்ம் பி.யில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட வேண்டும்.

    தற்போது அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இருவரும் கையெழுத்திட்ட படிவங்கள் அ.தி.மு.க.வினருக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள்.

    இதன் காரணமாக அ.தி.மு.க.வினர் கலக்கம் அடைந்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தால் ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் உள்ளாட்சி தேர்தல் இடைத்தேர்தலில் களம் கண்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று அ.தி.மு.க.வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஆனால் சுயேட்சையாக போட்டியிடுவதால் புதிய சின்னங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது சிரமமான விஷயமாகவே மாறி உள்ளது என்றும், இதனால் வெற்றி வாய்ப்பு பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ள அ.தி.மு.க.வினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 510 பதவி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் 40 ஊராட்சி தலைவர், 436 கிராம வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கட்சி சார்ந்த சின்னங்கள் ஒதுக்கப்படுவது இல்லை. இதனால் இந்த பதவி இடங்களுக்கான போட்டியில் சின்னம் தொடர்பான பிரச்சினை எழவில்லை.

    • அ.தி.மு.க. அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்ட தகவலையும் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி தெரிவிக்க வேண்டும்.
    • இந்த தகவலை சேர்த்தே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

    சென்னையில் கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி அணியினர் நிராகரித்தனர்.

    இதன் பிறகு இருதரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தை அழைக்காமலேயே எடப்பாடி பழனிசாமி தலைமை நிர்வாகிகள் கூட்டத்தையும் கூட்டி ஆலோசித்தார். அதில் ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தவும், ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியை பறிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

    இதனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. அதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக நான் இருந்து வரும் நிலையில் எனது ஒப்புதல் இன்றி வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. கட்சியின் சட்ட விதிகளை திருத்தி ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அவரது சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த மனுவில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் மொத்தம் 2660 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளதாகவும், இவர்களில் 2432 உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அ.தி.மு.க. பொதுக்குழு அங்கீகாரம் அளிக்கவில்லை என்ற தகவல்களும் மனுவில் இடம்பெற்றுள்ளது.

    அ.தி.மு.க. சட்டவிதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு உள்ளதாகவும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் இதுபோன்று பொதுக்குழு கூட்டங்கள் நடத்தி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்ட தகவலையும் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி தெரிவிக்க வேண்டும். இந்த தகவலையும் சேர்த்தே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

    சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகளில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் போட்டி போட்டுக் கொண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில் தேர்தல் ஆணையத்திலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனு அ.தி.மு.க.வில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுக்குழுவில் இதுபற்றி முடிவு செய்ய வருகிற 11-ந்தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
    • ஜெயின் கல்லூரி வளாகத்தில் அரசியல் கூட்டம் நடத்த உயர் கல்வித் துறை அனுமதிக்காது என்பதால் அந்த இடம் கைவிடப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமையை முடிவு செய்ய எடப்பாடி பழனிசாமி கடந்த 23-ந்தேதி வானகரத்தில் பொதுக்குழுவை கூட்டி இருந்தார்.

    ஆனால் அந்த கூட்டத்தில் கோர்ட்டு உத்தரவு காரணமாக ஒற்றை தலைமை தீர்மானத்தை கொண்டு வர முடியவில்லை. அதற்கு மாறாக அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால் அன்றைய தினம் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுக்க முடியவில்லை.

    அடுத்த பொதுக்குழுவில் இதுபற்றி முடிவு செய்ய வருகிற 11-ந்தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பொதுக குழு கூட்டத்தை எங்கே நடத்துவது என்று சில நாட்களாக அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் தீவிரமாக இடம் பார்த்து வந்தனர்.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வி.ஜி.பி. கடற்கரை வளாகம், மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரி வளாகம், ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஒரு 'ரிசார்ட்' ஆகிய இடங்களை பொதுக்குழு நடத்த பார்வையிட்டனர்.

    இதில் ஜெயின் கல்லூரி வளாகத்தில் அரசியல் கூட்டம் நடத்த உயர் கல்வித் துறை அனுமதிக்காது என்பதால் அந்த இடம் கைவிடப்பட்டது.

    அதன் பிறகு வி.ஜி.பி. வளாகத்தில் பொதுக் குழுவை நடத்தலாமா? என்று ஆலோசித்தனர். ஆனால் அந்த பகுதி செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் வருவதால் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடைசி நிமிடத்தில் பொதுக்குழுவை நடத்த முடியாமல் போகலாம் என கருதினர். இதனால் அந்த இடமும் கைவிடப்பட்டது.

    இதனால் கடந்த 23-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்திலேயே மீண்டும் பொதுக்குழுவை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக மண்டபத்தின் உரிமையாளரை அணுகி தகவல் தெரிவித்துள்ளனர்.

    வருகிற 11-ந்தேதி மீண்டும் பொதுக்குழு நடத்துவதற்கு மண்டபத்தை தாருங்கள் என்று கேட்டுள்ளனர். ஒருவேளை இந்த தேதி மாறினாலும் வேறொரு தேதியில் நடத்துவதற்கு வசதியாக மேலும் 2 தேதிகளில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தை அ.தி.மு.க. தரப்பில் முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

    • ஒரு கட்சியின் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடுவது என்றால் இரண்டு விஷயங்களில்தான் தலையிட முடியும்.
    • ஒன்று, கட்சியின் பெயர், மற்றொன்று கட்சியின் சின்னம். இந்த இரண்டு விஷயங்களில்தான் தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு உடனுக்குடன் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி திட்டமிட்டபடி நடக்குமா?

    அந்த கூட்டத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை பெறுவாரா?

    அதன்பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன?

    இந்த கேள்விகள்தான் இப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களிடமும் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு அ.தி.மு.க.வின் அரசியல் பயணத்தில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திடும் என்பது அரசியல் நிபுணர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்துவிட்டால் தனது அரசியல் வாழ்வு இருண்டுவிடும் என்பதை ஓ.பன்னீர்செல்வம் நன்கு உணர்ந்திருக்கிறார். இதனால்தான் அவர் ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்த விட்டுவிடக் கூடாது என்று எல்லா கோணங்களிலும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி அணியினர் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை மோப்பம் பிடித்து, மோப்பம் பிடித்து காய்களை நகர்த்தி வருகிறார். அதன் ஒரு அங்கமாகத்தான் தலைமை தேர்தல் கமிஷனருக்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    அதில் அவர், 'சென்னையில் 27-ந் தேதி நடந்த தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சட்ட விதிகளின் படி செல்லாது. அ.தி.மு.க. சட்ட விதிகளின் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பேரும் இணைந்து தான் இதுபோன்ற கூட்டத்தை நடத்த முடியும்.

    இந்த கூட்டத்தில் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுத்து இருப்பது விதிகளுக்கு புறம்பானது. இதை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த வேண்டுகோளை ஏற்று அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடுமா? தேர்தல் ஆணையம் என்ன உத்தரவு பிறப்பிக்கும் என்று கேள்வி குறி எழுந்துள்ளது. பிரபல அரசியல் விமர்சகர் தராசு சியாம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

    ஒரு கட்சியின் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடுவது என்றால் இரண்டு விஷயங்களில்தான் தலையிட முடியும். ஒன்று, கட்சியின் பெயர், மற்றொன்று கட்சியின் சின்னம். இந்த இரண்டு விஷயங்களில்தான் தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு உடனுக்குடன் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.

    ஒரு கட்சியின் தேர்தல் சின்னம் என்பது அந்த கட்சிக்கு சொந்தமானது அல்ல. அது தேர்தல் ஆணையத்துக்கு சொந்தமானது. கட்சி பயன்படுத்திக்கொள்ள உரிமையை மட்டுமே தேர்தல் ஆணையம் வழங்குகிறது.

    ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டதும் முதலில் அதற்கு சுயேட்சையை போன்று ஒரு சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும். தேர்தலில் அந்த கட்சி குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற்று காண்பித்த பிறகுதான் அந்த சின்னத்தை அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் நிரந்தரமாக வழங்கும். அதாவது பயன்பாட்டு உரிமையை கொடுக்கும்.

    இதில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் கட்சியின் தேர்தல் சின்னத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. அதுபோன்று தான் கட்சியின் பெயரில் முடிவெடுக்கும் உரிமையும் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது.

    ஆனால் கட்சியின் சட்ட விதிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் மிக ஆழமாக சென்று தலையிடுவது இல்லை. இதற்கு தேர்தல் ஆணையத்தில் எத்தனையோ முன் உதாரணங்கள் இருக்கிறது.

    குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், 1969-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது பொதுச்செயலாளராக இருந்த சாதிக் அலி வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் வெற்றிபெற்ற பிறகுதான் வந்தது.

    அதே சமயத்தில் தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சியின் பிளவு தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், தேர்தல் ஆணையம் 3 விதமான நடைமுறைகளை கையாளும்.

    1. எந்த அணியிடம் அதிக எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்? என்று பார்ப்பார்கள்.

    2. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் யார் பக்கம் அதிகம் இருக்கிறார்கள்? என்று பார்ப்பார்கள்.

    3. கட்சியின் சட்ட விதிகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்பார்கள்.

    இந்த மூன்றில் ஒரு கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் தேர்தல் ஆணையத்திடம் இருப்பதுண்டு. எனவே இந்த இரண்டின் அடிப்படையில் எளிதில் முடிவெடுக்க வாய்ப்புகள் உண்டு.

    கட்சியின் சட்ட விதிகள் தொடர்பாக பெரும்பாலும் தேர்தல் ஆணையம் தலையிடுவது இல்லை. ஏனெனில் இந்தியாவில் உள்ள கட்சிக்கு, சட்ட விதிகள் என்று ஏராளமான விதிகள் உள்ளன. அந்த விதிகளில் உள் பிரிவு விதகிளும் ஏராளம் இருக்கும்.

    அந்த விதிகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் சரிபார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் தேர்தல் ஆணையத்தில் அந்த அளவுக்கு சட்ட வல்லுனர்களின் பலம் கிடையாது. சட்ட நிபுணர்கள் மிகவும் குறைவாக இருப்பதால் தேர்தல் ஆணையம் கட்சியின் சட்ட விதிகளில் இதுவரை ஆர்வம் காட்டியதே கிடையாது. இது தொடர்பாக ஏதேனும் மனுக்கள் வந்தால் அவற்றை தேர்தல் ஆணையம் சிவில் கோர்ட்டு தீர்ப்புக்கு தள்ளிவிட்டு விடும். இதுவரை அப்படித்தான் நடந்துள்ளது.

    எனவேதான் சட்ட விதிகளை பயன்படுத்தி ஒரு கட்சியை ஒரு அணி கைப்பற்றியதாக இந்தியாவில் வரலாறே கிடையாது. அந்த அடிப்படையில் பார்த்தால் ஓ.பன்னீர்செல்வம் தற்போது தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ள பரபரப்பு குற்றச்சாட்டு கடிதம் கை கொடுக்குமா? என்பது சந்தேகம்தான்.

    ஓ.பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் கட்சியின் சட்ட விதி மீறல்கள் பற்றிதான் குறிப்பிட்டுள்ளார். இதை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்வதற்கு வாய்ப்பு இல்லையென்றுதான் கருதுகின்றேன். எனவே ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மேற்கொண்டுள்ள முயற்சி வீணான முயற்சி.

    என்றாலும், அவர்கள் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள குற்றச்சாட்டு கடிதத்தின் பின்னணியில் ஏதாவது ஒரு சூட்சுமம் அல்லது வியூகம் இருக்கும் என்றே கருதுகின்றேன். தேர்தல் ஆணையம் தனது கடிதம் மீது அதிரடி நடவடிக்கை எடுக்காது என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றாகவே தெரியும்.

    அதிகபட்சம் இந்த கடிதம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பலாம். மற்றபடி வேறு எந்த அதிரடி நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பே இல்லை.

    ஆனால் கோர்ட்டு மூலம் ஏதாவது அதிசயம் நடந்து விடாதா? என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கருதுகிறார்கள். தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்ற வழக்கு இன்னமும் நிலுவையில்தான் உள்ளது.

    அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, 'கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ளுங் கள்' என்று நீதிபதிகள் சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முன்னதாகவே தேர்தல் ஆணையத்தை அணுகி இருப்பதாக நான் கருதுகின்றனே்.

    கோர்ட்டில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, நாங்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துவிட்டோம். அவர்கள் இன்னும் உரிய முடிவு எடுக்கவில்லை. எனவே கோர்ட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் கோர்ட்டும் முடிவெடுக்குமா? என்பது சந்தேகம்தான்.

    எனவே தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் மற்றும் கோர்ட்டு இரண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு முழுமையாக கைகொடுக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இந்த விஷயத்தில் பா.ஜனதா யாருக்கு ஆதரவு கொடுக்கும் என்பதை பொறுத்துதான் அ.தி.மு.க. வில் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.

    இந்த பிரச்சினைக்கு எம்.ஜி.ஆர். தனது உயிலில் விடை எழுதி வைத்திருந்தார்.

    எம்.ஜி.ஆர். எழுதிய உயில், 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந் தேதி ஜானகி அம்மாள் முன்னிலையில் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். முன்னாள் அவைத் தலைவர் ஈ.வே.வள்ளிமுத்துவும் அந்த கூட்டத்தில் இருந்தார்.

    எம்.ஜி.ஆர். தனது உயிலில், 'எனது காலத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டால் அப்போதுள்ள அங்கத்தினர்களில் குறைந்தபட்சம் 80 சதவீதம் பேர் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்கள்தான் கட்சியை வழிநடத்த வேண்டும்' என்று கூறி இருந்தார்.

    இதன்படி பார்த்தால் அடுத்து என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர். மொத்தம் 23 பக்கங்கள் உயில் எழுதியிருந்தார். கடந்த 23-ந் தேதிதான் அ.தி.மு.க. பொதுக்குழுவில் சர்ச்சை எழுந்தது. அந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன.

    இந்த 23-க்கும், தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கும் காலம் எதையோ உணர்த்த முற்படுகிறது. ஆனால் அதை புரிந்துகொள்ள தவறுகிறது அ.தி.மு.க.வின் தற்போதைய தலைமை.

    இவ்வாறு அரசியல் விமர்சகர் தராசு சியாம் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் முழு ஆதரவு உள்ளது.
    • கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க.வில் சட்ட விதி மீறல்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன என்றும் தனது கடிதத்தில் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்திருந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவித்த எடப்பாடி பழனிசாமி அணியினர் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று ஓ.பன்னீர் செல்வத்தை அழைக்காமல் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்துக்கு பின் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம் என்று குற்றம் சாட்டினார். இதனால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் வலுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அணியினர் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக நான் செயல்பட்டு வரும் நிலையில் எனது ஒப்புதலின்றி வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அளித்துள்ளார்.

    கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க.வில் சட்ட விதி மீறல்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன என்றும் தனது கடிதத்தில் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் சட்ட நடவடிக்கைகள் அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளன.

    இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அணியினர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் தற்போது ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட கட்சியின் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி பக்கமே உள்ளனர் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு விரிவான விளக்கத்துடன் பதில் அளிக்க உள்ளனர்.

    அ.தி.மு.க. சட்ட விதிகளின் படியே நாங்கள் நடந்து கொண்டுள்ளோம். இதில் எந்த விதி மீறலும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தங்களது பதில் கடிதத்தில் தெரிவிக்க உள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு வக்கீலும் சட்ட நிபுணர்களும் மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வக்கீல் ஒருவர் கூறும் போது, அ.தி.மு.க.வை பொறுத்த வரை பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே கட்சியின் தலைமையை தீர்மானிக்கும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் முழு ஆதரவு உள்ளது. இதனை தேர்தல் ஆணையத்தில் நிரூபிப்போம் என்று கூறினார்.

    இன்னும் சில தினங்களில் இந்த பதில் கடிதம் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையும், பின்னர் அவரை நீக்கியதையும் முன்னுதாரணமாக குறிப்பிட்டும் இந்த பதில் மனுவில் பல்வேறு தகவல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல் அணியினர் இந்த பதில் கடிதத்தை தயார் செய்யும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர். 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு முன்னதாகவே இந்த பதில் மனுவை எடப்பாடி அணியினர் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    கட்சியின் சட்ட விதிகளை மாற்றம் செய்வதற்கு பொதுக்குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று அந்த பதில் மனுவில் குறிப்பிட்டு உள்ளனர். பல்வேறு கட்சிகளில் இதற்கு முன்னர் நடைபெற்றுள்ள இது போன்ற சம்பவங்களை எடுத்துகாட்டாக குறிப்பிட்டும் இந்த பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வக்கீலான திருமாறன் கூறும் போது, அ.தி.மு.க.வில் தற்போது ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் ஒப்புதல் இன்றி நடை பெறும் நிகழ்ச்சிகள் செல்லாது என்றும், இதன் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையத்தில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளோம் என்றும் கூறினார்.

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் வலுத்து வரும் நிலையில் வருகிற 11-ந்தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? என்கிற கேள்வியும் பூதாகரமாக எழுந்துள்ளது.

    ×