search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓ.பி.எஸ். நடவடிக்கைகளுக்கு பதிலடி- தேர்தல் ஆணையத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி விளக்கம்
    X

    ஓ.பி.எஸ். நடவடிக்கைகளுக்கு பதிலடி- தேர்தல் ஆணையத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி விளக்கம்

    • அ.தி.மு.க. அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்ட தகவலையும் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி தெரிவிக்க வேண்டும்.
    • இந்த தகவலை சேர்த்தே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

    சென்னையில் கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி அணியினர் நிராகரித்தனர்.

    இதன் பிறகு இருதரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தை அழைக்காமலேயே எடப்பாடி பழனிசாமி தலைமை நிர்வாகிகள் கூட்டத்தையும் கூட்டி ஆலோசித்தார். அதில் ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தவும், ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியை பறிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

    இதனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. அதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக நான் இருந்து வரும் நிலையில் எனது ஒப்புதல் இன்றி வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. கட்சியின் சட்ட விதிகளை திருத்தி ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அவரது சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த மனுவில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் மொத்தம் 2660 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளதாகவும், இவர்களில் 2432 உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அ.தி.மு.க. பொதுக்குழு அங்கீகாரம் அளிக்கவில்லை என்ற தகவல்களும் மனுவில் இடம்பெற்றுள்ளது.

    அ.தி.மு.க. சட்டவிதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு உள்ளதாகவும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் இதுபோன்று பொதுக்குழு கூட்டங்கள் நடத்தி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்ட தகவலையும் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி தெரிவிக்க வேண்டும். இந்த தகவலையும் சேர்த்தே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

    சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகளில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் போட்டி போட்டுக் கொண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில் தேர்தல் ஆணையத்திலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனு அ.தி.மு.க.வில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×