search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வத்துடன் இனி சேர்ந்து செயல்பட முடியாது- எடப்பாடி பழனிசாமி மனுவில் தகவல்
    X

    ஓ.பன்னீர்செல்வத்துடன் இனி சேர்ந்து செயல்பட முடியாது- எடப்பாடி பழனிசாமி மனுவில் தகவல்

    • அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகளால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
    • அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை என்பது ஒட்டுமொத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது.

    அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொண்டர்களில் 97 சதவீதம் பேர் ஆதரவை கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்ட த்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளன.

    மேலும் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கடைசி முயற்சியாக சென்னை ஐகோர்ட்டை நாடியுள்ளனர்.

    சென்னை ஐகோர்ட்டில் இன்று ஓ.பன்னீர் செல்வத்தின் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதுபோல சுப்ரீம் கோர்ட்டிலும் அ.தி.மு.க. விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

    அந்த மேல் முறையீட்டு விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகளால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை என்பது ஒட்டுமொத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாகும். இந்த நிலையில், ஒற்றைத் தலைமை கருத்து எழுந்தவுடன், கடந்த ஜூன் 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவை தடுக்க அவர் பல்வேறு வழிகளில் முயன்றார்.

    சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, பொதுக்குழுவுக்கு தடை விதிக்குமாறு ஆவடி காவல் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் பொதுக்குழு அமைதியாக நடந்தது.

    முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில் ஒற்றைத் தலைமையுடன் கட்சி சிறப்பாக வழி நடத்தப்பட வேண்டும் என்பதே கட்சி நிர்வாகிகளின் ஒருமித்த எண்ணமாகும். ஆனால் கட்சித் தொண்டர்கள், தங்களது உணர்வுகளையும், கருத்துகளையும் வெளிப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஓ.பன்னீர் செல்வம் செயல்படுகிறார்.

    உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 34 இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்த அவர் உரிய ஒத்துழைப்பை தரவில்லை. அது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுத்தும், அவர் பங்கேற்கவில்லை.

    கட்சியின் பொருளாளர் அவர்தான். கட்சி நிதியை அவர் விடுவிக்காததால், அ.தி.மு.க. அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பொருளாளர் கடமையை செய்யாமல், கட்சியின் நலனை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த ஜூன் 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் வாயிலாக ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கையும், நம்பிக்கையையும் முற்றிலுமாக இழந்து விட்டார். எனவேதான் அவர் எங்களுடன் இணைந்து செயல்பட மறுத்து வருகிறார்.

    வருகிற 11-ந்தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் 2 ஆயிரத்து 432 பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதம் மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் தனக்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக பொதுக்குழுவுக்கும் தடை கோருகிறார்.

    கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு, கட்சியின் செயல்பாடுகளையும், பொதுக்குழுவையும் முடக்க நினைக்கிறார். இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் இந்த மனுவுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபடுகிறார். கட்சி விதிகளை மீறி நடக்கிறார். கட்சியை நடத்தாமல் முடக்கும் செயல்பாடுகளாக அவரது நடவடிக்கைகள் உள்ளன.

    எனவே ஓ.பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து செயல்பட இயலாது. ஆகவே சென்னை ஐகோர்ட்டில் வெளியிடப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×