search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Single Leadership Crisis"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்.
    • வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு என்று நாம் கூறுவதுண்டு.

    பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

    ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். நமது கட்சியை சேர்ந்த சிலர் துரோக செயலில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. தி.மு.க. துணையுடன் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தை இடிக்க சென்றுள்ளனர்.

    இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத் தோடு அவர்கள் கட்சிக்கு துரோகம் செய்து வருகிறார்கள். இவர்கள் உண்மையான அ.தி.மு.க.வின் தொண்டர்களா? துரோகம் செய்தவர்கள். கட்சியை காட்டிக் கொடுத்தவர்கள். இனி அவர்கள் கட்சிக்கு தேவையா?

    வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு என்று நாம் கூறுவதுண்டு. அது இந்த பொதுக்குழு தான். எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாம் புறப்பட்டு விட்டோம். இதில் துரோகம் செய்தவர்களுக்கு இடம் இல்லை.

    2024 பாராளுமன்ற தேர்தலிலும் 2026 சட்ட மன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவது உறுதி. எப்போது தேர்தல் வரும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.பன்னீர்செல்வம் தலைமை கழகத்துக்கு வருவதை முன்கூட்டியே அறிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு பூட்டு போடுமாறு தலைமை கழக ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
    • அதன்படி அ.தி.மு.க. தலைமை கழகம் பூட்டப்பட்டிருந்தது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் இன்று காலையில் நடைபெற்ற அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க. தலைமை கழகத்தை கைப்பற்றினார். இதற்காக நேற்றே அவர் பயங்கர வியூகம் வகுத்திருந்தார்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தனது ஆதரவாளர்களை சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி காலை 7 மணிக்கெல்லாம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் அடுக்குமாடி குடியிருப்பு முன்பு வந்து அவர்கள் திரண்டிருந்தனர்.

    அம்மாவின் வாரிசு ஓ.பி.எஸ். வாழ்க என்று கோஷமிட்டபடி கொடியேந்தியபடி வந்திருந்தனர். வைத்தி லிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் வந்ததும் காலை 8 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

    தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடி தனது பிரசார வேனில் ஏறி அ.தி.மு.க. தலைமை கழகம் புறப்பட்டார். நூற்றுக்கணக்கான தொண்டர்களும் அவரது வேனை பின் தொடர்ந்தனர்.

    தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தலைமை கழகத்துக்கு வருவதை முன்கூட்டியே அறிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு பூட்டு போடுமாறு தலைமை கழக ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி அ.தி.மு.க. தலைமை கழகம் பூட்டப்பட்டிருந்தது.

    தலைமை கழகத்துக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி சாலையில் தனது ஆதரவாளர்களை நிறுத்தி இருந்தார். மாவட்ட செயலாளரான ஆதிராஜாராம் இதற்கான ஏற்பாடுகளை செய்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நிறுத்தி இருந்தார்.

    அப்போது ஓ.பன்னீர் செல்வத்தின் வேன் தலைமை கழகத்தை நெருங்கி வர அவரது ஆதரவாளர்கள் வேனுக்கு முன்பு கோஷமிட்டபடி வந்தனர். சில தொண்டர்கள் முன் கூட்டியே தலைமை கழகத்துக்கு வந்தனர்.

    இவர்களை பார்த்ததும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆட்களை சரமாரியாக தாக்கினார்கள். தடியால் ஓட ஓட விரட்டி அடித்தனர். இந்த மோதலில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. ரத்தம் சொட்ட சொட்ட அவர் பரிதாபமாக நின்றார்.

    இந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் வேன் தலைமை கழகம் அருகே வந்து விட்டது. அவருடன் வந்த தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்களை பதிலுக்கு தாக்க தொடங்கினார்கள். இரு தரப்பினரும் சரமாரியாக அடித்துக்கொண்டனர்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்கள் கொடி கம்பத்தை திருப்பி பிடித்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்களை அடித்து துவம்சம் செய்தனர். அடிதாங்க முடியாமல் எடப்பாடி பழனிசாமியின் ஆட்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கத்தொடங்கினார்கள். செருப்புகளையும் வீசி எறிந்தனர்.

    இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. அங்கு நின்றிருந்த ஒரு கார் அடித்து நொறுக்கப்பட்டது. அடிதடி கல்வீச்சு சம்பவம் 20 நிமிடமாக நடந்து கொண்டிருந்ததால் சண்டை முடியும் வரை ஓ.பன்னீர் செல்வம் தனது வேனிலேயே காத்திருந்தார். இவ்வளவு மோதல் நடந்து கொண்டிருந்தபோதும் அங்கு போலீஸ் இல்லை.

    இதனால் ஓ.பன்னீர் செல்வத்தின் வேனை சுற்றி நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அரண்போல் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர். எடப்பாடி பழனிசாமியின் ஆட்கள் அனைவரையும் அடித்து விரட்டியடித்த பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் வேன் தலைமை கழகத்திற்கு வந்தது.

    வேனில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் இறங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அவரது ஆதரவாளர்கள் தலைமை கழகத்தின் கதவு பூட்டை இரும்பு தடியால் உடைத்தனர். கதவை திறந்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த எடப்பாடி பழனிசாமியின் படத்தை தூக்கி வெளியே வீசினார்கள். அங்கு பேனரில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் படத்தை கிழித்து எறிந்தனர்.

    இந்த கபளீகரம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் போது ஓ.பன்னீர் செல்வம் தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்துக் கொண்டிருந்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள் புடை சூழ கையில் அ.தி.மு.க. கொடியேற்றி தலைமை கழகத்திற்குள் நுழைந்தார்.

    அவர் தலைமை கழகத்திற்குள் சென்றதும் தொண்டர்கள் சிலர் தலைமை கழக வளாகத்தில் எடப்பாடி பழனிசாமியின் படத்தை தீ வைத்து எரித்தனர். இவ்வளவு சம்பவங்களும் அரங்கேறி போர்க்களமான பிறகுதான் சினிமாவில் வருவது போல் கடைசி நேரத்தில் போலீசார் வந்து ரோட்டில் நின்றவர்களை தடியடி நடத்தி விரட்டினார்கள்.

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்போதுதான் பயங்கர சம்பவங்கள் அரங்கேறி இருப்பது அ.தி.மு.க. தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வெளியூர்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்றே சென்னை வந்து விட்டனர்.
    • தீர்ப்புக்கு பின்னரே அடுத்தக் கட்ட முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுக்க உள்ளதாக தகவல்

    அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் இன்று கூடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு நடக்கிறது.

    கடந்த முறை மண்டப அரங்கில் கூட்டம் நடந்தது. ஆனால், இந்த முறை மண்டபத்துக்கு முன்புறம் உள்ள காலியிடத்தில் பிரமாண்ட பந்தல் அமைத்து நடத்தப்படுகிறது. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப் பட்டுள்ளது. மேடையிலேயே 100 பேர் அமரும் வகையில் இருக்கை போடப்பட்டுள்ளது. கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

    நேற்று வரை 2,455 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்றே சென்னை வந்துவிட்டனர். அவர்கள் அனைவரும் கோயம்பேடு, மதுரவாயல் பகுதியில் உள்ள ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது பொதுக்குழு நடைபெறும் பகுதிக்கு சென்றுள்ளனர்.  

    இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட இருக்கிறது. அதன்படி, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட இருக்கிறார். அதேபோல், பொதுச்செயலாளரை தேர்தல் மூலம் தேர்வு செய்வதற்கான அறிவிப்பும் இந்த கூட்டத்திலேயே வெளியாக இருக்கிறது. 

    ஒற்றை தலைமையை எதிர்க்கும் ஓ.பன்னீர்செல்வம், பொருளாளர் என்ற முறையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனிடையே, அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது. இந்த தீர்ப்பை பொறுத்தே அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா? இல்லையா? என்பது தெரிய வரும். அதன்பின்னரே அடுத்தக்கட்ட முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுப்பார் எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    • அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்த விடாதபடி ஏதோ ஒரு திட்டத்துடன் ஓ.பன்னீர் செல்வம் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
    • இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியும், ஆத்திரமும் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை காலை 9.15 மணிக்கு செயற்குழு மற்றும் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர்.

    பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ள வானகரம் மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளும் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன.

    பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இன்று இரவுக்குள் சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்சி ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் 70-க்கும் மேற்பட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் பயணம் செய்யத் தொடங்கி விட்டனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைத்து அழைத்து வருகிறார்கள். கார் மற்றும் வேன்களில் ஒன்றாக சென்னை நோக்கி வருகிறார்கள்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை சென்னைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு தீவிரமாக உள்ளனர்.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பகலில் பயணம் மேற்கொண்டனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டல்களில் தங்குவதற்கும், உணவு சாப்பிடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை, திருச்சி, கோவை, சேலம், தர்மபுரி, நீலகிரி, தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பிற்பகலில் புறப்பட்டு இரவுக்குள் சென்னை வந்து சேருகிறார்கள். ஒரு சிலர் விமானத்திலும் பயணம் செய்து வருகின்றனர்.

    சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க.வினர் இரவு புறப்பட்டு வருகின்றனர். பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 2,650 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என்பதால் அவர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

    எம்.எல்.ஏ. விடுதியிலும், சென்னையில் உள்ள முக்கிய ஓட்டல்களிலும் அறைகள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு வருகின்றனர்.

    இதேபோல ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் மதுரை, தேனி, தஞ்சாவூர் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னையில் குவியத் தொடங்கி உள்ளனர். நாளை அதிகாலை 7 மணிக்குள் சென்னையில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை அதிகாலை தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கேற்ப அதிகாலையிலேயே அவர்கள் வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

    ஓ.பன்னீர்செல்வம் கடைசி நிமிடத்தில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து புதிய இடையூறு எதுவும் ஏற்படுத்த முயற்சி செய்யக்கூடும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். எனவே நாளை காலை ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் ஆலோசனை கூட்டத்தை சற்று கலக்கத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்த விடாதபடி ஏதோ ஒரு திட்டத்துடன் ஓ.பன்னீர் செல்வம் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியும், ஆத்திரமும் அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அணியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு குறைந்து வருகிறது. மிச்சம் இருக்கும் ஆதரவாளர்களும் ஓடி விடக்கூடாது என்பதற்காகத்தான் அவர்களை அதிகாலையிலேயே தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். வேறு ஒன்றும் இல்லை' என்றார்.

    ஓ.பன்னீர்செல்வம் இன்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். நாளை ஐகோர்ட்டு தீர்ப்பு சாதகமாக வராவிட்டால் உடனடியாக மேல்முறையீடு செய்ய முடியுமா? அதன் மூலம் அ.தி.மு.க. பொதுக்குழுவை தடுத்து நிறுத்த முடியுமா என்றெல்லாம் ஆலோசனை நடத்தினார்.

    இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு நாளை திட்டமிட்டபடி நடக்குமா? என்பது தொடர்ந்து எதிர்பார்ப்பும், கேள்விக்குறியும் நீடிக்கிறது.

    • ராமநாதபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பால்பாண்டியன் போலீசில் புகார் செய்தார்.
    • ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், நகர் செயலாளர் பால்பாண்டியன். மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார், கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், மருது பாண்டியன், ஜானகிராமன், கருப்பையா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நடந்த இந்த கூட்டத்தின்போது ராமநாதபுரம் நகர முன்னாள் தலைவர் கவிதா சசிகுமார் பேசிக் கொண்டிருந்தபோது, சிலர் கும்பலாக கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தனர். அவர்கள் "ஓ.பன்னீர்செல்வம் வாழ்க" என்று கோஷமிட்டபடி நாற்காலிகளை எடுத்து மேடையை நோக்கி வீசினர்.

    இதில் இடையர்வலசையைச் சேர்ந்த கிளை செயலாளர் மணிபாரதி (வயது 65), புத்தேந்தல் கிளை செயலாளர் சந்திரன் (50) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். மேலும் கூட்டம் நடைபெற்ற தனியார் மண்டபத்தின் முன்பு கிளைச் செயலாளர் சாதிக் பாட்சாவின் கார் கண்ணாடியை சிலர் அடித்து நொறுக்கினர்.

    இதுபற்றி ராமநாதபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பால்பாண்டியன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் மட்டுமின்றி மக்கள் மனதிலும் நிலவுகிறது.
    • தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருமோ என்று இருதரப்பினரும் திக், திக் மனநிலையுடன் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை சர்ச்சை எழுந்ததால் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினரும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினரும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களில் 97 சதவீதம் பேர் ஆதரவு உள்ளது. மேலும் கட்சி தொண்டர்களும் 99 பேர் சதவீதம் எடப்பாடி பழனிசாமியையே ஆதரிக்கின்றனர்.

    எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியதால் ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிகள் பறிக்கப்படுவது உறுதியானது. அந்த பதவிகளை விட்டுவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை ஐகோர்ட்டை நாடினார்.

    தேர்தல் ஆணையம் இதுவரை ஓ.பன்னீர் செல்வம் கொடுத்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை ஐகோர்ட்டில் அவர் தொடர்ந்த வழக்கும் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவால் தகர்க்கப்பட்டது.

    இதற்கிடையே தனக்கு எதிராக எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்தார். கடந்த 2 நாட்களாக அந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நடந்தது.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும், எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் வக்கீல்கள் கடும் வாதம் செய்தனர். நேற்று மாலை வரை அந்த வழக்கு விசாரணை நீடித்தது.

    இறுதியில் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார்.

    திங்கட்கிழமை (11-ந்தேதி) காலை 9.15 மணிக்கு அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஆனால் 9 மணிக்கு தான் தீர்ப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

    அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் மட்டுமின்றி மக்கள் மனதிலும் நிலவுகிறது. தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருமோ என்று இருதரப்பினரும் திக், திக் மனநிலையுடன் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

    இதற்கிடையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் திட்டமிட்டபடி திங்கட்கிழமை காலை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்திவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

    வானகரம் ஸ்ரீ வாரு திருமண மண்டப வளாகத்தில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில் 90 சதவீதம் பணிகள் நடந்து முடிந்து விட்டன. மீதம் உள்ள 10 சதவீத பணிகளும் நாளை முடிந்து விடும் என்று தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடக்குமா என்ற சந்தேகம் பொதுக்குழு உறுப்பினர்களிடையே எழுந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அணியின் மூத்த தலைவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.

    அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களை சென்னைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யபபட்டுள்ளன. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் சென்னைக்கு வந்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் உற்சாகத்துடன் சென்னைக்கு வர தொடங்கி விட்டனர்.

    பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கியூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. பொதுக்குழு கூட்டத்துக்கு வருபவர்கள் எங்கெங்கு தங்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு உள்ளன. எடப்பாடி பழனிசாமி அணியினர் அனைத்து வகையிலும் முழு ஏற்பாடுகளும் செய்து தயார் நிலையில் உள்ளனர்.

    கோர்ட்டு தீர்ப்பு திங்கட்கிழமை காலை அறிவிக்கப்பட்டதும் அதற்கேற்ப செயல்பட மூத்த தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பு நிலவுகிறது.

    எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் தங்களுக்கு சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு வரும் என்று 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இது குறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் உள்ளது. அவரது முட்டுக்கட்டைகளால் கட்சிப் பணிகள் தேங்கிவிட்டன. கட்சி நிர்வாகிகளுக்கு முறையாக சம்பளம் கூட கொடுக்க முடியவில்லை.

    பாராளுமன்ற மேல்சபை தேர்தலின் போது அ.தி.மு.க. வேட்பாளர்களை ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்ய முடியாமல் போனதற்கு அவர்தான் காரணமாகும். அவரது சுயநலத்தால் அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறார். அவரது மகன் தி.மு.க. தலைவரை சந்தித்து பேசுகிறார். இதையெல்லாம் நாங்கள் எப்படி ஏற்க முடியும்.

    ஓ.பன்னீர்செல்வத்தை சரியான வழியில் கொண்டு வர அ.தி.மு.க. தலைவர்கள் அனைவரும் பேசி விட்டோம். அவர் சுயநலத்துடன் மட்டுமே இருக்கிறார். கட்சி நலனை பார்க்கவே இல்லை.

    எனவே இனி அவருடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது. ஒற்றை தலைமைக்கு அ.தி.மு.க. உறுப்பினர்களில் 2432 பேரின் ஆதரவு இருக்கிறது. எனவே கட்சி நலனுக்கான முடிவுகள் உறுதியாக எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.முக.வில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படவில்லை. இதனால் அந்த 2 பதவிகளும் காலாவதியாகி விட்டது.
    • ஓ.பன்னீர்செல்வம் கட்சி விதிகளை கடை பிடிப்பதில் உண்மையானவராக இருந்திருந்தால் அதை அவர் பொதுக்குழு கூட்டத்தில் காட்டி இருக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்ததும், தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள ஓ.பன்னீர்செல்வம் போராடி வருகிறார். தேர்தல் ஆணையம் மற்றும் கோர்ட்டுகளை அவர் நாடினார்.

    அவை அனைத்துக்கும் எடப்பாடி பழனிசாமி அணியினர் உடனுக்குடன் விளக்கங்கள் கொடுத்து பதிலடி அளிக்கிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் தேர்தல் ஆணையத்திடம் 40 பக்க விரிவான விளக்க மனு ஒன்றை எடப்பாடி பழனிசாமி அணியினர் அளித்தனர்.

    அந்த 40 பக்க மனுவில் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் பற்றி எடப்பாடி பழனிசாமி அணியினர் மிக நீண்ட விளக்கம் அளித்துள்ளனர். தற்போதுதான் அந்த தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல் கமிஷனில் அளித்துள்ள மனுவில் எடப்பாடி பழனிசாமி கூ றி இருப்பதாவது:-

    அ.தி.முக. ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் கட்சி தொண்டர்களுக்கு ஏராளமான தொல்லைகளை கொடுத்து வந்தார். தனது பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற சுயநலத்துடன் பொதுக்குழு உறுப்பினர்களையும் துன்புறுத்தினார்.

    அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கட்சி விரோத செயல்களாகவே உள்ளன. கட்சி விதிகளை மீறுவதற்கு அவருக்கு தார்மீக உரிமையும் கிடையாது. முதலில் அவர் பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.

    அது நடக்காமல் போகவே போலீஸ் மூலம் பொதுக்குழுவுக்கு இடையூறு ஏற்படுத்தினார். அதன்பிறகும் பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய மாநகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதினார்.

    இவற்றில் பலன் கிடைக்காததால் தன்னை பற்றி சுய விளம்பரம் செய்து கொண்டார். அதோடு தனது ஆதரவாளர்களை கட்சி நலனுக்கு எதிராக தூண்டிவிட்டார். அவர்கள் மூலம் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக செயல்பட வைத்தார்.

    இவை அனைத்துமே அ.தி.மு.க. கட்சி விதிகளுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் ஆகும். இதற்காக அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம்.

    அ.தி.முக.வில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படவில்லை. இதனால் அந்த 2 பதவிகளும் காலாவதியாகி விட்டது.

    ஓ.பன்னீர்செல்வம் கட்சி விதிகளை கடை பிடிப்பதில் உண்மையானவராக இருந்திருந்தால் அதை அவர் பொதுக்குழு கூட்டத்தில் காட்டி இருக்க வேண்டும். அதற்கு மாறாக 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று கோர்ட்டில் போய் மனு கொடுத்தார். இதன் மூலம் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவருக்கு அவராகவே தடை விதித்து கொண்டுள்ளார் என்பதுதான் உண்மை.

    ஆனால் உண்மையை மறைத்து ஒருதலைபட்சமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி தந்திருக்கிறார். அவரது கடிதம் கட்சி சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே அ.தி.மு.க. தொடர்பாக இனி அவரிடம் தேர்தல் ஆணையம் எந்த தகவல் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.

    அதுபோல அவருக்கு ஆதரவாக யார் மனு கொடுத்தாலும் அவர்களுக்கும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அவர் செல்வாக்கை இழந்துவிட்டார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் அவருக்கு எதிராக இருந்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் கட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நெருக்கடியான காலக்கட்டத்தில் கட்சி விதி 20ஏ (7) பிரிவின்படி நிர்வாகிகள் கட்சியை வழிநடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படிதான் கட்சி வழி நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் நிலை என்னவாகும்? என்பது தான் கேள்வியாக உள்ளது.
    • ஓ.பன்னீர் செல்வத்துடன் இனி இணைந்து செயல்பட முடியாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டதால் ஓ.பன்னீர் செல்வத்தின் பொருளாளர் பதவியும் பறிக்கப்படும் என தெரிகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை இருந்தால்தான் கட்சியை திறம்பட வழி நடத்தி செல்ல முடியும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.

    இதற்கேற்ப எடப்பாடி பழனிசாமி 'காய்' நகர்த்தி வருகிறார். அவரது தலைமையை ஏற்க கட்சியின் பெரும்பாலான கட்சித் தொண்டர்கள் சம்மதம் தெரிவித்து வருகின்றனர்.

    அ.தி.மு.க.வின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதால் ஓ.பன்னீர் செல்வம் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து வருகிறார்.

    ஓ.பன்னீர் செல்வத்துடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 2 எம்.எல்.ஏ.க்களும், ஜே.சி.டி.பிரபாகர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட ஒரு சிலர்தான் உள்ளனர்.

    இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் 11-ந் தேதி நடைபெற்றால் அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிடும்.

    இந்த பொதுக்குழுவில் அவரை தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்த பிறகு 6 மாத காலத்தில் மீண்டும் பொதுக்குழுவை கூட்டி முறைப்படி நிரந்தர பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் நிலை என்னவாகும்? என்பது தான் கேள்வியாக உள்ளது.

    ஓ.பன்னீர் செல்வத்துடன் இனி இணைந்து செயல்பட முடியாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டதால் ஓ.பன்னீர் செல்வத்தின் பொருளாளர் பதவியும் பறிக்கப்படும் என தெரிகிறது.

    இந்த சூழலில் அவர் அ.தி.மு.க.வில் நீடிப்பாரா? அல்லது தேர்தல் கமிஷன் மற்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போடுவாரா? என்பது கேள்விக்குறியாகும்.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் ஓரம் கட்டப்பட்டால் அவரது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவி என்ன ஆகும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இனி முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிடுவார்.

    அதன் அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை இனி வேறு ஒரு மூத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொடுக்க முடிவெடுத்து விடுவார். இதற்கான கடிதத்தையும், சபாநாயகரிடம் வழங்கி விடுவார். அவ்வாறு கடிதம் கொடுக்கும் பட்சத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் துணைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டு விடும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ. ஒருவர் கூறுகையில், சட்டசபையில் சபாநாயகருக்கு அதிக அதிகாரம் உள்ளதால் அவர் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம்.

    எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவரையும் அ.தி.மு.க. என்றே கருதி அதன் அடிப்படையில் சட்டசபையில் அவருக்கு பேச அனுமதி கொடுக்கலாம்.

    ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் தனி அணியாக செயல்படவும் வாய்ப்பு வழங்கலாம். அ.தி.மு.க. கொடுக்கும் கடிதத்தை பொறுத்து சபாநாயகர் முடிவெடுப்பார்.

    எப்படி இருந்தாலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 11-ந் தேதிக்கு பிறகு சிக்கல்தான் உருவாகும். அதை அவர் சமாளித்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியை எப்படியாவது பறித்து விடவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
    • அப்போதும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை பிரச்சினை ஏற்பட்டால் அதனால் பொதுமக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    அ.தி.மு.க. முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ.கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கை தொடர்ந்தார்.

    அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

    வருகிற 11-ந்தேதி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் ரூ.1000 கோடி செலவு செய்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியை எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிர்க்கவோ, மறுக்கவோ இல்லை.

    இவ்வளவு பெரிய தொகை அவர்கள் ஆட்சியில் இருந்தபோது சுருட்டியதாகத்தன் இருக்கும், அதாவது, மக்கள் வரிப்பணத்தை அவர்கள் சுருட்டியுள்ளனர். அது மட்டுமல்ல வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியை எப்படியாவது பறித்து விடவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முயற்சிக்கின்றனர்.

    அப்போதும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை பிரச்சினை ஏற்பட்டால் அதனால் பொதுமக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும். அதனால், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடந்த மாதம் 28-ந்தேதி மனு அனுப்பினேன்.

    இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து அ.தி.மு.க.,வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்து உள்ளதால், வழக்கை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் வழக்குச் செலவு (அபராதம்) விதிக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு அளித்துள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு எண்ணிக்கை 2,442 ஆக உயர்ந்தது.
    • ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழுவை திட்டமிட்ட படி 11-ந்தேதி நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் பொதுக்குழுவில் பங்கேற்க தயாராகி வருகிறார்கள்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்கள்.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீடுகளில் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். எடப்பாடி பழனிசாமி வீட்டில் கே.பி.முனுசாமி உள்ள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். மொத்தம் உள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,441 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் அவரை சந்தித்து ஆதரவு அளித்தார்.

    தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தொகுதி பழனி செட்டிப்பட்டி பேரூராட்சியை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து ஆதரவை தெரிவித்தார். இதனால் அவரது ஆதரவு எண்ணிக்கை 2,442 ஆக உயர்ந்தது.

    இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். வழக்கு விசாரணை இன்று மாலையில் வரும் நிலையில் அடுத்தக்கட்ட நிகழ்வு குறித்து ஆலோசித்தனர்.

    • அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தரப்பினர் புகார் அளித்தனர்.
    • இதையடுத்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை, ஜூலை.7-

    சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை யில் அ.தி.மு.க. தலைமை கழகம் உள்ளது. அ.தி.மு.க. வில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கி உள்ள நிலையில் எடப் பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இடையே உச்சக்கட்ட மோதல் வலுத்து வருகிறது. கட்சியிலும் குழப்பம் நீடிக் கிறது.

    எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்த உள்ள நிலையில் அதற்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், பொதுக்குழு வுக்கு அனுமதி அளிக்கக் கோரி எடப்பாடி பழனி சாமி தரப்பினரும் மாறி மாறி கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இரு அணிகளிடையே மோதல் ஏற்படுவதை தடுக்க மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் தரப்பினர் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கூடுதல் பாது காப்பு வழங்க கோரி ராயப் பேட்டை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து நேற்று காலை முதல் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமை யில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக் காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
    • இதன் மூலம் நாளை நடைபெற இருந்த அவமதிப்பு வழக்கு விசாரணை நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியுள்ள பரபரப்பான சூழலில் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

    இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 2 நீதிபதிகள் அளித்த உத்தரவுக்கு எதிராக அவைத் தலைவரை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இது கோர்ட்டு அவமதிப்பு என்றும், சட்ட விரோதமாக பொதுக்குழு நடத்தப்பட்டுள்ளது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த வழக்கு விசாரணை நாளை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் கோர்ட்டு ஒரு எல்லைக்கு மேல் தலையிட முடியாது என்றும், பொதுக்குழு விவகாரத்தில் கோர்ட்டு தலையிட்டு உத்தரவு பிறப்பித்தது கட்சியின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் வாதிட்டனர்.

    எனவே இதில் நீதிமன்ற அவமதிப்பு ஏதும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது. நாளை நடைபெற உள்ள அவமதிப்பு வழக்குக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கும் தடை விதித்துள்ளது. இதன் மூலம் நாளை நடைபெற இருந்த அவமதிப்பு வழக்கு விசாரணை நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பொதுக்குழுவில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பமாகும் என்றும் இது எப்படி கோர்ட்டு அவமதிப்பாகும் என்றும் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு 2 நீதிபதிகள், பொதுக்குழு தொடர்பாக பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்தும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுகள் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ×