search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி பறிபோகும்?
    X

    சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி பறிபோகும்?

    • எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் நிலை என்னவாகும்? என்பது தான் கேள்வியாக உள்ளது.
    • ஓ.பன்னீர் செல்வத்துடன் இனி இணைந்து செயல்பட முடியாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டதால் ஓ.பன்னீர் செல்வத்தின் பொருளாளர் பதவியும் பறிக்கப்படும் என தெரிகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை இருந்தால்தான் கட்சியை திறம்பட வழி நடத்தி செல்ல முடியும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.

    இதற்கேற்ப எடப்பாடி பழனிசாமி 'காய்' நகர்த்தி வருகிறார். அவரது தலைமையை ஏற்க கட்சியின் பெரும்பாலான கட்சித் தொண்டர்கள் சம்மதம் தெரிவித்து வருகின்றனர்.

    அ.தி.மு.க.வின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதால் ஓ.பன்னீர் செல்வம் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து வருகிறார்.

    ஓ.பன்னீர் செல்வத்துடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 2 எம்.எல்.ஏ.க்களும், ஜே.சி.டி.பிரபாகர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட ஒரு சிலர்தான் உள்ளனர்.

    இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் 11-ந் தேதி நடைபெற்றால் அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிடும்.

    இந்த பொதுக்குழுவில் அவரை தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்த பிறகு 6 மாத காலத்தில் மீண்டும் பொதுக்குழுவை கூட்டி முறைப்படி நிரந்தர பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் நிலை என்னவாகும்? என்பது தான் கேள்வியாக உள்ளது.

    ஓ.பன்னீர் செல்வத்துடன் இனி இணைந்து செயல்பட முடியாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டதால் ஓ.பன்னீர் செல்வத்தின் பொருளாளர் பதவியும் பறிக்கப்படும் என தெரிகிறது.

    இந்த சூழலில் அவர் அ.தி.மு.க.வில் நீடிப்பாரா? அல்லது தேர்தல் கமிஷன் மற்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போடுவாரா? என்பது கேள்விக்குறியாகும்.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் ஓரம் கட்டப்பட்டால் அவரது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவி என்ன ஆகும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இனி முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிடுவார்.

    அதன் அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை இனி வேறு ஒரு மூத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொடுக்க முடிவெடுத்து விடுவார். இதற்கான கடிதத்தையும், சபாநாயகரிடம் வழங்கி விடுவார். அவ்வாறு கடிதம் கொடுக்கும் பட்சத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் துணைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டு விடும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ. ஒருவர் கூறுகையில், சட்டசபையில் சபாநாயகருக்கு அதிக அதிகாரம் உள்ளதால் அவர் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம்.

    எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவரையும் அ.தி.மு.க. என்றே கருதி அதன் அடிப்படையில் சட்டசபையில் அவருக்கு பேச அனுமதி கொடுக்கலாம்.

    ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் தனி அணியாக செயல்படவும் வாய்ப்பு வழங்கலாம். அ.தி.மு.க. கொடுக்கும் கடிதத்தை பொறுத்து சபாநாயகர் முடிவெடுப்பார்.

    எப்படி இருந்தாலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 11-ந் தேதிக்கு பிறகு சிக்கல்தான் உருவாகும். அதை அவர் சமாளித்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×