என் மலர்

  தமிழ்நாடு

  அ.தி.மு.க. பொதுக்குழு நாளை நடக்குமா? எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இன்று சென்னை வந்தனர்
  X

  அ.தி.மு.க. பொதுக்குழு நாளை நடக்குமா? எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இன்று சென்னை வந்தனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்த விடாதபடி ஏதோ ஒரு திட்டத்துடன் ஓ.பன்னீர் செல்வம் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
  • இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியும், ஆத்திரமும் அதிகரித்துள்ளது.

  சென்னை:

  அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை காலை 9.15 மணிக்கு செயற்குழு மற்றும் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர்.

  பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ள வானகரம் மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளும் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன.

  பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இன்று இரவுக்குள் சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்சி ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் 70-க்கும் மேற்பட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் பயணம் செய்யத் தொடங்கி விட்டனர்.

  ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைத்து அழைத்து வருகிறார்கள். கார் மற்றும் வேன்களில் ஒன்றாக சென்னை நோக்கி வருகிறார்கள்.

  சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை சென்னைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு தீவிரமாக உள்ளனர்.

  கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பகலில் பயணம் மேற்கொண்டனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டல்களில் தங்குவதற்கும், உணவு சாப்பிடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  மதுரை, திருச்சி, கோவை, சேலம், தர்மபுரி, நீலகிரி, தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பிற்பகலில் புறப்பட்டு இரவுக்குள் சென்னை வந்து சேருகிறார்கள். ஒரு சிலர் விமானத்திலும் பயணம் செய்து வருகின்றனர்.

  சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க.வினர் இரவு புறப்பட்டு வருகின்றனர். பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 2,650 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என்பதால் அவர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

  எம்.எல்.ஏ. விடுதியிலும், சென்னையில் உள்ள முக்கிய ஓட்டல்களிலும் அறைகள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு வருகின்றனர்.

  இதேபோல ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் மதுரை, தேனி, தஞ்சாவூர் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னையில் குவியத் தொடங்கி உள்ளனர். நாளை அதிகாலை 7 மணிக்குள் சென்னையில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  நாளை அதிகாலை தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கேற்ப அதிகாலையிலேயே அவர்கள் வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

  ஓ.பன்னீர்செல்வம் கடைசி நிமிடத்தில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து புதிய இடையூறு எதுவும் ஏற்படுத்த முயற்சி செய்யக்கூடும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். எனவே நாளை காலை ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் ஆலோசனை கூட்டத்தை சற்று கலக்கத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

  அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்த விடாதபடி ஏதோ ஒரு திட்டத்துடன் ஓ.பன்னீர் செல்வம் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியும், ஆத்திரமும் அதிகரித்துள்ளது.

  இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அணியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு குறைந்து வருகிறது. மிச்சம் இருக்கும் ஆதரவாளர்களும் ஓடி விடக்கூடாது என்பதற்காகத்தான் அவர்களை அதிகாலையிலேயே தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். வேறு ஒன்றும் இல்லை' என்றார்.

  ஓ.பன்னீர்செல்வம் இன்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். நாளை ஐகோர்ட்டு தீர்ப்பு சாதகமாக வராவிட்டால் உடனடியாக மேல்முறையீடு செய்ய முடியுமா? அதன் மூலம் அ.தி.மு.க. பொதுக்குழுவை தடுத்து நிறுத்த முடியுமா என்றெல்லாம் ஆலோசனை நடத்தினார்.

  இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு நாளை திட்டமிட்டபடி நடக்குமா? என்பது தொடர்ந்து எதிர்பார்ப்பும், கேள்விக்குறியும் நீடிக்கிறது.

  Next Story
  ×