search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    போர்க்களமாக மாறிய அ.தி.மு.க. தலைமை கழகம்- போலீஸ் குவிப்பு

    • ஓ.பன்னீர்செல்வம் தலைமை கழகத்துக்கு வருவதை முன்கூட்டியே அறிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு பூட்டு போடுமாறு தலைமை கழக ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
    • அதன்படி அ.தி.மு.க. தலைமை கழகம் பூட்டப்பட்டிருந்தது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் இன்று காலையில் நடைபெற்ற அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க. தலைமை கழகத்தை கைப்பற்றினார். இதற்காக நேற்றே அவர் பயங்கர வியூகம் வகுத்திருந்தார்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தனது ஆதரவாளர்களை சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி காலை 7 மணிக்கெல்லாம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் அடுக்குமாடி குடியிருப்பு முன்பு வந்து அவர்கள் திரண்டிருந்தனர்.

    அம்மாவின் வாரிசு ஓ.பி.எஸ். வாழ்க என்று கோஷமிட்டபடி கொடியேந்தியபடி வந்திருந்தனர். வைத்தி லிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் வந்ததும் காலை 8 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

    தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடி தனது பிரசார வேனில் ஏறி அ.தி.மு.க. தலைமை கழகம் புறப்பட்டார். நூற்றுக்கணக்கான தொண்டர்களும் அவரது வேனை பின் தொடர்ந்தனர்.

    தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தலைமை கழகத்துக்கு வருவதை முன்கூட்டியே அறிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு பூட்டு போடுமாறு தலைமை கழக ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி அ.தி.மு.க. தலைமை கழகம் பூட்டப்பட்டிருந்தது.

    தலைமை கழகத்துக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி சாலையில் தனது ஆதரவாளர்களை நிறுத்தி இருந்தார். மாவட்ட செயலாளரான ஆதிராஜாராம் இதற்கான ஏற்பாடுகளை செய்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நிறுத்தி இருந்தார்.

    அப்போது ஓ.பன்னீர் செல்வத்தின் வேன் தலைமை கழகத்தை நெருங்கி வர அவரது ஆதரவாளர்கள் வேனுக்கு முன்பு கோஷமிட்டபடி வந்தனர். சில தொண்டர்கள் முன் கூட்டியே தலைமை கழகத்துக்கு வந்தனர்.

    இவர்களை பார்த்ததும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆட்களை சரமாரியாக தாக்கினார்கள். தடியால் ஓட ஓட விரட்டி அடித்தனர். இந்த மோதலில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. ரத்தம் சொட்ட சொட்ட அவர் பரிதாபமாக நின்றார்.

    இந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் வேன் தலைமை கழகம் அருகே வந்து விட்டது. அவருடன் வந்த தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்களை பதிலுக்கு தாக்க தொடங்கினார்கள். இரு தரப்பினரும் சரமாரியாக அடித்துக்கொண்டனர்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்கள் கொடி கம்பத்தை திருப்பி பிடித்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்களை அடித்து துவம்சம் செய்தனர். அடிதாங்க முடியாமல் எடப்பாடி பழனிசாமியின் ஆட்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கத்தொடங்கினார்கள். செருப்புகளையும் வீசி எறிந்தனர்.

    இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. அங்கு நின்றிருந்த ஒரு கார் அடித்து நொறுக்கப்பட்டது. அடிதடி கல்வீச்சு சம்பவம் 20 நிமிடமாக நடந்து கொண்டிருந்ததால் சண்டை முடியும் வரை ஓ.பன்னீர் செல்வம் தனது வேனிலேயே காத்திருந்தார். இவ்வளவு மோதல் நடந்து கொண்டிருந்தபோதும் அங்கு போலீஸ் இல்லை.

    இதனால் ஓ.பன்னீர் செல்வத்தின் வேனை சுற்றி நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அரண்போல் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர். எடப்பாடி பழனிசாமியின் ஆட்கள் அனைவரையும் அடித்து விரட்டியடித்த பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் வேன் தலைமை கழகத்திற்கு வந்தது.

    வேனில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் இறங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அவரது ஆதரவாளர்கள் தலைமை கழகத்தின் கதவு பூட்டை இரும்பு தடியால் உடைத்தனர். கதவை திறந்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த எடப்பாடி பழனிசாமியின் படத்தை தூக்கி வெளியே வீசினார்கள். அங்கு பேனரில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் படத்தை கிழித்து எறிந்தனர்.

    இந்த கபளீகரம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் போது ஓ.பன்னீர் செல்வம் தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்துக் கொண்டிருந்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள் புடை சூழ கையில் அ.தி.மு.க. கொடியேற்றி தலைமை கழகத்திற்குள் நுழைந்தார்.

    அவர் தலைமை கழகத்திற்குள் சென்றதும் தொண்டர்கள் சிலர் தலைமை கழக வளாகத்தில் எடப்பாடி பழனிசாமியின் படத்தை தீ வைத்து எரித்தனர். இவ்வளவு சம்பவங்களும் அரங்கேறி போர்க்களமான பிறகுதான் சினிமாவில் வருவது போல் கடைசி நேரத்தில் போலீசார் வந்து ரோட்டில் நின்றவர்களை தடியடி நடத்தி விரட்டினார்கள்.

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்போதுதான் பயங்கர சம்பவங்கள் அரங்கேறி இருப்பது அ.தி.மு.க. தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×