search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உங்களைத் தேடி உங்கள் ஊரில்"

    • உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.
    • பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசின் சேவைகள் மற்றும் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடையவும், அவை பொதுமக்களுக்கு முறையாக சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மக்களை நாடி, மக்கள் குறைகேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு எந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்"என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார்.

    (4-வது புதன்கிழமைகளில்) ஒருநாள் வட்ட அளவில் தங்கி ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்க வேண்டும். மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தடையின்றி மக்களை சென்றடை வதை உறுதி செய்ய வேண்டும்.

    ஆய்வு செய்யப்படும் வட்டத்தில் கலெக்டர்கள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தங்கி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கப்பட்டது.

    சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட கலெக்டர்களும் ஒவ்வொரு வட்டத்தை தேர்வு செய்து இன்று காலை 9 மணி முதல் கிராமங்களில் அதிகாரிகளுடன் முகாமிட்டனர். அவர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி, பள்ளிகள், அரசு விடுதிகள், பூங்கா, சமூக நல மையங்கள், பஸ் நிலையம், பொது கழிப்பிடம், போக்குவரத்து சேவை, குடிநீர் வசதி, அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்து திட்டப்பணிகள், பொது மக்களின் குறைகள் குறித்து கேட்டறிந்து மனுக்கள் பெற்றனர்.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்படி மாவட்ட கலெக்டர்கள் காஞ்சிபுரம், திருப்போரூர், ஊத்துக்கோட்டை வட்டங்களில் முகாமிட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் காலை 9 மணியளவில் வந்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் புதிய திட்டம் குறித்தும் அதனை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து இ-சேவை மையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேசன் கடைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள், சத்துணவு மையங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையம், நகர்ப்புற கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாய கிடங்கு, பள்ளிகளை பார்வையிட்டார்.

    பின்னர் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஊராட்சி அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்களில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தார். அப்போது அலுவலகங்களில் இருந்த பொதுமக்களிடம் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஆய்வின் போது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தெரிவித்த கருத்துக்களின் மீது ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களுடன் கலந்துரையாடி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    பின்னர் அரசு விடுதிகள், பூங்கா, அறிவுசார் மையம், சமூக நலத்துறையின் மூலம் பதிவு செய்யப்பட்ட மையங்கள், பஸ் நிலையம், பொது கழிப்பிடம், பஸ் போக்கு வரத்து, அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வு செய்து இரவு தங்குகிறார்.

    நாளை காலை 6 மணி முதல் காலை 8.30 மணி வரை மீண்டும் ஆய்வுப் பணி நடக்கிறது. திடக்கழிவு மேலாண்மை, சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், குடிநீர் வசதி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை வட்டத்தில் கலெக்டர் பிரபு சங்கர் தங்கி ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். காலை 9 மணி முதல் கச்சூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அம்மம்பாக்கம் கிராமம், மதுரா சீத்தஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, அங்கன்வாடி மையம், பெருஞ்சேரியில் உள்ள ரேசன் கடை, எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், பெரியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊத்துக்கோட்டையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இதைத் தொடர்ந்து மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை அரசு அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் மீது ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடை பெற்றது. பின்னர் பொது மக்களிடம் கலந்துரையாடி பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறப்பட்டது.

    மாலை 6.30 மணிக்கு ஊத்துக்கோட்டையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர்கள் விடுதி, பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடைபெறுகிறது. பின்னர் இரவு அம்மம் பாக்கம் கிராமத்தில் கலெக்டர் பிரபுசங்கர் தங்குகிறார். நாளை (1-ந்தேதி) மீண்டும் ஆய்வு பணியை தொடங்கும் கலெக்டர் பிரபுசங்கர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி சிட்ரப்பாக்கத்தில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம், கச்சூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்கிறார்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்று உள்ள கலெக்டர் அருண்ராஜ் காலை 9 மணி அளவில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் அனைத்து துறை அதிகாரிகளுடன் திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள், சத்துணவு கூடங்களில் ஆய்வு செய்தார்.

    இதைதொடர்ந்து கேளம்பாக்கம், அருங்குன்றம், ஒரகடம், ஆமூர், கீழூர் ஆகிய கிராமங்களில் வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற் கொண்டு கிராமமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கோவளம், கே.ஆர்.குப்பம் ஊராட்சிகளில் ஊராட்சி பதிவேடுகளை ஆய்வு செய்தார். நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை பார்வையிட்டார்.

    ஆலத்தூர் கிராமத்தில் பயனாளிகளுக்கு பட்டாக்களை கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். பின்னர் மதியம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார்.

    இன்று மாலை தண்டலம் மயிலை, நாவலூர், கீழூர், ஆமூர் ஊராட்சிக்குட்பட்ட பல கிராமங்களில் தெரு விளக்குகளின் செயல்பாடுகள் மற்றும் பூங்காக்கள், பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். இரவு திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் கலெக்டர் அருண்ராஜ் தங்குகிறார்.

    நாளை காலை செம்பாக்கம், நெல்லிக்குப்பம், கொட்டமேடு, முட்டுக்காடு, கோவளம் வடநெம்மேலி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம், தூய்மை பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து கலெக்டர் அருண் ராஜ் ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் ஆலத்தூர், பையனூர், தண்டலம், மடையத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

    உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தை பொது மக்கள் வரவேற்று உள்ளனர். மாவட்ட கலெக்டர் முதல் அதிகாரிகள் அனைவரும் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே வந்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதால் இந்த திட்டத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • ‘மக்களிடம் செல்’ என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் ஆகும்.
    • தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட கலெக்டர்களை சென்னைக்கு அழைத்து பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் ஒரு நாள் கிராமங்களில் தங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

    "அரசு அறிவித்துள்ள திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று அடைகிறதா? பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாகக் கிடைக்கின்றதா? என்பதை களத்திற்கு நேரடியாகச் சென்று, ஆய்வில் ஈடுபட்டு, அரசு எந்திரத்தை முடுக்கி விட்டு, கள அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் களத்தில் முதல்வர் திட்டம்.

    இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் கூறுகையில்,

    "மக்கள் அரசு நலத்திட்டங்களின் முழுப்பலனையும் அடைவதிலுள்ள இடர்ப்பாடுகளைக் களைய வேண்டியதும் அரசு எந்திரத்தின் முதன்மையான பணி. அரசு இயந்திரம், கடமை, கண்ணியம், கட்டுப் பாட்டுடன், மக்களைத் தேடிச் சென்று பணியாற்ற வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

    மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வருபவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என்றும் ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கும் மக்களும் தங்கள் கிராம முன்னேற்றத்துக்கும் அரசு தொடர்பாக தனக்கிருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வை நாடிச் செல்லும் நபர் மாவட்ட ஆட்சித் தலைவர் தான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

    "தங்கள் அருகில் இருக்கும் பிற அதிகாரிகள் அன்புக்குரியவராக இருப்பினும், மக்களின் மகத்தான அன்புக்கும் ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்களாக மாவட்ட ஆட்சியர்களைப் பார்க்கிறார்கள் என்று தெரிவித்திருந்த முதலமைச்சர் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர்," என்று தெரிவித்து இருந்தார்.

    இது, 'மக்களிடம் செல்' என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் ஆகும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும், ஒரு நாள் வட்ட அளவில் தங்கி ஆய்வில் ஈடுபட வேண்டும். அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறை களை கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தங்கு தடையின்றி மக்களிடம் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

    நானும், அரசு எந்திரமும் களத்திற்கு வருகிறோம். குறைகளை கேட்டு, மக்களின் கவலையை போக்கி, மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்று தெரிவித்திருந்தது.

    அதன் அடிப்படையில் நாளை முதல் மாவட்ட கலெக்டர்கள் வட்ட அளவில் நேரடியாக கிராமத்துக்குச் சென்று 24 மணி நேரம் தங்கியிருந்து மக்களின் கருத்துக்களை கேட்டு அறிய உள்ளனர்.

    இது தொடர்பாக இன்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட கலெக்டர்களை சென்னைக்கு அழைத்து பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

    ×