search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ஒற்றுமை யாத்திரை"

    • நாளை (சனிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
    • 19-ந்தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

    எர்ணாகுளம் :

    காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடித்து வரும் நிலையில், கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    அதன்படி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை நேற்று முறைப்படி வெளியிடப்பட்டது. அதன்படி, நாளை (சனிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

    இதில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 19-ந்தேதி முடிவு அறிவிக்கப்படும்.

    இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேநேரம் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கக்கோரி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்சி பிரிவுகள் சார்பில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டன. எனினும் அவர் தலைவர் பதவியை ஏற்க மறுத்து வருகிறார்.

    இந்த நிலையில் கேரளாவில் இந்திய ஒற்றுமைப்பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்தும், தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடுவேனா, இல்லையா என்பது, நான் செய்து கொண்டிருக்கும் பணியை திசை திருப்பும் முயற்சி ஆகும்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். தேர்தலில் போட்டியிட விரும்பும் எந்த காங்கிரஸ் தலைவருக்கும் அதற்கான உரிமை உள்ளது. இது மோசான விஷயம் என நான் நினைக்கவில்லை. இது நல்ல விஷயம்தான்.

    தனக்கான தலைவரை தேர்தல் மூலம் தேர்வு செய்யும் ஒரே கட்சி, காங்கிரஸ்தான். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். இது என்னை உற்சாகப்படுத்துகிறது.

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் எப்போது நடக்கும்? என எல்லாரும் கேட்கிறார்கள். ஆனால் இதே கேள்வியை பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., இடதுசாரிகள், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளிடம் கேட்கமாட்டீர்கள்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு நான் கூறுவது, நீங்கள் ஒரு முடிவை எடுத்திருக்கிறீர்கள், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு. இது இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பார்வையை வரையறுக்கும் ஒரு நிலைப்பாடு.

    காங்கிரஸ் தலைவர் பதவி என்பது வெறும் ஒரு அமைப்பு பதவி அல்ல, மாறாக இது ஒரு சித்தாந்த பதவி. இது ஒரு நம்பிக்கை அமைப்பு.

    காங்கிரஸ் தலைவராக யார் வந்தாலும் அவர் ஒரு நம்பிக்கை அமைப்பையும், இந்தியாவின் பார்வையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    காங்கிரசில் 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற முடிவை ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, 'உதய்ப்பூர் சிந்தனையாளர் முகாமில் எடுக்கப்பட்ட அந்த உறுதிப்பாடு (ஒருவருக்கு ஒரு பதவி) கடைப்பிடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்' என்று தெரிவித்தார்.

    22 ஆண்டுகளுக்கு பிறகு தலைவர் பதவிக்கு போட்டி நடக்கிறது.

    2000-ம் ஆண்டு, தலைவர் பதவிக்கு சோனியாகாந்தியும், ஜிதேந்திர பிரசாதாவும் போட்டியிட்டனர். அதில் சோனியாகாந்தி வெற்றி பெற்றார்.

    அதற்கு முன்பு, 1997-ம் ஆண்டும், காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடந்தது. அப்போது, சரத்பவார், ராஜேஷ் பைலட் ஆகியோரை தோற்கடித்து சீதாராம் கேசரி தலைவர் ஆனார்.

    ராகுல்காந்தி தலைவராக இருந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளை தவிர, 1999-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து சோனியாகாந்தி தலைவராக இருக்கிறார். காங்கிரசில் நீண்ட காலம் தலைவராக இருப்பவர் அவரே ஆவார்.

    • காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடந்து வருகிறது.
    • இந்த யாத்திரையால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடந்து வருகிறது. 13-வது நாளான நேற்று கேரளாவின் சேர்தலா பகுதியில் இருந்து யாத்திரை தொடங்கியது. கொச்சி மாவட்டத்தில் இரவு முகாமிடப்பட்டது.

    இந்நிலையில், கேரள ஐகோர்ட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இந்திய ஒற்றுமை யாத்திரையால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ள அவர், கேரளாவில் சாலையின் பாதி பகுதியிலேயே யாத்திரை செல்ல அனுமதி வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த மனுவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கேரள பிரதேச காங்கிரஸ் தலைவர் சுதாகரன் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர். இந்த மனு மீது ஐகோர்ட்டில் நாளை விசாரணை நடைபெற உள்ளது

    • ராகுல்காந்தி கடந்த 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார்.
    • ராகுல்காந்தி மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார்.

    திருவனந்தபுரம் :

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். அவர் நேற்று முன்தினம் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சென்றடைந்தார். பாதயாத்திரை செல்லும் வழியில் குழந்தைகள், மாணவ-மாணவிகள், முதியவர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டு வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் பாதயாத்திரையின் போது லாட்டரி சீட்டு விற்கும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். இந்த ருசிகர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளியை சேர்ந்தவர் சுதா மணியம்மா (வயது53). மாற்றுத்திறனாளியான இவர் தனது சகோதரனுடன் வசித்து வருகிறார். ஏழ்மை காரணமாக லாட்டரி டிக்கெட் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் பாதயாத்திரை வரும் ராகுல் காந்தி பாரிப்பள்ளி வழியாக கடந்து சென்றார். இதையறிந்த சுதா மணியம்மா ராகுல் காந்தியின் முகத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என விரும்பினார். ஆனால் குள்ளமான அவரால், அந்த கூட்ட நெரிசலில் ராகுல் காந்தியை பார்க்க முடியவில்லை.

    இதையறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் சுதா மணியம்மாவை ராகுல் காந்தி அருகே கொண்டு வந்து நிறுத்தினர். ராகுல் காந்தி அருகில் நின்ற சுதா மணிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அப்போது ராகுல் காந்தி, அந்த பெண்ணின் நிலைக்கு தன்னை தாழ்த்தி பேச்சு கொடுத்தார். ஒருவருக்கு ஒருவர் பேசியது இருவருக்கும் புரியவில்லை. அப்போது அருகில் நின்ற கட்சி நிர்வாகிகள் அதுபற்றி மொழிபெயர்த்து ராகுல்காந்தியிடம் தெரிவித்தனர்.

    தொடர்ந்து ராகுல்காந்தி அந்த பெண்ணிடம் பணம் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டை வாங்கிக்கொண்டார். பின்னர் அந்த பெண்ணிடம் இருந்து விடைபெற்று மீண்டும் தனது பாதயாத்திரையை தொடர்ந்தார்.

    ராகுல்காந்தியை சந்தித்தது குறித்து சுதாமணியம்மா கூறியதாவது:-

    ராகுல்காந்தியை நான் நேரில் பார்ப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அவர் தன்னிலை மறந்து, என் நிலைக்கு தன்னை தாழ்த்திக்கொண்டு என்னிடம் பேசியதை பார்த்து வியந்து போனேன். அவரை அருகில் நின்று பார்த்ததை பாக்கியமாக நினைக்கிறேன். இது பம்பர் லாட்டரி அடித்ததை போல் உள்ளது. நான் விற்ற டிக்கெட்டுக்கு ராகுல்ஜிக்கு பரிசு கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல் காந்தி 7 மணிக்கு நடைபயணத்தை தொடங்குகிறார்.
    • நெய்மீன் என்றால் ராகுல் காந்திக்கு அலாதி பிரியம்.

    பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி தினமும் அதிகாலையிலேயே எழுந்து விடுகிறார். முதலில் யோகாசனம் செய்யும் அவர் காலை 6 மணியளவில் டீ மற்றும் பிஸ்கட்டுகளை சாப்பிட்டுவிட்டு 7 மணிக்கு நடைபயணத்தை தொடங்குகிறார். பாதயாத்திரை செல்லும் போது 8 மணி அளவில் சாலையோர கடையில் டீயுடன் உளுந்து வடை சாப்பிடுகிறார். சில நேரங்களில் மசால் தோசையை விரும்பி சாப்பிடுகிறார்.

    காலை 10 மணிக்கு பாதயாத்திரை ஓய்வின் போது மற்றவர்களுக்கு தயார் செய்யப்பட்டுள்ள உணவையே எடுத்துக்கொள்கிறார். கேரளாவில் காலை உணவாக தோசை, உப்புமா மற்றும் இட்லி ஆகியவை ராகுல் காந்திக்கு பரிமாறப்பட்டு வருகிறது. ஆனால் மதிய உணவுடன் மீன் குழம்பை அவர் விரும்பி சாப்பிடுகிறார். அதுவும் நெய்மீன் என்றால் அவருக்கு அலாதி பிரியம். கோழிக்கோடு வரும்போதெல்லாம் ராகுல் காந்தி அங்குள்ள ஒரு ஓட்டலில் நெய்மீன் விரும்பி சாப்பிடுவார். இதை அறிந்த பாதயாத்திரை ஒருங்கிணைப்பாளர்கள் ராகுல் காந்திக்கு மதிய உணவின்போது மீன் உணவு வகைகளை பரிமாறுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    அதே சமயம் பாதயாத்திரையின் போது ஆப்பிள் உள்ளிட்ட பழச்சாறை ராகுல் காந்தி குடிக்கிறார். இரவில் பெரும்பாலும் ரொட்டி மற்றும் பனீர் ஆகியவற்றை அவர் விரும்பி சாப்பிடுகிறார். மேலும் உடன் பாதயாத்திரை வருபவர்களின் சாப்பாடு விஷயத்திலும் ராகுல்காந்தி கவனம் செலுத்தி வருகிறார்.

    • சோனியா, பிரியங்கா காந்தி இருவரும் இந்த யாத்திரையில் பங்கேற்கவில்லை.
    • சோனியா, பிரியங்கா காந்தி இருவரும் இந்த யாத்திரையில் பங்கேற்கவில்லை.

    கன்னியாகுமரி :

    ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை யாத்திரை) என்ற பெயரில் பாதயாத்திரையை நேற்று மாலை தொடங்கி உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி அவருடன் உள்ளார். எனவே இவர்கள் இருவரும் இந்த யாத்திரையில் பங்கேற்கவில்லை.

    இந்த நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச்செய்தியில் அவர் கூறி இருப்பதாவது:-

    நான் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறேன். இதன் காரணமாக வரலாற்றுச்சிறப்புமிக்க பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி வைக்க என்னால் நேரில் வர முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்.

    புகழ்பெற்ற பாரம்பரியமிக்க நமது மாபெரும் கட்சிக்கு இது மிக முக்கியமான நிகழ்வு ஆகும். இதனால் நமது இயக்கம் புத்துயிர் பெறும் என்று நான் நம்புகிறேன்.

    இது இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணம் ஆகும்.

    இந்த பாத யாத்திரையில் முழுமையாக பங்கேற்கிற கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த யாத்திரையில் பல்வேறு மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர் வந்து இணைவார்கள். அவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பாரத் ஜோடோ யாத்திரையில் நான் தினந்தோறும் எண்ணத்தாலும், உணர்வாலும் பங்கேற்பேன்.

    நிச்சயமாக இந்த யாத்திரை தொடர்ந்து நடைபெறுகிறபோது, நான் அதை நேரலையில் பார்ப்பேன். எனவே நாம் நமது தீர்மானத்தில் உறுதியாகவும், ஒற்றுமையாகவும் முன்னோக்கி நடைபோடுவோம்.

    இவ்வாறு சோனியா காந்தி கூறி உள்ளார்.

    பாத யாத்திரை பயணம் முடியும் வரை எளிய வாழக்கையை கடைப்பிடிக்க முடிவு.

    இந்திய ஒற்றுமை பயணம் என்று பெயரிடப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியின் பாத யாத்திரைப் பயணம் கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல் காந்தியிடம் வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைத்தார். இன்று முதல் 10ந் தேதிவரை குமரி மாவட்டத்தில் ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

    கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பாதயாத்திரை மொத்தம் 150 நாட்கள் திருவனந்தபுரம், கொச்சி, நிலாம்பூர், மைசூர், பெல்லாரி, தெய்ச்சூர், விகாராபாத், நாந்தெட், இந்தூர், கோட்டா, தவுசா, ஆழ்வார், புலுந்த்ஷகர், டெல்லி, அம்பாலா, பதன் கோட், ஜம்மு வழியாக ஸ்ரீநகரை சென்றடைகிறது.

    இந்நிலையில் தமது நடை பயணத்தின் போது இரவு ராகுல்காந்தி எங்கு ஓய்வு எடுப்பார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தி உள்ளது. அதன்படி அவர் எந்த ஹோட்டலிலும் தங்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    ராகுல்காந்தி இரவு வேளையில் தூங்குவதற்காக பாத யாத்திரை செல்லும் பல்வேறு மாநிலங்களில் நிலவும் தட்பவெட்ப நிலை மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப 60 சிறப்பு கண்டெய்னர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் படுக்கை வசதி, கழிப்பறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்டெய்னர்கள் ராகுல்காந்தியின் நடைபயணம் மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

    அடுத்த 150 நாட்களுக்கு இந்த கண்டெய்னர்களில் ராகுல்காந்தி இரவு நேரம் ஓய்வெடுப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தமது பயணத்தில் உடன் வருவோர் அனைவருடன் ஒரே நேரத்தில் ஒன்றாகவே சாப்பிட ராகுல் முடிவு செய்துள்ளதாகவும், நடைபயணம் முடியும் வரை ஆடம்பரம் இன்றி எளிய வாழக்கை முறையை கடைப்பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவலகள் வெளியாகி உள்ளன. 


    இதற்கிடையில், தமது சகோதரரின் பாரத் ஜோடோ யாத்ரா குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நாங்கள் ஒரு நேர்மறையான அரசியலைத் தொடங்குகிறோம், நாங்கள் உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புகிறோம்.எங்கள் அன்பான நாட்டை ஒன்று படுத்துங்கள். இந்தியாவை ஒன்றாக இணைப்போம் என்று தனது பேஸ்புக் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    இன்றைய அரசியல் நாட்டு மக்களின் பிரச்சினைகளை புறக்கணித்து முற்றிலும் மாறுபட்ட திசையில் செல்வதாகவும், இந்த பாத யாத்திரை மூலம் சமானிய மக்களின் பிரச்சினைகள் மற்றும் கவலைகளை வெளியே கொண்டு வர விரும்புகிறோம் என்றும் பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.

    • ராகுல் காந்தி இன்று காலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
    • முதல் நாளான இன்று 600 மீட்டர் நடை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல் காந்தி தலைமையில் பாத யாத்திரை நடத்தப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ தூரம் ராகுல் காந்தி தலைமையில் செப்டம்பர் 7ம் தேதி முதல் காங்கிரசார் பாத யாத்திரையாக நடந்து செல்ல திட்டமிடப்பட்டு அதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 150 நாட்கள் இந்த பாத யாத்திரை நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரையின் போது நாடு முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட பல தரப்பட்ட மக்களை சந்திக்கும் வகையில் இந்த பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    பாத யாத்திரையை தொடங்குவதற்காக நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்த ராகுல் காந்தி, இன்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் நினைவிட வளாகத்துக்குள் அரச மரக்கன்று ஒன்றையும் ராகுல் நட்டார். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வகையில் தரை விரிப்பு விரிக்கப்பட்டு இருந்தது. ராகுல் காந்தி அந்த தரைவிரிப்பில் அமர்ந்து பாத யாத்திரை வெற்றிக்காக பிரார்த்தனை மேற்கொண்டார்.

    பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து புறப்பட்ட ராகுல் சென்னை விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்தடைந்தார்.


    கன்னியாகுமரியில் கடலின் நடுவே பாறையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு படகு மூலம் சென்று பார்வையிட்டார். மற்றொரு பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் சென்று பார்வையிட்டார். அதன்பிறகு காமராஜர் நினைவு மண்டபத்துக்கு சென்று காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து காந்தி மண்டபத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, அங்கிருந்து பாத யாத்திரையை தொடங்கினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல் காந்தியிடம் வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பாத யாத்திரையின் நோக்கம் குறித்து எழுச்சி உரையாற்றுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் கன்னியாகுமரியில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள விவேகாந்தா கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கேரவனில் ஓய்வெடுக்கிறார். முதல் நாளான இன்று 600 மீட்டர் நடை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.

    நாளை (வியாழக்கிழமை) அங்கிருந்து பாத யாத்திரையை தொடங்குகிறார். 10-ந்தேதி வரை குமரி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பாதயாத்திரை திருவனந்தபுரம், கொச்சி, நிலாம்பூர், மைசூர், பெல்லாரி, தெய்ச்சூர், விகாராபாத், நாந்தெட், இந்தூர், கோட்டா, தவுசா, ஆழ்வார், புலுந்த்ஷகர், டெல்லி, அம்பாலா, பதன் கோட், ஜம்மு வழியாக ஸ்ரீநகரை சென்றடைய உள்ளார்.

    ×