search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்திய ஒற்றுமை பயணம்... கன்னியாகுமரியில் இருந்து பாத யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி
    X

    ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


    இந்திய ஒற்றுமை பயணம்... கன்னியாகுமரியில் இருந்து பாத யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி

    • ராகுல் காந்தி இன்று காலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
    • முதல் நாளான இன்று 600 மீட்டர் நடை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல் காந்தி தலைமையில் பாத யாத்திரை நடத்தப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ தூரம் ராகுல் காந்தி தலைமையில் செப்டம்பர் 7ம் தேதி முதல் காங்கிரசார் பாத யாத்திரையாக நடந்து செல்ல திட்டமிடப்பட்டு அதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 150 நாட்கள் இந்த பாத யாத்திரை நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரையின் போது நாடு முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட பல தரப்பட்ட மக்களை சந்திக்கும் வகையில் இந்த பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    பாத யாத்திரையை தொடங்குவதற்காக நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்த ராகுல் காந்தி, இன்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் நினைவிட வளாகத்துக்குள் அரச மரக்கன்று ஒன்றையும் ராகுல் நட்டார். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வகையில் தரை விரிப்பு விரிக்கப்பட்டு இருந்தது. ராகுல் காந்தி அந்த தரைவிரிப்பில் அமர்ந்து பாத யாத்திரை வெற்றிக்காக பிரார்த்தனை மேற்கொண்டார்.

    பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து புறப்பட்ட ராகுல் சென்னை விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்தடைந்தார்.


    கன்னியாகுமரியில் கடலின் நடுவே பாறையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு படகு மூலம் சென்று பார்வையிட்டார். மற்றொரு பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் சென்று பார்வையிட்டார். அதன்பிறகு காமராஜர் நினைவு மண்டபத்துக்கு சென்று காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து காந்தி மண்டபத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, அங்கிருந்து பாத யாத்திரையை தொடங்கினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல் காந்தியிடம் வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பாத யாத்திரையின் நோக்கம் குறித்து எழுச்சி உரையாற்றுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் கன்னியாகுமரியில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள விவேகாந்தா கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கேரவனில் ஓய்வெடுக்கிறார். முதல் நாளான இன்று 600 மீட்டர் நடை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.

    நாளை (வியாழக்கிழமை) அங்கிருந்து பாத யாத்திரையை தொடங்குகிறார். 10-ந்தேதி வரை குமரி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பாதயாத்திரை திருவனந்தபுரம், கொச்சி, நிலாம்பூர், மைசூர், பெல்லாரி, தெய்ச்சூர், விகாராபாத், நாந்தெட், இந்தூர், கோட்டா, தவுசா, ஆழ்வார், புலுந்த்ஷகர், டெல்லி, அம்பாலா, பதன் கோட், ஜம்மு வழியாக ஸ்ரீநகரை சென்றடைய உள்ளார்.

    Next Story
    ×