search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress Bharat Jodo Yatra"

    • இந்த யாத்திரையின் தாக்கம் அடித்தட்டு மக்களிடம் நிச்சயமாகப் பரவும்
    • ராகுல் காந்தியின் அரசியல் முத்திரைக்கு புத்துயிர் அளித்துள்ளது.

    ஜெய்ப்பூர்

    வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மையப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானுக்குள் இந்த யாத்திரை நுழைந்திருக்கிறது.

    நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை இன்று (வெள்ளிக்கிழமை) 100-வது நாளை எட்டுகிறது.

    இது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.

    ராஜஸ்தானின் டவுசா மாவட்டத்தில் ராகுல் காந்தி நேற்று நடத்திய பாதயாத்திரையில் மாநில தடகள வீராங்கனைகள் பலர் அவருடன் நடந்து சென்றனர்.

    ராகுல் காந்தியின் பாதயாத்திரை 100-வது நாளை எட்டும் நிலையில், ஆதரவு, எதிர்ப்பு என கடந்த சில மாதங்களாக நாட்டில் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.

    ஒருபுறம் கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பாதுகாப்பு படை வல்லுனர்கள் என ஏராளமான பிரபலங்கள் இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்து, ராகுல் காந்தியுடன் நடந்து சென்றும் வருகின்றனர்.

    மறுபுறம் ஆளும் பா.ஜனதா சார்பில் இந்த யாத்திரைக்கு கடும் எதிர்ப்பும், குற்றச்சாட்டுகளும் அடிக்கடி எழுந்து வருகின்றன. ராகுல் காந்தியின் தோற்றம், உடைகள் மற்றும் யாத்திரையில் பங்கேற்போர் குறித்து பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை தெரிவிப்பதால் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.

    ஆனால் இந்த சலசலப்புகளையும் தாண்டி இந்த யாத்திரையால் கட்சிக்கு நீண்டகால நன்மை விளையும் என கட்சியின் முன்னணி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.

    கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ஜா கூறும்போது, 'முதலில் இந்த யாத்திரை, ராகுல் காந்தியின் அரசியல் முத்திரைக்கு புத்துயிர் அளித்துள்ளது. பா.ஜனதா தனது பொய்யான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பயன்படுத்தி அவரை கேலி செய்ய முடியாது. இரண்டாவதாக இந்த வெகுஜன இயக்கத்தின் மூலம் காங்கிரஸ் கட்சி மக்களுடன் நேரடியாக இணைந்துள்ளது' என கூறினார்.

    இந்த யாத்திரையின் தாக்கம் அடித்தட்டு மக்களிடம் நிச்சயமாகப் பரவும் என்று குறிப்பிட்ட சஞ்சய் ஜா, காங்கிரசுக்கு ஊக்கமளிக்கும் அதன் தொண்டர்கள் மூலம் அணிதிரட்டலைத் தக்கவைத்துக் கொள்வதே இனி உள்ள முக்கியப்பகுதியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இந்த யாத்திரை கட்சிக்கு நம்பிக்கையின் ஒளியை அளித்துள்ளதாகவும், சாதாரண தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சஞ்சய் பாண்டே, எனினும் அது தேர்தல் ஆதாயமாக மாறுமா? என்பதை காலம்தான் சொல்லும் என்றும் தெரிவித்தார்.

    காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தி கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் இந்த நோக்கம் நிறைவேறுமா? என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் மாநில சட்டசபை தேர்தல்களில் கட்சி பெறும் வெற்றியை பொறுத்து அமையும் என்றுஅரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

    • வீர சாவர்க்கர் மீது ராகுல்காந்தி தனது குற்றச்சாட்டை முன்வைத்தார்.
    • ராகுல் காந்தி வெட்கமே இல்லாமல் வீரசாவர்க்கர் பற்றி பொய் பேசி வருகிறார்.

    மும்பை

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

    மகாராஷ்டிராவில் அவரது நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில் அவர் நேற்று முன்தினம் வாஷிம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை பற்றி கடுமையாக தாக்கி பேசினார்.

    அப்போது அவர், "சாவர்க்கர் பா.ஜனதா மற்றும் ஆர்.ஆர்.எஸ். அமைப்பின் அடையாளம். அவர் அந்தமான் ஜெயிலில் 2 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். அப்போது அவர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பு கடிதங்கள் எழுத தொடங்கினார். சாவர்க்கர் தன்னைப்பற்றி வேறு ஒருவரின் பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். அதில் தான் வீரமிக்கவர் என கூறியுள்ளார். அவர் ஆங்கிலேய அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்று வந்தார். அவர்களுக்காக வேலை செய்தார். காங்கிரசுக்கு எதிராக வேலை பார்த்தார்" என்று பேசினார்.

    வீரசாவர்க்கர் மராட்டியத்தை சேர்ந்தவர் என்ற நிலையில் ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. வீர சாவர்க்கரை அவமதித்த ராகுல்காந்தியின் நடைபயணம் மகாராஷ்டிராவில் நிறுத்தப்பட வேண்டும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த எம்.பி. ராகுல் செவாலே அரசை வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் நேற்று ராகுல்காந்தியின் நடைபயணம் 71-வது நாளாக நடந்தது. மகாராஷ்டிராவில் உள்ள அகோலா மாவட்டத்தில் அவர் நடைபயணத்தை தொடர்ந்தார். அப்போது அவருடன் நடிகை ரியாசென் பங்கேற்றார்.

    நடைபயணத்துக்கு மத்தியில் ராகுல்காந்தி நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது வீர சாவர்க்கர் மீது அவர் மீண்டும் தனது குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் வீரசாவர்க்கர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதத்தை நிருபர்களிடம் ராகுல்காந்தி காண்பித்தார்.

    "உங்களுக்கு மிகவும் கீழ்ப்படிதலுள்ள வேலைக்காரனாக இருக்க நான் கெஞ்சுகிறேன்" என்று கடைசி வரியில் வீரசாவர்க்கர் குறிப்பிட்டு இருப்பதை ராகுல்காந்தி படித்து காட்டினார்.

    மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் வீரசாவர்க்கரை பற்றி கூறிய கருத்துக்களை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளேன். பயம் காரணமாக தான் சாவர்க்கர் கருணை கடிதத்தை எழுதினார். மேலும் அவர் ஆங்கிலேய அரசுக்கு உதவியது தெளிவாகிறது. இது மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், நேரு போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அவர் செய்த துரோகம். சிலர் எனது நடைபயணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். வேண்டுமென்றால் எனது நடைபயணத்தை மகாராஷ்டிரா அரசு நிறுத்தி பார்க்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே ராகுல்காந்தியின் பேச்சுக்கு பா.ஜனதா மற்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், " எந்த சூழ்நிலையிலும் வீரசாவர்க்கர் அவமதிக்கப்படுவதை மகாராஷ்டிரா மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் " என்றார்.

    மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், " ராகுல் காந்தி வெட்கமே இல்லாமல் வீரசாவர்க்கர் பற்றி பொய் பேசி வருகிறார். மகாராஷ்டிரா மக்கள் காங்கிரஸ் கட்சியினருக்கு தகுந்த நேரத்தில் உரிய பதிலடி கொடுப்பார்கள். வீர சாவர்க்கர் போல எத்தனை காங்கிரஸ் தலைவர்கள் 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து உள்ளனர். அந்த கொடுமையிலும் அவர் சுதந்திரத்துக்காக பாடல் எழுதினார். மற்றவர் எழுதி கொடுப்பதை ராகுல்காந்தி வாசிக்கிறார். அந்த முட்டாள்களுக்கு வீர சாவர்க்கர் எத்தனை ஆண்டுகள் ஜெயிலில் இருந்தார் என்பது கூட தெரியாது" என கூறினார்.

    வீரசாவர்க்கர் பற்றிய ராகுல்காந்தியின் கருத்தில் தான் உடன்படவில்லை என்று மகாராஷ்டிராவில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும் கூறியிருக்கிறார்.

    • தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக 2 நாட்கள் ராகுல்காந்தி ஒய்வெடுத்தார்.
    • மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறது.

    பெங்களூரு :

    இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை கேரளா சென்று நிறைவடைந்து தற்போது கர்நாடகத்தில் நடந்து வருகிறது. தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாட்கள் ராகுல்காந்தி ஒய்வெடுத்தார்.

    மைசூரு அருகே உள்ள கபினி ரெசார்ட்டில் ராகுல்காந்தி தங்கி உள்ளார். இந்த நிலையில் ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவியும், ராகுல்காந்தியின் தாயுமான சோனியா காந்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மைசூரு வந்தார். அவரும் ரெசார்ட்டில் தான் தங்கி உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று ராகுல், சோனியா காந்தி எச்.டி.கோட்டையில் உள்ள நாகரஒலே வனப்பகுதியில் சபாரி சென்று வனவிலங்குகளை பார்த்து ரசித்தனர். பின்னர் எச்.டி.கோட்டை தாலுகா பேகூர் என்ற கிராமத்தில் உள்ள பீமனகோலி கோவிலில் தசரா பண்டிகையையொட்டி சோனியா காந்தி சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் 2 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ராகுல்காந்தி இன்று (வியாழக்கிழமை) தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்குகிறார். பாதயாத்திரையில் சோனியா காந்தியும் பங்கேற்கிறார். மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறது.

    • பாதயாத்திரை மூலம் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளது.
    • சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளனர்.

    பெங்களூரு :

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத்ஜோடோ' என்ற பெயரில் கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார்.

    அவரது இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து கர்நாடகத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு வருகிறது. அதாவது சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுப்பேட்டை வழியாக வருகிறது. கேரளாவில் மட்டும் 19 நாட்கள் இந்த பாதயாத்திரை நடந்துள்ளது. ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை இன்று கர்நாடகத்தில் தொடங்குகிறது.

    அங்கு ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கர்நாடக காங்கிரஸ் கட்சி ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த பாதயாத்திரை கர்நாடகத்தில் 21 நாட்கள் 511 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்கிறது. மைசூரு, மண்டியா, துமகூரு, சித்ரதுர்கா, பல்லாரி, ராய்ச்சூர் வழியாக தெலுங்கானாவுக்கு செல்கிறது. வருகிற 19-ந் தேதி பல்லாரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரையின் நடுவே தசரா பண்டிகையையொட்டி 2 நாட்கள் விடுமுறை எடுக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். இந்த பாதயாத்திரை நடைபெறும் நாட்களில் ஏதாவது ஒரு நாள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய 2 பேரும் கலந்து கொள்ள உள்ளனர்.

    கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது. ராகுல் காந்தியை வரவேற்று குண்டலுபேட்டையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை மர்ம நபர்கள் சிலர் கிழித்து எறிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அங்குள்ள போலீசில் காங்கிரசார் புகார் அளித்துள்ளனர்.

    இந்த பாதயாத்திரை மூலம் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளது. பாதயாத்திரை பயணிக்கும் தொகுதிகளில் உள்ளூர் கட்சி தொண்டர்களை அதிகளவில் கலந்து கொள்ள வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.

    மேலும் பாதயாத்திரை செல்லும் வழியில் விவசாயிகள், மடாதிபதிகள், பெண்கள், பழங்குடியின மக்கள், மாணவர்கள், பொதுமக்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். மேலும் பல்லாரி உள்பட பல்வேறு நகரங்களில் கட்சி பொதுக்கூட்டங்களை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

    சித்தராமையாவின் 75-வது பிறந்த நாளையொட்டி தாவணகெரேயில் பிரமாண்டமான முறையில் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் காங்கிரசில் சித்தராமையாவின் தனிப்பட்ட செல்வாக்கு அதிகரித்தது.

    இந்த நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மிக சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து, பெரும் கூட்டத்தை திரட்டி அதன் மூலம் தனது பலத்தை நிரூபிக்க டி.கே.சிவக்குமார் திட்டமிட்டுள்ளார். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரும் முதல்-மந்திரி பதவி மீது கண் வைத்து காய் நகா்த்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொண்டர்கள் ராகுல் காந்திக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
    • பாதயாத்திரையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் கலந்துகொண்டனர்.

    திருவனந்தபுரம் :

    பாரத ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை எர்ணாகுளம் மாவட்டங்கள் வழியாக 300 கி.மீ தூரத்தை கடந்து 15-வது நாளில் (22-ந்தேதி) திருச்சூர் மாவட்டம் சாலைக்குடியில் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் 16-வது நாளாக தனது பாதயாத்திரையை தொடர்ந்தார்.

    காலை 6.30 மணிக்கு திருச்சூர் பேராம்பிரா சந்திப்பில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. அங்கு தொண்டர்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு பாத யாத்திரை திருச்சூர் சுவராஜ் ரவுண்ட் ரோடு வடக்கும்நாதன் கோவில் தெற்கு வாயிலில் நிறைவடைந்தது. நேற்று 17-வது நாள் பாதயாத்திரை திருச்சூர் தோப்பு மைதானத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கியது.

    இந்த பாதயாத்திரையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் கலந்துகொண்டனர். அவர்களுடன் ராகுல் காந்தி உற்சாகமாக தனது பயணத்தை தொடர்ந்து காலை 10 மணி அளவில் பட்யாட்ரா பகுதியில் முடிந்தது. பின்னர் மாலை 4.30 மணி அளிவில் மீண்டும் வடக்கஞ்சேரி பகுதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. இதில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். அப்போது அவர்கள் கியாஸ் விலை உயர்வு குறித்த பதாகைகளை கையில் வைத்துக்கொண்டு சென்றனர். பாதயாத்திரையில் பங்கேற்ற சிறுமிகள் மற்றும் பெண்களிடம் நலம் விசாரித்தப்படி ராகுல் காந்தி நடந்து சென்றார்.

    அப்போது சிறுமி ஒருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடமணிந்து பாதயாத்திரையில் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தினார். அப்போது ராகுல்காந்தி, 'இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம் உள்ளது' என தெரிவித்தார். மாலை 7 மணி அளவில் செருத்துருத்தி பகுதியில் பாதயாத்திரையை நிறைவு செய்தார். மேலும் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் அங்கிருந்து பாதயாத்திரையை ராகுல்காந்தி மேற்கொள்வார் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • நாளை (சனிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
    • 19-ந்தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

    எர்ணாகுளம் :

    காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடித்து வரும் நிலையில், கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    அதன்படி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை நேற்று முறைப்படி வெளியிடப்பட்டது. அதன்படி, நாளை (சனிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

    இதில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 19-ந்தேதி முடிவு அறிவிக்கப்படும்.

    இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேநேரம் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கக்கோரி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்சி பிரிவுகள் சார்பில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டன. எனினும் அவர் தலைவர் பதவியை ஏற்க மறுத்து வருகிறார்.

    இந்த நிலையில் கேரளாவில் இந்திய ஒற்றுமைப்பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்தும், தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடுவேனா, இல்லையா என்பது, நான் செய்து கொண்டிருக்கும் பணியை திசை திருப்பும் முயற்சி ஆகும்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். தேர்தலில் போட்டியிட விரும்பும் எந்த காங்கிரஸ் தலைவருக்கும் அதற்கான உரிமை உள்ளது. இது மோசான விஷயம் என நான் நினைக்கவில்லை. இது நல்ல விஷயம்தான்.

    தனக்கான தலைவரை தேர்தல் மூலம் தேர்வு செய்யும் ஒரே கட்சி, காங்கிரஸ்தான். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். இது என்னை உற்சாகப்படுத்துகிறது.

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் எப்போது நடக்கும்? என எல்லாரும் கேட்கிறார்கள். ஆனால் இதே கேள்வியை பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., இடதுசாரிகள், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளிடம் கேட்கமாட்டீர்கள்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு நான் கூறுவது, நீங்கள் ஒரு முடிவை எடுத்திருக்கிறீர்கள், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு. இது இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பார்வையை வரையறுக்கும் ஒரு நிலைப்பாடு.

    காங்கிரஸ் தலைவர் பதவி என்பது வெறும் ஒரு அமைப்பு பதவி அல்ல, மாறாக இது ஒரு சித்தாந்த பதவி. இது ஒரு நம்பிக்கை அமைப்பு.

    காங்கிரஸ் தலைவராக யார் வந்தாலும் அவர் ஒரு நம்பிக்கை அமைப்பையும், இந்தியாவின் பார்வையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    காங்கிரசில் 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற முடிவை ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, 'உதய்ப்பூர் சிந்தனையாளர் முகாமில் எடுக்கப்பட்ட அந்த உறுதிப்பாடு (ஒருவருக்கு ஒரு பதவி) கடைப்பிடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்' என்று தெரிவித்தார்.

    22 ஆண்டுகளுக்கு பிறகு தலைவர் பதவிக்கு போட்டி நடக்கிறது.

    2000-ம் ஆண்டு, தலைவர் பதவிக்கு சோனியாகாந்தியும், ஜிதேந்திர பிரசாதாவும் போட்டியிட்டனர். அதில் சோனியாகாந்தி வெற்றி பெற்றார்.

    அதற்கு முன்பு, 1997-ம் ஆண்டும், காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடந்தது. அப்போது, சரத்பவார், ராஜேஷ் பைலட் ஆகியோரை தோற்கடித்து சீதாராம் கேசரி தலைவர் ஆனார்.

    ராகுல்காந்தி தலைவராக இருந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளை தவிர, 1999-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து சோனியாகாந்தி தலைவராக இருக்கிறார். காங்கிரசில் நீண்ட காலம் தலைவராக இருப்பவர் அவரே ஆவார்.

    • ராகுல்காந்தியின் பாதயாத்திரை காங்கிரசுக்கு பயனுள்ளதாக அமையும்.
    • எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்.

    மும்பை

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று சோலாப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரை குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

    ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரை வரும் நாட்களில் அரசியலில் விளைவுகளை ஏற்படுத்தும். இது காங்கிரஸ் கட்சிக்கு பயனுள்ளதாக அமையும். முன்னாள் பிரதமர் சந்திரசேகர் இதுபோன்ற பாதயாத்திரை நடத்தியபோது, நல்ல வரவேற்பு கிடைத்தது. நான் கூட 1980-ம் ஆண்டில் ஜல்காவில் இருந்து நாக்பூருக்கு விவசாயிகளுக்காக பாதயாத்திரை மேற்கொண்டேன். ஜல்காவில் பாதயாத்திரையை தொடங்கியபோது 5 ஆயிரம் பேர் வந்தனர். புல்தானா சென்றபோது அந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்தது. பின்னர் அகோலா மற்றும் அமராவதியில் யாத்திரை நடத்தியபோது 1 லட்சம் பேர் திரண்டனர். மாநிலம் முழுவதும் இது அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்தது.

    இதுபோன்ற நிகழ்ச்சிகளை மிகுந்த முயற்சியுடன் நடத்தினால் மக்கள் வரவேற்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2024-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுப்படுமா? என்ற கேள்விக்கு சரத்பவார் பதிலளிக்கையில், "எதிர்கால ஏற்பாடுகள் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது" என்றார்.

    இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், "எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். இது தொடர்பாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் என்னை சந்தித்து பேசினார். அதற்கு முன்னதாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் என்னை சந்தித்தார். கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்கள். இவை அனைத்து தலைவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை.

    அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரசை சேர்க்கக்கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். எனது கருத்து என்னவென்றால், ஒரு கட்சியை கூட்டணியில் சேர்ப்பதை, மற்றவர்கள் எதிர்க்கக்கூடாது" என்றார்.

    • ராகுல்காந்தி கடந்த 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார்.
    • ராகுல்காந்தி மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார்.

    திருவனந்தபுரம் :

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். அவர் நேற்று முன்தினம் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சென்றடைந்தார். பாதயாத்திரை செல்லும் வழியில் குழந்தைகள், மாணவ-மாணவிகள், முதியவர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டு வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் பாதயாத்திரையின் போது லாட்டரி சீட்டு விற்கும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். இந்த ருசிகர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளியை சேர்ந்தவர் சுதா மணியம்மா (வயது53). மாற்றுத்திறனாளியான இவர் தனது சகோதரனுடன் வசித்து வருகிறார். ஏழ்மை காரணமாக லாட்டரி டிக்கெட் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் பாதயாத்திரை வரும் ராகுல் காந்தி பாரிப்பள்ளி வழியாக கடந்து சென்றார். இதையறிந்த சுதா மணியம்மா ராகுல் காந்தியின் முகத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என விரும்பினார். ஆனால் குள்ளமான அவரால், அந்த கூட்ட நெரிசலில் ராகுல் காந்தியை பார்க்க முடியவில்லை.

    இதையறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் சுதா மணியம்மாவை ராகுல் காந்தி அருகே கொண்டு வந்து நிறுத்தினர். ராகுல் காந்தி அருகில் நின்ற சுதா மணிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அப்போது ராகுல் காந்தி, அந்த பெண்ணின் நிலைக்கு தன்னை தாழ்த்தி பேச்சு கொடுத்தார். ஒருவருக்கு ஒருவர் பேசியது இருவருக்கும் புரியவில்லை. அப்போது அருகில் நின்ற கட்சி நிர்வாகிகள் அதுபற்றி மொழிபெயர்த்து ராகுல்காந்தியிடம் தெரிவித்தனர்.

    தொடர்ந்து ராகுல்காந்தி அந்த பெண்ணிடம் பணம் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டை வாங்கிக்கொண்டார். பின்னர் அந்த பெண்ணிடம் இருந்து விடைபெற்று மீண்டும் தனது பாதயாத்திரையை தொடர்ந்தார்.

    ராகுல்காந்தியை சந்தித்தது குறித்து சுதாமணியம்மா கூறியதாவது:-

    ராகுல்காந்தியை நான் நேரில் பார்ப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அவர் தன்னிலை மறந்து, என் நிலைக்கு தன்னை தாழ்த்திக்கொண்டு என்னிடம் பேசியதை பார்த்து வியந்து போனேன். அவரை அருகில் நின்று பார்த்ததை பாக்கியமாக நினைக்கிறேன். இது பம்பர் லாட்டரி அடித்ததை போல் உள்ளது. நான் விற்ற டிக்கெட்டுக்கு ராகுல்ஜிக்கு பரிசு கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல் காந்தி 7 மணிக்கு நடைபயணத்தை தொடங்குகிறார்.
    • நெய்மீன் என்றால் ராகுல் காந்திக்கு அலாதி பிரியம்.

    பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி தினமும் அதிகாலையிலேயே எழுந்து விடுகிறார். முதலில் யோகாசனம் செய்யும் அவர் காலை 6 மணியளவில் டீ மற்றும் பிஸ்கட்டுகளை சாப்பிட்டுவிட்டு 7 மணிக்கு நடைபயணத்தை தொடங்குகிறார். பாதயாத்திரை செல்லும் போது 8 மணி அளவில் சாலையோர கடையில் டீயுடன் உளுந்து வடை சாப்பிடுகிறார். சில நேரங்களில் மசால் தோசையை விரும்பி சாப்பிடுகிறார்.

    காலை 10 மணிக்கு பாதயாத்திரை ஓய்வின் போது மற்றவர்களுக்கு தயார் செய்யப்பட்டுள்ள உணவையே எடுத்துக்கொள்கிறார். கேரளாவில் காலை உணவாக தோசை, உப்புமா மற்றும் இட்லி ஆகியவை ராகுல் காந்திக்கு பரிமாறப்பட்டு வருகிறது. ஆனால் மதிய உணவுடன் மீன் குழம்பை அவர் விரும்பி சாப்பிடுகிறார். அதுவும் நெய்மீன் என்றால் அவருக்கு அலாதி பிரியம். கோழிக்கோடு வரும்போதெல்லாம் ராகுல் காந்தி அங்குள்ள ஒரு ஓட்டலில் நெய்மீன் விரும்பி சாப்பிடுவார். இதை அறிந்த பாதயாத்திரை ஒருங்கிணைப்பாளர்கள் ராகுல் காந்திக்கு மதிய உணவின்போது மீன் உணவு வகைகளை பரிமாறுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    அதே சமயம் பாதயாத்திரையின் போது ஆப்பிள் உள்ளிட்ட பழச்சாறை ராகுல் காந்தி குடிக்கிறார். இரவில் பெரும்பாலும் ரொட்டி மற்றும் பனீர் ஆகியவற்றை அவர் விரும்பி சாப்பிடுகிறார். மேலும் உடன் பாதயாத்திரை வருபவர்களின் சாப்பாடு விஷயத்திலும் ராகுல்காந்தி கவனம் செலுத்தி வருகிறார்.

    • சோனியா, பிரியங்கா காந்தி இருவரும் இந்த யாத்திரையில் பங்கேற்கவில்லை.
    • சோனியா, பிரியங்கா காந்தி இருவரும் இந்த யாத்திரையில் பங்கேற்கவில்லை.

    கன்னியாகுமரி :

    ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை யாத்திரை) என்ற பெயரில் பாதயாத்திரையை நேற்று மாலை தொடங்கி உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி அவருடன் உள்ளார். எனவே இவர்கள் இருவரும் இந்த யாத்திரையில் பங்கேற்கவில்லை.

    இந்த நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச்செய்தியில் அவர் கூறி இருப்பதாவது:-

    நான் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறேன். இதன் காரணமாக வரலாற்றுச்சிறப்புமிக்க பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி வைக்க என்னால் நேரில் வர முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்.

    புகழ்பெற்ற பாரம்பரியமிக்க நமது மாபெரும் கட்சிக்கு இது மிக முக்கியமான நிகழ்வு ஆகும். இதனால் நமது இயக்கம் புத்துயிர் பெறும் என்று நான் நம்புகிறேன்.

    இது இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணம் ஆகும்.

    இந்த பாத யாத்திரையில் முழுமையாக பங்கேற்கிற கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த யாத்திரையில் பல்வேறு மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர் வந்து இணைவார்கள். அவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பாரத் ஜோடோ யாத்திரையில் நான் தினந்தோறும் எண்ணத்தாலும், உணர்வாலும் பங்கேற்பேன்.

    நிச்சயமாக இந்த யாத்திரை தொடர்ந்து நடைபெறுகிறபோது, நான் அதை நேரலையில் பார்ப்பேன். எனவே நாம் நமது தீர்மானத்தில் உறுதியாகவும், ஒற்றுமையாகவும் முன்னோக்கி நடைபோடுவோம்.

    இவ்வாறு சோனியா காந்தி கூறி உள்ளார்.

    ×