search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளுநர்"

    • தடையை மீறி ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
    • பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவங்கள் அதிகரித்து வந்தது.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஏராளமான பேர் பணத்தை இழந்து தற்கொலை செய்யும் அவலம் தமிழகத்தில் நடைபெற்று வந்தது. இந்த சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு பலதரப்பில் இருந்தும் கோரிக்கை மனுக்கள் வந்தது.

    இதைத் தொடர்ந்து கடந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் போதே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய சட்டசபையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

    ஆனால் இதை எதிர்த்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக் காட்டி சட்டத்தை ஏற்க இயலாது என்று ரத்து செய்துவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தில் மீண்டும் நடைபெற்று வந்தது. இதில் பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்வது தொடர்ந்தது.

    இந்தநிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை மீண்டும் தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்தது.

    இக்குழு கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அதன்பின், ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, செப்டம்பர் 26ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த அவசரச்சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 7-ந் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதன்படி நடைபெறும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் சட்டமாக இயற்றப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இந்த சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சட்ட அமைச்சர் ரகுபதி கடந்த 19-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார்.

    அன்றைய தினமே இந்த சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

    அந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குடிமக்களின் மனநலத்தை பாதுகாக்கும் பொறுப்பும், பந்தயம் கட்டுதல் உள்பட எந்த வடிவத்திலும் சூதாட்டத்தின் தீய விளைவுகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பும் அரசிற்கு உள்ளது.

    இதன் காரணத்தால் 1930-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம் மற்றும் 1888-ம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டம் ஆகியவற்றில் பிரதிபலிக்கும் வகையில் தனிநபர் சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் ஆகியவற்றை தடை செய்யும் நீண்டகாலக் கொள்கையை அரசு பேணி வருகிறது.

    இணைய வழி விளையாட்டுகளின் மீது புதிய சட்டத்தை இயற்றுவதற்கு, அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துருவின் தலைமையில் உருவாக்கப்பட்ட குழுவானது அதன் அறிக்கையில், விளையாட்டு எதுவாயினும் இணைய வழி பதிவானது சீரற்ற வெளியீட்டு உருவாக்கி எதிலும் ஈடுபடாத வார்த்தை விளையாட்டுகள் அல்லது பலகை விளையாட்டுகளின் நேர்வுகளைத் தவிர அந்த விளையாட்டின் இணைய வழியல்லாத பதிப்புடன் ஒப்பிட முடியாது மற்றும் சீரற்ற உருவாக்கியை உள்ளடக்கிய இணைய வழி வாய்ப்பு விளையாட்டுகளை உருவாக்குபவர்களுக்கு தெரியும் என்பதால் அவை போலியான சீரற்ற உருவாக்கிகள் ஆகும்.

    மேற்கூறப்பட்ட குழுவின் அறிக்கை, அரசுப் பள்ளி மாணவர்களின் மீது இணைய வழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள், இதுகுறித்த ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள், பல்வேறு சட்டங்களை ஆய்வு செய்த பின்னர், அதன்படி உள்ள முடிவுகள் ஆகியவற்றை கவனமாக பரிசீலனை செய்த பின்னர் அரசானது, இணைய வழி சூதாட்டங்களை தடை செய்வது எனவும், இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்கு முறைப்படுத்துவது எனவும் முடிவு செய்தது.

    அரசின் மேற்சொன்ன முடிவிற்குச் செயல் வடிவம் கொடுப்பதற்காக, அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிப்பது தேவையாக இருந்தது. அந்த வகையில் 2022-ம் ஆண்டு தமிழ்நாடு இணைய வழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்கு முறைப்படுத்துதல் அவசரச் சட்டமானது (தமிழ்நாடு அவசரச் சட்டம் 4/2022) 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் நாள் அன்று கவர்னரால் பிரகடனம் செய்யப்பட்டு 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்கு சட்டத்துறை அனுப்பி வைத்திருந்தது. இப்போது கவர்னர் ஆர்.என்.ரவி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டால் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

    இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

    இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.

    • ஆளுநருக்கு கோவிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
    • நவராத்திரி கொலுவை ஆளுநர், குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.

    ஆயுதபூஜை கொண்டாட்டங்கள் தமிழகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றன. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்தார். பாரம்பரிய முறையில் பட்டு வேஷ்டி அணிந்து வந்த ஆளுநருக்கு கோவிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. 


    சிறப்பு தரிசன முறையில் சுமார் 20 நிமிடங்கள் வடபழனி முருகனை ஆளுநர் தரிசனம் செய்தார். மேலும், கோவிலில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவை குடும்பத்துடன் அவர் பார்த்து ரசித்தார். ஆளுநர் வருகையையொட்டி வடபழனி முருகன் கோவிலில், மாலை 3 மணியிலிருந்து கோபுர நுழைவாயில் வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

    • சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பாக சில விளக்கங்களை ஆளுநர் கேட்டுள்ளார்.
    • கவர்னர் ஒப்புதல் தந்த பிறகு மாதவரத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கான கட்டிட பணிகள் தொடங்கப்படும்.

    சென்னை மாதவரத்தில் சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபையில் மசோதா கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. பிறகு அந்த மசோதா கவர்னர் ஒப்பதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக கவர்னர் ஆர்.என். ரவி கடந்த 4 மாதங்களாக ஆய்வு நடத்தினார். சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் பற்றியும் அவர் நிபுணர்களுடன் விவாதித்தார். அதில் அவருக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து கவர்னர் ரவி அந்த சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார். சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பாக சில விளக்கங்களை அவர் கேட்டுள்ளார். இதை சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று உறுதி செய்தார்.

    இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணி யன் கூறியதாவது:-

    கவர்னர் சில விளக்கங்கள் கேட்டு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார். இது தொடர்பாக நாங்கள் சட்ட நிபுணர்களுடன் விரிவாக ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் விளக்கங்களுடன் பதில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அந்த பதிலை தலைமை செயலாளர் பார்வைக்கு அனுப்பி இருக்கிறேன். அவர் சரிபார்த்து தந்ததும், மீண்டும் அது என் பார்வைக்கு வரும். அதன் பிறகு நான் அந்த பதில் விளக்கங்களை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்வேன்.

    அதற்கு பிறகு தமிழக அரசின் பதில் விளக்கம் முறைப்படி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். அதை ஏற்று கவர்னர் அனுமதி வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.

    கவர்னர் ஒப்புதல் தந்த பிறகு மாதவரத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கான கட்டிட பணிகள் தொடங்கப்படும். அதுவரை இந்த பல்கலைக்கழகத்தின் அலுவலகங்கள் அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா மருத்துவமனையில் செயல்படும்.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    இந்நிலையில், சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா குறித்த ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழக அரசு விரைவில் பதில் அளிக்க உள்ளது. ஆளுநரின் கேள்விகளுக்கு மருத்துவமத்துறை அதிகாரிகள் பதில் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொள்கிறார்.
    • மத்திய மந்திரிகள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்பு.

    இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா இன்று திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவில் பங்கேற்று நினைவு தபால் தலையை வெளியிடுகிறார். தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இதைப் பெற்றுக் கொள்கிறார்.

    மத்திய தகவல் தொடர்பு துறை இணை மந்திரி தேவுசிங் ஜெய்சிங்பாய் சவுகான், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ஏ.நாராயணசாமி, தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

    மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் எஸ்.ராஜேந்திர குமார் மற்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். 

    • பகவான் கிருஷ்ணர், அன்பு, இரக்கம், நீதி மற்றும் கடமை ஆகியவற்றின் பெருமதிப்பை கற்றுக் கொடுத்தார்.
    • கிருஷ்ணரின் போதனைகள் பல தலைமுறைகளைக் தாண்டி இன்றும் பொருந்துவதாக இருக்கிறது.

    கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில், தமிழ்நாடு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பகவான் கிருஷ்ணர், பல்வேறு அவதாரங்களாலும், வாழ்க்கை நிலைகளாலும், அன்பு, இரக்கம், நீதி மற்றும் கடமைகள் ஆகியவற்றின் பெருமதிப்பை நமக்கு கற்றுக் கொடுத்தார்.

    உலக நன்மைக்காக, அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய நாட்டை ஒரு முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுகின்ற பணியில் நம் நாடு அடியெடுத்து வைத்திருக்கும் இந்தப் பொற்காலத்தில், அறவாழ்வுக்கான ஒரு வழியாக, முழுமையாகவும், மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் நமது கடமையை மேற்கொள்ள வேண்டும் என்கிற அவரது செய்தி, இன்று நம் அனைவருக்கும் மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

    இந்த நன்னாளில், உலகின் வழிகாட்டியாகப் பரிணமிக்கவுள்ள நம் தேசத்தின் விழுமிய லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு, நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதற்கு, நாம் அனைவரும் நம்மை அர்ப்பணிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது 


    பகவான் கிருஷ்ணர், அன்பு, இரக்கம், நீதி மற்றும் கடமை ஆகியவற்றின் பெருமதிப்பை நமக்கு கற்றுக் கொடுத்தார்.தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணிகளைச் செய்வதுதான் நமது கடமை. அதன் முடிவுகளை இறைவனிடத்தில் விட்டுவிட வேண்டும் என்ற தத்துவத்தை போதித்தவர் ஸ்ரீகிருஷ்ண பகவான்.

    கிருஷ்ணரின் போதனைகள் பல தலைமுறைகளைக் தாண்டி இன்றும் பொருந்துவதாக இருக்கிறது. நாம் நம்முடைய கடமையை நேர்மையாகவும், அர்ப்பணிப்போடும், விருப்பு-வெறுப்பு இல்லாமலும் செய்வதற்கு நமக்கு வழிகாட்டி வருகிறது.

    பகவான் ஶ்ரீகிருஷ்ணர் நமக்கு காட்டிய உண்மை, நேர்மை ஆகிய பாதைகளை பின்பற்றி சமூகத்திற்கு நாம் தன்னலமற்ற சேவை செய்ய வேண்டும். இந்த இனிய நாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும், வளமும், ஒற்றுமையும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சனாதனத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
    • அமெரிக்கக் குண்டுகளால் இவை தகர்க்கப்பட்டதை நியாயப்படுத்தி கருத்துச் சொல்லி இருப்பது நாட்டில் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தும் சிந்தனை ஆகும்.

    இதுகுறித்து திமுக பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமன டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன தர்மம் குறித்தும், வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலும் பேசிய பேச்சுக்களுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆளுநரின் தனிப்பட்ட ஆன்மீக எண்ணங்கள் என்பவை அவரது தனிப்பட்ட விருப்பங்கள் ஆகும். அவற்றை விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் அரசியல் சட்டத்தின் நீதிநெறிமுறைகளுக்கு உட்பட்ட ஒரு பதவி நிலையில் இருக்கும் ஒருவர் தெரிவிக்கும் கருத்தானது அத்தகைய சட்டத்தின் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாகத்தான் அமைய வேண்டும். சட்டத்தை மீறியதாகவோ, சட்டத்தை மீறுவதாகவோ அமையக் கூடாது. இதனை ஆளுநர் அவர்கள் நன்கு அறிவார்கள் என நினைக்கிறேன்.

    சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப்போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மீகத்தில் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்" என்று பேசி இருக்கிறார். இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், அந்த சனாதன தர்மத்தை நிலைநாட்டும் வன்முறைப் பாதையை நியாயப்படுத்தியும் பேசி இருக்கிறார்.

    ''சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம். ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது" என்றும் பேசி இருக்கிறார் ஆளுநர் அவர்கள். இவை அவர் வகிக்கும் அரசியல் சட்டப் பதவிக்கு அழகல்ல.வெடிகுண்டு பாதையே சரி என்கிறாரா ஆளுநர்? யாருக்கு அவர் வழிகாட்டுகிறார்?

    ''இந்தியா என்பது இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு நாடாக உள்ளது'' என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை. ஆளுநரின் உரை என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையைக் கிழித்தெறிவதாக அமைந்துள்ளது. சமயச்சார்பற்ற தன்மையைப் பிரதிபலிக்க வேண்டிய ஒருவர், ஒரு சமயத்தின் சார்பாளராகக் காட்டிக் கொள்வதையும் தாண்டி, மாற்று மதத்தினர் மீது மனவேறும் மாறுபாடும் கொள்ளக் கூடிய கருத்துக்களையும், அதனை வன்முறைப்பாதையில் எதிர்கொள்ளலாம் என்ற தூண்டுதலையும் பொதுவெளியில் பேசுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.

    அமெரிக்கக் குண்டுகளால் இவை தகர்க்கப்பட்டதை நியாயப்படுத்தி கருத்துச் சொல்லி இருப்பது நாட்டில் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தும் சிந்தனை ஆகும். அமைதி தவழும் தமிழ்நாட்டில் இத்தகைய கருத்துகளை ஆளுநர் என்ற பொறுப்புள்ள பதவியில் இருக்கும் போது ஒருவர் சொல்வதன் பின்னணி பலத்த சந்தேகங்களையும் அச்சத்தையும் விதைப்பதாக உள்ளது. சிலரின் சதிச்சிந்தனைகளுக்கு ஆளுநரின் இந்தக் கருத்துகள் தூபம் போடுவதாகவும் உள்ளது.

    இந்திய சமுதாயம் வேற்றுமை மிகுந்தது ஆகும். பல்வேறு இனம், மொழி,மதம், பண்பாடு, உணவுப்பழக்க வழக்கம், உடைகள், எண்ணங்கள் கொண்ட மக்கள் வாழும் நாடு இந்தியா. இத்தகைய வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இதில் பிரிவினை எண்ணத்தை உருவாக்கி, இந்தியாவை நிலைகுலைய வைக்க பல்வேறு சீர்குலைவுச் சக்திகள் முயன்று வருகின்றன. சமீப காலமாகச் சீர்குலைவு சக்திகள் அதிகமாக தலை தூக்கி வருகின்றன. அத்தகைய சக்திகளுக்கு வழிகாட்டுவதாக ஆளுநர் அவர்களின் இந்தப் பேச்சு அமைந்திருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது. எனவே அதனைக் கண்டிக்க வேண்டியதாக உள்ளது.

    இந்தியாவை வழிநடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டம்தானே தவிர, சனாதன தர்மம் அல்ல என்பதை ஆளுநர் அவர்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். மனுதர்மத்தின் ஆட்சி நடக்கவில்லை, மக்களாட்சியே நடக்கிறது.

    சனாதன தர்மம் என்பது சாதிக்கொரு நீதி சொல்வது ஆகும். ஆனால் இப்போது நடப்பது சட்டத்தின் ஆட்சி. சட்டத்தின் முன் அனைவரும் சமமே தவிர, வேறுபாடுகள் இல்லை. மனிதனை நான்கு வர்ணமாகப் பிரித்து, அதில் உயர்வு தாழ்வு கற்பித்து - சலுகையிலும் தண்டனையிலும் கூட சாதி வேற்றுமையை நிலை நிறுத்திய சனாதன காலத்தின் மேல் 'பிரிட்டிஷ் ஆட்சியின் சட்டக் குண்டுகள்' வீசப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை எல்லாம் மறந்து விட்டு ஆளுநர் ரவி அவர்கள் இன்னும் சனாதனப் பிரமையில் இருக்கிறார். அமெரிக்க வெடிகுண்டுகளைப் பற்றி படித்திருக்கும் அவர், இந்தியாவின் உருவாக்கப்பட்ட சட்டங்களின் வரலாற்றை அறியாமல் இன்னமும் சனாதனம் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பது அவரது காலாவதியாகிப் போன சிந்தனையையே காட்டுகிறது.

    புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து தினமும் பேசிவரும் ஆளுநர் அவர்கள், இந்தியச் சமூக - சட்ட அமைப்புகளில் கடந்த 200 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களைக் கற்றுக் கொண்டு, அதனைப் படித்துப் பார்த்து, உள்வாங்கிக் கொண்டு கருத்துக்களைச் சொல்வது சரியாக இருக்கும். யாருக்குச் சார்பாகத் தன்னைக் காட்டிக் கொள்ள நினைக்கிறாரோ, அவர்களாலேயே மீண்டும் முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாதவை சனாதனக் கொள்கைகள் என்பதை அவர் மறந்துவிட வேண்டாம்.

    90 விழுக்காடு மக்களுக்கு எதிரானது சனாதனம். சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்துக்கு எதிரானது சனாதனம். எனவே, அதனை நியாயப்படுத்தி கருத்துகளை உதிர்ப்பது, இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கே எதிரானது ஆகும்.

    சனாதனத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அரசியலமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே ஆளுநர்கள் என்றுதான் சொல்கிறது. அத்தகைய எல்லையை மறந்தும், மீறியும் ஆளுநர் தனது கருத்தளிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது சரியல்ல. மதவாத, சனாதன, வர்ணாசிரம, வன்முறைக் கருத்துகளை ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு தெரிவிப்பது முறையுமல்ல, சட்டமீறல் ஆகும். அவர் ஏற்றுக் கொண்ட பதவியேற்பு உறுதிமொழிக்கு முற்றிலும் முரணானது ஆகும்.

    எனவே, இப்போது சொல்லிய கருத்தை திரும்பப் பெற்று, இனிச் சொல்லாமல் இருக்கவும் உறுதி எடுக்க ஆளுநரைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநில கவர்னர்களுக்கான மாத ஊதியம் ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனை மறுத்து பழைய ஊதியமே போதும் என சத்தீஸ்கர் கவர்னர் பால்ராம்ஜி தாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
    ராய்ப்பூர்:

    நாட்டின் அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்களுக்கான ஊதியம் கடந்த மார்ச் மாதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சமாக ஊதியம் உயர்த்தப்பட்டது. இந்த ஊதிய உயர்வு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தை முன் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, 26 மாதங்கள் நிலுவைத்தொகையுடன் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், சத்தீஸ்கர் கவர்னராக உள்ள  பால்ராம்ஜி தாஸ் ஊதிய உயர்வை ஏற்க மறுத்து கடந்த மாதம் கடிதம் எழுதியுள்ள நிகழ்வு தற்போது வெளியாகியுள்ளது. பழைய ஊதியமே தனக்கு போதுமானதாக இருப்பதாகவும், புதிய உயர்த்தப்பட்ட ஊதியம் தேவையில்லை என பால்ராம்ஜி தாஸ் அம்மாநில கணக்குப்பிரிவு தலைவருக்கு (தணிக்கை) கடிதம் எழுதியுள்ளார்.

    பால்ராம்ஜி தாஸின் கோரிக்கையை ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கணக்குப்பிரிவு தலைவர் பழைய ஊதியமே அவருக்கு செலுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
    ×