search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Xi Jinping"

    • தைவான் பிரச்சினை தொடர்பாக சீனா, அமெரிக்கா இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
    • 3வது முறையாக சீன அதிபரான பிறகு ஜி ஜின்பிங்கை, ஜோ பைடன் சந்திக்க உள்ளார்.

    வாஷிங்டன்:

    இந்தோனேசியாவின் பாலியில் வரும் 14ந்தேதி ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

    இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன. தைவான் பிரச்சினை தொடர்பாக சீனா அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில் 3வது முறையாக சீன அதிபரான பின்பு, ஜி ஜின்பிங்கை, ஜோ பைடன் சந்திக்க உள்ளார். அப்போது இரு தலைவர்கள் இடையே தகவல் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளிடையேயான உறவுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான் பிரதமர், சீனாவில் 2 நாள் அரசு முறை சுற்றுப் பயணம்.
    • சீன அதிபருடன், பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தை.

    பெய்ஜிங்:

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் செரீப் முதன்முறையாக இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். அவருடன் அந்நாட்டு அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக்குழுவும் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பாகிஸ்தானில் சீனா செயல்படுத்தி வரும் திட்டங்களில் பணியாற்றி வரும் தங்கள் நாட்டு பணியாளர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவது குறித்து ஷபாஸ் செரீப்பிடம் ஜி ஜின்பிங் கவலை தெரிவித்ததாக இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் சீனர்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களை அடுத்து, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்து அப்போது பாகிஸ்தான் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள அனைத்து சீன பணியாளர்கள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சீன நிறுவனங்களுக்கான பாதுகாப்பை ஷபாஸ் செரீப் உறுதிபடுத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இரு நாடுகள் இடையே அனைத்து தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த குறித்தும், பல்வேறு துறைகளில் தற்போதைய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு தரப்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • குஜராத் பால விபத்துக்கு அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட வெளிநாடுகள் இரங்கல் தெரிவித்தன.
    • குஜராத் பால விபத்தில் பலியானோருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல் தெரிவித்தார்.

    பீஜிங்:

    குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. ஆனால், 5 நாட்களில் பாலம் இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பால விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர்.

    இந்தத் துயர சம்பவத்திற்கு உலக நாடுகளில் இருந்து இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா, இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லிஸ், சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகம், போலந்து நாட்டின் வெளிவிவகார மந்திரி பிக்நியூ ரா உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், குஜராத் பால விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், சீன அரசாங்கம் மற்றும் சீன மக்கள் சார்பாக குஜராத் பாலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் லி உட்பட சீன உயர்மட்டத் தலைவர்களை சந்திக்க செரீப் திட்டம்.
    • பாகிஸ்தான் பிரதமருடன், அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக்குழுவும் பயணம்

    பெய்ஜிங்:

    சீன அதிபராக ஜி ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் செரீப் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். பிரதமராக பதவியேற்ற பிறகு செரீப் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

    சீனப் பிரதமர் லீ கெகியாங்கின் அழைப்பின் பேரில் சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமருடன், அந்நாட்டு அமைச்சர்கள் பிலாவல் பூட்டோ சர்தாரி,இஷாக் தார், அக்சன் இக்பால், மரியம் ஔரங்கசீப்,சாத் ரபீக் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்குழுவும் பங்கேற்றுள்ளது. தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் செரீப்பை சீன மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.

    தமது பயணத்தின் போது அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லி உட்பட சீன உயர்மட்டத் தலைவர்களை சந்திக்கும் பாகிஸ்தான் பிரதமர் இரு தரப்பு உறவுகள், அந்நாட்டுடனான வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    குவாதார் துறைமுகத்தை மேம்படுத்த சீனாவின் ஒத்துழைப்பு மற்றும் பல பில்லியன் டாலர் மதிப்பில் செயல்படுத்தப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் குறித்தும் இந்த பேச்சுவார்த்தையின்போது ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

    • ஜி ஜின்பிங் பாகிஸ்தானின் உண்மையான நண்பர் என ஆரிப் ஆல்வி வாழ்த்து.
    • இது சாமர்த்தியமான பணி திறனுக்கு கிடைத்த பிரகாசமான கவுரவம்.

    இஸ்லாமாபாத்:

    சீன தலைநகர் பிஜீங்கில் நடைபெற்ற கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டின் முடிவில் ஜி ஜின்பிங் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 3வது முறையாக அவர் சீனாவின் அதிபராகவும் தேர்வானார்.

    இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பாகிஸ்தானின் உண்மையான நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரீப், வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒட்டு மொத்த பாகிஸ்தான் சார்பாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். சாமர்த்தியமான பணி திறனுக்கும், சீன மக்களுக்குச் சேவையாற்றுவதில் அசைக்க முடியாத பக்திக்கும் இது அவருக்கு கிடைத்த ஒரு பிரகாசமான கவுரவம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16-ந்தேதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது.
    • அமெரிக்காவுடன் மோதல், தைவான் விவகாரம் ஆகியவற்றுக்கு மத்தியில் சீன அதிபராக ஜின்பிங் 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

    பீஜிங்:

    சீனாவில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 2013-ம் ஆண்டு முதல், அதிபர் பதவியில் ஜி ஜின்பிங் இருந்து வருகிறார்.

    சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே அதிபராக இருப்பார்.

    இதில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16-ந்தேதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது. இதில் 3-வது முறையாக அதிபராக நீடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஜின்பிங் தீவிரமாக செயல்பட்டார்.

    ஒரு வாரம் நடந்த இந்த மாநாடு நேற்று முடிவடைந்தது. இதில் அதிபர் ஜின்பிங் பேசியபோது, தனது ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். மேலும் எதிர்க்கட்சி நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

    2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற சீன ஆளும் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கட்சி செயல்பாடு, அடுத்த பொதுச்செயலாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர்.

    மாநாட்டில் 205 உறுப்பினர்களை கொண்ட புதிய மத்திய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த குழு இன்று காலை கூடி கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுத்தது.

    ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் ஜின்பிங் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஜின்பிங் 3-வது முறையாக அதிபராக தேர்வாகிறார்.

    7 பேர் கொண்ட கட்சியின் உயர்மட்ட புதிய பொலிட்பீரோ நிலைக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த குழுவுக்கு ஜின்பிங் தலைமை தாங்குகிறார்.

    கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஜின்பிங் உரையாற்றினார். அவர் கூறும்போது, "நமது பலத்தை ஒன்றாக இருந்து ஒற்றுமையுடன் முன்னேறுவோம் என்றார்.

    சீனாவில் ஒருவர் 2 முறை மட்டும்தான் அதிபராக இருக்கலாம் என்ற விதிமுறையை 2018-ம் ஆண்டு அதிபர் ஜின்பிங் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவுடன் மோதல், தைவான் விவகாரம் ஆகியவற்றுக்கு மத்தியில் சீன அதிபராக ஜின்பிங் 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

    நேற்றைய கூட்டத்தில் முன்னாள் அதிபர் ஹு ஜிண்டாவ், திடீரென்று எழுந்து அதிபர் ஜின்பிங் அருகே சென்றார். உடனே ஹு ஜிண்டாங்கை அதிகாரிகள் வலுகட்டாயமாக அழைத்து சென்றனர்.

    இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக கம்யூனிஸ்டு கட்சி விளக்கம் அளித்தது. அதில் ஹு ஜிண்டாங் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தனி அறைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்று தெரிவித்துள்ளது.

    Heading

    Content Area

    • ஹாங்காங்கை சீனா முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது.
    • குழப்பம் முடிவுக்கு வந்து ஹாங்காங் சீன ஆட்சிக்கு கீழ் மாறியுள்ளது.

    பிஜீங்:

    கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வரும் சீனாவில் 5 ஆண்டுக்கு ஒருமுறை அக்கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும். அந்த மாநாடடில் கூட்டத்தில் நாட்டின் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வகையில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாடு இன்று தொடங்கியது. 


    ஒரு வாரம் நடைபெறும் இந்த மாநாட்டை சீன அதிபரும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ஹாங்காங்கை சீனா முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது என்றார். இதனால் குழப்பம் முடிவுக்கு வந்து ஹாங்காங் சீன ஆட்சிக்கு கீழ் மாறியுள்ளது என அவர் தெரிவித்தார். அதேபோல் பிரிவினைவாதம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரான தைவான் நிலைப்பாட்டை எதிர்ப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்றும், இதற்கான பெரும் போராட்டத்தையும் நடத்தி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 300 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின் முடிவில் சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தொடர்ந்து 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
    • இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பீஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியில் பங்கேற்றார்.

    பீஜிங்:

    வடக்கு எல்லையில் சீனப்படையுடன் இந்தியா சண்டையிட்டு வரும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவியது. சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில் பல பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16-ம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஜி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் 80 கிமீ நீளமுள்ள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங், சீன ராணுவம் பெய்ஜிங்கை நோக்கி நகர்வதாகக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எனினும், இந்த தகவல் அனைத்தும் அரசாங்கத்தால் உறுதி செய்யப்படவில்லை.

    இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பீஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியில் பங்கேற்றார். இதன்மூலம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக வெளியான வதந்திகளுக்கு அதிபர் ஜி ஜிங்பிங் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    • 80 கிமீ நீள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது.
    • புதிதாக பரவும் வதந்தி சரிபார்க்கப்பட வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    பெய்ஜிங்:

    வடக்கு எல்லையில் சீன படையுடன் இந்தியா சண்டையிட்டு வரும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில் பல பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் 80 கிமீ நீளமுள்ள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் வணிகப் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டதால், ஜி ஜின்பிங்கின் கைது பற்றிய தகவல்கள் பெய்ஜிங்கிலும் உலகளாவிய இணையத்திலும் பரவுகின்றன.

    சீன அரசை ராணுவம் கைப்பற்றிவிட்டதாகவும், பெய்ஜிங் நகரம் முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சிலர் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    சீனாவில் கிட்டத்தட்ட 60% விமானங்கள் எந்த விளக்கமும் இல்லாமல் வெள்ளிக்கிழமை தரையிறக்கப்பட்டதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நியூஸ் ஹைலேண்ட் விஷனின் மற்றொரு தகவலில் முன்னாள் சீன அதிபர் ஹு ஸின்டாவோ மற்றும் முன்னாள் பிரதமர் வென் ஜிபாவோ ஆகியோர் சீன அரசு அதிகாரத்தை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 22ஆம் தேதி, பெய்ஜிங் நோக்கி ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதாகவும் ஊடகங்களில் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங், சீன ராணுவம் பெய்ஜிங்கை நோக்கி நகர்வதாகக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

    எனினும், இந்த தகவல் அனைத்தும் அரசாங்கத்தால் உறுதி செய்யப்படவில்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது அரசு ஊடகத்திலோ இன்னும் அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் வெளியாகவில்லை. எனினும், சீன அரசியலில் இந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி பதிவிட்டுள்ளார். "புதிதாக பரவும் வதந்தி சரிபார்க்கப்பட வேண்டும்: ஜி ஜிங்பிங் பெய்ஜிங்கில் வீட்டுக் காவலில் உள்ளாரா? ஜி ஜின்பிங் சமீபத்தில் சமர்கண்டில் இருந்தபோது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், கட்சியின் ராணுவப் பொறுப்பில் இருந்து ஜியை நீக்கியதாகக் கருதப்படுகிறது. அதன்பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் வதந்தி பரவுகிறது" என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார். அவரது ட்வீட்டுக்கு சிலர் பதில் அளித்து, தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

    • கொரோனா தொற்றுக்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
    • கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக அவர் எந்த வெளிநாட்டுக்கும் பயணம் மேற்கொள்ளாமல் இருந்துவந்தார்.

    பீஜிங்:

    கொரோனா தொற்றுக்கு பிறகு முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் அதிபர் ஜின்பிங் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். முதல்கட்டமாக 14-ம் தேதி கஜகஸ்தான் செல்லும் அவர், பின்னர் அங்கிருந்து உஸ்பெகிஸ்தானுக்குச் செல்கிறார். அங்கு சமர்கண்ட் நகரில் 15, 16 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜி ஜின்பிங் பங்கேற்கிறார் என தெரிவித்துள்ளது.

    அதிபர் ஜி ஜிங்பிங் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2 நாள் பயணமாக மியான்மருக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீன அதிபர் ஜின்பிங் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது.
    • சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு அடுத்த மாதம் நடக்கிறது.

    பீஜிங்

    சீன அதிபர் ஜின்பிங், 2-வது தடவையாக அதிபராக இருக்கிறார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது.

    இருப்பினும், அதிபருக்கான 10 ஆண்டு பதவிக்கால உச்சவரம்பு கடந்த 2017-ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டு விட்டது. இதனால், ஜின்பிங் தனது ஆயுட்காலம் வரை அதிபராக இருக்கலாம்.

    சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். 2017-ம் ஆண்டுக்கு பிறகு, அடுத்த மாதம் இந்த மாநாடு நடக்கிறது.

    மாநாட்டில், கட்சியின் சட்ட திட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. அதிபர் ஜின்பிங்குக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படுகிறது. அவர் தற்போது, அதிபராக மட்டுமின்றி, ராணுவத்தின் தலைவராகவும், கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.

    இனிமேல், அவர் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக உயர்த்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த நிறுவனர் மாவோ மட்டுமே கட்சி தலைவர் பதவியை வகித்துள்ளார். அவருக்கு பிறகு ஜின்பிங் தலைவர் ஆகிறார். ஏற்கனவே அவருக்கு 'முக்கிய தலைவர்' என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஜின்பிங் இன்னும் 5 ஆண்டுகளோ அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கோ அதிபராக இருப்பதற்கு கட்சி மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதுவரை, மறைந்த மாவோ மட்டுமே 2 தடவைக்கு மேல் அதிபராக இருந்துள்ளார். மாவோவுக்கு பிறகு அந்த பெருமையை ஜின்பிங் பெறுகிறார்.

    இதுதவிர, கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில், புதிய பிரதமர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏனென்றால், தற்போதைய பிரதமர் லி கேகியாங் ஓய்வுபெற விருப்பம் தெரிவித்துள்ளார்.

    கட்சி மாநாட்டில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களால் ஜின்பிங்கின் கரம் வலுவடையும் என்றும், அவருக்கு சவால்களே இருக்காது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • தைவானை கைப்பற்ற சீனா தனது படைபலத்தை பயன்படுத்த தயங்காது என மிரட்டி வருகிறது.
    • சீனாவின் ஒரே நாடு ஒரே கொள்கையை அமெரிக்கா மதிக்க வேண்டும்.

    பீஜிங் :

    அமெரிக்கா, சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. குறிப்பாக தைவான் விவகாரத்தில் இருநாடுகள் இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.

    தைவான் தன்னை சுதந்திர நாடாக கூறி வருகிறது. ஆனால் சீனாவோ தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது.

    அதுமட்டும் இன்றி அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற சீனா தனது படைபலத்தை பயன்படுத்த தயங்காது எனவும் சீனா மிரட்டி வருகிறது.

    இதனால் சீனா-தைவான் இடையே பதற்றம் நீடித்து வரும் சூழலில் தைவானுக்கு அமெரிக்கா பல வழிகளில் உதவி செய்து வருகிறது. இதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.

    இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கடும் ஆத்திரமடைந்த சீனா, நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால் அதற்குரிய விளைவுகளை அமெரிக்கா சந்திக்க வேண்டியிருக்கும் என சீன எச்சரித்தது.

    இந்த பரபரப்பான சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் தொலைபேசியில் பேசினர். நேற்று முன்தினம் நடந்த இந்த தொலைபேசி உரையாடல் சுமார் 3 மணி நேரம் நீடித்தது. அப்போது இருநாடுகளுக்கு இடையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

    அதோடு வருகிற நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டின்போது இருவரும் நேரில் சந்தித்து பேசுவது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

    இந்த பேச்சுவார்த்தையில் தைவான் விவகாரம் முக்கியத்துவம் பெற்றதாகவும், தைவான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என ஜோ பைடனை ஜின்பிங் பகிரங்கமாக எச்சரித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தைவான் விவகாரம் குறித்து ஜோ பைடனிடம் ஜின்பிங் கூறியதாவது:-

    சீனாவின் ஒரே நாடு ஒரே கொள்கையை அமெரிக்கா மதிக்க வேண்டும். தைவான் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு வெளிநாட்டு குறுக்கீட்டையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது.

    தைவான் விஷயத்தில் சீன அரசு மற்றும் மக்களின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது. சீனாவின் 1.4 பில்லியன் மக்கள் சீனாவின் தேசிய இறையாண்மை மற்றும் ஒற்றுமையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளனர். நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிந்து போவார்கள். இதை அமெரிக்க தரப்பு புரிந்து கொள்ளும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு ஜின்பிங் கூறினார்.

    ×