search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wild elephants"

    • யானைகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை இடித்து தள்ளி சேதப்படுத்தியது.
    • இதனால் அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே வனப்பகுதியை ஒட்டி உள்ள அண்ணா நகர், இரட்டை சாலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை வீட்டு இரண்டு காட்டு யானைகள் வெளியேறி பவானிசாகர் சாலைக்கு வந்தது. பின்னர் குப்பை கிடங்கு பகுதிக்கு வந்த யானைகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை இடித்து தள்ளி சேதப்படுத்தியது.

    இதை கண்டதும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் யானைகளை பட்டாசு வெடித்து வன பகுதிக்குள் விரட்டினர். இதனால் அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,

    வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட அகழிகள் ஆழமாக இல்லாமல் மண் மூடி கிடக்கிறது. இதன் காரணமாக யானைகள் ஊருக்குள் சுலபமாக புகுந்து விடுகின்றன.

    பயிர்களையும் சேதம் செய்து வருகிறது. எனவே மீண்டும் அகழி வெட்ட வேண்டும். மேலும் அடர்ந்த வனப் பகுதிக்குள் யானைகளை விரட்ட வனத்துறையினர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • இன்று காலை மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது.
    • யானைகள் கூட்டத்தை பார்த்ததும் பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி விட்டார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு 3-வது வழிப்பாதையாக வெள்ளியங்காடு-மஞ்சூர் பாதை உள்ளது.

    இந்த பாதை வழியாக மஞ்சூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதுதவிர நீலகிரிக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதனால் இந்த சாலையிலும் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்த சாலையானது அடர்ந்த வனப்பகுதியையொட்டி உள்ளதால் அடிக்கடி சாலைகளில் காட்டு யானை, காட்டு பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    பஸ் வெள்ளியங்காடு அருகே வந்தபோது, வனத்தைவிட்டு வெளியேறிய 5 காட்டு யானைகள் நடுரோட்டிற்கு வந்தன. அங்கு வந்ததும், அரசு பஸ்சை காட்டு யானைகள் கூட்டம் மறித்தது.

    யானைகள் கூட்டத்தை பார்த்ததும் பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி விட்டார். மேலும் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். ஆனால் யானை அரைமணி நேரத்திற்கும் மேலாக அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். பஸ் டிரைவரும், பயணிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கினர். அரைமணி நேரத்திற்கு பிறகு யானைகள் கூட்டம் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

    இதையடுத்து பஸ் டிரைவரும், பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதன் பின்னர் பஸ்சை பஸ் டிரைவர் வேகமாக இயக்கி சென்றார். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    • யானைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே யானை நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து காட்டு பகுதிக்கு சென்று இருக்கும்.
    • ஊருக்குள் சுற்றி திரியும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    ஜோலார்பேட்டை:

    கர்நாடக வனப்பகுதியில் இருந்து கடந்த 19 நாட்களுக்கு முன்பு வெளியேறிய 5 யானைகளில் 2 யானைகள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி, ஏலகிரி மலை பகுதியில் சுற்றி வருகிறது.

    யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது அதில் இரண்டு குழுவினர் யானை எந்த பக்கம் செல்கிறது. என கண்காணித்து வருகின்றனர்.

    மற்றொரு 3 குழுவினர் யானை முகாமிட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    யானைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே யானை நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து காட்டு பகுதிக்கு சென்று இருக்கும்.

    பொதுமக்கள் யானையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து யானைக்கு தொந்தரவு செய்ததால் அது காட்டிற்குள் செல்ல முடியாமல் ஊருக்குள் நுழைந்த சுற்றி திரிந்து வருகிறது. இன்று காலை 2 யானைகளும், சவடிகுப்பம் பகுதியில் சுற்றி திரிந்தன.

    ஊருக்குள் சுற்றி திரியும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக முதுமலை சரணாலயத்தில் இருந்து உதயன், வில்சன் என்ற 2 கும்கி யானைகளும் பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை லாரி மூலம் இன்று காலை கொண்டுவரப்பட்டன.

    மேலும் யானை பாகன்கள் உடன் வந்துள்ளனர். கும்கி யானைகள் பயணம் செய்ததால் களைப்பாக உள்ளது. அந்த யானைகளை அதிகாலையிலேயே குளிக்க வைத்தனர்.

    மேலும் தேவையான உணவு வழங்கப்பட்டது. இன்று மாலை அல்லது நாளை காலையில் காட்டு யானைகள் கும்கி யானை மூலம் விரட்டப்படும் என தெரிவித்தனர்.

    • மசினக்குடி அருகில் உள்ள மாயாற்றுக்கு ஒரு காட்டு யானை தண்ணீர் குடிக்க வந்தது.
    • மசினகுடி மாயாறு பகுதியில் யானைகளின் பயங்கர சண்டை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு மசினகுடி, மாயாறு, சீகூர், மங்களப்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இவை மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதிகள் ஆகும். முதுமலை புலிகள் சரணாலயத்தில் வளைந்து நெளிந்து ஓடும் மாயாறு, வனவிலங்குகளுக்கு நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. எனவே காட்டு விலங்குகள் தினமும் இங்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் மசினக்குடி அருகில் உள்ள மாயாற்றுக்கு ஒரு காட்டு யானை தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது அங்கு மற்றொரு யானையும் பிளிறியபடி வந்தது. அப்போது 2 யானைகளும் ஒன்றுக்கொன்று முறைத்து பார்த்தபடி இருந்தன. இந்த நிலையில் அவை திடீரென ஒன்றுக்கொன்று சண்டை போட தொடங்கின. எனவே அந்தப் பகுதியில் யானைகளின் பிளிறலும், தந்தங்கள் மோதிக் கொள்ளும் சப்தமும் பெரிதாக எதிரொலித்தது. இதனைக்கேட்ட பொதுமக்கள் அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர். அப்போது அவர்களில் ஒரு சிலர் காட்டு யானைகள் ஆக்ரோசத்துடன் மோதிக்கொண்ட காட்சிகளை வீடியோவாக பதிவு செய்தனர்.

    மசினகுடி மாயாறு பகுதியில் யானைகளின் பயங்கர சண்டை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு 2 யானைகளும் அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்து விட்டன.

    மசினகுடியில் காட்டு யானைகளின் ஆக்ரோஷ சண்டையை வீடியோ எடுத்த ஒருவர், அந்த காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகுவும், மசினக்குடி காட்டு யானைகளின் ஆக்ரோஷ சண்டையை, டிவிட்டர் இணையதள பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.

    2 காட்டு யானைகள் ஆக்ரோஷமாக மோதி கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை நிறுத்தி யானைகளுக்கு வழிவிட்டனர்.
    • வனத்துறையினர் யானை கூட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு மசினகுடி சாலையில் யானை கூட்டம் சாலையை கடந்து சென்றது. இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.

    மசினகுடி, தெப்பகாடு சாலை, மாயார் சாலை, கூடலூர், மைசூர் சாலைகளில் பகல் நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் மசினகுடி, தெப்பகாடு நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் 10 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை நிறுத்தி யானைகளுக்கு வழிவிட்டனர். இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

    சில மணி நேரங்களுக்குப் பிறகு யானைகள் தானாகவே சாலையை கடந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

    மேலும் அந்த சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதை வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் அருகில் சென்று செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. வனத்துறையினர் யானை கூட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • அதிகாலை புகுந்த 4 காட்டு யானைகள் தென்னங்குருத்துகளை தின்றும் கிளைகளை முறித்தும் சேதப்படுத்தின.
    • யானைகள் அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் திருமூர்த்தி அணையின் பின்புறம் ஈசல் தட்டு கிழக்கு பகுதி விவசாயிகள் குமார், ஆறுமுகம் ஆகியோருக்கு சொந்தமான தென்னந்தோப்புகள் உள்ளன. இங்கு அதிகாலை புகுந்த 4 காட்டு யானைகள் தென்னங்குருத்துகளை தின்றும் கிளைகளை முறித்தும் சேதப்படுத்தின. இதனால் சுமார் 15 மரங்கள் சேதமாகின. தொடர்ந்து யானைகள் அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இரவு நேரம் தோட்டத்தில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே யானைகளை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய கிராமங்களுக்கு புகுந்து விடுகிறது.
    • கிராமத்தில் சுற்றிய காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய கிராமங்களுக்கு புகுந்து விடுகிறது. அவ்வாறு வரும் யானைகள், விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன், வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி வருகிறது. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இருந்த போதிலும் யானைகள் ஊருக்குள் வந்த வண்ணம் தான் உள்ளன.

    இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் நஞ்சுண்டாபுரம் கிராமம் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த கிரா மத்திற்குள் குட்டிகளுடன் 6-க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தன.இந்த யானைகள், கிராமத்தில் உள்ள சாலைகளில் ெவகுநேரமாக சுற்றி திரிந்தன. இதற்கிடையே ஊருக்குள் யானைகள் புகுந்து விட்டதை அறிந்த பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து, கிராமத்தில் சுற்றிய காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதே போல அதிகாலை நேரத்தில் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரங்கசாமி என்பவரின் தோட்டத்திற்குள் ஒற்றை யானை புகுந்துள்ளது.

    வெயில் காரணமாக வனப்பகுதிக்குள் வறட்சி நிலவுவதன் காரணமாக, தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    • வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் அடிக்கடி யானை கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
    • விவசாய நிலங்களுக்குள் புகுந்து காபி, வாழை, மிளகு உள்ளிட்ட பயிர்களை யானைகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைகின்றனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் காபி, மிளகு, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் அடிக்கடி யானை கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தண்ணீர் தேடி இடம்பெயரும் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. பன்றிமலை அருகே அழகுமலை பகுதியில் கடந்த 4 நாட்களாக யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கன்னிவாடி வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    ஆனால் இரவு நேரத்தில் மீண்டும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காபி, வாழை, மிளகு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

    எனவே யானைகள் நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழங்குடியின கிராமங்களில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது.
    • சாலையின் குறுக்கே யானைகளை கண்டால் ஒலிப்பான் ஒலிப்பதை தவிர்க்க வேண்டும்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே குஞ்சப்பனை, மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர், செம்மனாரை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் பலா மரங்கள் உள்ளன.

    தற்போது சீசன் காரணமாக மரங்களில் பலா பிஞ்சுகள் காய்த்து குலுங்கி வருகின்றன. இந்த பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் வந்து முள்ளூர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு உள்ளன.

    அவை அவ்வப்போது சாலைகளில் நடமாடி வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    குஞ்சப்பனை சுற்றுவட்டார பழங்குடியின கிராமங்களில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இந்த பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளி பகுதியில் இருந்து வந்து முகாமிட்டு உள்ளன.

    எனவே கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் தங்களது வாகனங்களை இயக்க வேண்டும். சாலையின் குறுக்கே யானைகளை கண்டால் ஒலிப்பான் ஒலிப்பதை தவிர்ப்பதுடன், யானைகளுக்கு தொல்லை கொடுக்கவோ அல்லது செல்போனில் படம் பிடிக்கவோ முயற்சி செய்யக்கூடாது. இதேபோல பழங்குடியின மக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் வீட்டை விட்டு தனியாக வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

    பணிக்கு செல்லும்போது தொழிலாளர்கள் ஒன்றாக செல்ல வேண்டும். தனியாகச் செல்லக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோர கிராமங்கள் மட்டுமின்றி காட்டு யானைகள் கடந்த சில வாரங்களாக பலா மரங்கள் இல்லாத கொணவக்கரை, பர்ன்சைடு, கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளிலும் உலா வந்த வண்ணம் உள்ளது.

    • பலா மரங்களில் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன
    • பொதுமக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்

    குன்னூர்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக அங்கிருந்து காட்டுயானைகள் இடம்பெயர்ந்து, குன்னூர் வனப்பகுதிக்கு வர தொடங்கியுள்ளன.

    இதற்கிடையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள பலா மரங்களில் காய்கள் காய்த்து குலுங்குகின்றன. இதை சுவைக்க காட்டுயானைகள் படையெடுக்கின்றன. அவை குழுக்களாக பிரிந்து பல்வேறு தோட்ட பகுதியில் உலா வருகின்றனர்.

    குறிப்பாக பர்லியார் பகுதியில் குட்டியுடன் காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். அங்குள்ள மரங்களில் இருந்த பலாப்பிஞ்சுகளை காட்டுயானைகள் ருசித்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காட்டுயானைகளை விரட்டியடித்தனர். மேலும் பொதுமக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    டிரோன் மூலம் காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறையை சேர்ந்த டீக்கடைக்காரர் ஆனந்தகுமார்(வயது43). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் யானை தாக்கி இறந்தார்.

    இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து யானையை விரட்ட முதுமலையில் இருந்து சீனிவாசன், விஜய் உள்ளிட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.

    கும்கி யானைகள் வரவழைத்து, வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஓவேலி அடுத்த பாரம் பகுதியை சேர்ந்த மாலு என்ற மும்தாஜ் யானை தாக்கி உயிரிழந்தார்.

    ஆனால் அவரை தாக்கியதும், ஆனந்தகுமாரை தாக்கியதும் ஒரே யானையா அல்லது வேறு யானையா என்பது தெரியவில்லை. இதனை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

    தொடர்ந்து 3 நாட்களில் யானை தாக்கி 2 பேர் இறந்ததால் மக்களும் அச்சம் அடைந்து, உடனே இங்கு சுற்றி திரியக்கூடிய காட்டு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர். வனத்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து நேற்று கூடுதலாக முதுமலையில் இருந்து சங்கர், கிருஷ்ணா ஆகிய 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளது.

    4 கும்கி யானைகள் உதவியுடன் பாரம், 4-ம் நெம்பர் உள்பட பல்வேறு இடங்களில் வனத்துறையினர் காட்டு யானைகளை தேடி விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் டிரோன் மூலம் காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதுதவிர காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை உஷார்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்ல கூடாது. மேலும் யானைகளுக்கு பிடித்தமான பயிர்களை நடவு செய்யக்கூடாது. வீடுகளின் அருகே பலா மரங்கள் இருந்தால், அதில் விளைந்துள்ள காய்கள், பழங்களை அகற்ற வேண்டும். பலா பழங்களை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் ஊருக்குள் வர வாய்ப்புள்ளது என்றார்.

    காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முள்ளூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரவேணு:

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை, மாமரம், முள்ளூர் என 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களையொட்டி தேயிலை தோட்டங்களும், வனப்பகுதிகளும் நிறைந்து காணப்படுகிறது. தற்போது இந்த பகுதிகளில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது.

    இதன் காரணமாக வனத்தில் வசிக்கும் யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றி திரிந்து வருகின்றன.

    மேலும் கிராமங்களையொட்டிய தேயிலை தோட்ட பகுதியில் முகாமிடுவதால் மக்கள் மிகுந்த அச்சத்திலேயே உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் வெளியில் வரவே மக்கள் அச்சப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முள்ளூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எப்போது என்ன நடக்குமோ என்ற பயத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

    இங்கு முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையே யானைகள் நடமாட்டம் இருப்பதால், குடியிருப்பு வாசிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    ×