search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayagar Chathurthi"

    செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இன்று கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் தெருக்கள் வெறிச்சோடியுள்ளன. #VinayagarChathurthi #GaneshChathurthi
    செங்கோட்டை:

    செங்கோட்டையில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

    ஏ.டி.எம்.கண்ணாடி உடைக்கப்பட்டது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து செங்கோட்டையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இதனிடையே பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் குண்டாறில் இன்று கரைக்கப்பட உள்ளன. அப்போது விநாயகர் சிலைகள் அனைத்தும் மீண்டும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். இந்த ஊர்வலத்தின்போது மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் முன் எச்சரிகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இதற்காக வழக்கத்தை விட கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் நேரடியாக கண்காணித்து வருகிறார்.

    கலவர தடுப்பு வாகனமான வருண் வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனிடையே செங்கோட்டையில் நேற்று நடந்த மோதலை தொடர்ந்து இன்று கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. தெருக்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். #VinayagarChathurthi  #GaneshChathurthi

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு இன்று 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். #VinayagarChathurthi
    மலைக்கோட்டை:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் மலைக்கோட்டையின் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு படைப்பதற்காக 150 கிலோவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. அந்த கொழுக்கட்டையை இரண்டாக பிரித்து, உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ, மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ என படைக்கப்பட்டது.

    முன்னதாக இன்று காலை 9மணியளவில் மடப்பள்ளியில் இருந்து தொட்டில் கட்டி கொழுக்கட்டையை மலை உச்சிக்கும், அடிவாரத்திற்கும் தூக்கி சென்று உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு வைத்து படையல் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொழுக்கட்டைகள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி மலைக்கோட்டை கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வருகிற 26-ந்தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இதில் தினமும் விநாயகர் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதே போல் திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். #VinayagarChathurthi #GaneshChathurthi
    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். #VinayagarChathurthi #GaneshChathurthi
    திருப்பத்தூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

    9-ம் திருவிழாவான நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    தேரோட்ட திருவிழாவையொட்டி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    10-ம் நாளான இன்று காலை கோவில் எதிரே உள்ள குளத்தில் விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதன் பின்னர் கற்பக விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

    இன்று இரவு 11 மணிக்கு ஐம்பெரும் தீர்த்தங்கள் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

    பக்தர்களின் வசதிக்காக காரைக்குடி, புதுக்கோட்டை பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் விநாயகரை தரிசிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.  #VinayagarChathurthi #GaneshChathurthi

    விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விழாவுக்காக அரசு விதித்த கட்டுப்பாடுகளை காணலாம். #VinayagarChathurthi #GaneshChathurthi
    சென்னை:

    இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி சென்னையில் 2 ஆயிரத்து 520 சிலைகளை வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விநாயகர் சிலை வைக்கப்படும் இடம் பொது இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். இதேபோல சவுண்ட் சர்வீஸ் பயன்படுத்த உரிமம் மற்றும் அனுமதிக்கான சான்று, தீ தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.

    பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் களி மண்ணால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். ரசாயன மாசு ஏற்படுத்தும் மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் பொருட்கள் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இடத்தின் சுற்றுப்புறத்தில் இல்லாததையும், முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.

    பிரதிஷ்டை செய்யும் விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. பிற வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகே சிலைகள் பிரதிஷ்டை செய்வதை தவிர்க்க வேண்டும். விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு என்று அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்ட இடங்களிலேயே கரைக்கவேண்டும்.

    பொது இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நிறுவிய நாளில் இருந்து 5 நாட்களுக்குள் கரைப்பதற்கு எடுத்துச் செல்ல வேண்டும். விநாயகர் சிலைகளை எடுத்துச்செல்வதற்கு மினி லாரி, டிராக்டர் மட்டுமே பயன்படுத்தவேண்டும். மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது.

    விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இடங்கள், கரைக்கும் இடங்கள் மற்றும் ஊர்வலமாக செல்லும்போது பட்டாசுகள் வெடிக்கக் கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். #VinayagarChathurthi #GaneshChathurthi
    வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் 4000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபடுகிறது.
    வேலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. களிமண்ணால் செய்யபட்ட விநாயகர் சிலைகள் ரூ.80 முதல் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான விநாயகர் சிலை, குடைகள், வேர்க்கடலை, சோளம், கம்பு, வாழை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். இதனால் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்ட தொடங்கிவிட்டது.

    வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னனி சார்பில் மட்டுமே 1500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது. வேலூர் மாநகரில் மட்டுமே 1008 சிலைகள் அமைக்க இந்து முன்னனி ஏற்பாடு செய்துள்ளது.

    மேலும் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளன. உள்ளாட்சி, தீயணைப்பு, மின்சார வாரியம், மாசுகட்டுப்பாடு வாரியம் போலீசார் நெடுஞ்சாலை துறை பொதுப்பணித்துறை ஆகியவற்றின் அனுமதியை பெற வேண்டும்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் மதியம் 12 மணிக்கு தொடங்கி அறிவிக்கபட்ட இடத்துக்கு மாலை 4 மணிக்குள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது.

    விநாயகர் சிலைகளுக்கு விழா குழுவினரை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதையொட்டி மாவட்டம் முழுவதுமு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. பஸ் நிலையம் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாட வேண்டும். என்று போலீசார் அறிவு றுத்தியுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தின் 1300 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளன. கடந்த ஆண்டு விநாயகர் சிலை வைத்தவர்களுகுகு மட்டும் போலீசார் அனுமதி வழங்கினர்.

    புதிய இடங்களில் சிலை வைக்க அனுமதியில்லை. விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாட மக்களுக்கு நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். #VinayagarChathurthi #OPanneerselvam
    சென்னை:

    துணை முதல் அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முழு முதற்கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஞானமே வடிவான திருமேனியைக் கொண்ட விநாயகப்பெருமானின் திருவருளால் நாடெங்கும் நலமும், வீடெங்கும் வளமும் பெருகட்டும் என்று அம்மாவின் வழியில் மனதார வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். #VinayagarChathurthi #OPanneerselvam
    விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில், 2500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. #VinayagarChathurthi
    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் 2500 இடங்களில் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

    விநாயகர் சிலைகளை வைப்பதற்கு இந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு விழா குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுநல அமைப்பினரும் விநாயகர் சிலைகளை வைக்கிறார்கள்.

    இந்த சிலைகளுக்கு தினமும் பூஜைகள் செய்யப்படும். இதன் பிறகு குறிப்பிட்ட நாட்களில் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.

    எந்தெந்த தேதிகளில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கலாம் என்பது பற்றி போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது பற்றி இன்று மாலை முடிவெடுக்கப்பட இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    விநாயகர் சிலைகளை வைப்பவர்கள் போலீசாருடன் இணைந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக விழாக் கமிட்டியினருக்கு பல்வேறு ஆலோசனைகளும் அளிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டிப்பாக விழா குழுவினர் பின்பற்ற வேண்டும். #VinayagarChathurthi
    விநாயகப் பெருமானின் திருவருளை மக்கள் அனைவரும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். #VinayagarChathurthi #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ஞான முதல்வனாகிய விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை தம் திருவுருவாய் கொண்ட விநாயகப் பெருமானின் திருஅவதார தினமான இந்நன்னாளில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம்புல், எருக்கம் பூ, செம்பரத்திப் பூ, வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு பூஜை செய்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், கரும்பு, பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, மக்கள் விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

    என்பதற்கேற்ப, விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #VinayagarChathurthi #EdappadiPalaniswami
    விநாயகர் சிலைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதா? என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan #vinayagarchaturthi

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள சகோதரர்கள் அனைவரும் விநாயகர் சிலையை நிறுவி சமூக விழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

    ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியன்றும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதி மக்களின் விழாவாக மாறி உள்ளது. அந்த விழாக்களில் அப்பகுதி மக்கள் அங்கு நடக்கும் போட்டிகளில் கலந்துக் கொள்வது, கலை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வது, சேவை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது, பூஜை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது என மக்கள் விழாவாகவே மாறிவருகிறது.

    ஆனால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து விநாயகர் பெருமான் சிலைகளை வைக்கவே முடியாது என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மதச்சார் பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டே இந்துமத நடவடிக்கைகளை முடக்குவதே இன்றைய ஆட்சியாளர்களின் கவனமாக இருப்பது கண்டனத்துக்குரியது.


    முதல்-அமைச்சர் உடனே தலையிட்டு தேவையற்றக் கட்டுப்பாடுகளை நீக்கி தெருவெங்கும் விநாயகர் மக்கள் விநாயகராக இடம்பெற்று அருள்தர வழிவகை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    விநாயகர் என்றால் மேலானவர் என்று பொருள் படும், தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் என்னும் ஓங்கார வடிவமாய் விளங்கும் ஸ்ரீ விநாயகர் பெருமான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள். எந்த ஒரு செயலை தொடங்கினாலும் விநாயகரை துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.  #BJP #TamilisaiSoundararajan #vinayagarchaturthi

    விநாயகர் சிலை வைக்க அரசின் சான்று பெறுவதற்கு வசதியாக ஒரே இடத்தில் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்ற சிறப்பு முகாம் பொள்ளாச்சியில் நடைபெற்றது.
    பொள்ளாச்சி:

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட விண்ணப்பிப்பவர்கள் அரசின் பல்வேறு துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். அதற்கு அரசின் 8 விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க பல்வேறு துறை அதிகாரிகள் ஒரே இடத்தில் பங்கேற்ற சிறப்பு முகாம் பொள்ளாச்சி காவலர் குடியிருப்பு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, வால்பாறை டிஎஸ்பி சுப்பிரமணியம், வட்டாட்சியர் செல்வபாண்டி, நகரமைப்பு அலுவலர், மின்வாரிய உதவி செயற்பொறியாளர், தீயணைப்பு அலுவலர், மாசு கட்டுபாட்டு துறை அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது,

    பொள்ளாச்சி வருவாய் கோட்ட பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முக்கிய வீதிகளில் பிரமாண்டமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட முறைப்படி பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். சிலை வைக்கும் இடம் பொது இடமாக இருந்தால் உள்ளாட்சி அமைப்புகளிடமும், நெடுஞ்சாலைத்துறையிடமும், தனிநபர் இடமாக இருந்தால் அதன் உரிமையாளர்களிடமும் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.

    மேலும் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, சிலைகள் வைக்கும்போது ஊர்வலத்தின்போது பட்டாசு மற்றும் வெடிபொருட்களை ஒருபோதும் வெடிக்க மாட்டேன் என தீயணைப்பு துறையினரிடமும், விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டது, மாசு ஏற்படுத்தும் ரசாயன வர்ணம் போன்றவற்றை பயன்படுத்தவில்லை என மாசு கட்டுப்பாட்டு துறையிடமும், பெட்டி வடிவ ஒலி பெருக்கியை குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும், விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடத்திற்கு சட்டத்துக்கு புறம்பாக மின்சாரம் எடுக்க மாட்டேன் என மின்வாரியத்திடமும், அரசியல் மற்றும் சமுதாய தலைவர்கள் சம்பந்தமான பதாகைகள் வைக்க மாட்டேன், ஊர்வலத்தை காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழிதடங்களில் எடுத்துச் சென்று, அனுமதிக்கப்பட்ட இடத்தில் கரைப்பேன் உள்ளிட்ட உத்திரவுகளை கடைபிடிப்பதாக உறுதி அளிக்கும் விண்ணப்பத்தில் பல்வேறு துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்றுக்கான கையொப்பம் பெற வேண்டும்.

    பொள்ளாச்சி காவல் உட்கோட்டத்தில் 282 சிலைகளும், வால்பாறை உட்கோட்டத்தில் 230 சிலைகளும், கிணத்துக்கடவு பகுதியில் 60 சிலைகளும் என மொத்தம் 572 சிலைகள் வைக்கப்பட உள்ளது. பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்றனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சப்- கலெக்டரின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். சப்-கலெக்டரின் அனுமதிக்கு பின்னர் சிலைகள் வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்,
    ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைத்தல் தொடர்பாகவும், ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த வலியுறுத்தியும் அனைத்து கட்சி சார்பில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. #VinayagarChaturthi
    ஈரோடு:

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது.-

    ஈரோடு மாவட்டத்தில் வரும் 13- ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா இந்து இயக்கங்கள் சார்பில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் இந்து இயக்கங்கள் சார்பில் வைக்கப்படும் சிலைகள் அவர்கள் சார்பில் நடத்தப்படும் ஊர்வலங்களில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் போக்குவரத்து பாதிக்கும் இடங்களில் சிலை வைக்க அனுமதிக்கக் கூடாது.

    கூம்பு வடிவ ஒலி பெருக்கி வைக்க அனுமதிக்கக் கூடாது. வன்முறையை தூண்டும் ஒலி முழக்கங்களை அனுமதிக்கக் கூடாது. பிறவழி பாட்டுத்தலங்கள் உள்ள இடங்களில் ஊர்வலத்தை அனுமதிக்கக் கூடாது.

    எளிதில் கரையும் களிமண் போன்றவற்றால் செய்யப்படும் சிலைகளை தவிர நீர்நிலைகளை மாசுபடுத்தும் ரசாயனத்தால் ஆன சிலைகளை அனுமதிக்கக் கூடாது. சிலைகள் ஊர்வலத்தில் அரசியல் கட்சிக் கொடிகள் அமைப்பு கொடிகள் அனுமதிக்கக் கூடாது.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

    திராவிடர் கழகம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தலித் விடுதலை கட்சி போன்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். #VinayagarChaturthi
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டிப்பட்டி தாலுகாவில் 105 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
    ஆண்டிப்பட்டி:

    விநாயகர் சதுர்த்தி வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டிப்பட்டி தாலுகாவில் 105 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக திருச்சியில் இருந்து முதற்கட்டமாக ஆண்டிப்பட்டி நகருக்கு 35 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்து சிலைகளும் வந்த பின்னர் அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறப்படுகிறது.
    ×