search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "malaikottai uchi pillayar temple"

    • தீப திருவிழா வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • மெகா திரியை 900 லிட்டர் எண்ணெய் ஊற்றி ஊற வைப்பார்கள்.

    திருச்சி மலைக்கோட்டையில் பிரசித்திபெற்ற தாயுமான சுவாமி கோவில் உள்ளது. மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும் உள்ளது. இங்கு கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு உள்ள செப்புக்கொப்பரையில் 300 மீ்ட்டர் அளவு உள்ள மெகா திரி வைக்கப்பட்டு 900 லிட்டர் அளவில் எண்ணெய் ஊற்றி கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு பூர்வாங்க பூஜை நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக மெகா திரி தயாரிக்கும் பணி தாயுமான சுவாமி கோவில் அருகே தொடங்கியது. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். இப்பணி முடிந்ததும் மெகா திரியை உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு உள்ள கார்த்திகை தீப கொப்பரையில் வைத்து நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் உள்பட 900 லிட்டர் எண்ணெய் ஊற்றி ஊற வைப்பார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 6-ந்தேதி கார்த்திகை தீபத்தன்று அங்கு மெகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • உற்சவ கணபதிக்கு கடந்த 12 நாட்களாக பல்வேறு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது.
    • விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக தொடர்ந்து 14 நாட்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்படி உற்சவ கணபதிக்கு கடந்த 12 நாட்களாக பல்வேறு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது.

    13-ம் நாளான நேற்று மதியம் மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவர் கணபதி, மாணிக்க விநாயகர் மூலவருக்கும் திருச்சி சாரதாஸ் சார்பில் விபூதி, சந்தனாதி தைலம், திரவிய பொடி, அரிசி மாவு, நெல்லி முள்ளி பொடி, மஞ்சள் பொடி, குங்குமம், தேன், நெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, கரும்புச்சாறு, திராட்சை, விளாம்பழம், மாதுளை, அன்னாசி பழம் உள்ளிட்ட பழ வகைகள், அன்னாபிஷேகம், இளநீர், சந்தனம், சொர்ணாபிஷேகம் உள்ளிட்ட 27 வகையான அபிஷேகமும், அதை தொடர்ந்து நர்த்தன கணபதிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பின்னர் தீபாராதனை முடிந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவில் மாணிக்க விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மூலவர், உற்சவருக்கு கோவில் பணியாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை நடைபெற்று விநாயகர் சதுர்த்தி விழா நிறைவுபெறுகிறது.

    • திரளான பக்தர்கள் உச்சிப்பிள்ளையாரை மனம் குளிர தரிசனம் செய்தனர்.
    • விநாயகருக்கு படையலிடப்பட்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் சிவலிங்கமாக எழுந்தருளியுள்ளார். இந்த கோவில் 273 அடி உயரமும், 417 படிகள் கொண்டதாகவும் உள்ளது. இதில் மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும், மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும் உள்ளன.

    இந்த சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை முடிந்து வரும் சதுர்த்தியன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று காலை 8 மணியளவில் மலைக்கோட்டை கோவில் யானை லட்சுமிக்கு கஜபூஜையுடன் தொடங்கியது.

    இதையடுத்து, காலை 9 மணியளவில் உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜையும், மெகா கொழுக்கட்டையும் நைவேத்தியம் செய்யப்பட்டது. இதையொட்டி கோவில் மடப்பள்ளியில் 60 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ உருண்டை வெல்லம், 30 கிலோ நெய், ஏலக்காய், ஜாதிக்காய், எள், தேங்காய்ப்பூ உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி விழா நாளுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ஆவியில் வேகவைத்து தயார் செய்யப்படும் கொழுக்கட்டை படையலிடப்படும். அதேபோல் இந்த ஆண்டும் 150 கிலோ மெகா கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது.

    இந்த கொழுக்கட்டையை நேற்று காலை கோவில் பணியாளர்கள் ஒரு துணியில் தொட்டில் போல் கட்டி மடப்பள்ளியில் இருந்து தூக்கி கொண்டு சென்று, உச்சிப்பிள்ளையாருக்கும், மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோ அளவிலான கொழுக்கட்டையை படையலிட்டனர்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது எவ்வித கட்டுப்பாடும் இல்லாததால் திரளான பக்தர்கள் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை மனம் குளிர தரிசனம் செய்தனர். பின்னர் விநாயகருக்கு படையலிடப்பட்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலை உச்சியில் உள்ள படிக்கட்டுகளில் பல்வேறு வகையான கோலங்கள் போடப்பட்டிருந்தன. மேலும் மாணிக்க விநாயகர் சன்னதியிலும், உச்சிப்பிள்ளையார் சன்னதியிலும் பல்வேறு வகையான மலர்கள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் வருகிற 13-ந்தேதி வரை பல்வேறு வகையான அலங்காரத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமயஅறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் செல்வராஜ், கோவில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்தனர்.

    • உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடையில் கொழுக்கட்டை படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்
    • செப்டம்பர் 13-ந்தேதி மாணிக்க விநாயகர் சன்னதியில் ஏகாதின லட்சார்ச்சனை நடைபெறும்.

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பிள்ளையார்பட்டிக்கு அடுத்தப்படியாக திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஆண்டுதோறும் 14 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை படையல் இட்டு நெய்வேத்தியம் செய்யப்படும்.

    இதற்காக கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பின்னர் இரு பங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 18 மணி நேரம் அவிப்பார்கள். இதைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று காலை இந்த மெகா கொழுக்கட்டையை தொட்டில் போன்ற அமைப்பில் வைத்து பக்தர்கள் சுமந்து உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு எடுத்துச்சென்று நிவேதனம் செய்யப்படும்.

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் வருகிற 31-ந்தேதி காலை மாணிக்க விநாயகர், உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடையில் பிரமாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    விழாவையொட்டி 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந்தேதி வரை தினமும் பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர், சித்திபுத்தி கணபதி, நர்த்தன கணபதி ஆகிய அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி மாணிக்க விநாயகர் சன்னதியில் ஏகாதின லட்சார்ச்சனை காலை 7 மணிக்கு நடைபெறும். அதைத்தொடர்ந்து அன்று காலை 11 மணிக்கு மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் 14 நாட்களும் சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும்.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு இன்று 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். #VinayagarChathurthi
    மலைக்கோட்டை:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் மலைக்கோட்டையின் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு படைப்பதற்காக 150 கிலோவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. அந்த கொழுக்கட்டையை இரண்டாக பிரித்து, உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ, மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ என படைக்கப்பட்டது.

    முன்னதாக இன்று காலை 9மணியளவில் மடப்பள்ளியில் இருந்து தொட்டில் கட்டி கொழுக்கட்டையை மலை உச்சிக்கும், அடிவாரத்திற்கும் தூக்கி சென்று உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு வைத்து படையல் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொழுக்கட்டைகள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி மலைக்கோட்டை கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வருகிற 26-ந்தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இதில் தினமும் விநாயகர் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதே போல் திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். #VinayagarChathurthi #GaneshChathurthi
    ×