search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்
    X

    மெகா கொழுக்கட்டையை பணியாளர்கள் எடுத்துச்சென்ற காட்சி.

    மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

    • திரளான பக்தர்கள் உச்சிப்பிள்ளையாரை மனம் குளிர தரிசனம் செய்தனர்.
    • விநாயகருக்கு படையலிடப்பட்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் சிவலிங்கமாக எழுந்தருளியுள்ளார். இந்த கோவில் 273 அடி உயரமும், 417 படிகள் கொண்டதாகவும் உள்ளது. இதில் மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும், மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும் உள்ளன.

    இந்த சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை முடிந்து வரும் சதுர்த்தியன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று காலை 8 மணியளவில் மலைக்கோட்டை கோவில் யானை லட்சுமிக்கு கஜபூஜையுடன் தொடங்கியது.

    இதையடுத்து, காலை 9 மணியளவில் உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜையும், மெகா கொழுக்கட்டையும் நைவேத்தியம் செய்யப்பட்டது. இதையொட்டி கோவில் மடப்பள்ளியில் 60 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ உருண்டை வெல்லம், 30 கிலோ நெய், ஏலக்காய், ஜாதிக்காய், எள், தேங்காய்ப்பூ உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி விழா நாளுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ஆவியில் வேகவைத்து தயார் செய்யப்படும் கொழுக்கட்டை படையலிடப்படும். அதேபோல் இந்த ஆண்டும் 150 கிலோ மெகா கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது.

    இந்த கொழுக்கட்டையை நேற்று காலை கோவில் பணியாளர்கள் ஒரு துணியில் தொட்டில் போல் கட்டி மடப்பள்ளியில் இருந்து தூக்கி கொண்டு சென்று, உச்சிப்பிள்ளையாருக்கும், மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோ அளவிலான கொழுக்கட்டையை படையலிட்டனர்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது எவ்வித கட்டுப்பாடும் இல்லாததால் திரளான பக்தர்கள் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை மனம் குளிர தரிசனம் செய்தனர். பின்னர் விநாயகருக்கு படையலிடப்பட்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலை உச்சியில் உள்ள படிக்கட்டுகளில் பல்வேறு வகையான கோலங்கள் போடப்பட்டிருந்தன. மேலும் மாணிக்க விநாயகர் சன்னதியிலும், உச்சிப்பிள்ளையார் சன்னதியிலும் பல்வேறு வகையான மலர்கள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் வருகிற 13-ந்தேதி வரை பல்வேறு வகையான அலங்காரத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமயஅறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் செல்வராஜ், கோவில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்தனர்.

    Next Story
    ×