search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vande Bharat Train"

    • சென்னையில் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10 க்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
    • மதியம் 2.50 மணிக்கு மீண்டும் நாகர்கோவிலில் புறப்பட்டு சென்னைக்கு இரவு 11.45 மணிக்கு சென்று சேரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை :

    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் வந்தே பாரத் ரெயில் சேவையானது தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக நெல்லைக்கு ரெயில் இயக்கப்பட்டது.

    இதனை அடுத்து நெல்லை-சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சேவையை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனை தொடர்ந்து வந்தே பாரத் ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது.

    இந்த நிலையில் ரெயில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நெல்லை-சென்னை இடையே சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்ட வாராந்திர வந்தே பாரத் ரெயில் ஜனவரி 4-ந்தேதி முதல் ஜனவரி 25-ந்தேதி வரை வியாக்கிழமைகளில் நாகர்கோவில் வரை இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னையில் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10 க்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

    மதியம் 2.50 மணிக்கு மீண்டும் நாகர்கோவிலில் புறப்பட்டு சென்னைக்கு இரவு 11.45 மணிக்கு சென்று சேரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவையில் இருந்து முதலில் சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது.
    • கோவையில் இருந்து பெங்களூருவுக்கு எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட சில ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    தெற்கு ரெயில்வே சார்பில், சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே முதல் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து கோவை-சென்னை, சென்னை எழும்பூர்-நெல்லை, சென்னை சென்ட்ரல்-விஜயவாடா போன்ற பகுதிகளுக்கும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த வந்தே பாரத் ரெயில்கள் ரெயில் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைவாக சென்று விடுவதால் பயணிகளும் பெரும்பாலும் இந்த ரெயிலில் பயணிக்க விரும்புகின்றனர்.

    கோவையில் இருந்து முதலில் சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது. இந்த ரெயில் சேவை தொடங்கியதும் பயணிகளும், தொழில்முனைவோரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மற்ற ரெயில்களை விட அதிவேகமாக சென்று விடுவதால், தங்களின் பயண நேரம் மிச்சமாவதுடன், செல்ல வேண்டிய நேரத்திற்கும் சென்றுவிடுவதால் பயணிகள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    கோவையில் இருந்து பெங்களூருவுக்கு எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட சில ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதிகளவில் பெங்களூருவுக்கு ரெயில்கள் கிடையாது. தொழில் நகரமான கோவையில் இருந்து மற்றொரு தொழில் நகரான கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கோவையை சேர்ந்த தொழில் முனைவோர்கள், ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு இளைஞர்களும் அதிகளவில் செல்கின்றனர்.

    போதுமான அளவு ரெயில் இல்லாததால் இவர்கள் சிரமம் அடைந்தனர். கோவை-பெங்களூரு இடையே ரெயில்களை அதிகரிக்க வேண்டும் எனவும், கோவை-சென்னை இடையே இயக்கப்படுவது போன்று கோவை-பெங்களூரு இடையேயும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் கோட்டத்துக்கு, 8 பெட்டிகள் கொண்ட ரேக் வந்துள்ளது. இதனால் கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    அதாவது இந்த மாத இறுதி அல்லது புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கும் எனவும், இதற்கு ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்படி இயக்கும் பட்சத்தில் தொழில்நுட்ப மையமான பெங்களூரு மற்றும் கோவை ஆகியவற்றை இணைப்பதுடன், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டை நேரடியாக இணைக்கும் 2-வது வந்தே பாரத் ரெயில் சேவையாக இது மாறும். இந்த தகவல் கேட்டு ரெயில் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கோவை-பெங்களூரு இடையே சேலம்-ஜோலார்பேட்டை-குப்பம் வழியாக ஒரு தடமும், தர்மபுரி-ஓசூர் வழியாக ஒரு வழித்தடமும் உள்ளது. இவ்விரு வழித்தடங்களில் ஓசூர் வழித்தடம் குறைவான தொலைவை கொண்டிருந்தாலும் ஒற்றை ரெயில் பாதை மட்டுமே உள்ளது.

    ஜோலார்பேட்டை வழித்தடம் இரட்டை ரெயில் பாதை கொண்டுள்ளதால் இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயிலை இயக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கோவையில் இருந்து பெங்களூரு 385 கி.மீ தூரத்தில் உள்ளது. கோவையில் இருந்து சாதாரணமாக ரெயிலில் செல்ல வேண்டும் என்றால், 7 முதல் 8 மணி நேரம் வரை ஆகிறது.

    வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் பட்சத்தில் அந்த ரெயில் 110 கி.மீ முதல் 130 கி.மீ வேகத்திற்கு இயக்கப்படும் என்பதால், பெங்களூருவுக்கு 5 மணி நேரத்தில் சென்று விடலாம்.

    உதாரணமாக கோவையில் காலை 6.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் பெங்களூருவை காலை 11.30 மணிக்கு சென்றடைந்து விடும் என கணிக்கப்பட்டுள்ளது. செல்லும் வழியில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் கோவை-பெங்களூரு வந்தே பாரத் விரைவு ரெயிலுக்கு ஏசி நாற்காலி கார் வகுப்பில் ஒரு பயணத்திற்கு ரூ.1315 மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்பில் பயணம் செய்ய ரூ.2275 வரை வசூலிக்கப்படலாம் எனவும் தெரிகிறது.

    • கூட்ட நெரிசல் காரணமாக பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல் - மைசூரு இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
    • மறுமார்க்கமாக மைசூருவில் இருந்து அதே தேதிகளில் மதியம் 1.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் அதேநாள் இரவு சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கூட்ட நெரிசல் காரணமாக பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல் - மைசூரு இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இன்று (புதன்கிழமை) மற்றும் டிசம்பர் 6, 13, 20, 27-ந்தேதிகளில் காலை 5.50 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06037) அதேநாள் மதியம் 12.20 மணிக்கு மைசூரை சென்றடையும்.

    இதேபோல, மறுமார்க்கமாக மைசூருவில் இருந்து அதே தேதிகளில் மதியம் 1.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06038) அதேநாள் இரவு 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியாவிலேயே வந்தே பாரத் ரெயில் முதல் முதலாக இரவு நேரத்தில் இயக்கப்பட உள்ளது.
    • சென்னை சென்டிரலில் இருந்து இன்று மாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் புறப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் நலனுக்காகவும் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து வருகிறது.

    சென்னை சென்டிரல்-பெங்களூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே வந்தே பாரத் ரெயில் முதல் முதலாக இரவு நேரத்தில் இயக்கப்பட உள்ளது. அந்தவகையில், சென்னை சென்டிரலில் இருந்து இன்று (20-ந்தேதி) மாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06031) புறப்பட்டு அதே நாள் இரவு 10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, யஸ்வந்த்பூரில் இருந்து நாளை (21-ந்தேதி) இரவு 11 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06032) புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களின் முன்பதிவு நிறைவடைந்து அதிக அளவில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
    • சென்னை எழும்பூரில் இருந்து இன்று கூடுதலாக ஒரு சிறப்பு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களின் முன்பதிவு நிறைவடைந்து அதிக அளவில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதனால் சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வியாழக்கிழமை) கூடுதலாக ஒரு சிறப்பு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மேலும் 4 நாட்களுக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர்-நெல்லை இடையே நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் வருகிற 13, 14-ந் தேதியும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (வண்டி எண். 06055) மதியம் 2 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் ரெயில் (06056) அதே நாள் இரவு 11.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேஜஸ் ரெயில் பராமரிப்பு பணி காரணமாக நாளை இயங்காது.
    • வழக்கமான கட்டணமே சிறப்பு ரெயிலுக்கு நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து வருகிறது. சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்க வேண்டுமென பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்து வந்தது. அந்தவகையில், சென்னை எழும்பூர் - நெல்லை இடையே நாளை வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு நாளை (9-ந்தேதி) காலை 6 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06067) புறப்பட்டு அதே நாள் மதியம் 2.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு மதியம் 3 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06068) இரவு 11.15 மணிக்கு எழும்பூர் ரெயில்நிலையம் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தேஜஸ் ரெயில் பராமரிப்பு பணி காரணமாக நாளை இயங்காது. எனவே, அந்த வழித்தடத்தில் கூடுதலாக எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. மேலும், வழக்கமான கட்டணமே சிறப்பு ரெயிலுக்கும் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் (வண்டி எண். 06070) நாளை (9-ந்தேதி), 16 மற்றும் 23-ந்தேதிகளில் மாலை 6.45 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.35 மணிக்கு எழும்பூர் சென்றடையும்.

    இதேபோல மறுமார்க்கமாக, சிறப்பு ரெயில் (06069) 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நெல்லை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 8 மணி நேரத்திற்கு உள்ளாக 680 கி.மீ. தூரத்தை இந்த ரெயில் கடக்கிறது.
    • சென்னை சென்ட்ரல்-மைசூரு வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்வோர் சதவீதம் 134 ஆக உள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே மூலம் 4 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 2 ரெயில்கள் தமிழகத்துக்கு உள்ளேயும், 2 வந்தே பாரத் ரெயில் அண்டை மாநிலங்களுக்கும் இயக்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூரு, திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தே பாரத் ரெயில்கள் பிற மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது.

    சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர், எழும்பூரில் இருந்து திருநெல்வேலி ஆகிய வந்தே பாரத் ரெயில்கள் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களுக்கு சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது.

    கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நெல்லை வந்தே பாரத் ரெயில் தென் மாவட்ட மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

    8 மணி நேரத்திற்கு உள்ளாக 680 கி.மீ. தூரத்தை இந்த ரெயில் கடக்கிறது. தென் மாவட்டங்களுக்கு விரைவாக செல்லக்கூடிய வகையில் இந்த ரெயில் சேவை அமைந்து இருப்பதால் பயணிகள் அதிகமாக பயணித்து வருகின்றனர்.

    கட்டணம் அதிகமாக இருப்பதால் பயணிகள் வருவார்களா? என்ற தயக்கம் இருந்தது. ஆனால் அதற்கு மாறாக முழு அளவில் இந்த ரெயிலில் மக்கள் பயணிக்கின்றனர்.

    தெற்கு ரெயில்வேயில் இருந்து இயக்கப்படும் 4 வந்தே பாரத் ரெயிலில் அதிக பயணிகள் பயணிக்கும் சேவையாக திருவனந்தபுரம்-காசாகோடு உள்ளது. 192 சதவீதம் இதனை மக்கள் பயன்படுத்துகின்றனர். அதே போல் காசர்கோடு-திருவனந்தபுரம் சேவை 188 சதவீதமாக இருக்கிறது.

    சென்னை சென்ட்ரல்-மைசூரு வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்வோர் சதவீதம் 134 ஆக உள்ளது.

    அதற்கு அடுத்ததாக எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரெயிலில் பயணிப்போரின் சதவீதம் 120 ஆக உள்ளது. சேவை தொடங்கி ஒரு மாத காலத்தில் இந்த அளவிற்கு மக்கள் முழு அளவில் பயணம் செய்வது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த நிலையில் தான் சென்ட்ரல்-கோவை வந்தே பாரத் ரெயில் சேவை உள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு 107 சதவீதமாகவும், கோவையில் இருந்து சென்னைக்கு 103 சதவீதமாகவும் உள்ளன.

    தமிழகத்திற்குள் இயக்கப்படும் நெல்லை, கோவை வந்தே பாரத் ரெயில்களில் நெல்லை வந்தே பாரத் ரெயிலில் அதிகளவு மக்கள் பயணிக்கிறார்கள்.

    தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பயணம் செய்ய எல்லா இடங்களும் நிரம்பி விட்டன.

    • கடந்த மாதம் 24-ந் தேதி நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • வந்தே பாரத் ரெயிலில் கட்டணம் அதிகம் என்றாலும் முன்பதிவு டிக்கெட்டுகள் பெரும்பாலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கிய வந்தே பாரத் ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே விரிவுபடுத்தப்பட்டது.

    தமிழ்நாட்டில் சென்னை-மைசூரு, சென்னை-கோவை ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் இயக்கப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் இயக்க கோரிக்கை எழுந்தது.

    இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 24-ந் தேதி நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மற்ற ரெயில்களை விட கட்டணம் அதிகம் என்றாலும் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றுள்ள இந்த ரெயிலில் வார விடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    நெல்லை-சென்னை, சென்னை-நெல்லை என இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ஆகிய நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்கிறது. டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரை நெல்லையில் இருந்து சென்னைக்கு ஏ.சி. வகுப்பில் ரூ.1,665 என்றும், எக்சிக்கியூட் ஷேர் வகுப்பில் ரூ.3,055 என்றும் வசூலிக்கப்படுகிறது.

    நெல்லை மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பயணிகளும் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.

    அதிலும் காலை நேர பயணம், ரெயில்களில் வழங்கப்படும் உணவு போன்றவற்றால் பெரும்பாலும் குடும்பத்துடன் செல்லவே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள தகவலில், நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலில் பயணிகள் குடும்பத்துடன் செல்ல 77 சதவீதம் பேர் ஆர்வம் காட்டி உள்ளனர். அதாவது 100 பயணிகள் இந்த ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தால் அதில் 77 பேர் குடும்பத்துடன் செல்கிறார்கள்.

    மேலும் 36 சதவீதம் பேர் 35 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வந்தே பாரத் ரெயிலில் கட்டணம் அதிகம் என்றாலும் முன்பதிவு டிக்கெட்டுகள் பெரும்பாலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகையையொட்டி முன்பதிவு டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்துவிட்டன. நேற்றைய நிலவரப்படி காத்திருப்போர் பட்டியல் 100-ஐ தாண்டி உள்ளது.

    எனவே வந்தே பாரத் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, மற்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை விட பயண நேரம் குறைவாக உள்ளது. இதனால் பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

    தீபாவளி, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகை வர உள்ள நிலையில், பலரும் வெளியூர் செல்வார்கள். இதனால் தென் மாவட்ட மக்கள் வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    எனவே கூடுதல் பெட்டிகளுடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • திடீரென கதவு திறக்கவும் மறுபுறத்தில் 5-வது பிளாட்பார்மில் பவுலேஷ் தவறி விழுந்தார்.
    • விபத்து நடந்த வந்தே பாரத் ரெயிலின் சி3 பெட்டியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சென்னை-கோவை இடையே சேலம் வழியாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 26-ந் தேதி வந்தே பாரத் ரெயிலில் சென்னை கீழக்கட்டளை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆய்வாளர் பவுலேஷ் (வயது 70). அவரது மனைவி ரோஸ் மார்க் கரெக்ட் ஆகியோர் சி3 பெட்டியில் ஈரோட்டிற்கு பயணித்தனர்.

    மாலை 6 மணிக்கு சேலத்திற்கு வந்த வந்தே பாரத் ரெயில் 4-வது பிளாட்பார்மில் வந்து நின்றது. அப்போது தனது இருக்கையில் இருந்து எழுந்த பவுலேஷ் ரெயிலின் அவசர கதவு அருகே வந்து நின்றிருந்தார். அப்போது திடீரென கதவு திறக்கவும் மறுபுறத்தில் 5-வது பிளாட்பார்மில் பவுலேஷ் தவறி விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு ரெயில்வே போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    இந்த விபத்தில் அவசர கதவின் பட்டனை யாரும் அழுத்தி திறக்காத நிலையில் அது எப்படி தானாக திறந்து பவுலேஷ் கீழே விழுந்தார் என ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா நேரடியாக சேலம் ரெயில்வே நிலையத்துக்கும் சென்று விசாரித்தார். பின்னர் கோவை புறப்பட்டு சென்ற அவர் விபத்து நடந்த வந்தே பாரத் ரெயிலின் சி3 பெட்டியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்.

    அதில் சேலம் ரெயில்வே நிலைய பகுதியில் இருந்து 2 ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பாதைகளில் இறங்கி வந்து வந்தே பாரத் ரெயிலின் அவசரக் கதவு பட்டனை அழுத்தி திறந்து ரெயிலில் ஏறி மறுமுனையில் 4-வது பிளாட்பார்மில் இறங்கி சென்றது தெரியவந்தது.

    இந்த இருவரும் சென்ற சிறிது நேரத்தில் அவசர கதவு பகுதிக்கு பவுலேஷ் சென்று கதவின் மீது கை வைக்கவும் அது திறந்து கீழே விழுந்து உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவசர கதவை திறந்து வைத்த ரெயில்வே ஊழியர்கள் குறித்து கோட்ட மேலாளர் விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர்கள் சேலம் ரெயில்வே நிலைய பாயிண்ட் மேன்களாக பணியாற்றி வரும் தாமரைச்செல்வன், மீனா ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் சஸ்பெண்டு செய்து கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா உத்தரவிட்டார். தொடர்ந்து துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

    • ஆம்னி பஸ்சை ஒப்பிடும்போது கட்டணம் குறைவாகும்.
    • சென்னை சென்ட்ரல்-விஜயவாடா வந்தே பாரத் ரெயில் 6 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்றடைகிறது.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரெயில் இன்று முதல் சேவையை தொடங்கி உள்ளது.

    முழுக்க முழுக்க ஏ.சி. வசதி, உணவு, டீ, காபி, பிஸ்கட் போன்றவற்றுடன் டிக்கெட் கட்டணம் ரூ.1,665 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 7 மணி நேரம் 55 நிமிடங்களில் இந்த ரெயில் சென்றடைகிறது.

    தென் மாவட்ட மக்களுக்கு வந்தே பாரத் ரெயில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டணம், பயண நேரம் குறைவாக இருப்பதால் வரும் நாட்களில் அதிகளவில் இதில் மக்கள் பயணம் செய்யக்கூடும்.

    ஆம்னி பஸ்களை விட வந்தே பாரத் ரெயில் வேகமாக சென்றடைகிறது. ஏ.சி. வால்வோ ஆம்னி பஸ்கள் சென்னையில் திருநெல்வேலி செல்ல 11 மணி நேரம் ஆகிறது. கட்டணம் ரூ.2000 முதல் ரூ.3000 வரை வசூலிக்கப்படுகிறது.

    ஆனால் வந்தே பாரத் ரெயிலில் 3 மணி நேரம் பயண நேரம் குறைகிறது. ஆம்னி பஸ்சை ஒப்பிடும்போது கட்டணம் குறைவாகும். 2 வேளை உணவுடன் ரூ.1665 கட்டணம். உணவு இல்லாமல் ரூ.1325 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

    இதே போல சென்னை சென்ட்ரல்-விஜயவாடா வந்தே பாரத் ரெயில் 6 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்றடைகிறது. ஆனால் ஆம்னி பஸ் செல்ல 8 மணி நேரம் ஆகிறது. வந்தே பாரத் ரெயிலில் விஜயவாடாவிற்கு உணவுடன் ரூ.1420-ம், உணவு இல்லாமல் ரூ.1135-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் ஆம்னி பஸ்களில் ரூ.1,500 முதல் ரூ.2000 வரை வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நெல்லை, விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள் விரைவாக தங்கள் பகுதிகளுக்கு செல்ல முடியும்.

    • ரேடியோவை நாம் மறந்திருந்த காலத்தில் ‘மன் கி பாத்’ மூலம் அதனை மக்களிடம் எடுத்து சென்றுள்ளார் பாரத பிரதமர்.
    • போஸ்ட் ஆபீஸ் மறந்த போது செல்வமகள் திட்டம் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அதனை மக்களிடையே எடுத்துச் சென்றுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நெல்லை வந்தார்.

    விருந்தினர் மாளிகையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்குவதற்கு நானும் ஒரு காரணம். உணர்வு பூர்வமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன்.

    ஐதராபாத்திலும் கவர்னர் என்ற வகையில் முதல் குடிமகனாக வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்க திட்டமிருந்தது. ஆனால் நான் சாதாரண குடிமகனாக உணர்வு பூர்வமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நெல்லை வந்துள்ளேன்.

    ரேடியோவை நாம் மறந்திருந்த காலத்தில் 'மன் கி பாத்' மூலம் அதனை மக்களிடம் எடுத்து சென்றுள்ளார் பாரத பிரதமர். அதேபோல் போஸ்ட் ஆபீஸ் மறந்த போது செல்வமகள் திட்டம் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அதனை மக்களிடையே எடுத்துச் சென்றுள்ளார்.

    அது போல் தான் ரெயில் என்றாலே மிக தாமதமாக செல்லும். அதனால் ரெயிலில் போக முடியாது என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ரெயிலில் பழமை இருக்கும்.

    ஆனால் புதுமையாக வேகத்தை அதிகரிப்போம் என இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார். வந்தே பாரத் ரெயில் நெல்லைக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

    முதலமைச்சர் இன்று ஒன்றை சொல்லி இருக்கிறார். அதாவது பிரதம அமைச்சர் ஐந்து டீ யை முன்னிலைப்படுத்தினார்.

    டேலண்ட், டூரிசம், டெக்னாலஜி, ட்ரேட் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தினார். ஆனால் எதுவுமே இப்பொழுது இல்லை என கூறி உள்ளார்.

    ஆனால் டேலண்ட் ஆகத்தான் இந்த வந்தே பாரத் ரெயில் வந்துள்ளது. டெக்னாலஜி காரணமாகத்தான் வந்தே பாரத் வந்துள்ளது. டூரிசம் காரணமாகத்தான் வந்தே பாரத் வந்துள்ளது.

    அதை மாதிரி ட்ரேட் எனப்படும் வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு தான் வந்தே பாரத் வந்துள்ளது. எந்த டீ யும் நீங்கள் செயல்படுத்தவில்லை என சொன்னீர்கள். ஆனால் அத்தனை டீ யையும் செயல்படுத்தி தான் இந்த வந்தே பாரத் ரெயில் வந்துள்ளது.

    இந்து மதம் சார்ந்த எந்த நிகழ்வாக இருந்தாலும் அதற்கு அனாவசியமாக பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டும். அதனை சீர்கெடுக்க வேண்டும் என யாரும் நினைப்பதில்லை. விநாயகர் சிலையை உயரமாக வைக்கக்கூடாது என கூறினார்கள். அதற்காக அளவீடுகளை கட்டுப்படுத்தி குறைத்தோம். அதிக கட்டுப்பாடுகளை விதித்தால் வைக்கும் எண்ணிக்கை குறையும் என்கிற உள்நோக்கத்தோடு தான் செயல்படுத்துகிறார்கள்.

    ஆனால் விநாயகரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

    சனாதனத்தை எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சனாதனம் இங்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் எந்த ஏற்றத் தாழ்வுகள் இல்லாமலும் ஆயிரக்கணக்கான மக்கள் விநாயகரை வைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் சனாதனத்தை ஒழிப்போம் என்று கொசுவை கூட உங்களால் ஒழிக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் ரெயிலின் முன்பதிவு இருக்கைகள் நிரம்பின.
    • நாளை சென்னையில் இருந்து பயணிக்க மட்டும் குறைந்த அளவு இருக்கைகள் இருந்தன.

    நெல்லை:

    இந்திய ரெயில்வே துறை சார்பில் ரெயில் பயணத்தை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, உலகத்தரத்துடன் நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    பயண தூரத்தை அதிவேகத்தில், கடப்பதால் இந்த ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

    நாடு முழுவதும் இதுவரை 25 வழித்தடங்களில் 50 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் வந்தே பாரத் ரெயிலான சென்னை-கோவை ரெயிலை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    தென் மாவட்டங்களுக்கும் வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பயணிகள் கோரிக்கை வலுத்தது. அதன் அடிப்படையில் நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே துறை அனுமதி அளித்தது. அதற்கு ஏற்ப பிட்லைன், தண்டவாளங்கள் பலப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி கடந்த 21-ந்தேதி இந்த ரெயில் சென்னையில் இருந்து நெல்லைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கியது. பிறகு மறுமார்க்கமாக சென்னையில் இருந்து இரவு நெல்லைக்கு வந்தடைந்தது.

    தொடர்ந்து நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் இயக்கத்தின் தொடக்க விழா இன்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த ரெயிலை காணொலி காட்சி வாயிலாக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவர் மன் கீ பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மதியம் இந்த வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ரெயிலுடன் விஜயவாடா-சென்னை சென்ட்ரல், பெங்களூரு (யஸ்வந்த்பூர்)-ஐதராபாத் (கச்சிகுடா), காசர்கோடு-திருவனந்தபுரம் (வழி ஆலப்புழா), பூரி-ரூர்கேலா, உதய்பூர்-ஜெய்ப்பூர், பாட்னா-ஹவுரா, ராஞ்சி-ஹவுரா, ஜாம்நகர்-அகமதாபாத் (சபர்மதி) ஆகிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

    தொடக்க விழாவையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து வந்தே பாரத் ரெயில் இயக்கத்தை தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் பத்மநாபன் அனந்த், சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முதல் நாளான இன்று பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    முன்னதாக நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் பிரதமர் பேசுகின்ற மன் கீ பாத் நிகழ்ச்சியை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வைத்து கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிகழ்ச்சியிலும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதாவினர் செய்திருந்தனர்.

    நெல்லை சந்திப்பில் இருந்து தற்போது ரெயில் புறப்பட்டது. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை வரை ரெயிலில் பயணம் செய்தார். இதேபோல மத்திய மந்திரி எல்.முருகன் திருச்சி வரை பயணம் செய்தார்.

    தொடர்ந்து இந்த ரெயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சில நிமிடங்கள் நின்று செல்கிறது. அந்தந்த ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் இந்த ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    இந்த ரெயிலில் வழக்கமான சேவையானது நாளை(திங்கட்கிழமை) சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு தொடங்குகிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வந்தே பாரத் ரெயில் பராமரிப்பு பணிக்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, நெல்லையில் இருந்து வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தனது முதல் பயணத்தை தொடங்குகிறது.

    இந்த பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்றே தொடங்கி விட்டது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் இந்த ரெயிலின் முன்பதிவு இருக்கைகள் நிரம்பின.

    நாளை சென்னையில் இருந்து பயணிக்க மட்டும் குறைந்த அளவு இருக்கைகள் இருந்தன. இந்த ரெயிலில் சாதாரண ஏ.சி. பெட்டிகளில் உணவுடன் சேர்த்து பயணிக்க ரூ.1,620 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. எக்சிகியூட்டிவ் ஏ.சி. பெட்டிகளில் ரூ.3,005 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

    நெல்லையில் இருந்து சென்னை செல்லும் ரெயில் பயணிகளுக்கு காலையில் டீ, காலை உணவு, மதிய உணவு வழங்கப்படுகிறது. சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் ரெயிலில் டீ, ஸ்நாக்ஸ், இரவு உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. உணவு தேவை இல்லை என்றால் டிக்கெட் எடுக்கும்போதே அதனை தவிர்க்கவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.

    மொத்தம் உள்ள 652 கிலோமீட்டர் தூரத்தை 110 கிலோமீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்து 7 மணி நேரம் 50 நிமிடத்திற்குள் அடைந்துவிடும் வகையில் இந்த ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்னகத்தில் அதிக வருவாயை அள்ளிக்கொடுக்கும் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரெயிலில் 1 வி.ஐ.பி. பெட்டி மற்றும் 7 சாதாரண பெட்டிகள் உள்ளன.

    வி.ஜ.பி. பெட்டியில் 52 இருக்கைகள் உள்ளன. மற்ற பெட்டிகளில் தலா 76 இருக்கைகள் உள்ளன. முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த பெட்டிகளில் சார்ஜர் வசதி, சாப்பிட தேவையான வசதி, நவீன கழிப்பிட வசதி, வை-பை வசதி, சுழலும் இருக்கைகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த ரெயில் பெட்டிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளில் மற்ற ரெயில்களை விட கூடுதலாக சில வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி பெண்கள் தங்களது கை குழந்தைகளுடன் தனியாக பயணம் செய்யும் போது கழிப்பறைக்கு செல்லவேண்டி இருந்தால் குழந்தையை அங்கு கொண்டு சென்று உட்கார வைக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கும் நவீன வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த 8 பெட்டிகளிலும் பாதுகாப்புக்காக தலா 2 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாசல் பகுதியிலும் தலா 2 சி.சி.டி.வி.க்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    முற்றிலும் சென்சார் மயமாக்கப்பட்டுள்ளதால் ரெயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பாக வந்தால் மட்டுமே ரெயிலில் ஏற முடியும். மற்ற ரெயில்களை போல ரெயில் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய முடியாது. அவ்வாறு படிக்கட்டில் நின்றால் ரெயில் அங்கிருந்து நகராத வகையில் இந்த ரெயில் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் உள்ளே சென்ற பின்னர் கதவுகள் தானாகவே மூடிக்கொள்ளும். அதன்பின்னரே ரெயில் புறப்பட முடியும்.

    ×