search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Assembly by election"

    அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர். #TNByPolls #Edappadipalaniswami #MKStalin
    சென்னை:

    அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும், அடுத்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் நேரடியாக மோதுகிறார்கள். தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவையும் இடைத்தேர்தலில் களம் இறங்குகின்றன. இதன் மூலம் 4 தொகுதிகளிலும் 5 முனை போட்டி நிலவுகிறது.

    அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. வேட்பளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்ய உள்ளனர். 2 பேரும் 1-ந்தேதி முதல் தங்களது பிரசாரத்தை தொடங்குகின்றனர்.

    கமல்ஹாசன், தினகரன், சீமான் ஆகியோரும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர்.

    இன்னும் 4 நாட்களில் பிரசார களம் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்றம் மற்றும் 18 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஒரு மாத காலமாக தீவிர பிரசாரம் செய்த தலைவர்கள் தற்போது சிறிது ஓய்வில் உள்ளனர். இவர்கள் அனைவரும் 4 தொகுதிகளிலும் மீண்டும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளிலும் பறக்கும்படை சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். 4 தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வேட்பாளர்கள் பகல் நேர பிரசாரத்தை தவிர்த்து காலை மற்றும் மாலை நேரங்களில் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    அரவக்குறிச்சியில் 105 டிகிரியை தாண்டி கொளுத்தும் வெயிலால் தேர்தல் பணிக்கு வந்த கட்சி நிர்வாகிகள் விடுதி அறைகளிலும், வீடுகளிலும் முடங்கி கிடக்கிறார்கள். மாலை நேரங்களில் மட்டும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகின்றனர்.

    இந்த தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5 மற்றும் 14-ந்தேதிகளிலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 7, 8-ந்தேதிகளிலும், தினகரன் 3, 4, 10, 14-ந்தேதிகளிலும், கமல்ஹாசன் 12, 13, 16-ந் தேதிகளிலும் பிரசாரம் செய்கிறார்கள்.

    இவர்களும் பகல் நேர பிரசாரத்தை தவிர்த்து மாலை நேரங்களிலேயே தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்கள். #TNByPolls #Edappadipalaniswami #MKStalin
    ஒரு வாக்குக்கு ரூ.4 ஆயிரம் அல்ல ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #AMMK #ThangaTamilselvan
    மதுரை:

    திருப்பரங்குன்றத்தில் அ.ம.மு.க. சார்பில் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் கூறியதாவது:-

    4 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வினருக்கு பண பலம் மட்டுமே உள்ளது. மக்கள் ஆதரவு இல்லை.

    பணத்தை கொடுத்து அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் அவர்களால் டெபாசிட் கூட பெற முடியாது.

    ஒரு தொகுதிக்கு அவர்கள் ரூ.500 கோடி செலவு செய்வதாக தெரிகிறது. ஒரு வாக்குக்கு ரூ.4 ஆயிரம் அல்ல ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. இந்த தேர்தலோடு அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும்.

    தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. ஜெயலலிதா ஆட்சி எனக் கூறி தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு ஊழல் ஆட்சியே நடத்தி வருகிறது.



    முதல்வர் பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புதிய தலைமையை மக்கள் தேடி வருகிறார்கள். பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு உள்ளது. அதனால் தான் அந்த வழக்கில் அரசு தீவிரம் காட்டவில்லை.

    தி.மு.க. தொண்டர்களே ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது.

    நடந்து முடிந்த 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், நடக்க உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AMMK #ThangaTamilselvan
    அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார். #SenthilBalaji #DMK
    அரவக்குறிச்சி:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். இதன் காரணமாக அரவக்குறிச்சி தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது.

    தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னதாகவே அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கினார். அ.தி.மு.க., அ.ம.மு.க. சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இன்னும் 2, 3 நாட்களில் பிரசாரத்தை தொடங்க உள்ளனர். இதன் காரணமாக அரவக்குறிச்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இத்தொகுதிக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் இன்று காலை தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி மீனாட்சியிடம் மனு தாக்கல் செய்தார்.


    அவருடன் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி மற்றும் பலர் உடன் சென்றிருந்தனர். வருகிற 29-ந்தேதி வரை வேட்பு மனுதாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 30-ந்தேதி நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற அடுத்த மாதம் 2-ந்தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி காமராஜர் நகரில் உள்ள தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் இருந்து அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்திற்கு ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்றார். இதில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, சின்னச்சாமி மற்றும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  #SenthilBalaji #DMK
    திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள திமுக நிர்வாகிகள் இன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு சென்று தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கினார்கள். #TNByPoll #DMK
    சென்னை:

    தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க-தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட உள்ளன. அ.ம.மு.க. சார்பில் சூலூர் தொகுதியில் முன்னாள் எம்.பி., சுகுமார், திருப்பரங்குன்றத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், ஒட்டபிடாரம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரராஜ், அரவக்குறிச்சியில் பி.எச்.சாகுல் அமீது போட்டியிடுகிறார்கள்.

    தி.மு.க.வில் அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், சூலூரில் பொங்கலூர் பழனிச்சாமி, ஒட்டப்பிடாரத்தில் மூக்கையா போட்டியிடுகிறார்கள். மற்ற கட்சிகளில் வேட்பாளர்கள் யார் என்பது இன்று அறிவிக்க உள்ளனர்.

    இதில் தி.மு.க.வில் தொகுதி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என ஒவ்வொரு தொகுதிக்கும் 25 பேர்களை நியமித்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், இதில் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் இன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு சென்று தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கினார்கள். அந்த தொகுதியின் வாக்காளர் பட்டியலை பெற்று வீடுவீடாக வாக்காளர்களின் விபரங்களை சரிபார்த்து வருகின்றனர்.

    தொகுதியில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அதை தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பிலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த அணியின் மாவட்ட அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு சூலூர் தொகுதியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் பணி குறித்து சிறப்புரையாற்றுகிறார். ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதியில் 27-ந் தேதியும், அரவக்குறிச்சியில் 28-ந்தேதியும், வழக்கறிஞர்கள் அணி கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளார். #TNByPoll #DMK
    ×