search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tirupur corporation"

    • திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றது .
    • முதன்மை மாநகராட்சியாக கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    திருப்பூர் :

    உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றது . இதில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 49 வது வார்டு ஆர்வி., நகர் பகுதியில் நடைபெற்ற வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாநில செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

    அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றது முதல் இதுவரை ரூ. 101 கோடி மதிப்பீட்டில் 1036 பணிகள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் படிப்படியாக மக்களின் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் மேம்படுத்தப்படும் எனவும் 21 மாநகராட்சிகளில் திருப்பூர் மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக கொண்டுவருவதற்கான ஆக்கப்பூர்வ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    பின்னர் பொதுமக்களிடம் பேசிய மாநில செய்தி துறை அமைச்சர் மு .பெ .சாமிநாதன், அரசு அறிவிக்கும் திட்டங்களை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று இல்லாமல் மக்களும் அதனை தொடர்ந்து கண்காணித்து அதில் உள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பல்திவேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும் , திருப்பூர் மாநகராட்சியின் மேம்பாட்டுக்காக சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட திட்டங்களை மேம்படுத்த சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டு தமிழக அரசின் பரிந்துரைக்கு அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.

    • ஒப்பந்த பணியாளர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து அரசு செயலர் மற்றும் ஆணையர் ஆகியோருக்கு அனுப்பப்பபட்டுள்ளது.
    • அலுவலக பணியாளர்கள் மற்றும் வரி வசூலிப்பவர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

     திருப்பூர்: 

    திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.செல்வக்குமார் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: -

    திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளைக் கொண்டது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் மாத ஊதியம் பெற்று வருகின்றனர். தமிழக அரசின் தொழிலாளர் நலச்சட்ட விதிகளின்படி, தூய்மைப் பணி மற்றும் ஓட்டுநர் பணிகளை ஒப்பந்தம் பெற்றுள்ள உரிமையாளர்கள் பணியாற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு போனஸ் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக ஒப்பந்த பணியாளர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து அரசு செயலர் மற்றும் ஆணையர் ஆகியோருக்கு அனுப்பப்பபட்டுள்ளது.

    கோவை மாநகராட்சியை பொறுத்தவரை ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ. 3750 தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கடிதத்தின் படி, ஒப்பந்ததாரர்கள் தீபாவளிக்கு முறையான போனஸ் வழங்கும் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த காலங்களை போல் பெயரளவுக்கு கொடுக்காமால், முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஒப்பந்த உரிமையாளர்கள் வழங்க வேண்டும். நிரந்தர பணியாளர்களுக்கு பணி மூப்பு மற்றும் படிப்புக்கு ஏற்ப பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்க வேண்டும்.

    உரிய தகுதி இருந்தும், பதவி உயர்வு இன்றி தூய்மைப் பணியாளர்களாகவே தொடர்கின்றனர். ஆனால் அதேசமயம் கல்வித்தகுதி இல்லாத பலர், மாநகராட்சி மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் வரி வசூலிப்பவர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸில் கூறியிப்பதாவது:-

    ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தீபாவளிக்கு அவர்களுக்கு உரிய போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகள் தொடர்பாக, தேவைப்படும் பட்சத்தில், உரிய விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும். அதேபோல் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக கள ஆய்விலும் ஈடுபடும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

    • தொழில் நகரமான திருப்பூரில் சினிமா தியேட்டர்களை தவிர பொழுதுபோக்கு வசதிகள் போதுமான அளவு இல்லை.
    • வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.

    திருப்பூர் :

    தொழில் நகரமான திருப்பூரில் சினிமா தியேட்டர்களை தவிர பொழுதுபோக்கு வசதிகள் போதுமான அளவு இல்லை என்பது பொதுமக்களின் கருத்தாகும்.

    நகரில் ஆங்காங்கே இருக்கும் ஒரு சில பூங்காக்களும், முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், பார்க் ரோட்டில் உள்ள மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா ஒன்றை மட்டுமே மக்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இச்சூழலில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பள்ளி, கல்லுாரி நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை காரணமாக, நேற்று காலை முதல், பூங்காவுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்தது. சிறுவர், சிறுமியர் விளையாட்டு உபகரணங்களில் விளையாடி உற்சாகமாக இருந்தனர். தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன், பூங்காவுக்கு வந்து மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்றனர். நேற்று ஒரே நாளில் 4000 டிக்கெட்டுகள் விற்பனையானதாக பூங்காவில் உள்ள டிக்கெட் விற்பனையாளர் தெரிவித்துள்ளார். இன்று காலை முதலே பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    • திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வாழை மரக்கன்றுகள், பூக்கள் , பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது .
    • விற்காததை ஆங்காங்கே வியாபாரிகள் விட்டுச்சென்றனர் இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி நின்றது .

    திருப்பூர் :

    தமிழகத்தில் ஆயுத பூஜை , விஜயதசமி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் ஆயுத பூஜை விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக பின்னலாடை நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை சுத்தம் செய்து வாழை மரக்கன்றுகள் வாங்கி வீடுகளின் வாயில் மற்றும் நிறுவனங்களின் நுழைவாயில் கட்டி பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம் . இதற்காக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வாழை மரக்கன்றுகள், பூக்கள் , பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது . விற்பனை நிறைவடைந்ததை அடுத்த கொண்டு வந்திருந்த வாழை மரங்கள் விற்காததை ஆங்காங்கே வியாபாரிகள் விட்டுச் சென்றனர் . இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி நின்றது .

    இதனை இரவோடு இரவாக அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர் . இந்த துப்புரவு பணியினை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    • ரூ.20 கோடிக்கு 53 சாலைப்பணிகளுக்கான தீர்மானங்கள் இடம்பெற்றுள்ளன.
    • தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்குகிறார். அதைத்தொடர்ந்து அவசர கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ரூ.26 கோடிக்கு 67 சாலைப்பணிகள், ரூ.20 கோடிக்கு 53 சாலைப்பணிகளுக்கான தீர்மானங்கள் இடம்பெற்றுள்ளன.

    மேலும் பொலிவுபடுத்தப்பட்ட திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு 'முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மத்திய பேருந்து நிலையம், திருப்பூர் மாநகராட்சி' என பெயர் சூட்ட அரசின் முன்மொழிவுக்கு அனுப்ப மாமன்ற கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது அந்த பெயரில் மாமன்றத்தின் ஒப்புதல் தீர்மானம் வைக்க அரசு செயலாளர் அனுமதித்துள்ளதால் அந்த தீர்மானம் மன்ற அனுமதிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

    • 4வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகிய இரு முக்கிய பணிகள் பெரும்பாலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • ரோடு மோசமாக உள்ளதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பஸ்களும் இயக்கப்படுவதில்லை. என புகார்கள் வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தில் 4வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகிய இரு முக்கிய பணிகள் பெரும்பாலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அந்த வகையில் திருப்பூர் குமார் நகரிலிருந்து, வளையன்காடு, சாமுண்டிபுரம் வழியாக ஏறத்தாழ 3.5 கி.மீ., தொலைவுக்கு இப்பணிகள் நடக்கிறது. இதில், பாதாள சாக்கடை குழாய் பதித்தல், வீட்டு இணைப்பு வழங்குதல், 4வது குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய் பதித்தல், சப்ளை குழாய் பதித்தல் ஆகிய நான்கு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இரண்டு ஆண்டாக இப்பணி ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சி கூட்டத்தில் பேசிய நான்கு கவுன்சிலர்கள், இவ்வாறு ரோடு மோசமாக உள்ளதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பஸ்களும் இயக்கப்படுவதில்லை. என புகார்கள் வந்தது.

    இதனையடுத்து மேயர் தினேஷ்குமார், கமிஷனர் கிராந்திகுமார் ஆகியோர் ஆய்வு செய்ததில், டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள், அப்பணியை வேறு ஒருவரிடம் கொடுத்ததும், இதனால், பணிகள் முறையாக நடக்காததும் தெரிந்தது. அடுத்த மாத இறுதிக்குள் பணிகள் முழுமையாக முடித்து ஒப்படைக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறின்றி தலா 100 மீ., அளவுக்கு முழுமையாக பணியை முடித்த பின், அடுத்த 100 மீ., அளவுக்கு பணிகளை துவங்க வேண்டும்.

    குறிப்பிட்ட காலத்தில் பணி முடியாவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்,' என, ஒப்பந்ததாரரிடம் மேயர், கமிஷனர் ஆகியோர் எச்சரித்தனர்.

    • 54 -வதுவார்டில் தொடர்ந்து குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை விடப்படுகிறது.
    • குறைகளில் கவனம் செலுத்தி பணிகளை விரைவாக முடித்திட வேண்டும்.

    வீரபாண்டி:

    திருப்பூர் 4ம் மண்டலத்துக்கு உட்பட்ட 15 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு 4ம் மண்டல தலைவர் இல. பத்மநாதன் தலைமை தாங்கினார்.4-ம் மண்டல உதவி கமிஷனர் செல்வவிநாயகம் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசுகையில்:- 54 -வதுவார்டில் தொடர்ந்து குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை விடப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் 50 துப்புரவு பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 16 நபர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் பல்வேறு பகுதியில் குப்பை துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் புதிய கட்டடங்களுக்கு வரிவசூல் செய்யப்படுவதில்லை .விரைவாக வரி வசூல் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

    38-வது வார்டில் தெருவிளக்கு மாதம் இரண்டு முறை பழுதாகி விடுகிறது. அப்பகுதி யில் சாலையோரம் உள்ள மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு சாலையோரம் வீசி செல்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. 39 -வது வார்டு பகுதியில் குடிநீர் மற்றும் சாக்கடை கால்வாய் பணிக்காக புலிகள் தோண்டப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தும் இதுவரை மூடப்படவில்லை. மேலும் குடிநீர் குழாய்களும் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

    57-வது வார்டில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அப்பகுதியில் போடப்பட்டுள்ள வேலையானது சரிவர செய்யப்படவில்லை. இதனால் சாலை மேலும் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது என்றனர்.

    இதனைத் தொடர்ந்து அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.

    4-ம் மண்டல தலைவர் இல. பத்மநாதன் பேசுகையில்:- அனைத்து வார்டுகளிலும் தெரிவிக்கப்பட்ட குறைகளை விரைவாக நிவர்த்தி செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த குறைகளில் கவனம் செலுத்தி பணிகளை விரைவாக முடித்திட வேண்டும்என்றார்.

    திருப்பூர் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று புதிய கமி‌ஷனர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் கமி‌ஷனராக இருந்த அசோகன் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு மாறுதலாகி சென்றார். இதனையடுத்து திருப்பூர் மாநகராட்சியின் புதிய கமி‌ஷனராக சிவகுமார் நியமிக்கப்பட்டார். அவர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து கமி‌ஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார் பின்னர் அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சியில் தேவைகளை கண்டறிந்து, வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து அதன் அடிப்படையில் பொதுமக்களின் தேவைக்கேற்ப அத்தியாவசிய அவசரத்தேவைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    அடிப்படை வசதிகளான சாக்கடை வசதி, குடிநீர் வசதி, கல்வி வசதி, சுகாதாரம், கழிப்பிட வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து திருப்பூர் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    புதிதாக பதவியேற்று கொண்ட கமி‌ஷனருக்கு மாநகர பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் திருமுருகன், உதவி கமி‌ஷனர்கள் நாராயணன், வாசுகுமார், செல்வநாயகம், முகமது சபியுல்லா, கண்ணன், வருவாய் ஆய்வாளர் தங்கவேல் ராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×