search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைவம்"

    ‘இயற்கை ஜெல்லி’ என்று அழைக்கப்படும் நுங்கு, உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவும். நுங்கு வைத்து அருமையான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானப் பொருட்கள்:

    நுங்கு - 5
    பால் - ½ லிட்டர்
    சர்க்கரை - 75 கிராம்
    ஏலக்காய் - 3
    குங்குமப்பூ - 2 சிட்டிகை

    செய்முறை:

    நுங்கின் மேல் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஊற வைத்துத் தோல் உரித்த பாதாம், ஏலக்காய் மற்றும் சிறிது பால் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

    காய்ச்சிய பாலை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை மற்றும் பாதாம் கலவையைக் கலந்து சற்று கெட்டியாகும் வரை காய்ச்சி ஆற வைக்கவும்.

    பின்பு அதில் நுங்குத் துண்டுகளைச் சேர்த்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரச்செய்து, குங்குமப்பூவைத் தூவி சில்லெனப் பரிமாறவும்.

    இப்போது அருமையான நுங்கு பாயாசம் ரெடி.
    வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
    தேவையான பொருட்கள்:

    கேப்பை (கேழ்வரகு) மாவு - ஒரு கப்,
    நாட்டு சர்க்கரை - ஓர் உழக்கு,
    நெய் - தேவையான அளவு,
    ஏலக்காய் - 5,
    முந்திரி - 10,
    தேங்காய்த் துருவல் - ஒரு கப்.

    செய்முறை:

    நெய்யில் முந்திரியை வறுத்துக்கொள்ளவும்.

    ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும்.

    கேழ்வரகு மாவைச் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறி ஊறவைக்கவும்.

    சிறிது நேரம் கழித்து மாவைக் கட்டியில்லாமல் சலித்து, இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்கவும்.

    நன்றாக வெந்தபின் தட்டில் கொட்டி கட்டியில்லாமல் உதிர்க்கவும்.

    பிறகு, நாட்டு சர்க்கரையைக் கலந்து வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

    சத்தான சுவையான கேப்பை புட்டு ரெடி.
    நிறைய பேருக்கு மோர் குழம்பை பக்குவமாக வைக்க தெரியாது. இன்று பக்குவமாக பத்தே நிமிடத்தில் மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தயிர் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    வெண்டைக்காய் - 3

    அரைக்க

    தேங்காய் - கால் கப்
    மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    இஞ்சி - 1/2 துண்டு
    பூண்டு - 3
    காய்ந்த மிளகாய் - 4
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

    தாளிக்க

    கடுகு - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கருவேப்பிலை - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 1

    செய்முறை :

    வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெண்டைக்காயை உப்பு போட்டு எண்ணெயில் போட்டு வதக்கி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

    அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    தயிரில் உப்பு போட்டு நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.

    பின் அரைத்த விழுது சேர்த்து கலந்துவிட்டு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி கலந்துகொள்ளுங்கள்.

    தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் அதோடு வதக்கிய வெண்டைக்காயையும் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி எடுங்கள்.

    பின் அதை தயிரில் சேர்த்து கலந்துவிடுங்கள்.

    பின் அதை அப்படியே அடுப்பில் வைத்து கொதிக்க நுரை கிளம்பும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள் அல்லது கொதிக்க வைக்காமல் அப்படியேவும் சாப்பிடலாம்.

    அவ்வளவுதான் வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.
    உடல் எடை எப்போதும் அதிகரிக்காமல் இருக்க விரும்புபவர்களும் வாரம் ஒரு முறை பப்பாளிக்காயை கூட்டு அல்லது குழம்பில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எடை கட்டுக்குள் இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பப்பாளிக்காய் (சிறியது) - ஒன்று,
    தேங்காய் துருவல் - கால் கப்,
    பச்சை மிளகாய்  - 2,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    பாசிப்பருப்பு - ஒரு கப்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    எண்ணெய்  - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    பாசிப்பருப்பை தனியாக வேக வைக்கவும்.

    தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் நைசாக அரைத்து கொள்ளவும்.

    பப்பாளிக்காயை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும்.

    அரைத்த தேங்காய் கலவையை வெந்த பப்பாளிக்காயுடன் சேர்த்து பருப்பும் சேர்க்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து பப்பாளி கலவையில் சேர்த்து கலந்து கொதிக்க வைத்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான பப்பாளிக்காய் கூட்டு ரெடி.
    இந்த ஸ்நாக்ஸ் செய்வது மிகவும் சுலபம். இந்த ஸ்நாக்ஸ் 10, 15 நாட்கள் வரை கெட்டு போகாது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு - 2 கப்,
    அரிசி மாவு - ஒரு கப்,
    சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    கருப்பு எள் - ஒரு டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    ஆம்சூர் பொடி (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன்,
    புளித் தண்ணீர் - கால் கப்,
    கொப்பரைத் துருவல் - அரை கப்,
    வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன்,
    கசகசா - ஒரு டீஸ்பூன்,
    சர்க்கரை, உப்பு - சிறிதளவு,
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,

    செய்முறை:

    கொப்பரைத் துருவல், வெள்ளை எள், கசகசா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றுசேர்த்துப் பொடிக்கவும்.

    கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றையும் சலித்து… உப்பு, சர்க்கரை, கருப்பு எள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி, எண்ணெய் சேர்த்துப் பிசைந்து, பூரிக்கு இடுவது போல் இட்டு வைக்கவும்.

    அதன் மேல் புளித் தண்ணீரை தடவவும்.

    நடுவில் வறுத்துப் பொடித்து வைத்த பொடியை வைக்கவும்.

    இதை பாய் மடிப்பது மாதிரி சுருட்டி, இருபுறமும் ஓரங்களை வெட்டி, ஸ்லைஸ் போட்டு…. எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பாக்கர் வாடி ரெடி.

    இதை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் போட்டு 10, 15 நாட்கள் பயன்படுத்தலாம்.
    மருத்துவ குணம் நிறைந்த முருங்கை இலையை அடிக்கடி உணவில் சேர்த்தோ, சூப்பாகவோ செய்து குடியுங்கள். இன்று முருங்கைக்கீரை சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி மாவு - 1 கப்
    முருங்கை கீரை - 1/4 கப்
    வெங்காயம் - 1
    பூண்டு - 5
    மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    வெங்காயம், முருங்கைக் கீரை, பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சப்பாத்தி மாவை போட்டு அதோடு உப்பு சேர்த்து கலந்த பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், முருங்கை கீரை, மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    பின்னர் மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் திரட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு சுட்டு எடுத்தால் முருங்கைக் கீரை சப்பாத்தி ரெடி.
    பல்வேறு காய்கறிகளை வைத்து செய்யும் இந்த கதம்ப சாதம் சூப்பராக இருக்கும். சைடிஷ் எதுவும் தேவையில்லை. இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 1 கப்,
    துவரம்பருப்பு - 1/2 கப்,
    உப்பு - தேவைக்கு,
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
    திக்கான புளிக்கரைசல் - 1/2 கப்,
    பூசணித்துண்டுகள் - 1/4 கப்,
    மஞ்சள் பூசணித் துண்டுகள் - 1/4 கப்,
    கத்தரிக்காய் துண்டுகள் - 1/4 கப்,
    வாழைக்காய் துண்டுகள் - 1/4 கப், (மற்றபடி விருப்பப்பட்ட நாட்டுக்காய்கள்),
    ஊற வைத்து வேக வைத்த கருப்பு கொண்டைக்கடலை, வேர்க்கடலை இரண்டும் சேர்ந்தது - 1/4 கப்,
    வெல்லம் துருவியது - 1 டேபிள் ஸ்பூன்.

    வறுத்துப் பொடிக்க:

    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,
    தனியா - 2 டேபிள் ஸ்பூன்,
    வரமிளகாய் - 6,
    தேங்காய்த்துருவல் - 8 டேபிள் ஸ்பூன்.

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
    கடுகு - 1 டேபிள் ஸ்பூன்,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்.

    செய்முறை :

    பச்சரிசி, துவரம்பருப்பு இரண்டையும் 3 கப் நீர் விட்டு குழைய வேக விட்டு வைக்கவும்.

    வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்த பொருட்களை வறுத்து மிக்ஸியில் கொர கொரப்பாகப் பொடிக்கவும்.

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி மேலும் ஒரு கப் நீர் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி மற்றும் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வேக விடவும்.

    காய்கள் முக்கால் பதம் வெந்ததும் ஊற வைத்து வேக வைத்த கடலைகளைச் சேர்த்து பொடித்து வைத்துள்ள பொடியினையும் சேர்த்து மேலும் கொதிக்க விட்டு வெல்லம் சேர்த்து காய்கள் வெந்ததும் வெந்த அரிசி, பருப்பினைச் சேர்த்துக் கலக்கவும்.

    அடுத்து தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான கதம்ப சாதம் தயார்.
    நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பச்சைப்பயிறை முளைக்கட்டி சாப்பிடும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.
    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - அரை கப்
    முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப்
    காய்ந்த மிளகாய் - நான்கு
    இஞ்சி - அரை அங்குலம் (நறுக்கியது)
    பெருங்காயம் - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது)
    வெங்காயம் - 2
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    துருவிய கேரட் - அரை கப்

    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    தினையை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    முளைகட்டிய பச்சைப்பயறைத் தினை அரிசியுடன் இஞ்சி, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்துத் தண்ணீர்விட்டு இட்லி மாவுப் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

    அதில் வெங்காயம், கேரட், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து மாவை சற்று தடிமனாக வார்க்கவும்.

     தேய்க்காமல் அப்படியே மூடி வைத்து வேகவிட்டு இருபுறமும் எண்ணெய் விட்டுத் திருப்பிப்போட்டு இட்லிப் பொடி தூவி எடுத்து, காரமான தக்காளி - வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.

    சைட்டிஷ் சேர்க்காமல் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
    ×