search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "South West Monsoon"

    ஐந்தருவி மற்றும் பழையகுற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அந்த இரு அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
    தென்காசி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கும் போது நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் நிலவும். இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியது.

    இதையடுத்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத்தொடங்கியது. ஜூன் மாதம் முழுவதும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் திடீரென குறைந்தது. ஒருவாரத்திற்கு பின் அருவிகளில் மீண்டும் தண்ணீர் கொட்டத்தொடங்கியது.

    சாரல் மழை, குளுகுளு காற்றுடன் குற்றாலத்தில் சீசன் களை கட்டியதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இந்நிலையில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. குற்றாலம் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    நேற்று 3-வது நாளாக அந்த அருவிகளில் குளிக்க தடை நீடித்ததால் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நேற்று இரவு ஐந்தருவி மற்றும் பழையகுற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அந்த இரு அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    மெயினருவி தொடர்ந்து தண்ணீர் அதிகளவில் கொட்டியதால் அங்கு குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஓரளவு குறைந்தது. இதனால் அந்த அருவியில் 3 நாட்களுக்கு பிறகு இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியின் நடுப்பகுதிக்கு சென்று குளிக்க சுற்றுலா பயணிகளை போலீசார் அனுமதிக்கவில்லை. குற்றாலம் மலைப்பகுதி மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மலைப்பெய்து வருகிறது.

    மேலும் காற்றும் வேகமாக வீசி வருகிறது. மழை தொடர்ந்து பெய்வதால் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் தண்ணீர் வரத்தை போலீசார் தொடர்ந்து கண்காணித்தபடி உள்ளனர்.



    தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #SouthWestMonsoon
    சென்னை:

    கேரள மற்றும் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்த 1 மாதமாக பெய்து வருகிறது.

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருகிறது.



    இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதியில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வெப்ப சலனம் காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. #SouthWestMonsoon

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருவதால் 6 அணைகள் நிரம்பின. #KadanaNathiDam #RamanathiDam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. குண்டாறு அணை பகுதியில் அதிகபட்சமாக இன்று 63 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அடவிநயினார் அணை பகுதியில் 31 மில்லி மீட்டர் மழையும், கடனாநதி அணை பகுதியில் 16 மி.மீ மழையும் பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு இன்று காலை விநாடிக்கு 5,689 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.

    இதனால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று 107.30 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று 127.95 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 388 கனஅடி தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து 375 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 79.60 அடியாக உள்ளது.

    கடனாநதி மற்றும் ராமநதி அணைக்கு அதிகளவில் தண்ணீர் வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

    கடனாநதி அணையின் உச்சநீர் மட்டம் 85 அடியாகும். அங்கு இன்று காலை 83.50 அடி நீர்மட்டம் உள்ளது. அணை பாதுகாப்பை கருதி தற்போது வரும் தண்ணீர் அனைத்தும் திறந்துவிடப்படுகிறது. இதனால் கடனாநதி அணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ராமநதி அணை நிரம்பியதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ராமநதி அணைக்கும் தண்ணீர் அதிகமாக வருகிறது. ஒரேநாளில் நீர் மட்டம் 2.5 அடி உயர்ந்து இன்று 82.50 அடியாக உயர்ந்துள்ளது. ராமநதி அணையின் உச்சநீர் மட்டம் 84 அடியாகும். அந்த அணையும் நிரம்பியதால் தண்ணீர் அனைத்தும் திறந்து விடப்படுகிறது. கருப்பாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை ஏற்கனவே நிரம்பி வழிகிறது.

    இதுபோல கொடுமுடியாறு அணை நீர்மட்டம் இன்று 47 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் 5 அடி உயர்ந்தால் அந்த அணையும் முழு கொள்ளளவை எட்டிவிடும். அடவிநயினார் அணையின் நீர்மட்டம் இன்று 127 அடியாக உயர்ந்துள்ளது.

    இந்த அணையின் உச்சநீர் மட்டம் 132 அடியாகும். மேலும் 5 அடி உயர்ந்தால் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும். அடவிநயினார் அணைக்கு தண்ணீர் வேகமாக வருவதால் நேற்றைவிட இன்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. எனவே அந்த அணையும் இன்று நிரம்பி என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அடவிநயினார், கொடுமுடியாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் தற்போது கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் ஆகிய 6 அணைகளும் நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அந்த பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது.

    இதுபோல பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்தும் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அந்த பகுதியில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட குளங்களும் நிரம்பி உள்ளது. மேலும் ஏராளமான குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடி விவசாயம் தீவிரமாக நடந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    குண்டாறு-63
    அடவிநயினார்-31
    கடனாநதி-16
    பாபநாசம்-11
    செங்கோட்டை-10
    ராமநதி-8
    தென்காசி-7
    சேர்வலாறு-6
    சங்கரன்கோவில்-3
    சிவகிரி-2
    மணிமுத்தாறு-1.2  #KadanaNathiDam #RamanathiDam
    கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்பு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கோவை, திருப்பூர், நீலகிரியில் உள்ள 20 முக்கிய அணைகளில் நிரம்பி வழிகிறது. #SouthWestMonsoon
    கோவை:

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அதையொட்டி உள்ள கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக முக்கிய அணைகளான சிறுவாணி, பில்லூர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகிறது. மேலும் பெரும்பாலான ஏரிகள், குளங்களும் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்பு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் இந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 3 மாவட்டங்களிலும் உள்ள 20 முக்கிய அணைகளில் நிரம்பி வழிகிறது.

    கோவை நகரின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணையின் மொத்த உயரம் 50 அடி ஆகும். கடந்த மாத தொடக்கத்தில் நீர் மட்டம் 25 அடிக்கும் குறைவாக இருந்தது.

    பருவமழையால் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கடந்த வாரம் அணை நிரம்பியது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவிலேயே உள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக மதகுகள் வழியாக சிறுவாணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் உயரம் 100 அடியாகும். அணையின் பாதுகாப்பு கருதி 97 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கிவைக்க முடியும். அதன்படி கடந்த 2 வாரத்துக்கு முன்பே பில்லூர் அணையும் நிரம்பியது. உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியது. அணை நிரம்பு இன்னும் 19 அடி தண்ணீர் தேவை.

    கோவை மாவட்டத்தில் மொத்தம் 25 குளங்கள் உள்ளன. இதில் கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி, சிங்காநல்லூர் ஆகிய குளங்கள் கோடை மழையிலேயே நிரம்பி இருந்தன. பருவமழை காரணமாக உக்குளம், புதுக்குளம் கோளராம்பதி, குமார சாமி குளம், உக்கடம் பெரிய குளம், குனியமுத்தூர் செங்குளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் உள்பட 13 குளங்கள் நிரம்பி விட்டன.

    தண்ணீர் நிரம்பிய குளங்கள் கடல் போல் காட்சியளிக்கிறது. சொட்டையாண்டி குட்டை, நரசாம்பதி குளம், கங்கநாராயண சமுத்திர குளம், பேரூர் பெரியகுளம் உள்பட மீதமுள்ள குளங்கள் 75 சதவீதத்திற்கும் அதிகமாக நிரம்பி உள்ளன.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த குளங்களுக்கு நீர்வரத்து உள்ளது. எனவே இந்த குளங்களும் விரைவில் நிரம்பும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல சித்திரைச்சாவடி, புட்டுவிக்கி, சுண்ணாம்புக் காளவாய், நண்டங்கரை, முண்டந்துறை ஆகிய தடுப்பணைகளும் நிரம்பி வழிகிறது.

    சோலையார் அணை நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

    பரம்பிக்குளம் - ஆழியாறு (பிஏபி) திட்ட அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வால்பாறை சோலையார் கடந்த 2 வாரத்தில் 2 முறை நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மொத்த நீர் மட்டம் 90 அடியாகும். இந்த அணையில் தற்போது 87 அடி தண்ணீர் உள்ளது. இதனை தொடர்ந்து அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தென் மேற்குபருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவு திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.  #SouthWestMonsoon


    நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், மூன்றாம் நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    தென்காசி:

    தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குற்றாலம் மலைப் பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழையின்போது ஜூன் மாதத்தில் குற்றால சீசன் களை கட்டும்.

    தொடர்ந்து ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். சில ஆண்டுகளில் செப்டம்பர் வரையிலும் சீசன் தொடர்ந்து இருக்கும். சீசனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த நிலையில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே குற்றாலத்தில் சீசன் ரம்மியமாக உள்ளது.

    அவ்வப்போது சாரல் தூறியபடி இருப்பதால் சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ளார்கள். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மலைப்பகுதியில் கனமழை பெய்வதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இன்று காலையிலும் மலைப் பகுதியில் மழை பெய்ததால் மெயின் அருவி யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக சுற்றுலாபயணிகள் 3-வது நாளாக குளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஐந்தருவியிலும் நீரின் வேகம் அதிகமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கவில்லை.

    பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. புலியருவியில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படுவதால், அங்கு கூட்டம் அலைமோதுகிறது. குற்றாலத்தில் சாரல் மழையுடன் காற்று வேகமாக வீசுகிறது. இதமான சூழல் நிலவியபோதிலும் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இதேபோல மணிமுத்தாறு அருவியிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது.
    நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் 102 அடியாக உயர்ந்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக அடவி நயினார் அணை பகுதியில் 60 மில்லி மீட்டர் மழையும், குண்டாறு அணை பகுதியில் 52 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் அணை பகுதியில் 43 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 5488 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கீழ் அணையில் இருந்து வினாடிக்கு 1332 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து வருகிறது. நேற்று 97.20 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று 102 அடியானது.

    இதுபோல சேர்வலாறு அணை நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 111.61 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து இன்று 121.59 அடியானது. ஆனால் மணிமுத்தாறுக்கு குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 79.60 அடியாக உள்ளது.

    கடனா நதியின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று 83.50 அடியாக உள்ளது. ராமநதியின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று 80.75 அடியாக உள்ளது. கருப்பாநதி அணை முழு கொள்ளளவை அடைந்து 71.20 அடியுடன் நிரம்பி வழிகிறது. குண்டாறு அணை நீர்மட்டம் கடந்த 1 மாதமாகவே நிரம்பி வழிகிறது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து இன்று 46 அடியாகவும், அடவி நயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று 122.75 அடியாகவும் உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆய்க்குடி- 3.5
    சேரை- 1.6
    நாங்குநேரி- 0.5

    மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்று 2-வது நாளாக நீடித்தது.
    தென்காசி:

    கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியதும் குற்றாலத்தில் சீசன் ஆரம்பிக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் நிலவும். சீசன் காலத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை நிலவும்.

    மேலும் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அருவிகளில் குளிக்கவும், குற்றால சீசனை அனுபவிக்கவும் சீசன் காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள்.

    இந்த ஆண்டு குற்றால சீசன் மே மாத இறுதியிலேயே தொடங்கி விட்டது. அப்போது முதல் ஜூன் மாத இறுதி வரை குற்றாலத்தில் சீசன் அருமையாக இருந்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியபடி இருந்தது.

    இந்த மாத தொடக்கத்தில் தொடர்ந்து வெயில் அடித்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது. இருந்தபோதிலும் 2-வது வாரத்தில் சீசன் மீண்டும் களை கட்டியது. அதிலிருந்து அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்நிலையில் குற்றாலம் மலைப் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    அதிலும் மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் நேற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்வதால் அருவிகளில் இன்றும் வெள்ளப்பெருக்கு குறையவில்லை.

    மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது. இதே போல் ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் அதிகளவில் விழுகிறது. பழைய குற்றால அருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்று 2-வது நாளாக நீடித்தது. அருவிகளில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    புலியருவியில் அதிக அளவு தண்ணீர் விழுந்த போதிலும் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் அனைவரும் புலியருவிக்கு சென்றனர். ஏராளமான வாகனங்கள் சென்றதால் புலியருவி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அருவியிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    குற்றாலம் பகுதியில் மட்டுமின்றி தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் காற்றும் வேகமாக அடிக்கிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் விழுந்தன. மின் கம்பிகள் அறுந்ததால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.

    குற்றாலம் பராசக்தி கல்லூரி அருகே இருந்த பழமையான பெரிய மருதமரம் காற்றுக்கு வேரோடு சாய்ந்தது. அந்த மரம் அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று டிரான்ஸ்பார்மர் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் வண்டிப்பெரியாறில் மழை வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. #Rain

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஓய்ந்திருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் தீவிரம் காட்டி வருகிறது. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திலும் இந்த மழையின் தாக்கம் காணப்படுகிறது.

    குமுளியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறில் கன மழை கொட்டி வருவதால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மழை நீர் வழிவதற்கு கால்வாய் வசதிகள் இல்லாததால் அனைத்து சாலைகளிலும் மழை நீர் சென்ற வண்ணம் உள்ளது. சாரல் மழையும், அதனைத் தொடர்ந்து பலத்த மழையும் விட்டு விட்டு பெய்து வருவதால் மழை நீர் வழிவதற்கு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். வாகனங்களும் செல்ல முடியாததால் போக்குரவத்து பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததாலும் போக்கு வரத்து தடைபட்டுள்ளது. #Rain

    நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் கன மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நீர் மட்டம் 122.70 அடியாகவும், நீர் வரத்து 1979 கன அடியாகவும் இருந்தது.

    இன்று காலை அணைக்கு நீர் வரத்து 3090 கன அடியாக உள்ளது. நீர் மட்டம் 123.50 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1256 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 3321 மில்லியன் கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 48.23 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 891 கன அடி. தேனி, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காவும், மதுரை குடிநீருக்காகவும் 960 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1770 மில்லியன் கன அடியாக உள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர் மட்டம் சரிந்து வந்தது. இதனால் முதல் போக பாசனத்துக்காக 120 நாட்கள் தண்ணீர் கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் விவசாயிகள் ஏக்கத்தில் இருந்தனர்.

    தற்போது பெய்து வரும் மழையினால் அணையின் நீர் மட்டம் மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் எள் பயிரிட்டுள்ள விவசாயிகள் சாரல் மழை பெய்து வருவதால் அறுவடை பணி நடந்து வரும் நிலையில் பாதிப்படைந்துள்ளனர். மேலும் விவசாய கூலித் தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

    பெரியாறு 65, தேக்கடி 43, கூடலூர் 11.6, சண்முகாநதி 7, உத்தமபாளையம் 4.2, வீரபாண்டி 16, வைகை அணை 2.2, மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 3, கொடைக்கானல் 5.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக எலுமிச்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் வடகாடு மலைப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் அருகே வடகாடு, வண்டிப்பாதை, கண்ணணூர், பால்கடை, புலிக்குத்திக்காடு, பெத்தேல் புரம், சிறுவாட்டுக்காடு உள்பட 14 மலை கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் எலுமிச்சை நடவு செய்துள்ளனர். 

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக எலுமிச்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் வடகாடு மலைப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    கடந்த மாதம் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.60 முதல் ரூ.70 வரை ஒட்டன்சத்திரம் எலுமிச்சை மார்க்கெட்டில் மொத்த விபாயாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது விளைச்சல் அதிகரிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் ஒருகிலோ எலுமிச்சை ரூ.40 முதல் ரூ.50 வரை ஒட்டன்சத்திரம் எலுமிச்சை மார்க்கெட்டில் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் வைகை அணை நீர்மட்டம் 40 அடியை எட்டியுள்ளது.
    கூடலூர்:

    கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.

    இதனால் பெரியாறு அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்தது. நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று காலை 127 அடியாக அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 2105 கன அடி தண்ணீர் வருகிறது.

    பெரியாறு அணியில் இருந்து 1400 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 4050 மி.கன அடியாக உள்ளது.

    கூடுதல் தண்ணீர் திறப்பால் 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 39.96 அடியாக அதிகரித்தது. அணைக்கு 1084 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 945 மி.கன அடியாக உள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதாலும் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் உயர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.70 அடி. வரத்து 2 கன அடி. திறப்பு 10 க அடி. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 125.78 அடி.

    பெரியாறு 4.4, தேக்கடி 4 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    பஞ்சலிங்க அருவியின் நீராதாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
    உடுமலை:

    உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பஞ்சலிங்கஅருவி உள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சிமலைகளில் உள்ள கொட்டை ஆறு, பாரப்பட்டி ஆறு, வண்டி ஆறு, குருமலை ஆறு, கிழவிபட்டிஆறு, உப்புமண்ணம்பட்டி ஆறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது.

    பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வதற்காகவும் இயற்கை சூழலை ரசிப்பதற்காகவும் நாள்தோறும் ஏராளமான வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்த நிலையில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் மேற்கு தொடர்ச்சிமலைகளில் வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக அங்குள்ள சிற்றாறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக அருவிக்கு வந்துகொண்டிருந்த நீர்வரத்து முற்றிலுமாக நின்று விட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வனப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து வனப்பகுதியை நீராதாரமாகக் கொண்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீராதாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதாக தெரிகிறது. இதனால் அருவியின் நீர்வரத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதுடன் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. இதன் காரணமாக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அருவி பகுதி சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. அத்துடன் அருவியின் நீர்வரத்தை வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் இணைந்து இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

    ×