search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourists ban"

    மழை எச்சரிக்கை காரணமாக தனுஷ்கோடிக்கு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. #TNRain #KeralaRain

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் ராமநாதபுரம், திருவாடானை, தொண்டி, பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் விவசாய பணிகள் தீவிர மடைந்துள்ளன.

    நேற்று மாலையில் மாவட்டத்தில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    ராமேசுவரம் பகுதியில் இன்று மழை இல்லை. ஆனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    ரெட் அலர்ட் மற்றும் காற்று காரணமாக சாலைகள் மணலால் மூடப்பட்டு உள்ளதாலும் தனுஷ்கோடிக்கு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் முகுந்தராயர் சத்திரம் வரை அனுமதிக்கப்பட்டனர். தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மழை இல்லை. சில இடங்களில் மட்டும் சாரல் மழை பெய்தது. இன்று காலை சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, காளையார் கோவில், கல்லல், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் மட்டுமே மழை பெய்தது. சிவகாசி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் மழை இல்லை.

    ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. நகரில் மழை இல்லை. இன்று காலை மதுரை, மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம், வாடிப்பட்டி சோழவந்தான் ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. #TNRain #KeralaRain

    கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுவதால் இன்றும் 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். #kumbakaraifalls
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரைஅருவி. கொடைக்கானலில் மழை பெய்யும் பொழுது கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

    இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களும் கும்பக்கரை அருவியில் நீராடிச்செல்கின்றனர்.

    நேற்று காலை முதல் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவிக்கு செந்நீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    எனவே சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க, சுற்றிப்பார்க்க வனத்துறையினர் காலவரையற்ற தடை விதித்துள்ளனர். வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், நீர்வரத்து சீராகும் போது சுற்றுலாபயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    மேகமலை, தூதுவானம் பகுதியில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் சுருளிஅருவியிலும் அதிகளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.

    தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுவதால் இன்றும் 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். #kumbakaraifalls


    நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்வதை தொடர்ந்து கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    கோவை:

    கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

    நேற்று காலை நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. ஊட்டி, குந்தா, கூடலூர் பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    பலத்த மழை காரணமாக கூடலூர், குந்தா பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பிறப்பித்துள்ளார்.

    மழை காரணமாக இன்று ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. கோவையில் நேற்று இரவும் மழை பெய்தது. இன்று காலை பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

    வால்பாறையில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இன்று 2-வது நாளாக மழை நீடித்தது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. வால்பாறையில் உள்ள சோலையாறு அணைக்கு தற்போது வினாடிக்கு 6300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 6100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் 162 அடி தண்ணீர் உள்ளது.

    பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்தது. அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்த தடை நீடித்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை குறைந்து கடந்த 2 நாட்களுக்கு முன் கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி விடுமுறை என்பதால் கோவை குற்றாலத்திற்கு செல்ல அனுமதி வழங்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று முதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்வதை தொடர்ந்து கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    பீளமேடு ஏர்போர்ட் -4, பொள்ளாச்சி -75, பெரிய நாயக்கன் பாளையம்- 10, சூலூர் -5.20, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் - 12, சின்கோனா- 135, சின்னக் கல்லார் - 116, வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் - 73, வால்பாறை தாலுகா அலுவலகம் - 89, கோவை தெற்கு -12.

    அதிகபட்சமாக வால்பாறை சின்கோனா பகுதியில் அதிக மழை பெய்துள்ளது.

    கொடைக்கானலில் சூறைக்காற்று வீசியதால் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    திண்டுக்கல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக சாரல் மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் பொதுமக்களும் வெளியே நடமாடுவதை தவிர்த்து வருவதால் நகர் பகுதியில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    நேற்றும் பலத்த காற்று வீசியதால் நட்சத்திர ஏரிச்சாலை, பேரிஜம் ஏரிக்கு செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின் வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இரவு முழுவதும் பொதுமக்கள் இருளில் தவித்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    மேலும் பேரிஜம் ஏரி பகுதியில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் மரம் முறிந்து விழும் அபாயம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் சவுக்கு, பைன் போன்ற மரங்கள் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சாலையில் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காற்றின் வேகம் குறைந்த பின் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.



    கேரளாவில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதால் பாதுகாப்பு கருதி மலைப்பிரதேசங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 20 நாட்களுக்கு மேலாக பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, மலப்புரம் உள்பட மாநிலம் முழுவதும் இந்த மழை கனமழையாக கொட்டி வருகிறது.

    மழை காரணமாக பல இடங்களில் வீடுகள் இடிந்தன. மேலும் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மேலும் மலை பிரதேசங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டதால் உயிர் இழப்பும் ஏற்பட்டது. இதுவரை கேரளாவில் மழைக்கு 60 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்த நிலையில் கேரளாவில் வருகிற 24-ந்தேதி வரை கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் 7 சென்டிமீட்டர் முதல் 11 சென்டி மீட்டர் வரையும், சில இடங்களில் மிக பலத்த மழையாக 12 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    இதனால் கேரளாவின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து மலையோர பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    மலையோர பகுதிகளில் உள்ள அனைத்து தாலுக்காகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வெள்ள கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அரசு துறை அதிகாரிகளும் உஷார் நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

    பாதுகாப்பு கருதி மலை பிரதேசங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்படுவதால் 24-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

    பஞ்சலிங்க அருவியின் நீராதாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
    உடுமலை:

    உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பஞ்சலிங்கஅருவி உள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சிமலைகளில் உள்ள கொட்டை ஆறு, பாரப்பட்டி ஆறு, வண்டி ஆறு, குருமலை ஆறு, கிழவிபட்டிஆறு, உப்புமண்ணம்பட்டி ஆறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது.

    பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வதற்காகவும் இயற்கை சூழலை ரசிப்பதற்காகவும் நாள்தோறும் ஏராளமான வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்த நிலையில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் மேற்கு தொடர்ச்சிமலைகளில் வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக அங்குள்ள சிற்றாறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக அருவிக்கு வந்துகொண்டிருந்த நீர்வரத்து முற்றிலுமாக நின்று விட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வனப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து வனப்பகுதியை நீராதாரமாகக் கொண்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீராதாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதாக தெரிகிறது. இதனால் அருவியின் நீர்வரத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதுடன் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. இதன் காரணமாக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அருவி பகுதி சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. அத்துடன் அருவியின் நீர்வரத்தை வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் இணைந்து இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

    பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் மறுஅறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. #Rain

    கோவை:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் கோவை குற்றாலம் அருவி உள்ளது.

    கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அருவி அமைந்துள்ள வனப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் கடந்த 3 நாட்களாக அருவியில் வெள்ளம்பெருக் கெடுத்து பாய்கிறது.

    இதனால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத் துறை தடை விதித்தது. நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அருவிக்கு செல்லும் பாதையில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தன. இன்றும் அங்கு மழை பெய்து வருவதால் அருவிக்கு செல்ல தடையை வனத்துறை அதிகாரிகள் நீட்டித்துள்ளனர்.

    கனமழை காரணமாக சிறுவாணி செல்லும் சாலையில் பாறை உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து வன ஊழியர்கள் பாறையை அகற்றினர்.


    தொடர்ந்து மழை பெய்து வருவதால் மறுஅறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள், பொது மக்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக சாடிவயல் சோதனை சாவடியில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

    அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் சோதனை சாவடி அருகே சின்னாறு ஆற்றில் செல்லும் தண்ணீரை பார்த்து விட்டு செல்கிறார்கள்.

    இதேபோல பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு குரங்கு நீர்வீழ்ச்சிக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. #Rain

    ×