search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siruvapuri Murugan Temple"

    • பூக்களை கிள்ளி அர்ச்சனை செய்தல் கூடாது.
    • முழுப்பூவாகத்தான் அர்ச்சிக்க வேண்டும்

    சந்தமும் அடியார்கள் சிந்தையது குடியான தன் சிறுவைதனில் மேவும் பெருமான் வள்ளி மணவாளனாக அருட்காட்சியளிக்கும் அற்புதக் கோலத்தை வழிபாடு செய்பவர்கள் இனிமையான இல்லற வாழ்கையைப் பெற்று இன்பமடைவர். தடைபட்ட திருமணத் தடைகள் நீங்கப் பெற்று மனம் நிறைந்த மங்கல வாழ்வுப் பேறு கிடைக்கும்.

    ஒவ்வொரு மாதமும், பூரம், உத்திரம், விசாகம் ஆகிய நட்சத்திரங்களிலும் பவுர்ணமி, சுக்லது விதியை, சுக்ல சஷ்டி, செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களிலும் விசேஷ வழிபாடு செய்தல் வேண்டும். நெய் அல்லது இலுப்பை எண்ணைய் விளக்கு ஏற்றியும், பழங்கள், தேன், சுத்தமான (கலப்படமற்ற) சந்தனம், பச்சைக் கற்பூரம் முதலான அபிஷேகங்கள் செய்தும், சிவப்பு பச்சை வஸ்திரங்கள் அணிவித்தும், தேன் கலந்த தினைமாவிளக்கு ஏற்றியும் ரோஜா, சண்முகம், சிவப்புத்தாமரை, சிவப்பு அரளி, மகிழம்பூ முதலிய ஏதாவதொரு மலர்மாலை அணிவித்து ஷடாக்‌ஷர அஷ்டோத்ரம், ஷடாக்‌ஷரத்ரிசதி வள்ளி மணவாளப் பெருமான் திருப்புகழ் போற்றி 108 ஆகிய ஏதாவதொரு அர்ச்சனை செய்தல் வேண்டும்.

    (பூக்களை கிள்ளி அர்ச்சனை செய்தல் கூடாது, முழுப்பூவாகத்தான் அர்ச்சிக்க வேண்டும்) வெண்பொங்கல், தேன்குழல், கடலைப்பருப்பு பாயாசம் முதலிய ஏதாவதொரு நைவேத்தியம் செய்தால் எல்லா நலன்களும் பெற்று இன்பமயமான இல்லற வாழ்வை அடையலாம்.

    • செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
    • எல்லோருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

    ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு விசேஷம் இருக்கும். அதுபோல சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வந்தால் 'சொந்த வீடு' கனவு நனவாகும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து உள்ளது. இதனால் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதற்காக இங்குள்ள முருகனை நாடி வரும் பக்தர்கள் கூட்டம்தான் அதிகமாக காணப்படுகிறது. அதுவும் செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்தும் இக்கோவிலை நாடி வரும் பக்தர்கள் அதிகம். பக்கத்து மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்தும் இந்த கோவிலை கேள்விப்பட்டு ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

    நாம் எல்லோருக்கும் எப்படியும் வாழ்க்கையில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தாங்கள் படும் கஷ்டங்களில் இருந்து மீள சொந்த வீடு கனவு ரொம்பவே அதிகமாக இருக்கும். ஆனால் எல்லோரும் அந்த கனவை அவ்வளவு எளிதாக அடைந்து விட முடிவதில்லை. சிலருக்கு கையில் பணம் இருந்து ஏதோ ஒரு காரணத்தினால் சொந்த வீடு கட்டுவதில் பல தடைகள் ஏற்படுவது உண்டு. இதுபற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. உங்கள் உள்ளத்தில் உந்துசக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்து தருகிறேன் என்கிறார் சிறுவாபுரி முருகன்.

    ஆம் சிறுவாபுரிக்கு வந்து முருகனை உள்ளன்போடு வணங்கினால் நாம் நினைத்த காரியம் நினைத்தபடியே நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள். கூட்டு பிரார்த்தனைக்கு பலன் அதிகம் உண்டு என்று சொல்வார்கள். இதனால் இங்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு எப்படியாவது சொந்த வீடு வேண்டும் என மனமுருகி வேண்டுவதால் அவர்கள் எண்ணங்களை இந்த முருகன் உடனடியாக நிறைவேற்றி தருவதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

    இதற்காக பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள பகுதிகளில் செங்கற்களை அடுக்கி வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம் தெளிக்கிறார்கள். பின்னர் அகல் விளக்குகள் ஏற்றி பூக்கள் வைத்து முருகனை நினைத்து வழிபடுகின்றனர். சிலர் சிறு சிறு கற்களையும் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து வழிபாடு நடத்துகின்றனர். இதற்காக அருகிலேயே செற்கற்களும் கிடைக்கிறது.

    பின்னர் 6 வாரம் தொடர்ந்து இந்த கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தால் உங்களது ஆசை பூர்த்தியாகும் என்பது ஐதீகம். உங்களிடம் சொந்த வீடு கட்ட எந்த ஒரு வசதியும் இல்லை. கையில் அதற்கான பணமும் இல்லை என நினைப்பவர்கள் கூட நம்பிக்கையோடு சிறுவாபுரி வந்து முருகனை வணங்கலாம். அதே போல 'திருப்புகழ்' பதிகத்தையும் தொடர்ந்து உச்சரித்து வர வேண்டும்.

    இப்படி செய்வதினால் உங்களின் பொருளாதார நிலை உயர்ந்து ஏழ்மைநிலை மாறி சொந்த வீடு கட்டுவதற்கான சிறப்பான சூழ்நிலை உருவாகும். நிச்சயம் உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் கிட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    • சிறுவாபுரி முருகன் கோவில் அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற திருத்தலமாகும்.
    • சிறுவாபுரி முருகனுக்கு உகந்த திருப்புகழ் 108 போற்றியை பார்க்கலாம்.

    1. அகத்திய முனிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவா போற்றி

    2. அடியார் சித்தத்து இருக்கும் முருகா போற்றி

    3. அடி அந்தமிலா அயில் வேல் அரசே போற்றி

    4. அடியார் இடைஞ்சல் களைவோனே போற்றி

    5. அடியார் இருவினைத் தொகையறுப்பாய் போற்றி

    6. அடியார்கள் பங்கில் வருதேவே போற்றி

    7. அத்தா நிருத்தா அரத்த ஆடையா போற்றி

    8. அந்தண் மறை வேள்வி காவற்கார போற்றி

    9. அமராவதி புரக்கும் ஆனைக்கு இறைவா போற்றி

    10. அமருலகிறைவ உமைதரு புதல்வ போற்றி

    11. அரிய மோன விழிதிறந்த நளின பாதம் போற்றி

    12. அலகில் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி

    13. அறு சமய சாத்திரப் பொருளோனே போற்றி

    14. அறிவுடன் ஓது மாதவர் பெருவாழ்வே போற்றி

    15. அறிவும் உரமும் அறமும் நிறமும் உடையாய் போற்றி

    16. அறிவிற் பெரிய மேன்மைக்கார போற்றி

    17. அன்பர் மகிழ வரங்களும் அருள்வாய் போற்றி

    18. ஆதி அந்தமுமான சங்கரி குமரேசா போற்றி

    19. ஆதி முடிவு அற்ற திரு நாமக்கார போற்றி

    20. ஆயிர முகத்து நதி பாலா போற்றி

    21. ஆறுதிருப்பதியில் வளர் பெருமாள் போற்றி

    22. இன்சொல் விசாகா க்ருபாகர போற்றி

    23. இணையில் அருணை பழநி கிழவ போற்றி

    24. இமயவரை ஈன்ற மங்கைக்கு ஒருபாலா போற்றி

    25. உக்ர இறையவர் புதல்வா முதல்வா போற்றி

    26. உமையாள் பயந்த இலஞ்சியமே போற்றி

    27. உலகு அளவு மால் மகிழ்ந்த மருகா போற்றி

    28. எந்தனுடைச் சாமிநாதா வயலூரா போற்றி

    29. எழுதா மறைமா முடிவே வடிவே போற்றி

    30. என்றும் அகலாத இளமைக்கார போற்றி

    31. ஒருகால் முருகவேள் எனவும் அருள்தாராய் போற்றி

    32. கசிவார் இதயத் தமிர்தே போற்றி

    33. கடம்ப மலர் முடிக்கும் இளையோனே போற்றி

    34.கரிமுகவன் இளைய கந்தப் பெருமான் போற்றி

    35. கருதுவார் மனம் புகுந்த பெருமாளே போற்றி

    36. கர்பர் கயிலாயர் மைந்த வடிவேலா போற்றி

    37. கவுரி நாயகனார் குரு நாயக போற்றி

    38. குருபுங்கவ எண்குண பஞ்சரனே போற்றி

    39. குன்றுருவ ஏவும் வேலைக்கார போற்றி

    40. குமர குர கார்த்திகைப் பெருமாளே போற்றி

    41. குவடு தவிடு படக் குத்திய காங்கேயா போற்றி

    42. குறமகள் தார்வேய்ந்த புயனே போற்றி

    43. குறமகளைவந்தித்து அணைவோனே போற்றி

    44. சகல வேதமுமே தொழு சமரபுரிப் பெருமாள் போற்றி

    45.சரவணத்திற் பிறந்த ஒரு கந்தசுவாமியே போற்றி

    46. சம்பந்தன் எனத் தமிழ் தேக்கிய பெருமான் போற்றி

    47. சிந்தாலத்தை அடர் சுந்தா போற்றி

    48. சலைகள் உருவிட அயிலைவிடு குமர போற்றி

    49. சிவகாம சுந்தரியே தரு பாலக போற்றி

    50. சூர்மா மடியத் தொடுவேலவனே போற்றி

    51. செஞ்சொல் அடியார்கள் வாரக்கார போற்றி

    52. செஞ் சேவற், செங்கையுடைய சண்முகா போற்றி

    53. செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார போற்றி

    54. செந்தமிழ் நூல் விரித்த செவ்வேள் போற்றி

    55. செவ்வான் உருவில் திகழ் வேலவா போற்றி

    56. சேலார் வயல் பொழில் செங்கோடைக்குமர போற்றி

    57. செயே வேளே பூவே கோவே போற்றி

    58. சோதி கார்த்திகை பெற்றவிளக்கொளி போற்றி

    59. ஞானகர சுர பாஸ்கரனே போற்றி

    60. தமிழ் சோதித்து அலங்கல் அணி அத்தா போற்றி

    61. தமிழ்தனை கரை காட்டிய திறலோனே போற்றி

    62. திரியம்பகி அளித்த செல்வச் சிறுவா போற்றி

    63. திங்கள் சூடிய நாயகர் பெருவாழ்வே போற்றி

    64. திருக்குராவடி நிழல் தனில் உறைவோய் போற்றி

    65. திருந்த வேதம் தண்தமிழ் தெரிதருபுலவ போற்றி

    66. திருமக சந்தர முருக கடம்ப சிவசுத போற்றி

    67. திருநடனம் இடு மயிலில் வரு குமர போற்றி

    68. திமிர தினகர முருக சரவணபவ போற்றி

    69. திறல் பூண்ட சுப்ரமண்ய ஷண்முகவேலா போற்றி

    70. தீர தீர தீராதி தீரப் பெரியோனே போற்றி

    71. தேவ தேவ தேவாதி தேவப் பெருமாள் போற்றி

    72. தூவிக்குல மயில் வாகனனே போற்றி

    73. தெரிவை பாரதியர் சாதியிலாதவர் தரசேய் போற்றி

    74. தெய்வ வாரண வநிதை புநிதா போற்றி

    75. தொழுது வழிபடும் அடியர் காவற்கார போற்றி

    76. நக்கீரர் சரண் என வந்தருள் முருக போற்றி

    77. நீலக்ரிப கலாபத் தேர்விடு சேவகா போற்றி

    78. நீர் பெருஞ் சடையாரருள் தேசிகா போற்றி

    79. நிதியே நித்தியமே என் நினைவே போற்றி

    80. நினைத்ததை முடித்தருள் கிருபைக் கடல் போற்றி

    81. பச்சை மாமயில் மெச்ச ஏறிய பாகா போற்றி

    82. பரமற்கு அருமறை உபசேதித்த தேசிகா போற்றி

    83. பரமகல்யாணி தந்த பெருவாழ்வே போற்றி

    84. பல குன்றிலும் அமர்ந்த பெருமாள் போற்றி

    85. பொன்பரவு கதிர்வீசு வடிவேலா போற்றி

    86. மகாமாயை களைந்திட வல்லபிரான் போற்றி

    87. மஞ்சரி குஞ்சரி தோய் காங்கேயா போற்றி

    88. மணம் அறாத கடம்பு பனைவோய் போற்றி

    89. மதுமலர்க் கண் துயில் முகுந்தன் மருகா போற்றி

    90. மந்தாகினி தந்த வரோதயனே போற்றி

    91. மயில் கொண்டு உலகு நொடியில் வருவாய் போற்றி

    92. மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி மன்னா போற்றி

    93. மறவாதவர் நினைப்பவை முடிப்பவா போற்றி

    94. மாநிலம் எழினும் மேலான நாயக போற்றி

    95. முத்தமிழை ஆயும் வரிசைக்கார போற்றி

    96. மைவருங் கண்டத்தர் மைந்தா போற்றி

    97. வடிவும் இளமையும் வளமையுமுடையாய் போற்றி

    98. வாசக அதீத மனோலய பஞ்சுரா போற்றி

    99. வாசுகி எடுத்துதவும் வாசிக்காரா போற்றி

    100. வாவியில் உதித்த முகமாயக்காரா போற்றி

    101. வாகை புனை குக்குட பதாகைக் கார போற்றி

    102. வேடர் குலப் பிடிதோய்மலையே போற்றி

    103. வேதாள கணம் புகழ் வேலவனே போற்றி

    104. வை வைத்த வேற்படை வானவனே ேபாற்றி

    105. வேத ஆகம சித்ர வேலாயுதனே போற்றி

    106. வேலும் மயிலும் நினைந்தவர் துயர்தீர அருள்வாய் போற்றி

    107. சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான

    தண் சிறுவை தனில் மேவும் பெருமான் போற்றி போற்றி

    108. வளம் மிகுந்த சிறுவை மேவி வரம்

    மிகுந்த பெருமான் போற்றி போற்றி

    • அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ்களினால் இந்த தலத்தைப் பாடியுள்ளார்.
    • கல்யாண கோலத்தில் வள்ளியும், முருகனும் கைகோர்த்து நிற்பது அற்புதச் சிறப்பாகும்.

    வறுமை தீர் வளங்கள் நல்கி வானவர் மண்ணு ளோரும்

    தறுகனான் தீமை நீங்கித் தகவுடன் வாழச் செய்த

    சிறுவை தன் வாழ்வாம் எங்கள் சீராமன் மருகனாகும்

    அறுமுகன் கரத்து வேலைப் பணிவதே எமக்கு வேலை.

    ஒப்பிலா முக்கண் எந்தை ஒரு சுடர் வடிவாய் வந்து

    செப்பரும் கருணை நல்கி செகமெலாம் புகழும் அந்த

    ஒப்பிலாச் சிறுவை வாழும் உயர் மகிழ் முருகன் வானோர்

    செப்பறு முகத்தான் வேலைச் செபிப்பதே எமக்கு வேலை.

    -சேக்கிழார் தாசன்

    • எம்பெருமானை எண்ணி நம்மனதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
    • திருப்புகழ் பாடி இறைவனை வணங்க வேண்டும்.

    திருமணம் தடை பட்டாலோ அல்லது நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருந்தாலோ, சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை நாடினால் பலன் உண்டாகும். நம் பிரார்த்தனை நிறைவேற சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரம் ஏதாவது ஒரு கிழமையில் (ஆறு வாரமும், முதல் வாரம் வந்த கிழமையிலேயே தொடர்ந்து அடுத்த 5 வாரமும்) வரவேண்டும். வரும் நேரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். காலை என்றால் ஒவ்வொரு வாரமும் காலையிலே வர வேண்டும். மாலை என்றால் ஒவ்வொரு வாரமும் மாலையிலே வரவேண்டும்.

    திருமணம் ஆகவேண்டிய பெண்கள் ஆறுவாரமும், வாரம் ஒரு நாள் என்று ஆறு தடவைகள் தொடர்ந்து வந்து சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட திருமணம் விரைவில் அமையப்பெறும். திருமணம் ஆக வேண்டி ஆண்டவனிடம் பிரார்த்திக்க வருபவர்கள் வள்ளி மணவாள பெருமானுக்கு அர்ச்சனை செய்து வரவேண்டும்.

    ஆறாவது வாரம் ஆறு அர்ச்சனைக்கு உரிய பொருட்களுடன் வந்து மரகத விநாயகர், மூலவர், வள்ளி மணவாளப் பெருமான், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மை, ஆதி மூலவர் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். வள்ளி மணவாளப் பெருமான் சன்னதியில் தரும் மாலையை திருமண மாலையாக எண்ணி அணிந்து ஆறுமுறை ஆலயத்தை சுற்றி வரவேண்டும்.

    பின்னர் மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று திருமணம் நடைபெறும்வரை பாதுகாத்து வணங்கி வரவேண்டும். திருமணம் முடிந்ததும் தம்பதி சமேதராய் இத்தலம் வந்து ஆறு தெய்வ சன்னதிகளுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். பழைய மாலையை கோவிலில் உள்ள தல மரத்தில் கட்ட வேண்டும். இவ்வாறு இந்த ஆலயத்தில் தொடங்கப்பட்ட மணவாழ்வு உலகப்பயன்கள் அனைத்தும் பெற்று மகிழ்வுடன் தொடர இவ்வாலயம் வந்து அடிக்கடி முருகனின் அருள்வேண்டி வணங்கி செல்ல எல்லாம் சுபமாய் நடக்கும்.

    திருமணம் தவிர மற்ற வேண்டுதல்களான, வீடு கட்டுவது அல்லது வாங்குவது, பிள்ளைப்பேறு, செல்வம், நோய் நிவர்த்தி ஆகியவை பெற வருபவர்கள் மேற்படி முறைப்படி ஆறு வாரம் மூலவர் சன்னிதியில் அர்ச்சனை செய்து வரவேண்டும். ஆறாவது வாரம் மூலவர் சன்னிதியில் இருந்து பெற்ற மாலையை அணிந்து ஆறு முறை நம் வேண்டுதலை இறைவனிடம் முறையிட்டு வெற்றி வேண்டி ஆலயத்தை வலம் வர வேண்டும்.

    இத்தலத்திற்கு பிரார்த்தனை செய்து வருபவர்கள் ஆறு வாரமும் திருப்புகழ் பாடி இறைவனை வணங்க வேண்டும். எண்ணியது முடிக்கும் எம்பெருமானை எண்ணி நம்மனதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். முதல் ஐந்து வாரங்களுக்கு, ஒவ்வொரு முறை வரும் போது இரண்டு தேங்காய், இரண்டு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, பூமாலை ஒன்று மற்றும் இரண்டு எலுமிச்சம் பழம் கொண்டு வணங்க வேண்டும். ஆறாவது வாரம் ஆண்டவனை வழிபட்டு, அர்ச்சனை அல்லது அபிஷேகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் வந்து போகும் பொழுது நம்மிடம் கொடுக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை வீட்டிலே வைத்து பூவைத்து பூஜித்து வரவேண்டும்.

    முதல் வார எலுமிச்சம் பழத்தை இரண்டாவது வாரம் எலுமிச்சம் பழம் வந்தவுடன் எடுத்து கடல், கிணறு ஏதாவது ஒர் அசுத்தம் இல்லாத இடத்தில் சேர்த்துவிட்டு தற்சமயம் பெற்று வந்த பழத்தை பூஜிக்க வேண்டும். இவ்வாறு ஐந்து வாரம் செய்துவிட்டு ஆறாவது வாரம் நாம் பெற்று வந்தபழத்தை ஈரம்படாது பாதுகாத்து நம்முடைய பிரார்த்தனை நிறைவேறும் வரை பூஜிக்க வேண்டும். இந்த பிரார்த்தனை பூஜை காலங்களில் நாம் அண்டர்பதி திருப்புகழை ஓதி வணங்க வேண்டும்.

    நம் பிரார்த்தனை நிறைவேறியதும் சிறுவாபுரி வந்து ஆறு அர்ச்சனைக்கு உரிய பொருட்கள் வைத்து பாலசுப்பிரமணிய சுவாமியை வணங்க வேண்டும். இங்கு உள்ள இரண்டு முருகப்பெருமான் சன்னதிகளில், ஆதி மூலவரிடம் நம்முடைய குறைகளையும், தடைகளையும் நீக்கக்கோரி வணங்கி வர இன்ப வாழ்வு உண்டாகும்.

    இத்தலத்தில் பிரார்த்தனை செய்து வருவோர்கள் முதல் வாரத்திலேயோ அல்லது தொடர்ந்து வரும் வாரங்களிலோ பலன் பெறுவது உண்டு. ஒருவருடைய நம்பிக்கை மிகுந்த பிரார்த்தனை, அவரின் காரியத்தை மிக விரைவில் முடித்து வைக்கிறது.

    சிறுவாபுரி முருகனை நினைத்தாலே போதும் நம் ஆசைகள் எல்லாம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.இதுகுறித்து கோவிலுக்கு வந்த பக்தர் சரவணன் என்பவர் கூறியதாவது:-

    எனக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆகும். தற்போது சென்னை பூந்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். தொடர்ந்து 6-வது வாரமாக கோவிலுக்கு வந்துள்ளேன். இன்று மொட்டையும் போட்டு உள்ளேன். இந்த முருகன் சக்தி வாய்ந்தவராக இங்கு விளங்குகிறார். குழந்தை பாக்கியம், சொந்த வீடு கட்டுதல் போன்ற அனைத்து பிரார்த்தனைகளையும் இவர் நிறைவேற்றி தருகிறார்.

    சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் கோவிலுக்கு பின்புறம் உள்ள பகுதியில் செங்கற்களை அடுக்கி வைத்து பூசாரி மூலம் பூஜைகள் செய்தால் அது உடனடியாக நிறைவேறும் என பக்தர்கள் வெகுவாக நம்புகிறார்கள்.

    நான் முதுகுளத்தூரில் இருந்த போது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாத யாத்திரை சென்று வருவேன். இப்போது சென்னை வந்ததும் இந்த கோவிலின் சிறப்புகளை அறிந்து தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறேன். இதனால் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அருணகிரிநாதர் திருப்புகழில் சிறுவாபுரி முருகன் திருத்தலம் பற்றி பாடியுள்ளார்.
    • முருகம்மையார் என்ற பக்தர்களுக்கு முருகபெருமான் காட்சி கொடுத்த தலமாகும்.

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சின்னம்பேட்டில் உள்ள புகழ்பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இங்கு பாலசுப்ரமணிய சாமி நான்கரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அருணகிரிநாதர் திருப்புகழில் சிறுவாபுரி முருகன் திருத்தலம் பற்றி பாடியுள்ளார். முருகம்மையார் என்ற பக்தர்களுக்கு முருக பெருமான் காட்சி கொடுத்த தலமாகும்.

    சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பாலசுப்பிரமணிய சாமி கோவில் உள் பிரகாரத்தில் கம்பீரமான ராஜ கணபதி, அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேசுவரர், நாகர், ஆதிமூலர், நவக்கிரகங்கள், கால பைரவர், அருணகிரிநாதர், மயூரநாதர் மற்றும் அருணாசலேசுவரர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவிலில் 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இங்கு கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 19 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1 கோடி மதிப்பில் ஆலய புனரமைப்பு பணிகள் நடந்தன. தொடர்ந்து கடந்த 17-ந்தேதி கோவில் வளாகத்தில் கணபதி ஹோமத்துடன், கோ பூஜை, நவக்கிரக பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன.

    இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் யாகசாலை பூஜை நிறைவடைந்தது. தொடர்ந்து, யாகசாலையில் இருந்து சிவாச்சாரியர்கள் குடங்களில் புனித நீரை மேளதாளங்கள் முழங்க எடுத்து கோவிலை வலம் வந்து ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்கள் விமான கோபுரங்களுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது பக்தர்கள், "கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வெற்றிவேல், வீரவேல்" என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விழாவில், மத்திய இணை-மந்திரி எல்.முருகன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் டி.ஜே.கோவிந்தராஜன், வி.ஜி.ராஜேந்திரன், துரை சந்திரசேகர், அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதுதவிர, திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இந்த கோவிலில் வருகிற 21-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • கடந்த 2003-ம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    செங்குன்றம் அருகே உள்ள சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். கடந்த 2003-ம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதற்கிடையே ரூ.1 கோடி மதிப்பில் கோவிலை புனரமைத்து மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை கோவில் வளாகத்தில் கோ பூஜை, தன பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், ஸ்ரீ நவகிரக ஹோமம், பூர்ணா ஹூதி, தீப ஆராதனை மற்றும் யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று காலை சாந்தி ஹோமம், யாகசாலை நிர்மாணம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கும்பஅலங்காரம், முதல்கால ஹோமம், பூர்ணாஹூதி நடைபெற உள்ளது.

    நாளை(19-ந்தேதி) காலை 2-ம் கால யாகபூஜை, மாலையில் 3-ம் காலயாக பூஜை, அஷ்டபந்தனம் சாத்துதல், விசேஷ திரவிய ஹோமம் நடக்கிறது. 20-ந்தேதி 4,5-ம் கால யாக பூஜை, மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு அஷ்ட பந்தனம் சாத்துதல் நடக்கிறது. வருகிற 21-ந்தேதி காலை 9.45 மணி முதல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார தரிசனம், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 7.30 மணிக்கு சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.

    • செவ்வாய்க்கிழமை திரளான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர்.
    • இந்த கோவிலில் வருகிற 21-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    பொன்னேரி அடுத்த சின்னம்பேடு, சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து செல்வது வழக்கம். வாரத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் வெளியூர்களில் இருந்தும் பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சாமிதரிசனத்துக்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் இந்த கோவிலில் வருகிற 21-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன்.

    இந்த நிலையில் கும்பாபிஷேக விழா பணியையொட்டி கோவில் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து வருகின்ற 20-ந்தேதி வரை மூலவரை தரிசிக்க இயலாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கும்பாபிஷே நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இட நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளது.
    • கோவிலை சுற்றி உள்ள 100 கடைகள் தற்காலிகமாக அகற்ற உத்தரவு.

    பொன்னேரி :

    பொன்னேரி அருகே சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த கோவிலில் வருகிற 21-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை, வாகன நிறுத்தும் வசதி, பக்தர்கள் தங்குவதற்கான இடம் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    கோவிலை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பூ மாலை, தேங்காய், பழம், காய்கறிகள் கடைகள் உள்ளன. இதனால் கும்பாபிஷேம் நடைபெறும் நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இட நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளது.

    இதையடுத்து கோவிலில் இட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் கோவிலை சுற்றி உள்ள கடைகளை தற்காலிகமாக அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று வியாபாரிகளுக்கு வருவாய் துறையினர் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறுவாபுரி கோவில் வியாபாரிகள், கிராம மக்கள், கோவில் நிர்வாகத்தினர் ஆகியோருடன் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் ரஜினிகாந்த், செயல் அலுவலர் செந்தில் குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது சிறுவாபுரி முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா முடியும் வரை கோவிலை சுற்றி உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளை தாமாக அகற்றி விடுவதாகவும், கும்பாபிஷேகத்திற்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

    மேலும் ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    ×