search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public protest"

    • 50 ஆண்டுகளுக்கு மேலாக பயணியர் நிழற்குடை இருந்து வந்தது.
    • பொதுமக்கள் திரண்டு இந்த இடத்தில் இரும்பு கம்பி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் அருகே கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயணியர் நிழற்குடை இருந்து வந்ததை சாலை விரிவாக்க பணியின் போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அகற்றி குப்பையில் வீசினர். இதனைப் பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து, அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதால் கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர். இந்த நிலையில் சாலை விரிவாக்க பணி முடிந்து தற்போது இருபுறமும் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைத்து, நேற்று இரவு அதன் மேல் சிமெண்ட் கட்டை அமைப்பதற்கு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமையில் சமூக ஆர்வலர் குமரவேல் மற்றும் பொதுமக்கள் திரண்டு இந்த இடத்தில் இரும்பு கம்பி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது இரும்பு கம்பி வைத்ததோடு இல்லாமல் நிரந்தரமாக அகற்றாமல் இருக்க சிமெண்ட் கட்டைகள் அமைக்க யார் அனுமதி அளித்தார்கள்? என கேட்டனர். பின்னர் இன்று காலை இரும்பு கம்பியை முழுமையாக அகற்ற வேண்டும் என கூறினார். 

    அப்போது ம.தி.மு.க.முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து, பயணியர் நிழற்குடை அமைக்கும் இடத்தில் எப்படி இரும்பு கம்பி அமைத்தார்கள் என கேட்டு காண்டிரக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்தவர்கள் அனைவரும் இங்கு உள்ள இரும்பு கம்பியை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறி பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரவோடு இரவாக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பியை அகற்றினார்கள். மேலும் பொதுமக்கள் அனுமதி இல்லாமல் இந்த இடத்தில் மீண்டும் இரும்பு கம்பி வைத்தால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர். இது மட்டும் இன்றி புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். இது சம்பந்தமாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எங்களிடம் பேசி நாங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • கழிவுநீர் ஏரியில் கலப்பதாக புகார்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அடுத்த மகாணிப்பட்டு ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான லுங்கி தயாரிக்கும் கம்பெனி கடந்த 8-ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

    மேலும் இந்த கம்பெனியின் பின் பகுதியில் காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து கங்காதரநல்லூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் அமைந்துள்ளது. இந்த ஏரியானது நிரம்பி பிள்ளையார்குப்பம், கங்காதரநல்லூர், புதூர், உள்ளிட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. இந்நிலையில் இங்குள்ள கங்காதரநல்லூர் ஏரியில் நேற்று மீன்கள் செத்து மிதந்தன.

    இதனைக் கண்ட பொதுமக்கள் இங்குள்ள தனியார் கம்பெனியில் இருந்து இரவு நேரங்களில் வெளியேற்றப்படும் கழிவுநீர் ஏரியில் கலப்பதாகவும் அதனால் ஏரியின் தண்ணீர் நிறம் மாறி காணப்படுவதாகவும் அதன் காரணத்தினால் தற்போது மீன்கள் இறந்து கிடப்பதால் பொது மக்கள் மீன்களை எடுத்து வந்து தனியார் கம்பெனியின் நுழைவு வாயிலில் கொட்டி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    இதனையறிந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதனையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • பணி நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என கூறியதை யடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நவீன எரிவாயு திட்டத்திற்கு தடை விதிக்க கோரி பொதுமக்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே நவீன எரிவாயு தகனமேடை அமைக்க பூமி பூஜை போடுவதற்காக அந்த இடத்தை சுத்தம் செய்ய நகராட்சி ஆணையாளர் விநாயகம் ,பொறியாளர் ஜான் பிரபு உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் நகராட்சி பணியாளர்கள சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பச்சாபாளையம் பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி சுத்தம் செய்யலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- அரசு எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் தொலைநோக்குப் பார்வையில் திட்டங்களை கொண்டு வர வேண்டும். இந்தத் திட்டம் அமைந்தால் தினமும் சுமார் 4 முதல் 10 உடல்கள் வரை எரியூட்ட அந்த பகுதிக்கு வரும்.

    ஏற்கனவே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அந்த ரோடு வழியாகத்தான் உடலைக் கொண்டு வரும் வாகனங்கள் சென்று வர வேண்டும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் திட்டம் செயல்படுத்த உள்ள பகுதியில் சுகாதார வளாகம், ரேசன் கடை, பனியன் கம்பெனி, 1000க்கும்மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளி ஆகியவை உள்ளன.

    மேலும் பெண்கள் அதிகமாக நடமாடும் பகுதி.இந்த நிலையில், அங்கு இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பெண்களுக்கு கடும் அவதி ஏற்படும். எனவே தொலைநோக்குப் பார்வையில், போக்குவரத்து பிரச்சனை இல்லாத நகருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில், இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மை ஏற்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் போலீசார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று இருந்தால் அதனை தாருங்கள் இல்லாவிட்டால், பணி நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
    • 30 பேரையும் கைது செய்து தனியாா் திருமண மண்ட பத்தில் தங்கவைத்தனா்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூா் வடக்கு வட்டம் பொங்குபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பள்ளிபாளையம் அண்ணா நகா் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு இடையூறாக 2 மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்களை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் மாவட்ட கலெக்டர், சப்-கலெக்டர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் உரிய தீா்வு கிடைக்கும் வகையில் திருமுருகன்பூண்டியில் உள்ள உதவி மின் பொறியாளா் அலுவலகம் முன்பாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இது குறித்து தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருமுருகன்பூண்டி காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.ஆனால் அவா்கள் கலைந்து செல்ல மறுத்ததால் 30 பேரையும் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.

    இதுதொா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்புகளுக்கு இடையூறாக உள்ள இரு மின் கம்பங்களால் மழைக் காலங்களில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. ஆகவே, இந்த கம்பங்களை மாற்றிக் கொடுக்கும் வரையில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனா். 

    • பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் அருகே மின் மயானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
    • சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் அருகே மின் மயானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் இப்பகுதி பள்ளியில் பயிலும் 3,500 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதுடன் தாயார்தோப்பு மற்றும் வயல்களில் வேலை பார்க்க செல்பவர்கள். அந்த வழியில் வரும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறி பஸ் நிறுத்தம் எதிர்புறம் உள்ள மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் சிறு குழந்தைகள் கலந்து கொண்டு மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகேஷ் குமார், வருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் நகராட்சி சேர்மன் பங்களாச்சுரண்டை பகுதியில் மின் மயானம் அமைக்கப்படாது எனவும் சுரண்டை நகராட்சி பகுதியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்காமல் அமைக்கப்படாது என உறுதியளித்தனர். அதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • தேவேந்தா் நகா் பகுதி மக்களுக்கு என மயானம் இல்லை.
    • சனிக்கிழமை மாலை தொடங்கிய போராட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நீடித்தது.

    அவினாசி :

    சேவூா் ஊராட்சி, தேவேந்தா் நகரில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் சேவூா் கைகாட்டி பகுதியில் உள்ள மயானத்தை பயன்படுத்தி வருகின்றனா். இருப்பினும் மயானத்தில் சேவூா் கைகாட்டி ரவுண்டான பகுதியைச் சுற்றியுள்ள உணவகத்தினா், தேநீா் கடைக்காரா்கள் உள்ளிட்டோா் கழிவுகளைக் கொட்டி ஆக்கிரமித்து வருவதாகவும், அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அவிநாசி ஒன்றிய அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

    இதையடுத்து, சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் சனிக்கிழமை சென்று ஆய்வு செய்தனா்.

    இதில், தேவேந்தா் நகா் பகுதி மக்களுக்கு என மயானம் இல்லை. மயானம் பொதுவாகத் தான் உள்ளது எனக் கூறினா். இதை ஏற்க மறுத்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மயானம் அருகே அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.சனிக்கிழமை மாலை தொடங்கிய போராட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நீடித்தது. 

    • கடந்த 21-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 3 அமைச்சர்கள் மற்றும் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
    • 200-வது நாள் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 கிராமப் பகுதிகளை உள்ளடக்கி சென்னையின் 2-வது விமான நிலையமான, பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுமென மத்திய, மாநில அரசுகள் அறிவித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் இன்று 200-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஏகானாபுரம் கிராம மக்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளையும், நிலம் எடுக்கும் பணிகளையும் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஏற்கனவே கிராம உரிமை மீட்பு பேரணியை நடத்தினார்கள்.

    ஏகானாபுரம் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கிய இந்த பேரணியில் ஆண்கள், பெண்கள் என சுமார் 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கண்டன முழக்கங்களோடு பேரணியில் சென்றவர்கள் 500 மீட்டர் தூரத்தில் அம்பேத்கர் திடல் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். கடந்த 21-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 3 அமைச்சர்கள் மற்றும் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இதை தொடர்ந்து போராட்டம் தொடரும் என கிராம மக்கள் அறிவித்தனர். அதை தொடர்ந்து தங்கள் கிராமத்திற்கு வந்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் தொடங்கி இன்றுடன் 200 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவர்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இன்று 200-வது நாள் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

    பரந்தூர் விமானநிலைய எதிர்ப்பு போராட்டத்தில் சட்டம் ஒழுங்கை காக்க போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் 7 ஏடிஎஸ்பி.க்கள், 28 டிஎஸ்பிக்கள், 42 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 81 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர் மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • இருதரப்பினரை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்.
    • சமரசத்தை பொதுமக்கள் ஏற்க மறுத்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் பி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு சலவை தொழிலாளி. இவரது மனைவி சின்னகுழந்தை. சில நாட்கள் முன்பு நோய் வாய்பட்டு இன்று அதிகாலை சின்னகுழந்தை இறந்தார்.

    அவரது உடலை அடக்கம் செய்ய சேவூர் ஊராட்சிக்குபட்ட வேலூர்-ஆரணி சாலையில் நெடுஞ்சாலை ஓரத்தில் புறம்போக்கு இடத்தில் பள்ளம் தோண்டியதாக கூறப்படுகிறது.

    இதற்கு சேவூர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அங்கு இருதரப்பினரை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது.

    ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் சமரசம் செய்ய முயன்றனர்.

    ஆனால் சமரசத்தை பொதுமக்கள் ஏற்க மறுத்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
    • சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த நாரணா புரம் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை திடீரென, அரசு பஸ்சை முற்றுகையிட்டு சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த அரசு பஸ் உக்கடம், ெரயில் நிலையம், காந்திபுரம், சரவணம்பட்டி வழியாக வடுகபாளையத்தை கடந்து வாகாரப்பாளையம் வரை செல்வது வழக்கம். கடந்த ஒரு வாரமாக குறித்த நேரம் காலை நேரத்தில் வராமல் உள்ளது.

    இதனால் காலையில் பயணிக்கும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதனை கண்டித்து ஊர் பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இன்ஸ்பெக்டர் விஜயா, சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த், செல்வராஜ் மற்றும் அன்னூர் போலீசார் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்று நடைபெற இருந்த போராட்டத்தை கைவிடுமாறு பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி முன்பு போல பஸ்களை இயக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் பேரில், சமாதானமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    விழுப்புரம் -நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழக பகுதியான ஆழியூர் ஏரி பகுதியிலிருந்து மண் எடுத்து வர திருவாண்டார் கோவில் காலணி பகுதியில் வழி சீர்படுத்தும் பணியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் -நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி நடைபெற்று வருகிறது.

    இதற்காக தமிழக பகுதியான ஆழியூர் ஏரி பகுதியிலிருந்து மண் எடுத்து வர திருவாண்டார் கோவில் காலணி பகுதியில் வழி சீர்படுத்தும் பணியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் ஈடுபட்டனர். இத் தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி பொக்லைன் எந்திரம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் இவ்வழியாக மண் லாரி சென்றால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அதுமட்டுமில்லாமல் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளியும் பகுதியில் அமைந்துள்ளது.

    ஏற்கனவே இந்திய உணவு கழகத்திற்கு உணவு ஏற்ற வரும் லாரிகளால் இடையூறு இருந்து வருகிறது. அதனுடன் சேர்த்து இவ் வழியாக லாரியில் மண் எடுத்து சென்றால் மேலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். பாதுகாப்புக்கு அச்சுறுதலாக இருக்கும் எனவே இவ்வழியில் எடுத்துச் செல்லக்கூடாது என வலியுறுத்தினர்.

    அப்பகுதி பொதுமக்களிடம் திருபுவனை போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். பொக்லைன் எந்திரத்தின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    • சாலைப் பணிகளுக்காக இயக்கப்பட்ட வாகனத்தால் விவசாய தோட்டத்தின் மின் கம்பி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
    • ஒப்பந்ததாரர்கள் சார்பில் ஒத்துக் கொள்ளப்பட்டதால் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு லாரிகளை விடுவித்தனர்.

    உடுமலை :

    தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது உடுமலை,மடத்துக்குளம் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் விரைவாக நடந்து வருகிறது.

    இதற்காக அதிக அளவில் மண் மற்றும் சரளைக்கற்கள்,ஜல்லிக்கற்கள் போன்றவை தேவைப்படுகிறது.இவற்றை கொண்டு செல்ல பெரிய அளவிலான லாரிகள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலும் வட மாநிலத் தொழிலாளர்களால் இயக்கப்படும் இந்த லாரிகள் குறித்து பல குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.

    இந்தநிலையில் உடுமலையையடுத்த சின்னவீரன்பட்டி ஊராட்சி ஆறுமுகம் நகர் பகுதியை ஒட்டி மண் லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவே இந்த சாலை உருவாக்கப்பட்டது.அதிக பட்சம் 10 டன் எடை வரை மட்டுமே தாங்கக்கூடிய கிராமத்து சாலையில் 50 டன்னுக்கு மேல் எடையுடன் கூடிய கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் சாலை பல இடங்களில் சேதமடைந்து மேடும் பள்ளமுமாக மாறிவிட்டது.

    அந்த பள்ளங்களை சீரமைக்கக் கோரி கடந்த முறை போராட்டத்தில் ஈடுபட்ட போது மண் கொட்டி பள்ளங்களை மூடி விட்டார்கள். தற்போது லாரிகள் வேகமாக செல்லும்போது அதிக அளவில் மண் புழுதி பறக்கிறது. இதனால் அருகிலுள்ள குடியிருப்புகளில் உள்ள சமையல் பாத்திரங்கள் மற்றும் குடிநீரில் புழுதி படிந்து மாசடைகிறது.

    அத்துடன் மண் புழுதியை தொடர்ந்து சுவாசிக்க வேண்டிய நிலையால் பல்வேறு விதமான சுவாசக்கோளாறுகள் ஏற்படுகிறது. மேலும் மண் புழுதியால் அருகிலுள்ள விளைநிலங்களிலுள்ள பயிர்கள் பாழாகி வருகிறது. இலைகளின் மீது தூசி படிவதால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

    மல்பெரி இலைகளில் தூசி படிவதால் அவற்றை உண்ணும் புழுக்கள் பாதிக்கப்படுகிறது. அத்துடன் வாழைத்தார்களில் புழுதி படிந்திருப்பதால் வியாபாரிகள் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்ய முன்வருகிறார்கள். இதனால் செலவு செய்து தண்ணீரை பீய்ச்சியடித்து கழுவி வைத்தோம். ஆனால் மீண்டும் புழுதி படிந்து விட்டது.

    தீவனத்துக்காக வளர்க்கும் யானைப்புல் போன்றவற்றில் மண் படிந்து கால்நடைகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே லாரிகளில் மண்ணை மூடி கொண்டு செல்ல வேண்டும். உடனடியாக சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதிக வேகத்தில் இயக்குவதைத் தவிர்க்க குறிப்பிட்ட இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். புழுதி பறப்பதைத் தடுக்க அவ்வப்போது தண்ணீர் தெளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஒப்பந்ததாரர்கள் சார்பில் ஒத்துக் கொள்ளப்பட்டதால் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு லாரிகளை விடுவித்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் சாலைப் பணிகளுக்காக இயக்கப்பட்ட வாகனத்தால் விவசாய தோட்டத்தின் மின் கம்பி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தட்டிக் கேட்ட விவசாயி மீது வாகனத்தை ஏற்றி விடுவேன் என்று மிரட்டுவதாக விவசாயி ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.

    • ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தில் சின்ன ஏரி, பெரிய ஏரி என 2 ஏரிகள் உள்ளது.
    • இந்தநிலையில், குத்தகை காலம் 6 மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தில் சின்ன ஏரி, பெரிய ஏரி என 2 ஏரிகள் உள்ளது.

    ஏலம்

    கடந்த 2 ஆண்டுகளாக பெய்த மழைக்கு, 2 ஏரிகளும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், காமலாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். 2 ஏரியிலும் நாட்டு இன மீன்கள் அதிகளவில் உள்ளது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் 2 ஏரியிலும் மீன்பிடி உரிமை ஏலம் விடப்பட்டு வருகிறது.

    பொதுபணித்துறைக்கு சொந்தமான 2 ஏரிகளிலும், ஓமலூர் வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மீன்பாசி குத்தகை விடப்பட்டது. அதன்படி குத்தகை தொகையாக பெரிய ஏரி சுமார் ரூ.2 லட்சத்திற்கும், சின்ன ஏரி சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் கடந்த 2 ஆண்டுகள் மீன் பிடிக்க ஏலம் விடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் போராட்டம்

    இந்தநிலையில், குத்தகை காலம் 6 மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது. அதனால், காமலாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பலரும் ஏரியில் மீன் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.

    இந்தநிலையில், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று 2 ஏரிகளின் மீன் பிடி உரிமைக்கான ஏலம் விடப்பட்டது. முன்னதாக காலையில் பெரிய ஏரிக்கு நடைபெற்ற ஏலத்தில் 8 பேர் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். இதில், சுப்ரமணி என்பவர் 99 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். மாலையில் சின்னஏரிக்கு ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில், காமலாபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் திடீரென தாலுகா அலுவலகத்தில் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் தாசில்தார் வள்ளமுனியப்பன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது பொது மக்கள் கூறுகையில், இங்கு ஏலம் எடுக்கும் நபர்கள், வெளியே சென்று, அவர்கள் தனியாக ரூ. 20 லட்சத்திற்கும் மேல் ஏலம் விட்டு பணத்தை பாகம் பிரித்து கொள்கின்றனர்.

    சுகாதார சீர்கேடு

    அதனால், ஏலம் விடாமல் பொதுமக்கள் இலவசமாக மீன் பிடித்து உண்பதற்கு அனுமதிக்க வேண்டும். மேலும், ஏரியில் மீன் பிடி உரிமை எடுக்கும் ஏலதாரர்கள், மீன் வளர்ப்புக்காக ஏரியில், இறைச்சி, குப்பை, காய்கறி கழிவுகளை கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர். அதனால், தண்ணீர் வளம் பாதிக்கிறது, ஏரியில் துணி துவைத்து குளித்தால் கூட மிரட்டல் விடுப்பதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மீன் பிடி ஏலம் நடத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

    அமைதி கூட்டம் நடத்திய பிறகு மீண்டும் ஏலம் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×