என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேவூா் அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்
- தேவேந்தா் நகா் பகுதி மக்களுக்கு என மயானம் இல்லை.
- சனிக்கிழமை மாலை தொடங்கிய போராட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நீடித்தது.
அவினாசி :
சேவூா் ஊராட்சி, தேவேந்தா் நகரில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் சேவூா் கைகாட்டி பகுதியில் உள்ள மயானத்தை பயன்படுத்தி வருகின்றனா். இருப்பினும் மயானத்தில் சேவூா் கைகாட்டி ரவுண்டான பகுதியைச் சுற்றியுள்ள உணவகத்தினா், தேநீா் கடைக்காரா்கள் உள்ளிட்டோா் கழிவுகளைக் கொட்டி ஆக்கிரமித்து வருவதாகவும், அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அவிநாசி ஒன்றிய அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் சனிக்கிழமை சென்று ஆய்வு செய்தனா்.
இதில், தேவேந்தா் நகா் பகுதி மக்களுக்கு என மயானம் இல்லை. மயானம் பொதுவாகத் தான் உள்ளது எனக் கூறினா். இதை ஏற்க மறுத்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மயானம் அருகே அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.சனிக்கிழமை மாலை தொடங்கிய போராட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நீடித்தது.






