என் மலர்
உள்ளூர் செய்திகள்

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய காட்சி.
மீன்பிடி குத்தகைதாரர்களை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
- ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தில் சின்ன ஏரி, பெரிய ஏரி என 2 ஏரிகள் உள்ளது.
- இந்தநிலையில், குத்தகை காலம் 6 மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தில் சின்ன ஏரி, பெரிய ஏரி என 2 ஏரிகள் உள்ளது.
ஏலம்
கடந்த 2 ஆண்டுகளாக பெய்த மழைக்கு, 2 ஏரிகளும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், காமலாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். 2 ஏரியிலும் நாட்டு இன மீன்கள் அதிகளவில் உள்ளது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் 2 ஏரியிலும் மீன்பிடி உரிமை ஏலம் விடப்பட்டு வருகிறது.
பொதுபணித்துறைக்கு சொந்தமான 2 ஏரிகளிலும், ஓமலூர் வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மீன்பாசி குத்தகை விடப்பட்டது. அதன்படி குத்தகை தொகையாக பெரிய ஏரி சுமார் ரூ.2 லட்சத்திற்கும், சின்ன ஏரி சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் கடந்த 2 ஆண்டுகள் மீன் பிடிக்க ஏலம் விடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் போராட்டம்
இந்தநிலையில், குத்தகை காலம் 6 மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது. அதனால், காமலாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பலரும் ஏரியில் மீன் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று 2 ஏரிகளின் மீன் பிடி உரிமைக்கான ஏலம் விடப்பட்டது. முன்னதாக காலையில் பெரிய ஏரிக்கு நடைபெற்ற ஏலத்தில் 8 பேர் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். இதில், சுப்ரமணி என்பவர் 99 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். மாலையில் சின்னஏரிக்கு ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், காமலாபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் திடீரென தாலுகா அலுவலகத்தில் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் தாசில்தார் வள்ளமுனியப்பன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது பொது மக்கள் கூறுகையில், இங்கு ஏலம் எடுக்கும் நபர்கள், வெளியே சென்று, அவர்கள் தனியாக ரூ. 20 லட்சத்திற்கும் மேல் ஏலம் விட்டு பணத்தை பாகம் பிரித்து கொள்கின்றனர்.
சுகாதார சீர்கேடு
அதனால், ஏலம் விடாமல் பொதுமக்கள் இலவசமாக மீன் பிடித்து உண்பதற்கு அனுமதிக்க வேண்டும். மேலும், ஏரியில் மீன் பிடி உரிமை எடுக்கும் ஏலதாரர்கள், மீன் வளர்ப்புக்காக ஏரியில், இறைச்சி, குப்பை, காய்கறி கழிவுகளை கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர். அதனால், தண்ணீர் வளம் பாதிக்கிறது, ஏரியில் துணி துவைத்து குளித்தால் கூட மிரட்டல் விடுப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மீன் பிடி ஏலம் நடத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
அமைதி கூட்டம் நடத்திய பிறகு மீண்டும் ஏலம் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






