என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிற்சாலை முன்பு மீன்களை கொட்டி பொதுமக்கள் போராட்டம்
- கழிவுநீர் ஏரியில் கலப்பதாக புகார்
- போலீசார் பேச்சுவார்த்தை
நெமிலி:
காவேரிப்பாக்கம் அடுத்த மகாணிப்பட்டு ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான லுங்கி தயாரிக்கும் கம்பெனி கடந்த 8-ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.
மேலும் இந்த கம்பெனியின் பின் பகுதியில் காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து கங்காதரநல்லூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் அமைந்துள்ளது. இந்த ஏரியானது நிரம்பி பிள்ளையார்குப்பம், கங்காதரநல்லூர், புதூர், உள்ளிட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. இந்நிலையில் இங்குள்ள கங்காதரநல்லூர் ஏரியில் நேற்று மீன்கள் செத்து மிதந்தன.
இதனைக் கண்ட பொதுமக்கள் இங்குள்ள தனியார் கம்பெனியில் இருந்து இரவு நேரங்களில் வெளியேற்றப்படும் கழிவுநீர் ஏரியில் கலப்பதாகவும் அதனால் ஏரியின் தண்ணீர் நிறம் மாறி காணப்படுவதாகவும் அதன் காரணத்தினால் தற்போது மீன்கள் இறந்து கிடப்பதால் பொது மக்கள் மீன்களை எடுத்து வந்து தனியார் கம்பெனியின் நுழைவு வாயிலில் கொட்டி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதனையறிந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






