search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "perumal"

    • தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு.
    • ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள் தான்.

    தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு.

    இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும்.

    ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள் தான்.

    சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான்.

    பெருமாளை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பு என்பார்கள்.

    அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

    ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று.

    புதனின் அதி தேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு.

    எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

    பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி.

    இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான்.

    ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.

    புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான்.

    அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

    புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத் தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.

    ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.

    அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    • நாமக்கட்டிக்கும் தனித்துவம் தரும் மாதம் இது.
    • புரட்டாசி மாதத்தில் தான் திருவேங்கட முடையானுக்கு பிரமோத்சவமும் நடைபெறுகிறது.

    புரட்டாசி மாதம் என்றாலே கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி பாடல் பரவச ஒலி தான் பெருமாள் பக்தர்களின் வீடெங்கிலும் தேவகானமாக பரவும்.

    சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் ஆடை உடுத்தி, திருநாமம் தரித்துக்கொண்டு பெருமாளை மனதிலே நினைத்து வழிபடுவார்கள்.

    நாமக்கட்டிக்கும் தனித்துவம் தரும் மாதம் இது.

    சிலர் தான் நினைக்கும் காரியம் நல்லபடியாக நிறைவேறி விட்டால் திருப்பதிக்கு வருகிறேன் என்றும், இன்னும் சிலர் திருப்பதிக்கு வந்து மொட்டை போடுகிறேன் என்றும் அவர்களால் இயன்ற வேண்டுதல்களை நினைத்து காசை மஞ்சள் துணியில் முடிந்து வைப்பர்.

    சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

    புரட்டாசி மாதத்தில் தான் திருவேங்கட முடையானுக்கு பிரமோத்சவமும் நடைபெறுகிறது.

    மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில்.

    ஆனால் ஸ்ரீபாலாஜியோ, எனக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம் தான் என்கிறார்.

    அதிலும், சனிக்கிழமை தான் தனக்கு உகந்த நாள் என்கிறார் தம் பக்தன் ஒருவனுக்கு அருள் புரிந்த கதையின் மூலமாக இது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

    அந்த நிகழ்வு வருமாறு:

    மன்னன் தொண்டைமானுக்கு மலையப்பன் மீது மாசிலா காதல்.

    எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன் மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான்.

    அதன்படியே பூஜையும் செய்து வந்தான்.

    இவ்விதம் பூஜை செய்து வரும் வேளையில் ஒரு நாள் பொன்மலர்களுக்கு இடையே மண் மலர்களும் வந்து விழுவதை கண்டான்.

    திடுக்கிட்ட அவன், அவை மண் மலர்கள் தானா என கூர்ந்து நோக்கினான்.

    அவை மண் மலர்களால் தான் என்பதை மீண்டும், மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன.

    கதவுகள் அனைத்தும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையை தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது.

    மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது.

    தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.

    குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.

    பிறவிலேயே அவனுக்கு கால் ஊனம்.

    தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் கடவுள் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான்.

    வேங்கடவனும், அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார்.

    பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம்.

    பீமய்யாவும், தனக்கு கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் மாலவனின் உருவத்தை வடித்து மலர்கள் தூவி வழிபட்டு வந்தான்.

    பிரதி வாரம் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யா, பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான்.

    இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும்போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான்.

    அச்சமயங்களில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களிமண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான்.

    காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகிவிட்டது.

    இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டை மான் ஒரு நாள் அபூர்வ கனவொன்றை கண்டான்.

    அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, தமது பக்தன் பீமய்யா செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்த பூஜையை நீயும் சென்று பார், அப்போது உண்மை விளங்கும் என்று கூறி மறைந்தார்.

    தொண்டை மானும், திருமால் குறிப்பிட்டஇடத்துக்கு சென்று பீமய்யா செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனிக்கலானான்.

    அனுதினமும் செய்வது போலவே பீமய்யா தான் வடிவமைத் திருந்த வேங்கடவனின் சிலையருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களை தூவி இறைவனை வழிபடுவதை கண்டான் தொண்டை மன்னன்.

    உடன் பீமய்யாவை சென்று கட்டித்தழுவிய தொண்டைமான் அவனிடம் உன் பக்தி உயர்வான பக்தி, உனது வழிபாட்டை திருமால் ஏற்றுக்கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றான்.

    இதற்கிடையில் அந்த பரந்தாமன் பீமய்யாவின் கனவில் தோன்றி உன் பக்தியின் பெருமையை என்று பிறர் கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்து கொள்வேன் என கூறியிருந்தார்.

    அதன்படியே தொண்டை மான், பீமய்யாவின் பக்தியை பாராட்டியதை கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது.

    புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது.

    • ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார்.
    • அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.

    கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனி பகவானின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.

    இதற்குப் புராணத்தில் ஒரு கதை உண்டு.

    ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார்.

    சனி பகவானின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி பகவான் அமர்ந்தார்.

    இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனி பகவானின் தலைமீது வைத்தார்.

    பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி பகவான், தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே, என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனி பகவான்.

    அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.

    • புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழு மலையானுக்கு மிகவும் உகந்தது.
    • தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வேங்கடேசன் அவதாரம்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழு மலையானுக்கு மிகவும் உகந்தது.

    தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வேங்கடேசன் அவதாரம்.

    பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும்.

    பின்னர் அலமேலு மங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும்.

    இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

    பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும்.

    சர்க்கரைப்பொங்கல், வடை எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.

    புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக் கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும்.

    அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம்போல் செய்து மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்தி போல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.

    அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.

    பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம்.

    துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.

    புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.

    செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.

    • வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு.
    • பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர்.

    வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு.

    சிலர் பாயாசமும் படைப்பர்.

    வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.

    அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது.

    பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து கலந்து கொள்ள செய்ய வேண்டும்.

    எல்லோரும் பக்திப் பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.

    பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர்.

    பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர்.

    இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறிய படி இருந்தால் திருமாலே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்

    • சுருட்டப்பள்ளி ஆலயத்தின் உள்ளே சென்றதும் 16 கால் மண்டபத்தை பார்க்கலாம்.
    • கருவறையில் மிக நேர்த்தியாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் திரிபுரசுந்தரியை காணலாம்

    தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் ஊத்துக்கோட்டையில் இருந்து நாகலாபுரம் செல்லும் சாலையில் சுருட்டப்பள்ளி ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    மாநில நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை வழி பிச்சாட்டூர், புத்தூர், நகரி, நாகலாபுரம், திருப்பதி செல்லும் பஸ்களில் சென்றால் கோவில் வாசலிலேயே இறங்கிக் கொள்ளலாம்.

    இக்கோவிலுக்கு பல சிறப்புகள் உண்டு.

    சுருட்டப்பள்ளி ஆலயத்தின் உள்ளே சென்றதும் 16 கால் மண்டபத்தை பார்க்கலாம்.

    அந்த 16 கால் மண்டபத்தை அடுத்து நேரே தெரிவது ஸ்ரீ மரகதாம்பிகை சந்நிதி.

    அதன் வாயில் முன்பு இடப்புறம் சங்கநதி.

    தன் பத்தினி சுந்தரையுடனும், வலப்புறம் 'பதுமநிதி' தன் பத்தினி வசுமதியுடனும் (துவாரபாலகர்கள் இருக்க வேண்டிய இடத்தில்) காட்சி தருகின்றன. இது ஒரு சிறப்பு.

    கருவறையில் மிக நேர்த்தியாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் திரிபுரசுந்தரியை காணலாம்.

    அம்மன் கருவறையில் உள்வாயில் முன்பு அம்மனுக்கு வலப்புறம் மனதில் நினைத்தவை எல்லாம் நல்கும் 'கற்பக விருட்சமும்' இடப்புறம் கேட்டவை அனைத்தும் கொடுக்கும் காமதேனுவும் உள்ளன. இது மற்றொரு சிறப்பாகும்.

    கருவறை வலம் வரும்போது அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் தரிசனம் பெறலாம். நிருதி மூலையில் விநாயகர் உள்ளார்.

    பின்புறம் லிங்கோத்பவருக்கு எதிரில் மூன்று கால், மூன்று கைகளுடன் (ஒரு கையில் அக்னியை வைத்துக் கொண்டு) ஜீரஹரேஸ்வரர், விஷ்ணு, பைரவர், தலைப்பாகையுடன் வால்மீகி மகிரிஷி, ஏகபாதமூர்த்தி (பிரம்மா அன்ன வாகனத்துடன், விஷ்ணு கருட வாகனத்துடன், சிவன் நந்தியுடன் ஒரே கல்லில் வடிக்கப்பட்டது), பூரணா-புஷ்கலாயுடன் அய்யப்பன் சிலைகள் இருப்பதை காணலாம்.

    இந்த இறை மூர்த்தங்கள் காண அரிதாகிய சிற்ப நயத்துடன் கொலு கொண்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

    இவைகளுக்கு எதிரில் கோஷ்டத்தில் கவுரியை தன் தொடை மேல் அமர்த்தி சாந்தஸ்வரூபியாக காட்சி நல்கும் கலை நயம்மிக்க இக்கோவிலின் மிக சிறப்பு அம்சமாகிய தட்சிணாமூர்த்தியை காணலாம்.

    வாயு மூலையில் வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமணியர் தனி சந்நிதியில் உள்ளார்.

    அங்குள்ள பிறகு ஸ்ரீ ராஜமாதங்கி சிலைக்கு கீழிருந்து ஓரு சுரங்கப் பாதை. ஸ்ரீ காளத்திக்கு செல்வதாக சொல்லப்படுகிறது.

    பிரம்மா, சண்டிகேஸ்வரர், ஞான துர்கை அபயகரத்தின் மீது கிளி அமர்ந்திருக்கிறது. இந்த கிளி 'வாக்குவாணி' என்றழைக்கப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு தோற்றத்தை மற்ற தலங்களில் காண இயலாது. அடுத்து காசி விசாலாட்சி. அடுத்து ஒருபுறம் வேணுகோபால சுவாமியும் மறுபுறம் அதிகார நந்தி கை கூப்பி நின்றிருப்பது சிறப்பாகும்.

    இக்கோவிலின் மூலவர் 'வால்மீகேஸ்வரர்' சுயம்பு லிங்க தரிசனம். ராமாயணம் எழுதுவதற்கு முன்பு வால்மீகி முனிவரால் பூஜிக்கப்பட்ட லிங்கம் ஆதலால் வால்மீகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

    இவருக்கு நேர் எதிரில் தனி சந்நிதியில் ராமரால் பூஜிக்கப்பட்ட ராமலிங்கேஸ்வரரும், அவருக்கு முன் இரு பக்கங்களில் சீதை, இராமர், லட்சுமணர், பரத, சத்ருக்னர்கள் உள்ளனர்.

    வெளியே வந்து இந்த கோவிலுக்கு வடப்புறம் அமைந்திருக்கும் ஸ்ரீசர்வமங்கள சமேத ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயம் உள் சென்று வேறெங்கும் இல்லாத அற்புதத்தை காணலாம்.

    அம்பாள் ஸ்ரீ சர்வமங்களா (பார்வதி) அமர்ந்திருக்க ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் அவர் தொடை மீது தலை வைத்து சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

    மிகப்பெரிய அம்மன், மிகப்பெரிய உருவமாக சிவனார் சயன கோலத்தில் காட்சி தருவது அற்புதம்.

    இவர்களை சுற்றி பிருகு மகரிஷி, பிரம்மா, மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், அகத்தியர், புலத்தியர், கவுதமர், தும்புரரர், வசிட்டர், விஸ்வாமித்திரர், வால்மீகி மற்றும் தேவேந்திரன் சூழ்ந்துள்ளனர்.

    இவர்களுக்கு அடியில் பீடத்தில் பிள்ளைகள் விநாயகரும், சுப்ரமணியரும் மருமகள்கள் வள்ளியும் தேவசேனாவும் உள்ளனர்.

    ஆலகால விஷத்தையுண்ட ஈசர் சிறிது சோர்வு தோன்ற அம்மை மடியில் தலை வைத்து சிறிது ஓய்வெடுத்தாராம்.

    இது தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் இல்லாத சிறப்பான தோற்றமாகும்.

    • குமரிமுனை ஏழுமலையான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார்.
    • குமரிமுனை திருப்பதி ஆலயத்தில் சுற்றுலா பயணிகளுக்காக தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    1. குமரிமுனை திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தின் பல்வேறு சன்னதிகள் கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. இதற்கான கற்கள் அனைத்தும் திருச்சி மாவட்டம் நாகலாபுரத்தில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டது ஆகும்.

    2. இத்தலத்தின் கொடி மரம் 40 உயரத்தில் மிக பிரமாண்டமான அம்சம் கொண்டது. இந்த கொடி மரத்தை சிங்கப்பூர் நாட்டில் உள்ள வனப்பகுதியில் இருந்து கொண்டு வந்துள்ளனர். இந்த கொடி மரத்தை சுற்றி செம்பு தகடு பதித்துள்ளனர்.

    3. குமரிமுனை திருப்பதியில் உள்ள பலிபீடமும் திருப்பதியில் உள்ள பலிபீடமும் ஒரே மாதிரி தாமரை இலை வடிவில் உள்ளன. ஆனால் திருப்பதியில் உள்ள பலிபீடத்தை விட குமரிமுனை ஆலயத்தில் மிக சிறியதாக பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது.

    4. குமரிமுனை ஆலயத்தின் முன்பகுதி மண்டபத்தின் மேல் பகுதியில் தசாவதார காட்சிகள் ஓவியங்களாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    5. இத்தலத்தின் மேல்பகுதிக்கு ஏறி செல்ல 45 படிகள் கொண்ட அமைப்பு கட்டப்பட்டுள்ளது. வயதான பக்தர்கள் இத்தனை படிகள் ஏற முடியாது என்பதால் மேல் தலத்துக்கு சென்று ஏழுமலையானை வழிபாடு செய்வதற்கு லிப்ட் வசதி செய்துள்ளனர்.

    6. இத்தலத்தில் பத்மாவதி தாயாருக்கும், ஆண்டாளுக்கும் தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. தெற்கு பகுதியில் பத்மாவதியும், வடக்கு பகுதியில் ஆண்டாளும் கிழக்கு முகமாக உள்ளனர்.

    7. இத்தலத்தில் இருந்து பார்த்தால் விவேகானந்தர் மண்டபமும், பிரமாண்டமான திருவள்ளுவர் சிலையும் மிக அழகாக தெரிகிறது.

    கண்ணுக்கு குளிர்ச்சியாக இதமாக அந்த காட்சி அமைவது குறிப்பிடத்தக்கது.

    8. கடற்கரையோரத்தில் இந்த தலம் அமைந்து இருப்பதால் இடைவிடாமல் எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டே இருக்கிறது.

    மேலும் கடல் அலைகள் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இரவு நேரங்களில் அலைகள் சத்தம் அதிகமாக எழும்புவது கேட்கலாம்.

    9. எதிர்காலத்தில் இத்தலத்துக்கு என தங்கத்தேர் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கேற்க பிரகார வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    10. குமரிமுனை ஏழுமலையான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார்.

    11. குமரிமுனையில் வங்க கடல், அரபிக் கடல், இந்திய பெருங்கடல் ஆகிய 3 கடல்களும் சங்கமிக்கும் பகுதி அருகே இந்த ஆலயம் எழுந்துள்ளது. இந்த 3 கடல்களில் வங்க கடலோரப் பகுதியில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    12. குமரிமுனை திருப்பதி ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியதுமே பக்தர்கள் அன்றுமுதலே இந்த தலத்துக்கு வந்து பார்த்து செல்ல தொடங்கி விட்டனர். கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு குமரிமுனைக்கு சுற்றுலா பயணிகளின் பெரும்பாலானவர்கள் இந்த ஆலயத்தை பார்க்க வர தவறவில்லை.

    13. ஆலயத்தின் முன் பகுதியில் பிரமாண்டமான நுழைவு அலங்கார வளைவு ஒன்று அமைத்து உள்ளனர். அந்த வளைவில் மேலும் சிற்பங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    14. திருப்பதி ஆலயத்தில் கழிவறை வசதிகள் மிக அதிகளவில் செய்யப்பட்டு இருக்கும். அதே போன்று இந்த ஆலயத்தின் அருகில் தனியாக ஒரு இடத்தில் பக்தர்களுக்கு கழிவறைகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    15. திருப்பதியில் ஆலயத்தின் அருகிலேயே அர்ச்சகர்களுக்கு தனி குடியிருப்பு உள்ளது. அதே போன்று இங்கும் குடியிருப்பு கட்ட திட்டமிட்டுள்ளனர்.

    16. ஏழுமலையான் ஆலயம் கட்டப்பட்டுள்ளதை தொடர்ந்து அதன் அருகிலேயே திருமண மண்டபம் ஒன்றை விவேகானந்தா கேந்திரம் கட்டி வருகிறது.

    17. குமரிமுனை திருப்பதி ஆலயத்துக்கு செல்ல விவேகானந்தர் கேந்திரம் வழியாகவும் செல்லலாம். ஆனால் தனியாகவும் ஒரு பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

    18. குமரிமுனை திருப்பதி ஆலய கும்பாபிஷேகத்திற்காக திருமலையில் இருந்து அர்ச்சகர்கள் பிரத்யேகமாக வர உள்ளனர்.

    19. குமரிமுனை திருப்பதி ஆலயத்தில் நடைபெறும் தினசரி பூஜைகள் அனைத்தும் திருமலையில் நடப்பது போல நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    20. குமரிமுனை திருப்பதி ஆலயத்தில் சுற்றுலா பயணிகளுக்காக தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    21. திருப்பதியில் எத்தகைய ஆகம விதிகளின் பூஜைகள் நடக்கிறதோ அதே ஆகம விதிகளை பின்பற்றிதான் குமரிமுனை திருப்பதி ஆலயத்திலும் பூஜைகள் நடைபெற உள்ளன.

    22. குமரிமுனை திருப்பதி ஆலயத்திலும் தினமும் மாடவீதி உலா உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    24. குமரிமுனை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு முதலில் சிறிதளவுதான் நகைகள் அணிவிக்கப்பட உள்ளது. பக்தர்கள் அளிக்கும் காணிக்கை நகைகள் வந்த பிறகு நகை அலங்காரங்கள் அதிகரிக்கும்.

    25. குமரிமுனை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு வரும் நகைகளை வைப்பதற்கு என்றே பலத்த பாதுகாப்புடன் பிரத்யேக அறை கட்டப்பட்டுள்ளது.

    • திருப்பதியில் நடக்கும் உற்சவங்களில் சீனிவாச கல்யாணம் உற்சவம் மிகவும் தனித்துவம் கொண்டது.
    • இந்த உற்சவம் பக்தர்களுக்கு பலன்களை வாரி வழங்கும் முக்கியத்துவம் கொண்டது.

    திருப்பதியில் நடக்கும் உற்சவங்களில் சீனிவாச கல்யாணம் உற்சவம் மிகவும் தனித்துவம் கொண்டது.

    இந்த உற்சவம் பக்தர்களுக்கு பலன்களை வாரி வழங்கும் முக்கியத்துவம் கொண்டது.

    இதனால்தான் சீனிவாச கல்யாண உற்சவத்தில் பங்கேற்க ஒவ்வொரு பக்தரும் ஆசைப்படுவார்கள்.

    ஆனால் அந்த ஆசை அவ்வளவு எளிதில் நிறைவேறுவதில்லை.

    பக்தர்களின் பொருளாதார வசதி, பயண தூரம் மற்றும் பல காரணங்களால் பல லட்சம் பக்தர்கள் சீனிவாச கல்யாணத்தை நேரில் பார்க்க முடியாத நிலையில் உள்ளனர்.

    அத்தகைய பக்தர்களின் மனக்குறையை தீர்க்கும் வகையில் திருப்பதி-திருமலை தேவஸ்தானம் அடிக்கடி வெளியூர்களில் சீனிவாசன் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி வருகிறது.

    அந்த வகையில் கன்னியாகுமரியில் கடந்த 2010-ம் ஆண்டு சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிதான் கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உருவாவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது.

    • அங்கு ஒரே நேரத்தில் 1,200 பேர் அமர்ந்து சாப்பிடலாம். மற்றொரு பகுதியில் தியான கூடம் உள்ளது.
    • கீழ் தளத்தில் கல்யாண உற்சவம் நடத்த தனி அரங்கு உள்ளது.

    திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையான் ஆலயத்துக்கும், குமரிமுனை திருப்பதி ஆலயத்துக்கு மிகுந்த வேற்றுமை உள்ளது.

    திருமலையில் உள்ள ஆலயம் பல நூறு ஆண்டுகளாக பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு இன்று பிரமாண்டமான வளர்ச்சியை எட்டி உள்ளது.

    அதன் உட்பிரகாரங்கள் அனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டவை ஆகும்.

    பல்வேறு மன்னர்கள் அந்த ஆலயத்தை கட்டி சிறப்பித்துள்ளனர்.

    மலை மீது உள்ளதால் அதற்கேற்ப ஆலயத்தின் மற்ற பகுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஆனால் குமரிமுனை திருப்பதி ஆலயம் விவேகானந்தா கேந்திரம் உள்ளே சிறிய இடத்தில் உருவாகி உள்ளது.

    விவேகானந்தா கேந்திரம் சார்பில் வழங்கப்பட்டுள்ள 5 ஏக்கர் நிலத்தில்தான் இந்த ஆலயம் எழுந்துள்ளது.

    தானமாக பெற்ற அந்த 5 ஏக்கரில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ஆலயம் உருவாகி உள்ளது.

    மீதமுள்ள 1 ஏக்கர் இடம் கோவில், தீர்த்தம் மற்றும் வசதிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பும் வித்தியாசமானது ஆகும்.

    இந்த ஆலயம் கீழ்தளம்-மேல் தளம் என அடுக்குடன் கூடிய அமைப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    கீழ்தளத்தை அலிபிரி என்று பெயர் சூட்டி உள்ளனர்.

    மேல் தளத்தை ஏழுமலையான் ஆலயம் என்று அழைக்கின்றனர்.

    திருமலை-திருப்பதியில் நடைபாதை தொடங்கும் அலிபிரி கீழே அமைந்துள்ளது.

    ஏழுமலையான் மேலே மலையில் அருள்பாலித்து வருகிறார்.

    இந்த மலை அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் குமரிமுனை ஆலயம் 2 அடுக்குடன் திகழ்கிறது.

    கீழ் தளத்தில் கல்யாண உற்சவம் நடத்த தனி அரங்கு உள்ளது.

    அங்குள்ள சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து கல்யாண உற்சவத்தில் பங்கேற்கலாம்.

    கீழ் தளத்தின் மற்றொரு பகுதியில் அன்னதான கூடம் அமைந்துள்ளது.

    அங்கு ஒரே நேரத்தில் 1,200 பேர் அமர்ந்து சாப்பிடலாம். மற்றொரு பகுதியில் தியான கூடம் உள்ளது.

    பக்தர்கள் தியானம் செய்வதற்கு ஏற்ப அமைதியான சூழ்நிலையை உருவாக்க அங்கு வசதி செய்துள்ளனர்.

    மேல் தளத்தில் ஏழுமலையான் கருவறை நடுநாயகமாக உள்ளது.

    ஒருபுறம் பத்மாவதி தாயாருக்கும், மற்றொருபுறம் ஆண்டாளுக்கும் தனித்தனி சன்னதி அமைத்துள்ளனர்.

    திருப்பதியில் உள்ளது போலவே ஏழுமலையானுக்கு நேர் எதிரில் கருடவாழ்வார் உள்ளார்.

    அவருக்கு அங்கு தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது. அவருக்கு பின்புறம் பலிபீடமும், கொடி மரமும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேல் தலத்தில் ஆலயத்தை சுற்றி வசதி செய்துள்ளனர்.

    கடற்கரை காற்றை அனுபவித்துக் கொண்டே ஆலயத்தை வலம் வருவது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

    மேல் தலத்துக்கு செல்ல 45 படிகளுடன் நுழைவு வாயில் மேடை கட்டப்பட்டுள்ளது.

    திருப்பதி திருமலையில் ஏழுமலையான் ஆலயம் மலை மீது அமைந்துள்ளது.

    ஏழுமலைகள் மீது இருப்பதால்தான் அவருக்கு ஏழுமலையான் என்ற பெயர் உருவானது.

    ஆனால் குமரிமுனையில் ஏழுமலையான் கடலோரத்தில் கடல் அலைகள் தாலாட்டும் இடத்துக்கு மிக அருகில் எழுதருளி உள்ளார்.

    திருப்பதி ஆலயத்துக்குட்பட்ட கிளை ஆலயங்களில் கடலோரத்தில் அமைந்துள்ள ஒரே ஆலயம் என்ற சிறப்பை இந்த ஆலயம் பெற்று உள்ளது.

    குமரிமுனையில் ஏழுமலையானுக்கு ஒரு கிளை ஆலயம் உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றியபோது ஏழுமலையான் ஆலயத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    விவேகானந்தா கேந்திரத்தின் செயலாளராக இருக்கும் அனுமந்தராவ் தேவையான உதவிகளை செய்து கொடுத்தார்.

    இதனால் இன்று குமரிமுனை திருப்பதி ஆலயம் திட்டமிட்டப்படி கட்டப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வந்துள்ளது.

    • திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • இப்படி திருப்பதி ஏழுமலையானுக்கு பல தரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.

    திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இதனால்தான் திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசனம் செய்ய தினம், தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தப்படி உள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையானை நினைத்தவுடன் சென்று, பார்த்து தரிசனம் செய்து விட இயலாது.

    ஏழுலையான் எப்போது நம்மை அழைக்கிறாரோ, அப்போதுதான் திருப்பதிக்கு சென்று அவரை தரிசனம் செய்ய முடியும் என்று சொல்வார்கள்.

    ஒரு தடவை திருப்பதிக்கு சென்றாலே போதும், மனம் இனம் புரியாத வகையில் ஆனந்தமும், அமைதியும் அடையும்.

    நீண்ட வரிசையில், மணிக்கணக்கில் கால் கடுக்க நின்று கடும் நெரிசல்களுக்கு மத்தியில் "கோவிந்தா.... கோவிந்தா..." என்று உள்ளம் உருக முன் மண்டபத்துக்குள் நுழைந்த அடுத்த ஓரிரு நிமிடங்களில் நம்மை வெளியில் கொண்டு வந்து விடுவார்கள்.

    அழகாக, ஆஜானுபாகுவாக நின்று அருள்பாலிக்கும் ஏழுமலை சில வினாடிகளே கண்குளிர பார்த்து தரிசிக்க முடியும்.

    சில சமயம் ஓரிரு நிமிடங்கள் ஏழுமலையானை நிதானமாக பார்த்து நம் கோரிக்கைகளை முன் வைத்து விட முடியும்.

    அந்த நேரத்தில் நமக்கு கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது.

    இந்த ஆனந்தத்தை அனுபவிக்கவும், இந்த பிறவியில் எல்லா செல்வங்கள் பெற்று வாழவும், மறுபிறவி வேண்டாம் என்ற முக்திக்காகவும்தான் தினந்தோறும் ஏழுமலையானிடம் சரண் அடைய லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி நோக்கி அலை, அலையாக வந்த வண்ணம் உள்ளனர்.

    சில பக்தர்கள் வாரம் தோறும் ஏழுமலையானை பார்த்து ஆனந்தம் கொள்வார்கள்.

    சில பக்தர்கள் மாதம் தோறும் ஒரு தடவை சென்று ஏழுமலையானை பார்த்து வருவார்கள்.

    சிலர் ஆண்டுக்கு ஒரு தடவை புரட்டாசி மாதம் மட்டும் திருப்பதிக்கு செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    ஏழுமலையானை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ள வியாபாரிகள், தங்களது கடை வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை ஏழுமலையானுக்கு கொடுத்து விடுவதுண்டு.

    ஏழுமலையானை அவர்கள் தங்கள் கடையின் ஒரு பங்குதாரர் போல கருதி இந்த கைங்கர்யத்தை செய்து வருகிறார்கள்.

    இப்படி திருப்பதி ஏழுமலையானுக்கு பல தரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.

    திருப்பதி ஏழுமலையானை அடிக்கடி தரிசனம் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திராவின் தென் பகுதியையும் தமிழ் நாட்டின் வட மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் தான்.

    மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு திருப்பதி ஏழுமலையானை அடிக்கடி பார்த்து தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

    அத்தகைய பக்தர்கள் "எப்போது திருப்பதிக்கு போவோம்?" என்ற ஏக்கத்துடன் இருப்பார்கள்.

    சில பகுதி மக்களுக்கு திருப்பதி ஏழுமலையானை ஆண்டுக்கு ஒரு தடவை தரிசிப்பது கூட இயலாத காரியமாக இருக்கும்.

    அப்படிப்பட்ட மக்களை திருப்பதி ஏழுமலையானே தேடி வந்து, ஓரிடத்தில் நிலை கொண்டு அருள்பாலித்தால் எப்படி இருக்கும்?

    "ஏழுமலையானே... வந்து விட்டாரா.... இதை விட வாழ்வில் வேறு என்ன பாக்கியம் வேண்டும்" என்று மனம் குதூகலம் கொள்ள, கண்ணீர் மல்க சொல்வார்கள்.

    அப்படி ஒரு ஆன்மிக குதூகலத்தை தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்கள் அனுபவிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.

    ஆம் திருப்பதி ஏழுமலையான் தென் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார். முக்கடல் சங்கமிக்கும் புண்ணிய பூமியான கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரம் அமைந்துள்ள வளாகத்தில் திருப்பதி ஏழுமலையானுக்காக தனி ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் எத்தகைய ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகிறதோ,

    அவை அனைத்தும் கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின்

    ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி ஆலயத்திலும் கடை பிடிக்கப்பட உள்ளது.

    • அன்னமானது நல்லதை ஏற்று அல்லதை விலக்கும் குணமுடையது.
    • முழுவதும் முத்துக்களால் தயாரிக்கப்பட முத்துப்பல்லக்கின் அழகினை காணக் கண்கோடி வேண்டும்.

    பெரிய சேஷ வாகனம்:

    துவஜாரோகணத்தன்று இரவு மலையப்பர் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் பெரிய சேஷ வாகனத்தில், திருவீதி உலா வருவார்.

    சின்ன சேஷ வாகனம்:

    இரண்டாம் நாளன்று காலை மலையப்பர் மட்டும் தனியாக சின்ன சேஷ வாகனத்தில் திருவீதி உலா வருவார்.

    ஆதிசேஷனே திருமலையாகச் சுருண்டு இருப்பதாக ஐதீகம் இருப்பதால், ஆதிசேஷனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக மலையப்பர் இரு சேஷ வாகனங்களில் உலா வருகிறார்.

    ஹம்ஸ் வாகனம்:

    இரண்டாம் நாள் இரவு ஹம்ஸ் வாகனத்தில் (அன்னம்) மலையப்பர் உலா வருவார்.

    ஹம்ஸ் வாகனத்தானை வழிபட துன்பங்கள் அனைத்தும் அகலும் என்பது வழி வழியாய் உள்ள நம்பிக்கை.

    அன்னமானது நல்லதை ஏற்று அல்லதை விலக்கும் குணமுடையது.

    அதுபோல மனிதரும் நல்லதை ஏற்று அல்லதை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதற்காகவே மலையப்பர் அன்ன வாகனத்தில் பவனி வருகிறார் என்றும் கூறுவர்.

    சிம்ம வாகனம்:

    மூன்றாம் நாள் காலையில் வைரமூடி தரித்து மிகக் கம்பீரமாக சிம்ம வாகனத்தில் மலையப்பர் பவனி வருவார்.

    சிம்மமானது வலிமையின் குறியீடு.

    இதன்மேல் அமரும் மலையப்பர் உலகத்து உயிரினங்களுக் கெல்லாம் போதிய வலிமையை வழங்குவதாக ஐதீகம்.

    முத்துப்பல்லக்கு:

    மூன்றாம் நாள் இரவு மலையப்பர் முத்துப்பல்லக்கில் ஏறி திருவீதி உலா வருவார்.

    ஸ்ரீதேவியும், பூதேவியும் மலையப்பருடன் ஊர்வலத்தில் இணைந்து கொள்வார்கள்.

    முழுவதும் முத்துக்களால் தயாரிக்கப்பட முத்துப்பல்லக்கின் அழகினை காணக் கண்கோடி வேண்டும்.

    தூய்மையின் குறியீடாக முத்து உணரப்படுகிறது.

    கற்பக விருட்சம்:

    நான்காம் நாள் மாலை சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் வலம் வருகிறார்.

    கற்பக விருட்சமானது வேண்டியதை வேண்டியபடி வழங்கும் வல்லமை பெற்றது.

    கற்பக விருட்சத்துக்கு அந்த வல்லமையை அளித்தவர் மலையப்பர்.

    அதன்மேல் அவர் தயாரிக்கப்பட்ட போது பக்தர்களுக்குக் கேட்ட வரங்களை வழங்குவேன் என்று உணர்த்துகிறார்.

    சர்வபூபால வாகனம்:

    நான்காம் நாள் இரவு சர்வபூபால வாகனத்தில் மலையப்பர் பவனி வருகிறார்.

    உலகிலுள்ள அரசர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஸ்ரீவேங்கடாசலபதி கலியுகக் கடவுளாக அவதரித்தார் என்பதால் அவருக்கு தங்களது நன்றியை காட்ட அனைத்து அரசர்களும் ஒன்று கூடி சர்வபூபால வாகனமாக மாறி மலையப்பரை சுமந்து திருவீதி உலா வருகிறார்கள் என்பது ஐதீகம்.

    மோகினி அவதாரம்:

    ஐந்தாம் நாள் காலை தந்தப்பல்லக்கில் மலையப்பர் மோகினியாகக் காட்சி அளித்து திருவீதி வலம் வருகிறார்.

    பாற்கடல் கடைந்து அமுதம் வந்தபொழுது அதைத் தேவர்களுக்கு வழங்குவதற்காக திருமால் மோகினி அவதாரம் எடுத்ததால் அவருக்கு நன்றி கூறும் வகையில் தேவர்கள் எடுக்கும் விழாவாக இந்த பவனி கருதப்படுகிறது.

    மலையப்பர் நவரத்தின ஹாரம் அணிந்து வலது கையில் தங்கக்கிளி ஏந்தி தரிசனம் தருவார்.

    நவரத்தின ஹாரமும், தங்கக்கிளியும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளிடமிருந்து பெற்று வரப்பட்டதாக நம்பப்படுகிறது.

    கருட வாகனம்:

    ஐந்தாம் நாள் இரவு மலையப்பர் கருட வாகனத்தில் பவனி வருகிறார்.

    பிரம்மோற்சவத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது கருட வாகனம்.

    கருட வாகனத்தில் மலையப்பரை தரிசிக்க லட்சக்கணக்கானோர் கூடுவது வழக்கம்.

    மூலவர் அணிந்திருக்கும் லட்சுமி ஹாரத்தையும் மகர கண்டியையும் இந்த நாளில் மட்டும் மலையப் பருக்கு அணிவிப்பார்கள்.

    மற்றெந்த நாட்களிலும் மூலவருக்கு மட்டுமே உரித்தான இவ்வாபரணங்களை மலையப்பருக்கு அணிவிப்பதில்லை.

    அனுமந்த வாகனம்:

    ஆறாம் நாள் காலை அனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்படுவார்.

    இறைசேவையின் மேன்மையை உலகுக்கு உணர்த்திய ஆஞ்சநேயருக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த வாகன உலா அமைந்திருக்கிறது.

    கஜவாகனம்:

    ஆறாம் நாள் இரவு கஜ வாகனம். தன்னைக் காப்பாற்றிய திருமாலுக்கு கஜேந்திரன் தன் நன்றியை செலுத்துகிறான்.

    சூரிய பிரபை:

    ஏழாம் நாள் காலை சூரிய பிரபை. வஜ்ர கவசம் அணிந்து உலா வரும் மலையப்பர்.

    ஆதவனுக்கு ஒளி வழங்கி அருள் புரிந்த அருளாளன் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த வாகனத்தில் ஆரோகணிக்கிறார்.

    மேலும் காயத்ரி மந்திரத்தின் மகிமையை மக்களுக்கு உணர்த்தவும் சுவாமி சூரிய பிரபை ஏறுகிறார் என்பது ஐதீகம்.

    சந்திரபிரபை:

    ஏழாம் நாள் இரவு சந்திரபிரபை குளுமை, ஆனந்தம் ஆகியவற்றை அகில மக்களுக்கு அளிக்க சந்திர பிரபை மேல் சுவாமி பவானி வருவார்.

    அப்போது மலையப்பர் உடல் முழுக்க முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பார்.

    பவனியின்போது இவரைத் தரிசித்தால் அளவில்லாத ஆனந்தம் அடையலாம்.

    தேர்:

    எட்டாம் நாள் காலை மலையப்பர் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் தேரில் திருவீதி உலா வருகிறார்.

    பக்தர்கள் தேர் வடத்தைப் பிடித்து இழுத்து செல்வார்கள்.

    தேரில் இருக்கும் மலையப்பரைத் தரிசித்தால் இன்னொரு முறை பிறவாத வரமான முக்தி வரம் தந்து அருளுவார் என்பது ஐதீகம்.

    குதிரை வாகனம்:

    எட்டாம் நாள் இரவு மலையப்பர் குதிரை வாகனத்தில் பவனி வருவார்.

    குதிரை சக்தியின் குறியீடு.

    உலக மக்களுக்கு அனைத்து சக்திகளையும் அருளவே மலையப்பர் இந்த வாகனத்தில் உலா வருவதாக ஐதீகம்.

    ஒன்பதாம் நாள் காலையில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம்.

    மலையப்பர் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் இந்த உற்சவத்தில் கலந்து கொண்டு நீராடுவார்.

    அந்த சமயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புஷ்கரணியில் நீராடுவார். நீராடும் மக்களின் பாவங்கள் அனைத்தையும் போக்கி அவர்களுக்கு மோட்சம் அளிப்பார் மலையப்பர் என்பது ஐதீகம்.

    சுவாமி தீர்த்தவாரி காணும் இந்த நாளே அவரது பிறந்தநாள்!

    அன்று இரவு கோவிலில் ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்பட்டு பக்தர்களுக்கு அட்சதை பிரசாதம் வழங்கப்படும்.

    அத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.

    • புரட்டாசித் திருவோணம் திருப்பதி வெங்கடாசலபதியின் பிறந்த தினம்.
    • கொடியேற்றம் துவஜாரோகணம் என்றும், கொடி இறக்கம் துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகின்றன.

    புரட்டாசித் திருவோணம் திருப்பதி வெங்கடாசலபதியின் பிறந்த தினம்.

    இந்த நன்னாளுக்கு முன்பாக ஒன்பது தினங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்ற மிகப்பெரிய திருவிழா பிரம்மோற்சவம்.

    வெங்கடாசலபதிக்கு முதன்முதலில் பிரம்மாதான் உற்சவம் கொண்டாடினார் என்பதால் திருமலையின் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    பிரம்மோற்சவத்தின் தொடக்க நாளன்று துவஜஸ்தம்பம் என்னும் கொடி மரத்தில் கருட பகவானின் திருவுருவத்துடன் கூடிய கொடி ஏற்றப்படும்.

    ஒன்பதாம் நாளன்று உற்சவம் முடிந்தது என்பதை உலத்திற்கு அறிவிக்கும் விதமாகக் கொடி இறக்கப்படும்.

    கொடியேற்றம் துவஜாரோகணம் என்றும், கொடி இறக்கம் துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகின்றன.

    ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் உற்சவமூர்த்தியான மலையப்பர் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் மாட வீதியில் உலாவருவார்.

    பிரம்மாவே முன்நின்று நடத்தும் உற்சவம் என்பதால் மலையப்பர் வாகனத்திற்கு முன்னால் ஒரு சிறு தேர் வலம் வரும்.

    அதில் பிரம்மதேவன் அமர்ந்து அருள்புரிவதாக ஐதீகம்.

    மலையப்பரின் திருவீதிவலம், குடை, சாமரம், மங்களவாத்தியம், மேளதாளம் முழங்க, தீப்பந்தங்கள் ஆகியவை புடை சூழ வருவதே ஒரு தனி அழகு.

    வேத விற்பன்னர்கள் வேதம் ஓதியபடி செல்வார்கள்.

    இன்னொரு குழுவினர் தமிழப் பாசுரங்களை ஓதியபடி சுவாமியுடன் ஊர்வலம் போவார்கள்.

    இவ்வளவு கோலாகலங்களுடன் நடக்கும் திருவீதி வலத்தையும், மலையப்பரையும் தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் திருமலையில் கூடுவார்கள்.

    இந்த ஒன்பது நாட்களும் கோவிலில் ஹோமத்தீ வளர்த்து யாகம் நடைபெறும்.

    மாலை வேளைகளில் மலையப்பருக்கு மிகச்சிறப்பாக ஊஞ்சல் உற்சவம் கொண்டாடப்படும்.

    ×