search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுருட்டப்பள்ளி ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் ஆலயம்"

    • சுருட்டப்பள்ளி ஆலயத்தின் உள்ளே சென்றதும் 16 கால் மண்டபத்தை பார்க்கலாம்.
    • கருவறையில் மிக நேர்த்தியாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் திரிபுரசுந்தரியை காணலாம்

    தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் ஊத்துக்கோட்டையில் இருந்து நாகலாபுரம் செல்லும் சாலையில் சுருட்டப்பள்ளி ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    மாநில நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை வழி பிச்சாட்டூர், புத்தூர், நகரி, நாகலாபுரம், திருப்பதி செல்லும் பஸ்களில் சென்றால் கோவில் வாசலிலேயே இறங்கிக் கொள்ளலாம்.

    இக்கோவிலுக்கு பல சிறப்புகள் உண்டு.

    சுருட்டப்பள்ளி ஆலயத்தின் உள்ளே சென்றதும் 16 கால் மண்டபத்தை பார்க்கலாம்.

    அந்த 16 கால் மண்டபத்தை அடுத்து நேரே தெரிவது ஸ்ரீ மரகதாம்பிகை சந்நிதி.

    அதன் வாயில் முன்பு இடப்புறம் சங்கநதி.

    தன் பத்தினி சுந்தரையுடனும், வலப்புறம் 'பதுமநிதி' தன் பத்தினி வசுமதியுடனும் (துவாரபாலகர்கள் இருக்க வேண்டிய இடத்தில்) காட்சி தருகின்றன. இது ஒரு சிறப்பு.

    கருவறையில் மிக நேர்த்தியாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் திரிபுரசுந்தரியை காணலாம்.

    அம்மன் கருவறையில் உள்வாயில் முன்பு அம்மனுக்கு வலப்புறம் மனதில் நினைத்தவை எல்லாம் நல்கும் 'கற்பக விருட்சமும்' இடப்புறம் கேட்டவை அனைத்தும் கொடுக்கும் காமதேனுவும் உள்ளன. இது மற்றொரு சிறப்பாகும்.

    கருவறை வலம் வரும்போது அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் தரிசனம் பெறலாம். நிருதி மூலையில் விநாயகர் உள்ளார்.

    பின்புறம் லிங்கோத்பவருக்கு எதிரில் மூன்று கால், மூன்று கைகளுடன் (ஒரு கையில் அக்னியை வைத்துக் கொண்டு) ஜீரஹரேஸ்வரர், விஷ்ணு, பைரவர், தலைப்பாகையுடன் வால்மீகி மகிரிஷி, ஏகபாதமூர்த்தி (பிரம்மா அன்ன வாகனத்துடன், விஷ்ணு கருட வாகனத்துடன், சிவன் நந்தியுடன் ஒரே கல்லில் வடிக்கப்பட்டது), பூரணா-புஷ்கலாயுடன் அய்யப்பன் சிலைகள் இருப்பதை காணலாம்.

    இந்த இறை மூர்த்தங்கள் காண அரிதாகிய சிற்ப நயத்துடன் கொலு கொண்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

    இவைகளுக்கு எதிரில் கோஷ்டத்தில் கவுரியை தன் தொடை மேல் அமர்த்தி சாந்தஸ்வரூபியாக காட்சி நல்கும் கலை நயம்மிக்க இக்கோவிலின் மிக சிறப்பு அம்சமாகிய தட்சிணாமூர்த்தியை காணலாம்.

    வாயு மூலையில் வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமணியர் தனி சந்நிதியில் உள்ளார்.

    அங்குள்ள பிறகு ஸ்ரீ ராஜமாதங்கி சிலைக்கு கீழிருந்து ஓரு சுரங்கப் பாதை. ஸ்ரீ காளத்திக்கு செல்வதாக சொல்லப்படுகிறது.

    பிரம்மா, சண்டிகேஸ்வரர், ஞான துர்கை அபயகரத்தின் மீது கிளி அமர்ந்திருக்கிறது. இந்த கிளி 'வாக்குவாணி' என்றழைக்கப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு தோற்றத்தை மற்ற தலங்களில் காண இயலாது. அடுத்து காசி விசாலாட்சி. அடுத்து ஒருபுறம் வேணுகோபால சுவாமியும் மறுபுறம் அதிகார நந்தி கை கூப்பி நின்றிருப்பது சிறப்பாகும்.

    இக்கோவிலின் மூலவர் 'வால்மீகேஸ்வரர்' சுயம்பு லிங்க தரிசனம். ராமாயணம் எழுதுவதற்கு முன்பு வால்மீகி முனிவரால் பூஜிக்கப்பட்ட லிங்கம் ஆதலால் வால்மீகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

    இவருக்கு நேர் எதிரில் தனி சந்நிதியில் ராமரால் பூஜிக்கப்பட்ட ராமலிங்கேஸ்வரரும், அவருக்கு முன் இரு பக்கங்களில் சீதை, இராமர், லட்சுமணர், பரத, சத்ருக்னர்கள் உள்ளனர்.

    வெளியே வந்து இந்த கோவிலுக்கு வடப்புறம் அமைந்திருக்கும் ஸ்ரீசர்வமங்கள சமேத ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயம் உள் சென்று வேறெங்கும் இல்லாத அற்புதத்தை காணலாம்.

    அம்பாள் ஸ்ரீ சர்வமங்களா (பார்வதி) அமர்ந்திருக்க ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் அவர் தொடை மீது தலை வைத்து சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

    மிகப்பெரிய அம்மன், மிகப்பெரிய உருவமாக சிவனார் சயன கோலத்தில் காட்சி தருவது அற்புதம்.

    இவர்களை சுற்றி பிருகு மகரிஷி, பிரம்மா, மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், அகத்தியர், புலத்தியர், கவுதமர், தும்புரரர், வசிட்டர், விஸ்வாமித்திரர், வால்மீகி மற்றும் தேவேந்திரன் சூழ்ந்துள்ளனர்.

    இவர்களுக்கு அடியில் பீடத்தில் பிள்ளைகள் விநாயகரும், சுப்ரமணியரும் மருமகள்கள் வள்ளியும் தேவசேனாவும் உள்ளனர்.

    ஆலகால விஷத்தையுண்ட ஈசர் சிறிது சோர்வு தோன்ற அம்மை மடியில் தலை வைத்து சிறிது ஓய்வெடுத்தாராம்.

    இது தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் இல்லாத சிறப்பான தோற்றமாகும்.

    ×