search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பிரம்மோற்சவம் வீதி உலா வாகனம்
    X

    பிரம்மோற்சவம் வீதி உலா வாகனம்

    • அன்னமானது நல்லதை ஏற்று அல்லதை விலக்கும் குணமுடையது.
    • முழுவதும் முத்துக்களால் தயாரிக்கப்பட முத்துப்பல்லக்கின் அழகினை காணக் கண்கோடி வேண்டும்.

    பெரிய சேஷ வாகனம்:

    துவஜாரோகணத்தன்று இரவு மலையப்பர் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் பெரிய சேஷ வாகனத்தில், திருவீதி உலா வருவார்.

    சின்ன சேஷ வாகனம்:

    இரண்டாம் நாளன்று காலை மலையப்பர் மட்டும் தனியாக சின்ன சேஷ வாகனத்தில் திருவீதி உலா வருவார்.

    ஆதிசேஷனே திருமலையாகச் சுருண்டு இருப்பதாக ஐதீகம் இருப்பதால், ஆதிசேஷனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக மலையப்பர் இரு சேஷ வாகனங்களில் உலா வருகிறார்.

    ஹம்ஸ் வாகனம்:

    இரண்டாம் நாள் இரவு ஹம்ஸ் வாகனத்தில் (அன்னம்) மலையப்பர் உலா வருவார்.

    ஹம்ஸ் வாகனத்தானை வழிபட துன்பங்கள் அனைத்தும் அகலும் என்பது வழி வழியாய் உள்ள நம்பிக்கை.

    அன்னமானது நல்லதை ஏற்று அல்லதை விலக்கும் குணமுடையது.

    அதுபோல மனிதரும் நல்லதை ஏற்று அல்லதை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதற்காகவே மலையப்பர் அன்ன வாகனத்தில் பவனி வருகிறார் என்றும் கூறுவர்.

    சிம்ம வாகனம்:

    மூன்றாம் நாள் காலையில் வைரமூடி தரித்து மிகக் கம்பீரமாக சிம்ம வாகனத்தில் மலையப்பர் பவனி வருவார்.

    சிம்மமானது வலிமையின் குறியீடு.

    இதன்மேல் அமரும் மலையப்பர் உலகத்து உயிரினங்களுக் கெல்லாம் போதிய வலிமையை வழங்குவதாக ஐதீகம்.

    முத்துப்பல்லக்கு:

    மூன்றாம் நாள் இரவு மலையப்பர் முத்துப்பல்லக்கில் ஏறி திருவீதி உலா வருவார்.

    ஸ்ரீதேவியும், பூதேவியும் மலையப்பருடன் ஊர்வலத்தில் இணைந்து கொள்வார்கள்.

    முழுவதும் முத்துக்களால் தயாரிக்கப்பட முத்துப்பல்லக்கின் அழகினை காணக் கண்கோடி வேண்டும்.

    தூய்மையின் குறியீடாக முத்து உணரப்படுகிறது.

    கற்பக விருட்சம்:

    நான்காம் நாள் மாலை சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் வலம் வருகிறார்.

    கற்பக விருட்சமானது வேண்டியதை வேண்டியபடி வழங்கும் வல்லமை பெற்றது.

    கற்பக விருட்சத்துக்கு அந்த வல்லமையை அளித்தவர் மலையப்பர்.

    அதன்மேல் அவர் தயாரிக்கப்பட்ட போது பக்தர்களுக்குக் கேட்ட வரங்களை வழங்குவேன் என்று உணர்த்துகிறார்.

    சர்வபூபால வாகனம்:

    நான்காம் நாள் இரவு சர்வபூபால வாகனத்தில் மலையப்பர் பவனி வருகிறார்.

    உலகிலுள்ள அரசர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஸ்ரீவேங்கடாசலபதி கலியுகக் கடவுளாக அவதரித்தார் என்பதால் அவருக்கு தங்களது நன்றியை காட்ட அனைத்து அரசர்களும் ஒன்று கூடி சர்வபூபால வாகனமாக மாறி மலையப்பரை சுமந்து திருவீதி உலா வருகிறார்கள் என்பது ஐதீகம்.

    மோகினி அவதாரம்:

    ஐந்தாம் நாள் காலை தந்தப்பல்லக்கில் மலையப்பர் மோகினியாகக் காட்சி அளித்து திருவீதி வலம் வருகிறார்.

    பாற்கடல் கடைந்து அமுதம் வந்தபொழுது அதைத் தேவர்களுக்கு வழங்குவதற்காக திருமால் மோகினி அவதாரம் எடுத்ததால் அவருக்கு நன்றி கூறும் வகையில் தேவர்கள் எடுக்கும் விழாவாக இந்த பவனி கருதப்படுகிறது.

    மலையப்பர் நவரத்தின ஹாரம் அணிந்து வலது கையில் தங்கக்கிளி ஏந்தி தரிசனம் தருவார்.

    நவரத்தின ஹாரமும், தங்கக்கிளியும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளிடமிருந்து பெற்று வரப்பட்டதாக நம்பப்படுகிறது.

    கருட வாகனம்:

    ஐந்தாம் நாள் இரவு மலையப்பர் கருட வாகனத்தில் பவனி வருகிறார்.

    பிரம்மோற்சவத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது கருட வாகனம்.

    கருட வாகனத்தில் மலையப்பரை தரிசிக்க லட்சக்கணக்கானோர் கூடுவது வழக்கம்.

    மூலவர் அணிந்திருக்கும் லட்சுமி ஹாரத்தையும் மகர கண்டியையும் இந்த நாளில் மட்டும் மலையப் பருக்கு அணிவிப்பார்கள்.

    மற்றெந்த நாட்களிலும் மூலவருக்கு மட்டுமே உரித்தான இவ்வாபரணங்களை மலையப்பருக்கு அணிவிப்பதில்லை.

    அனுமந்த வாகனம்:

    ஆறாம் நாள் காலை அனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்படுவார்.

    இறைசேவையின் மேன்மையை உலகுக்கு உணர்த்திய ஆஞ்சநேயருக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த வாகன உலா அமைந்திருக்கிறது.

    கஜவாகனம்:

    ஆறாம் நாள் இரவு கஜ வாகனம். தன்னைக் காப்பாற்றிய திருமாலுக்கு கஜேந்திரன் தன் நன்றியை செலுத்துகிறான்.

    சூரிய பிரபை:

    ஏழாம் நாள் காலை சூரிய பிரபை. வஜ்ர கவசம் அணிந்து உலா வரும் மலையப்பர்.

    ஆதவனுக்கு ஒளி வழங்கி அருள் புரிந்த அருளாளன் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த வாகனத்தில் ஆரோகணிக்கிறார்.

    மேலும் காயத்ரி மந்திரத்தின் மகிமையை மக்களுக்கு உணர்த்தவும் சுவாமி சூரிய பிரபை ஏறுகிறார் என்பது ஐதீகம்.

    சந்திரபிரபை:

    ஏழாம் நாள் இரவு சந்திரபிரபை குளுமை, ஆனந்தம் ஆகியவற்றை அகில மக்களுக்கு அளிக்க சந்திர பிரபை மேல் சுவாமி பவானி வருவார்.

    அப்போது மலையப்பர் உடல் முழுக்க முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பார்.

    பவனியின்போது இவரைத் தரிசித்தால் அளவில்லாத ஆனந்தம் அடையலாம்.

    தேர்:

    எட்டாம் நாள் காலை மலையப்பர் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் தேரில் திருவீதி உலா வருகிறார்.

    பக்தர்கள் தேர் வடத்தைப் பிடித்து இழுத்து செல்வார்கள்.

    தேரில் இருக்கும் மலையப்பரைத் தரிசித்தால் இன்னொரு முறை பிறவாத வரமான முக்தி வரம் தந்து அருளுவார் என்பது ஐதீகம்.

    குதிரை வாகனம்:

    எட்டாம் நாள் இரவு மலையப்பர் குதிரை வாகனத்தில் பவனி வருவார்.

    குதிரை சக்தியின் குறியீடு.

    உலக மக்களுக்கு அனைத்து சக்திகளையும் அருளவே மலையப்பர் இந்த வாகனத்தில் உலா வருவதாக ஐதீகம்.

    ஒன்பதாம் நாள் காலையில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம்.

    மலையப்பர் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் இந்த உற்சவத்தில் கலந்து கொண்டு நீராடுவார்.

    அந்த சமயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புஷ்கரணியில் நீராடுவார். நீராடும் மக்களின் பாவங்கள் அனைத்தையும் போக்கி அவர்களுக்கு மோட்சம் அளிப்பார் மலையப்பர் என்பது ஐதீகம்.

    சுவாமி தீர்த்தவாரி காணும் இந்த நாளே அவரது பிறந்தநாள்!

    அன்று இரவு கோவிலில் ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்பட்டு பக்தர்களுக்கு அட்சதை பிரசாதம் வழங்கப்படும்.

    அத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.

    Next Story
    ×