search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Money Cheating"

    • கார்த்திகேயன் தன்னுடைய நடப்பு வங்கி கணக்கு எண்ணை அனுப்பி உள்ளார்.
    • ராணுவ வீரர் என்பதால் இந்த கணக்கில் பணம் அனுப்ப முடியாது. எனவே வேறு கணக்கு எண்ணை தருமாறு சாகில் குமார் கேட்டுள்ளார்.

    தூத்துக்குடி:

    நவீன யுகத்தில் தொழில்நுட்பங்கள் வளர, வளர இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    குறிப்பாக ஆன்-லைன் மோசடி மூலம் தனி நபர்களையும், நிறுவனங்களையும் குறிவைத்து மோசடி கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் ஒருவர் ராணுவ வீரர் என கூறி 'கூகுள் பே' மூலம் ரூ.65 ஆயிரம் மோசடி செய்துள்ளது மேலும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 52). இவர் கோவில்பட்டியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இதன் கிளைகள் விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார். அப்போது, தான் சாகில் குமார், ராணுவ வீரர் காஷ்மீரில் இருந்து பேசுவதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் தனக்கு பர்னிச்சர் பொருட்கள் வேண்டும் என கேட்டுள்ளார்.

    அதற்கு கார்த்திகேயன் நீங்கள் காஷ்மீர் மற்றும் அருகில் உள்ள இடங்களில் வாங்கிக் கொள்ளலாமே என தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளித்த சாகில் குமார், சாத்தூரில் உள்ள எனது நண்பருக்கு அன்பளிப்பு வழங்க வேண்டும் என்பதாலும், உங்கள் கடை 4 நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளதால் தரமாக இருக்கும் என்பதாலும் உங்களிடம் வாங்க முடிவு செய்துள்ளேன் என தெரிவித்தார்.

    பின்னர் மீண்டும் கார்த்திகேயனை தொடர்பு கொண்ட சாகில் குமார், தனக்கு சோபா, மேஜை, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் வேண்டும் என அதற்குரிய மாதிரி படங்களை செல்போன் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்தார்.

    அதனை பார்த்த கார்த்திகேயன், அதற்கான மதிப்பு ரூ.80 ஆயிரம் என தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் பேரம் பேசி ரூ.65 ஆயிரம் என விலை நிர்ணயித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஆன்-லைன் மூலம் பணம் அனுப்புவதாக சாகில் குமார் தெரிவித்துள்ளார்.

    இதனால் கார்த்திகேயன் தன்னுடைய நடப்பு வங்கி கணக்கு எண்ணை அனுப்பி உள்ளார். அப்போது, தான் ராணுவ வீரர் என்பதால் இந்த கணக்கில் பணம் அனுப்ப முடியாது. எனவே வேறு கணக்கு எண்ணை தருமாறு சாகில் குமார் கேட்டுள்ளார்.

    இதனால் கார்த்திகேயன் தனது மகன் அருண்குமார் என்பவரின் வங்கி கணக்கு மற்றும் அதற்குரிய 'கூகுள் பே' எண்ணையும் அனுப்பி உள்ளார்.

    முதலில் 1 ரூபாய் அனுப்பிவிட்டு அந்த பணம் வந்துள்ளதா என சாகில் குமார் கேட்டுள்ளார். ஆம் என கார்த்திகேயன் கூறியதும், செல்போனில் ஒரு லிங்கை அனுப்பி அதன் மூலம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    அருண்குமார் தனது செல்போன் எண்ணிற்கு வந்த லிங்கை தொட்டதும், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் எடுக்கப்பட்டதற்கான தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது தந்தையிடம் இதுபற்றி கூறி உள்ளார்.

    பின்னர் அவர் சாகில் குமாரை தொடர்பு கொண்டு விபரம் கேட்டுள்ளார். அப்போது ரூ.35 ஆயிரம், ரூ.18 ஆயிரம் என பல்வேறு லிங்குகளை அனுப்பி, அதனை தேர்வு செய்தால் உங்களுக்குரிய பணம் மீண்டும் உங்களது வங்கி கணக்கில் வந்துவிடும் என கூறி உள்ளார்.

    ஆனால் உஷாரான கார்த்திகேயன் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எளிமையான முறையில் பொருட்களை வாங்கவும், பணத்தை எடுத்து செல்வதால் ஏற்படும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டும் ஆன்-லைன் பணபரிவர்த்தனை தற்போது தொடங்கப்பட்டு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    ஆனால் சிலர் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவதால், ஆன்-லைன் பணபரிவர்த்தனை குறித்து பொதுமக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே ஏற்படுத்தி வந்தாலும் குற்றச் செயல்கள் ஒருபுறம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

    இதற்கிடையே சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அதில் சிலர் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தி விட்டு தவறுதலாக வந்து விட்டது எனக்கூறி, பின்னர் அதனை வாங்குவதற்காக லிங்கை அனுப்புகின்றனர். அதனை பொது மக்கள் தேர்வு செய்ததும் அவரது வங்கி கணக்கில் இருந்த மொத்த தொகையையும் மோசடி கும்பல் எடுத்து கொள்கிறது.

    எனவே உங்களுக்கு யாரேனும் லிங்க் அனுப்பினால் அதனை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். மேலும் உங்களது வங்கி கணக்கு ஏ.டி.எம். எண், ஓ.டி.பி. எண்ணை யாரேனும் கேட்டாலும் எதிர்வினை ஆற்றவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

    • கடந்த 3-ந் தேதி நடக்க இருந்த நிசாந்த்தின் திருமணத்தை போலீசார் அதிரடியாக தடுத்து நிறுத்தினர்.
    • நிசாந்த் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    போரூர்:

    சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் நிசாந்த் (வயது28). இவருக்கும் வடபழனி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பள்ளியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.

    இந்த நிலையில் இளம்பெண்ணின் பூர்வீக சொத்து ஒன்று விற்கப்பட்டு அதன் மூலம் ரு.68 லட்சம் கிடைத்தது. இதை அறிந்த நிசாந்த் தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று கூறி இளம்பெண்ணிடம் இருந்து ரூ.68 லட்சத்தை வாங்கினார்.

    பின்னர் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. மேலும் இளம்பெண்ணையும் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார்.

    இதற்கிடையே நிசாந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் கடந்த 3-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது. இதனை அறிந்த இளம்பெண் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    அதில் நிஷாந்த், காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார். மேலும் ரூ.68 லட்சம் பணத்தையும் பெற்று மோசடி செய்து விட்டார். எனவே நிசாந்த் மற்றும் அவரது பெற்றோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    இதையடுத்து கடந்த 3-ந் தேதி நடக்க இருந்த நிசாந்த்தின் திருமணத்தை போலீசார் அதிரடியாக தடுத்து நிறுத்தினர். மேலும் நிசாந்த் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதனால் எந்த நேரமும் கைதாகலாம் என்பதை அறிந்த நிசாந்த் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நிசாந்த், நேற்று இரவு ஓ.எம்.ஆர் சாலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் அவர், நண்பர் ஒருவரின் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    சிறிது நேரத்தில் நிசாந்த் "நான் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்" என்று வாட்ஸ்அப் மூலம் நண்பர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டு செல்போனை "சுவிட்ச் ஆப்" செய்துவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் போரூர் ஏரி அருகே வந்து பார்த்தபோது கார் மட்டும் நின்றது. நிசாந்த் மாயமாகி இருந்தார். இதுகுறித்து போரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விருகம்பாக்கம் மற்றும் மதுரவாயல் தீயனைப்பு வீரர்கள் போரூர் ஏரியில் இறங்கி தேடிவருகிறார்கள். ஆனால் நிசாந்தின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    நிசாந்த் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது போலீசில் புகார் செய்ததால் கைது நடவடிக்கைக்கு பயந்து அவர் வேறு எங்காவது தப்பி ஓடி விட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பணத்திற்காக யாரேனும் பெண்களின் போட்டோக்களுடன் அரட்டை அடித்தால், அவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
    • புகார்களைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கும்பல் ராஜஸ்தானில் இருந்தபடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    திருமலை:

    ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் வாட்ஸ் அப் பிரபலமாக இருக்கிறது. இதன் மூலம் கும்பல் சில மோசடி செயல்களில் ஈடுபட்டு பணத்தை பறிக்கின்றனர்.

    லிங்க் அனுப்புவது, வங்கி தகவல்களை கேட்பது என பல மோசடிகளை செய்து வருகின்றனர், தெரியாதவர்களுக்கு வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்வது அந்த அழைப்பை ஆண் எடுத்தால், அந்த வீடியோ அழைப்பில் மோசடி கும்பலின் அருகில் நிர்வாணமாக பெண் தோன்றுவது, அதுவே ஒரு பெண் அழைப்பை எடுத்தால் அதில் ஆண் நிர்வாணமாக தோன்றுவது என்பது போன்ற மோசடிகள் நடைபெற்று வருகிறது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவருக்கு பெண் ஒருவரிடமிருந்து செல்போன் மூலம் அழைப்பு வந்துள்ளது.

    அதில் பேச தொடங்கிய அந்த பெண் அவருக்கு காதல் வலை விரித்தார். இதில் அவர் அந்தப் பெண் கேட்ட கேள்வி அனைத்திற்கும் பதில் அளித்தார்.

    சில நிமிடங்களில் வாட்ஸ் அப் வீடியோ கால் வந்துள்ளது. அவரிடம் பேசிய இளம்பெண் ஆடை இல்லாமல் தனது உடல் அந்தரங்க பகுதிகளை காண்பித்துள்ளார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரையும் அதே போன்று காண்பிக்கும்படி இளம்பெண் கூறியுள்ளார்.

    பெண் மீது இருந்த மோகத்தால் அவரும் ஆடையின்றி நிர்வாணமாக நின்றார். இதனை அந்த இளம்பெண் வீடியோ பதிவு செய்துள்ளார்.

    சில நிமிடங்களில் மோசடி கும்பல் வாய்ஸ் மெசேஜுடன் போன் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆடை இல்லாமல் வீடியோ கால் செய்ததாக கூறி போலீசில் பாதிக்கப்பட்ட பெண்னை வைத்து புகார் அளிப்போம் என்றும், உங்கள் நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவோம் என்றும் மிரட்டினர்.

    இதனால் பயந்து போன அந்த ஊழியர் மோசடி கும்பல் கேட்டபடி பல்வேறு வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.75 லட்சம் வரை கொடுத்துள்ளார். மேலும் பணம் கேட்டு தொல்லை செய்வார்கள் என்ற அச்சத்தில் தான் ஏமாந்தது குறித்து போலீசில் புகார் அளித்தார். இதேபோன்று ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இந்த மோசடி கும்பலில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.

    காமாரெட்டியை சேர்ந்த வாலிபர் ரூ.60 ஆயிரம் அனுப்பியதாகவும் மேலும் ஒருவர் ரூ.1 லட்சம் அனுப்பியதும் தெரிய வந்தது.

    பலர் தங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் புகார் அளிக்க முன்வராமல் இருந்த நிலையில் தற்போது விஷயம் வெளியே வந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக புகார் அளித்து வருகின்றனர். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் முதலில் தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இளைஞர்கள் அல்லது யாரேனும் இதுபோன்ற செயல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணத்திற்காக யாரேனும் பெண்களின் போட்டோக்களுடன் அரட்டை அடித்தால், அவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

    புகார்களைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கும்பல் ராஜஸ்தானில் இருந்தபடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி மர்ம நபர் நூதனமான முறையில் பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது.
    • விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    விருகம்பாக்கம், ஆற்காடு சாலை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பத்ரி நாராயணன். சாப்ட்வேர் என்ஜினீயர். அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த அவர் தாய் மல்லிகாவை பார்ப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் குடும்பத்துடன் சென்னை வந்தார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்ற பத்ரி நாராயணன் ரகசிய குறியீட்டு எண்ணை 2 முறை தவறாக பதிவு செய்ததாக தெரிகிறது. இதனால் அவரது ஏ.டி.எம். கார்டு பிளாக் செய்யப்பட்டது.

    சிறிது நேரத்தில் பத்ரி நாராயணனின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம வாலிபர் வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுகிறேன் "வருமான வரி அட்டையை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்" என்று கூறி பத்ரி நாராயணனின் ஏ.டி.எம். கார்டு விபரங்களை கேட்டார். தனது ஏ.டி.எம். கார்டு பிளாக் செய்யப்பட்டதால் இதை உண்மை என்று நம்பிய அவர் தனது கார்டு எண் விபரங்களை அவரிடம் கூறினார். இதையடுத்து அவரது செல்போனுக்கு "லிங்க்" ஒன்றையும் மர்மநபர் அனுப்பி வைத்தார். அந்த "லிங்க்கை" பயன்படுத்திய சிறிது நேரத்தில் தனது வங்கி கணக்கில் இருந்து அடுத்தடுத்து 3 தவணைகளாக மொத்தம் ரூ.10 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததை கண்டு பத்ரி நாராயணன் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தனது வங்கி கிளைக்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி மர்ம நபர் நூதனமான முறையில் பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளியை மீட்க ரூ.15 கோடி கடன் கேட்டு திருச்சியில் உள்ள ஒருவரை நாடி உள்ளார்.
    • புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்த 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி:

    சென்னை பாடி எம்.டி.எச். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் உமா பச்சையப்பன். இவர் சென்னையில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

    கொரோனா காலத்தில் வகுப்புகள் நடைபெறாமல் போனது. இதனால் கட்டணம் வசூலிக்க முடியவில்லை. எனவே பள்ளிக்காக வங்கியில் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை.

    அதைத் தொடர்ந்து வங்கி நிர்வாகம் பள்ளிக்கு சீல் வைத்தது. இந்நிலையில் பள்ளியை மீட்க ரூ.15 கோடி கடன் கேட்டு திருச்சியில் உள்ள ஒருவரை நாடி உள்ளார். அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் உமா பச்சையப்பன் சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு வந்துள்ளார்.

    பின்னர் கடன் பெற்று தருவதாக உறுதி அளித்த நபரை சந்தித்தார். அப்போது அவர் ரூ.30 மதிப்பிலான ஸ்டாம்ப் மற்றும் பாண்டு பத்திரங்களை வாங்கி வரும்படி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இன்னொரு நபரை அறிமுகம் செய்தார். அதன்படி உமா அந்த நபரிடம் ரூ.30 லட்சம் பணத்தை கொடுத்தார். ஆனால் அவர் ஸ்டாம்ப் பேப்பர் எதுவும் கொடுக்கவில்லை.

    இதையடுத்து அந்த 2 பேரும் கூட்டு சேர்ந்து உமா பச்சையப்பனை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் பாதிக்கப்பட்ட உமாபச்சையப்பன் திருச்சி செசன்ஸ் கோர்ட்டு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்த 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அரசு வேலை வாங்கி தருவதாக 51 பேரிடம் ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் மோசடி செய்ததாக திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் வந்தது.
    • போலி அரசு அடையாள அட்டை, போலி பணியாணை, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கற்பக விநாயகர் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (27). இவர் காக்கலூர் பைபாஸ் சாலையில் வாடகைக்கு அறை எடுத்து அரசு வேலை வாங்கி தருவதாக 51 பேரிடம் ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் மோசடி செய்ததாக திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் வந்தது.

    இதை அடுத்து குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, மோகன் மற்றும் போலீசார் வசந்த் குமார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் வீட்டின் அருகே குற்றப்பிரிவு போலீசார் வசந்த் குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி அரசு அடையாள அட்டை, போலி பணியாணை, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மோசடியில் ஈடுபட்ட 7 பேரும் கோவையில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக மாறினர்.
    • மில்லில் பார்த்த வேலையில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் விரைவில் பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ இவர்கள் விரும்பினர்.

    கோவை:

    கோவையை அடுத்த கோவில்பாளையத்தை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன்(வயது50). இவர் தனது மகளுக்கு வேலை தேடி வந்தார்.

    இந்த நிலையில் இவரது வீட்டின் அருகே வசிக்கும் 7 பேர் தங்களை அரசு அதிகாரிகள், அரசு டிரைவர்கள் என்றும், நாங்கள் உங்கள் மகளுக்கு வேலை வாங்கி தருகிறோம்.

    அதற்கு உயர் அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும். அதனால் நீங்கள் பணம் தர வேண்டும் என கூறியுள்ளனர்.

    இதனை உண்மை என நம்பிய சந்தானகிருஷ்ணன் தனது மகளுக்கு வேலை வாங்கி தருவதற்காக, அவர்களிடம் கடந்த மே மாதம் முதல் ஆகஸ்டு வரை பலதவணைகளாக ரூ.21 லட்சத்தை கொடுத்துள்ளார். அதற்கு அவர்களும் சந்தான கிருஷ்ணனிடம் பணி நியமன ஆணையை வழங்கி உள்ளனர்.

    அந்த ஆணையை பரிசோதித்த போது அது போலியானது என தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்தான கிருஷ்ணனை ஏமாற்றியது, திண்டுக்கலை சேர்ந்த ஜி.சரவணக்குமார், ஈரோடு பவானிசாகரை சேர்ந்த ஜவகர் பிரசாத்(29), தேனி கம்பத்தை சேர்ந்த அன்புபிரசாத்(39), தர்மபுரி நிர்மலா நகரை சேர்ந்த என்.எஸ்.சரவணக்குமார்(33), கடலூர் பண்ருட்டியை சேர்ந்த சதீஷ்குமார்(33), கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுதாகர்(37), சுரேந்திரன்(34) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து இவர்கள் 7 பேரையும் பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கோவை, ஓசூர், பவானியில் பதுங்கி இருந்த 6 பேரையும் கைது செய்தனர். ஜி.சரவணக்குமார் மட்டும் தலைமறைவாகி விட்டார். அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    இவர்கள் 6 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்தன.

    மோசடியில் ஈடுபட்ட 7 பேரும் கோவையில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக மாறினர்.

    மில்லில் பார்த்த வேலையில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் விரைவில் பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ இவர்கள் விரும்பினர்.

    அப்போது ஜி.சரவணக்குமார் தான் இந்த மோசடி திட்டத்தை அவர்களிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு தலைவனாக ஜி.சரவணக்குமார் செயல்பட்டுள்ளார். இதன் பிறகு அனைவரும் மில் வேலையை விட்டு நின்று விட்டனர்.

    அதன் பின்னர் 7 பேரும் சேர்ந்து தங்கள் திட்டத்தை அரங்கேற்றுவதற்கான வேலைகளில் இறங்கி உள்ளனர். இவர்கள் அருகே வசிப்பவர்களிடம் தங்களை அரசு அதிகாரிகள் என்று கூறியுள்ளனர்.

    அதிலும் ஜி.சரவணக்குமார் தன்னை தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தனி அலுவலக அதிகாரி என்றும், ஜவகர் பிரசாத் முதல்-அமைச்சரின் அலுவலக ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், அன்பு பிரசாத் முதல்-அமைச்சர் அலுவலக இன்ஸ்பெக்டர் என்றும், என்.எஸ்.சரவணக்குமார் முதல்-அமைச்சர் அலுவலக தாசில்தார் என்றும், மற்றவர்கள் சரவணகுமாரின் கார் டிரைவர்கள் என்றும் அறிமுகம் ஆகி உள்ளனர்.

    பின்னர் அவர்களிடம் உங்களுக்கு பல்வேறு அரசு துறைகளில் வேலை உள்ளது. நாங்கள் உங்களுக்கு வேலை வாங்கி தருகிறோம் என கூறி உள்ளனர். அவர்களும் நம்பி பணத்தை கொடுத்துள்ளனர்.

    பணம் கொடுத்தும் பணி நியமன ஆணை வழங்குவதற்காக, பணம் கொடுத்தவர்களை இந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரசு முத்திரை பதிக்கப்பட்ட காரில் ஏற்றி கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி சிறப்பு மரியாதைகளை அளித்துள்ளனர்.

    இதனால் அவர்களும், இவர்கள் உண்மையிலேயே அரசு அதிகாரிகள் தான் என நினைத்து கோடி கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்ததும் தெரியவந்தது.

    இவர்கள், 20-க்கும் மேற்பட்டவர்களிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதும், அந்த பணத்தை கொண்டு, சொகுசாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

    இன்னும் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் 20 பேரை தவிர வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபோன்றவர்களிடம் மக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக கூறுவதை மக்கள் நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டனர்.

    • வாரிய உறுப்பினர்களின் கடவு சொற்களை தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்தி ரூ.65 லட்சம் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
    • முறைகேட்டில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்களின் நலனுக்காக பிரவாசி நல வாரியம் செயல்பட்டு வருகிறது.

    இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளோருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு நடப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் வாரியத்தில் உறுப்பினர் அல்லாதோரின் பெயர்களை சேர்த்து போலி கணக்கு தொடங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    இந்த முறைகேட்டில் அலுவலக பெண் ஊழியர் லீனா என்பவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் வாரிய உறுப்பினர்களின் கடவு சொற்களை தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்தி ரூ.65 லட்சம் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த முறைகேட்டில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆதீஸ்வரன், மனைவி ராஜலட்சுமி மற்றும் வாசு, மணிராஜா உள்பட 5 பேர், போலி ஆவணம் மூலம் ரூ. 24 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்டனர்.
    • திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை ஹார்விப்பட்டி, பாலாஜி நகரை சேர்ந்த சரவணன் மனைவி மேனகா (வயது 38). இவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் மனு கொடுத்து உள்ளார். அந்த புகார் மனுவில், "நான் ஆதீஸ்வரன் என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறேன். இந்த நிலையில் அவர்கள் "எங்களுக்கு படப்பாடி தெருவில் ஒரு வீடு உள்ளது. அதை விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா?" என்று கேட்டனர். இதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.

    இதனைத் தொடர்ந்து ஆதீஸ்வரன், மனைவி ராஜலட்சுமி மற்றும் வாசு, மணிராஜா உள்பட 5 பேர், போலி ஆவணம் மூலம் என்னிடம் ரூ. 24 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்டனர். அதன்பிறகும் அவர்கள் எனக்கு வீட்டை பத்திர பதிவு செய்து தர முன்வரவில்லை. எனவே நான் அவர்களிடம் இது தொடர்பாக கேட்டேன். அப்போது அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    இதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேரின் புகார் குறித்தும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அருள் செல்வி விசாரணை நடத்தினார்.
    • டெல்லி, மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பண மோசடியில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மகன் பிரபு(வயது 32). இவர் செங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு லிங்க் வந்துள்ளது. அதில் கிளிக் செய்து பார்த்தபோது ரூ.200 செலுத்தினால் ரூ.400 கிடைக்கும் என்று குறுந்தகவல் வந்துள்ளது. உடனே அவரும் பணம் செலுத்தவே, ரூ.400 அவரது வங்கி கணக்கில் வரவாகி உள்ளது.

    இதனால் அவரது ஆசை அதிகரிக்கவே, பல்வேறு கட்டங்களாக ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்தை வங்கி யுபிஐ மூலமாக அவர் செலுத்தி உள்ளார். ஆனால் அதன்பின்னர் அவரது பணம் திரும்ப கிடைக்கவில்லை. இதுதொடர்பாக அவர் தென்காசி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    சுரண்டையை அடுத்த சாம்பவர்வடகரை ஊர்மேல் அழகியான் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் சுரேஷ்(32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது செல்போன் வாட்ஸ்-அப்பில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு முன்வைப்பு தொகையாக பணம் செலுத்தவேண்டும் என்று குறுந்தகவல் வந்துள்ளது. இதனை உண்மை என்று நம்பிய சுரேஷ், 3 தவணைகளாக ரூ.4.61 லட்சத்தை அந்த லிங்கில் வந்த வங்கி கணக்கிற்கு செலுத்தி உள்ளார்.

    ஆனால் வெகுநாட்களாகியும், அவருக்கு வேலை தொடர்பான தகவல் வரவில்லை. மேலும் கட்டிய பணத்தையும் அவரால் திரும்ப வாங்க முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

    தென்காசி அருகே உள்ள பண்பொழியை சேர்ந்தவர் இளையராஜா(28). இவருக்கு யூடியூப் லிங்க் மூலமாக வேலை தொடர்பான விபரம் வந்துள்ளது. அதனை உண்மை என்று நம்பிய அவர் அந்த லிங்கை தொட்டுள்ளார்.

    உடனே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.12.55 லட்சம் பணம் காணாமல் போய்விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். தனியார் நிறுவன ஊழியரான இவர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல லட்சத்தை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த 3 பேரின் புகார் குறித்தும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அருள் செல்வி விசாரணை நடத்தினார். அதில் டெல்லி, மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த பண மோசடியில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கினர். அதில் இருந்து பணத்தை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களை பிடிக்கவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை, கருங்கல், மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், ஜேம்ஸ்டவுன் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிலரை தொடர்பு கொண்ட ஏஜண்டுகள், ஆஸ்திரேலியாவில் வேலை இருப்பதாக கூறி உள்ளனர்.
    • நம்பிய இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், சென்னையில் மருத்துவ பரிசோதனைக்கும் ஏஜண்டுகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

    நாகர்கோவில்:

    வெளிநாட்டு வேலை என்ற மோகத்தில் நாடு முழுவதும் பலர் பணத்தை இழந்து வருவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இன்னும் சிலர் ஏஜண்டுகளை நம்பி பணத்தை இழந்து தான் வருகின்றனர்.

    அப்படி ஒரு சம்பவம் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை, கருங்கல், மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், ஜேம்ஸ்டவுன் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிலரை தொடர்பு கொண்ட ஏஜண்டுகள், ஆஸ்திரேலியாவில் வேலை இருப்பதாக கூறி உள்ளனர். இதனை நம்பிய இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், சென்னையில் மருத்துவ பரிசோதனைக்கும் ஏஜண்டுகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

    விரைவில் வேலைக்கான உத்தரவு, விசா போன்றவை வந்து விடும் எனக் கூறி ஒவ்வொரு இளைஞரிடமும் ரூ. 75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஏஜண்டுகள் வசூலித்துள்ளனர்.

    ஆனால் நாட்கள், மாதங்கள், வருடங்கள் கடந்தும் எந்தவித விசாவும் வராத நிலையில் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை இளைஞர்கள் உணர்ந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, அவ்வப்போது தங்கள் செல்போனில் ஏஜண்டு தரப்பில் யாராவது பெண்கள் பேசி, கண்டிப்பாக விசா வந்து விடும் என நம்பிக்கை தெரிவித்ததாகவும் இதனை நம்பி காத்திருந்ததாகவும் ஏமாந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

    மேலும் ஒரு கட்டத்தில், பணிக்கான விசா கிடைக்கவில்லை. எனவே சுற்றுலா விசாவில் உங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கிறோம். பின்னர் பணிக்கான விசா வாங்கி தருகிறோம் என்றும் மோசடி கும்பல் உறுதியளித்தனர்.

    இந்தக் கும்பல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இதுபோல மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம். குறைந்தது 250 பேரிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

    இதன்மூலம் மோசடிக் கும்பல் தமிழகம் முழுவதும் நெட்வொர்க் அமைத்து பணம் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    • குபேந்திரனும், பூபதியும் கூறியபடி வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
    • மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மற்றும் போலீசார் விசாரித்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த குபேந்திரன், பூபதி ஆகிய இருவரும் கூவம் அரசுப் பள்ளியில் சத்துணவு உதவியாளர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். மேலும் வேலை வாங்கித்தர ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து சுரேஷ் கடந்த அக்டோபர் மாதம் ரூ.4 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். ஆனால் குபேந்திரனும், பூபதியும் கூறியபடி வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதுபற்றி சுரேஷ் கேட்டபோது பணத்தையும் திருப்பி கொடுக்காமல் சரிவர பதில் கூறாமல் இருந்தனர்.

    இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ் இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணிடம் புகார் அளித்தார்.

    அவரது உத்தரவுப்படி மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மற்றும் போலீசார் விசாரித்தனர்.

    இதில் குபேந்திரனும், பூபதியும் சத்துணவு உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×