என் மலர்
உள்ளூர் செய்திகள்

சத்துணவு உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி- 2 பேர் கைது
- குபேந்திரனும், பூபதியும் கூறியபடி வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
- மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மற்றும் போலீசார் விசாரித்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த குபேந்திரன், பூபதி ஆகிய இருவரும் கூவம் அரசுப் பள்ளியில் சத்துணவு உதவியாளர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். மேலும் வேலை வாங்கித்தர ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து சுரேஷ் கடந்த அக்டோபர் மாதம் ரூ.4 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். ஆனால் குபேந்திரனும், பூபதியும் கூறியபடி வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதுபற்றி சுரேஷ் கேட்டபோது பணத்தையும் திருப்பி கொடுக்காமல் சரிவர பதில் கூறாமல் இருந்தனர்.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ் இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணிடம் புகார் அளித்தார்.
அவரது உத்தரவுப்படி மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மற்றும் போலீசார் விசாரித்தனர்.
இதில் குபேந்திரனும், பூபதியும் சத்துணவு உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






