search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marina Beach"

    • மாண்டஸ் புயலால் சென்னை மெரினா கடற்கரை அலங்கோலமாக உள்ளது.
    • மணல் பரப்பில் உள்ள மழைத் தண்ணீர் தனித்தனி குட்டை தீவுகள் போல் காணப்பட்டு வருகிறது.

    சென்னை:

    ஆ‌சியா‌விலேயே ‌மிக ‌நீ‌ண்ட கட‌ற்கரை என பெயர் பெற்றது சென்னை மெ‌ரினா கட‌ற்கரை‌ ஆகும். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த பலத்த மழையால் மெரினா கடற்கரை மணற்பரப்பில் குளம்போல் மழைத்தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    மாண்டஸ் புயலால் சென்னை மெரினா கடற்கரை அலங்கோலமாக உள்ளது. மணல் பரப்பில் உள்ள மழைத் தண்ணீர் தனித்தனி குட்டை தீவுகள் போல் காணப்பட்டு வருகிறது. மேலும் அங்குள்ள மழைத் தண்ணீரில் பாசி பிடித்து துர்நாற்றம் வீசுகிறது.

    அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் அங்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்றும் அபாயம் உருவாகி உள்ளது. கனமழையின் பாதிப்பால் மெரினா கடற்கரையில் உள்ள சிறிய பெட்டிகடைகள், மற்றும் ராட்டினங்கள் துருப்பிடித்து பழுதடைந்து அலங்கோலமாக ஆங்காங்கே கிடக்கின்றன.

    மழையால் இந்த கடைகள் மேலும் சிதைந்து வருகின்றன. கடைகள் மற்றும் ராட்டினங்கள் மீண்டும் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளன.

    கடற்கரையில் துர்நாற்றம் வீசும் மெரினா மணல் பரப்பு பகுதியை மீண்டும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை பிறர் பயன்படுத்துவதாக புகார்.
    • அனைவரும் பயன்படுத்தினால் பாதை சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாக குற்றசாட்டு.

    சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத் திறனாளிகளும் ரசிப்பதற்காக நிரந்தர நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டது. சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டதாக அமைக்கப் பட்ட இந்த சிறப்பு பாதையை கடந்த 27ந் தேதி அமைச்சர்கள் மற்றும் உதயநிதி எம்எல்ஏ ஆகியோர் திறந்து வைத்தனர்.

    மாற்றுத்திறனாளிகள், முதியோர் சிரமம் இன்றி நடக்க இந்த நடைபாதையின் இருபுறங்களிலும் மரத்தால் ஆன கைப்பிடிகள் அழகுற அமைக்கப்பட்டு இருக்கிறது. சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் இந்த சிறப்பு பாதை வழியாக கடலின் அருகே சென்று அலைகளில் கால்களை நனைத்தபடி கடல் அழகை ரசித்து மகிழலாம். இதற்காக சர்வீஸ் சாலையில் இருந்து நடைபாதைக்கு இருபுறத்திலும் சாய்வுதளம் அமைக்கப்பட்டு உள்ளது. 

    இந்த சிறப்பு பாதை திறக்கப்பட்ட முதல் நாள் மாற்று திறனாளிகள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது மற்றவர்களும் அந்த பாதையை பயன்படுத்தி கடற்கரைக்குள் செல்வதாக புகார் எழுந்துள்ளது. அனைவரும் பயன்படுத்தும் போது சிறப்பு பாதை சேதம் அடையும் என்றும், இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாற்று திறனாளிகள் சிலர் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து மெரினாவில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பாதைக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கலைஞர் நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
    • வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது

    கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்தன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கருணாநிதி நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் 8-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 28-ந்தேதி ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

    கலைஞர் நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்காக கடற்கரையில் கருணாநிதி நினைவிட வளாகத்தில் இரும்பு தடுப்புகள் மற்றும் தகரம் மூலம் 30 அடி உயரத்துக்கு வேலி அமைக்கப்பட்டது

    கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக அங்கு 15 அடி ஆழத்தில் துளைகள் போடப்பட்டு உள்ளது. 3 வளைவுகள் சிமெண்ட் கான்கிரீட்டில் அமைக்கப்படுகிறது. அந்த கான்கிரீட் வளைவுகளில் கிரானைட் அல்லது மார்பிள் கற்கள் பதிக்கப்பட உள்ளது. மேலும் திறந்த வெளிகாட்சி அரங்கம், அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது

    சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் கட்டுமானகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப்பணிகள் இன்னும் 6 மாதத்தில் முடிக்கப்பட உள்ளது.

    வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் கருணாநிதியின் நினைவிடத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

    • மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ திறந்துவைத்தார்.
    • இந்த நடைபாதை சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகளும் ரசிப்பதற்காக நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டது. சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது.

    மாற்றுத்திறனாளிகள், முதியோர் சிரமம் இன்றி நடக்க நடைபாதையின் இருபுறங்களிலும் கைப்பிடிகள் போலவே மரத்தால் அழகுற அமைக்கப்பட்டு இருக்கிறது. மணற்பரப்பில் இருந்து சற்று உயரம் கூட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதையில் எந்தவித சிரமமும் இன்றி மாற்றுத்திறனாளிகள் செல்லலாம்.

    மேலும் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம். இதற்காக சர்வீஸ் சாலையில் இருந்து நடைபாதைக்கு இருபுறத்திலும் சாய்வுதளம் அமைக்கப்பட்டு உள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள இந்த நிரந்தர நடைபாதை விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், இந்த நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று மாலை திறந்துவைத்தார். இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், நேரு, தயாநிதி மாறன் எம்.பி, மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    • கொரோனா ஊரடங்கு காரணமாக அப்போது இந்த கடைகள் மெரினா கடற்கரை சிறு வியாபாரிகளுக்கு வழங்கப்படவில்லை.
    • மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் இந்த ‘ஸ்மார்ட்’ கடைகளை பார்த்து கவலை அடைந்து வருகிறார்கள்.

    சென்னை:

    மெரினா கடற்கரையில் "ஸ்மார்ட்" கடைகள் மழையால் துருபிடித்து வீணாகி வருகின்றன.

    "சென்னை மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் நோக்கத்தோடு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்படி மெரினா கடற்கரையில் சிறு வியாபாரிகளுக்காக 900 "ஸ்மார்ட்" கடைகள் சென்னை மாநகராட்சி சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன் தயார் செய்யப்பட்டது.

    மெரினா கடற்கரையில் ஏற்கனவே வியாபாரம் நடத்தியவர்களுக்கு மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்டவர்களை வகை "அ" என்ற அடிப்படையில், 900 கடைகளில் 60 சதவீதம் கடைகள் என 540 கடைகளும், ஏனைய கடை நடத்த விருப்பம் உள்ளவர்கள் வகை "ஆ" என்ற அடிப்படையில் 40 சதவீதம் கடைகள் என 360 கடைகளும் குலுக்கல் மூலம் ஒதுக்கீடு கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.

    கொரோனா ஊரடங்கு காரணமாக அப்போது இந்த கடைகள் மெரினா கடற்கரை சிறு வியாபாரிகளுக்கு வழங்கப்படவில்லை. மேலும் இந்த கடைகளை வியாபாரிகளுக்கு வழங்குவது தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள், போராட்டங்கள் நடந்தது. இதனால் கடைகளை வியாபாரிகளுக்கு வழங்காமல் மாநகராட்சி கிடப்பில் போட்டது

    தற்போது இந்த "ஸ்மார்ட்" கடைகள் மழையால் நனைந்து துருப்பிடித்து வீணாகி வருகின்றது. யாருக்கும் பயன் இல்லாமல் கேட்பாரற்று இந்த கடைகள் உள்ளன.

    மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் இந்த 'ஸ்மார்ட்' கடைகளை பார்த்து கவலை அடைந்து வருகிறார்கள்.

    எனவே இந்த ஸ்மார்ட் கடைகள் மழையால் வீணாவதை தடுத்து மாநகராட்சி இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.
    • கடற்கரையில் உள்ள காந்தி சிலை 60 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    சென்னை :

    சென்னை மெரினா கடற்கரையின்முக்கிய அடையாளமாக திகழும் காந்தி சிலை கடந்த 1959-ம் ஆண்டு தேபி பிரசாத் ராய் சவுத்ரி என்பவரால் செதுக்கப்பட்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல்-அமைச்சர் காமராஜ் முன்னிலையில் 12 அடி வெண்கல காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் காந்தி நினைவு தினம் அன்று கவர்னர், முதல்-அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் காந்தி சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செதுத்துவார்கள். அத்துடன் தேசபக்தி பாடல் பாடுவது, ராட்டையில் நூல் நூற்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் கடற்கரை மெட்ரோ ரெயில் நிலையம் சுரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது.

    இதற்காக தற்போது காந்தி சிலை அருகில் உள்ள இடங்கள் இரும்பு வேலி போடப்பட்டு ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியின்போது காந்தி சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்க தற்காலிகமாக காந்தி சிலையை பணி முடியும் வரை வேறு இடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    கடற்கரையில் உள்ள காந்தி சிலை 60 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுரங்கம் தோண்டும் பணியின்போது சேதம் அடையாமல் இருப்பதற்காக பணி முடியும் வரை தற்காலிகமாக மாற்று இடத்தில் கொண்டு போய் பாதுகாப்பாக வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக முறையாக மாநகராட்சியிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

    இதனைத்தொடர்ந்து இந்த சிலையை பொதுப்பணித்துறையினர் அப்புறப்படுத்த உள்ளனர். இதற்கு முன்பாக முறையாக ஆய்வு செய்யப்பட்டு, மெரினா கடற்கரை பகுதியிலேயே பாதுகாப்பான இடத்தை பொதுப்பணித்துறையினர் தேடி வருகின்றனர். இடம் தேர்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டவுடன் சிலை இரவில் பாதுகாப்பாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. பணிகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் காந்தி சிலை நிறுவப்படும்

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    • சென்னை கடற்கரைப் பகுதி மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்கம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • கடற்கரைப் பகுதியை பருவகால மாற்றத்தின் அடிப்படையில் பாதுகாக்க வேண்டும்.

    சென்னை :

    தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு வசதித்துறையின் மானிய கோரிக்கையின்போது அமைச்சர் சு.முத்துச்சாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையுடன் கலந்தாலோசித்து மெரினா முதல் கோவளம் வரையிலான சுமார் 30 கி.மீ. நீளமுள்ள கடற்கரைப்பகுதியில், மறு சீரமைப்பு மற்றும் புத்தாக்கப்பணிகள் ரூ.100 கோடி மதிப்பில் சென்னை பெருநர வளர்ச்சிக்குழுமத்தால் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ஹித்தேஷ்குமார் மக்வானா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலாளர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், சென்னையின் கடற்கரைப் பகுதி எண்ணூர் முதல் கோவளம் வரையில் நீண்டுள்ளது. இது இயற்கையான நீண்ட கடற்கரைப் பகுதியாகும்.

    இந்த கடற்கரைப் பகுதியை பருவகால மாற்றத்தின் அடிப்படையில் பாதுகாக்க வேண்டும். இதில் குறிப்பாக மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகள் மக்கள் அதிகளவில் பொழுதுபோக்குக்காக கூடும் பகுதிகளாகும். இவை தவிர மேலும் 20 பகுதிகளையும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.

    ஆனால் கடல் அரிப்பு மற்றும் மண் குவியல் இந்த கடற்கரைப் பகுதிகளில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக 3 கி.மீ. பகுதி, கடல் அரிப்பாலும், 7 கி.மீ. பகுதி மண் குவியலாலும் பாதிக்கப்படும் என்று 2018-ம் ஆண்டு தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால், சென்னை கடற்கரைப் பகுதி மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்கம் (சி.எஸ்.ஆர்.ஆர்.) என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ், தற்போது மெரினா முதல் கோவளம் வரையிலான கடற்பகுதி ரூ.100 கோடியில் மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, இப்பகுதியில் மரத்தால் ஆன நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன.

    மேலும் மக்கள் பங்களிப்பின் அடிப்படையிலும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே, இத்திட்டத்தை செயல்படுத்த தனித்துவமான நிர்வாக அமைப்புடன் கூடிய சிறப்பு நோக்கு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று உறுப்பினர் செயலாளர் பரிந்துரைத்துள்ளார்.

    இதை பரிசீலித்த தமிழக அரசு, ரூ.100 கோடியில் திட்டத்தை செயல்படுத்த சிறப்பு நோக்கு அமைப்பை உருவாக்க முன் அனுமதியளித்துள்ளது. அந்த சிறப்பு நோக்கு அமைப்பில், வீட்டுவசதித்துறை செயலாளரை தலைவராகவும், வனத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், டுபிட்கோ தலைவர் உள்ளிட்ட 15 பேரை உறுப்பினர்களாகவும், பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலாளரை தலைமைச் செயல் அதிகாரியாகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளது.

    திட்டத்துக்கான ஒப்பந்தம் கோருதல் உள்ளிட்ட பணிகளை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலாளர் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கருணாநிதியின் எழுத்தாற்றலை என்றென்றும் போற்றும் வகையில் மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்டமான பேனா வடிவம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
    • மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சரும் மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார்.

    அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

    உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவத்தில் பிரமாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது. கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களும் அந்த நினைவிடத்தில் அமைகிறது.

    இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.80 கோடி செலவில் பிரமாண்ட பேனா வடிவம் ஒன்றை 134 அடி உயரத்துக்கு(42 மீட்டர்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

    மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது.

    கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர். பாலத்தில் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கப்படும். இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படும்.

    கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் இரும்பிலான இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்படும்.

    கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது போல் மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை 133 அடியாகும். அதாவது 40.5 மீட்டர் உயரம் கொண்டது. ஆனால் மெரினா கடலில் அமையும் பேனா நினைவு சின்னம் திருவள்ளுவர் சிலையை விட 1 அடி அதிக உயரம் கொண்டதாக 134 அடியில் அதாவது 42 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்' என்று பெயரிடப்பட உள்ளது. கிட்டத்தட்ட ரூ.80 கோடி மதிப்பில் இது அமைய உள்ளது.

    மும்பையில் சத்ரபதி சிவாஜிக்கு அரபிக்கடலில் மகாராஷ்டிரா அரசு நினைவு சின்னம் கட்டி வருகிறது.

    அதேபோல் மெரினாவில் வங்க கடலில் பேனா நினைவு சின்னம் எழுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    கடலோர ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதிக்காக விரைவில் இந்த திட்டம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    எழுத்தாற்றல் மிக்கவரான கருணாநிதி பல நூல்களை எழுதியவர். அவர் தமிழுக்கு, இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பேனா நினைவு சின்னம் நடுக்கடலில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நினைவு சின்னம் வங்க கடலில் அமையும் போது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும்.

    • நேப்பியர் பாலத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையிலான கடற்கரை பகுதி முழுவதையும் போலீசார் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
    • மெரினா சர்வீஸ் சாலைகளுக்கு செல்லும் வழியில் தடுப்புகளை அமைத்து சந்தேக நபர்களை கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து குதித்து மர்மமான முறையில் உயிரிழந்தார்.

    இதனை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது. இதில் பள்ளிக்கூடம் முழுமையாக சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி போராட்டத்துக்கு வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக தகவல்களை பரப்பி ஆட்களை திரட்டியதும், திட்டமிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டதும் தெரிய வந்தது. இந்த போராட்டமே கலவரத்தில் முடிந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    இது தொடர்பாக தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சென்னை ஐகோர்ட்டும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் வன்முறை சம்பவங்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பதை முழுமையாக கண்டறிந்து அனைவரையும் கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கனியாமூரில் நடைபெற்ற போராட்டத்தை போன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை தீவிரமாக நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    மாநில உளவுப்பிரிவு போலீசார் இந்த எச்சரிக்கை தகவலை டி.ஜி.பி.சைலேந்திர பாபு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகள் மற்றும் போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு அருகில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் டி.ஐ.ஜி.க்கள் ஆகியோருக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

    அனைத்து மாவட்டங்களிலும் மாணவியின் மரணத்தை மையமாக வைத்து போராட்டங்கள் நடத்த திட்டமிட்டால் அதனை முன்கூட்டியே கணித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும் என்றும் உளவு பிரிவினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட மாநகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெறும் இடங்களில் தேவையில்லாமல் யாரும் திரண்டு விடக்கூடாது என்றும், அதுபோன்று யாராவது கூடினால் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தி கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்டு மாணவர்கள், இளைஞர்கள் போராடியதை போன்று பெரிய அளவிலான போராட்டத்துக்கு தயாராக வேண்டும் என்று சிலர் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பினர்.

    'ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி' என்ற பெயரில் மாணவியின் புகைப்படத்துடன் வாட்ஸ்அப் குழுக்களில் இந்த தகவல் பரப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மெரினா கடற்கரையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    நேப்பியர் பாலத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையிலான கடற்கரை பகுதி முழுவதையும் போலீசார் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    மெரினா சர்வீஸ் சாலைகளுக்கு செல்லும் வழியில் தடுப்புகளை அமைத்து சந்தேக நபர்களை கண்காணித்து வருகிறார்கள். சந்தேகத்துக்கிடமாக சுற்றி திரிபவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடைபெற்ற விவேகானந்தர் இல்லம் அருகே கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்கும் வகையில் பலர் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களில் பதிவுகளை போட்டு வருகிறார்கள். இதுபோன்ற பதிவுகளை வெளியிடும் நபர்களின் பின்னணி குறித்தும் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீமதியின் மரணத்தை மையமாக வைத்து தேவையில்லாத வதந்திகள், வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை வெளியிடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசாரும், மாநில அளவிலான சைபர் கிரைம் அதிகாரிகளும் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மாணவியின் மரணத்தை வைத்து மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெற்று விட கூடாது என்பதில் போலீசார் தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

    • மெரினா கடற்கரையில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது.
    • மெரினா கடற்கரை மணல் பரப்பில் கூட்டம் கூட்டமாக நாய்கள் வலம் வருகின்றன.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் குவிந்துள்ள குப்பைகள், காலி மதுபாட்டில்களால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள மெ‌ரினா கட‌ற்கரை‌ ஆ‌சியா‌விலேயே ‌மிக ‌நீ‌ண்ட மணல் பரப்பு கொண்ட கடற்கரையாக திகழ்கிறது. மாநகராட்சி சார்பில் கடற்கரை புல்வெளியில் உலோக சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

    மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. அங்குள்ள புல்வெளிகளில் பச்சை பசேலென அழகிய செடி, கொடிகள் கண்ணைக்கவரும் வகையில் உள்ளன.

    கொரோனா ஊரடங்கின்போது மெரினா கடற்கரை மூடப்பட்டதால் கடற்கரை மணல் பரப்பில் அமைக்கப்பட்டிருந்த 1000-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் ராட்டினங்கள் பழுதடைந்து சிதைந்து அலங்கோலமாக கிடக்கின்றன.

    சிறுவர் ராட்டினங்கள் துருப்பிடித்து, வெயில், மழையால் மேலும் சிதைந்து வருகின்றன. கடைகள் மற்றும் ராட்டினங்கள் மீண்டும் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளன.

    இதனால் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அலங்கோலமாக கிடக்கும் இந்த கடைகள் மற்றும் ராட்டினங்களை பார்த்து வேதனை அடைந்து வருகிறார்கள். மேலும் கடற்கரை மணற்பரப்பில் காலி மதுபாட்டில்கள், குப்பைகள், சாக்குகள், நெகிழிகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கடற்கரை அழகை பாதிக்கச்செய்யும் இந்த பழுதடைந்த கடைகள் மற்றும் ராட்டினங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், மேலும் மணல் பரப்பை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மேலும் கடற்கரையில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் அங்கு பெரும் சுகாதார சீர்கேடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. கடற்கரை மணல் பரப்பில் சொறி நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. கடற்கரை மணல் பரப்பில் கூட்டம் கூட்டமாக நாய்கள் வலம் வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகிறார்கள்.

    கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அலங்கோலமாக உள்ள மெரினா கடற்கரையை பார்த்து கவலை அடைந்துள்ளனர். கடற்கரை அழகை பாதிக்கச்செய்யும் குப்பைகள், காலி மதுபாட்டில்கள், சாக்குகள், நெகிழிகளை உடனடியாக அகற்ற வேண்டும், மெரினா கடற்கரை மணல் பரப்பு பகுதியை தினமும் சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கன மழையின் பாதிப்பால் மெரினா கடற்கரையில் உள்ள சிறிய பெட்டி கடைகள் , மற்றும் ராட்டினங்கள் துருப்பிடித்து பழுதடைந்து அலங்கோலமாக ஆங்காங்கே கிடக்கின்றன.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் குளம் போல் தேங்கி வடியாமல் நிற்கும் மழை தண்ணீரால் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது.

    ஆ‌சியா‌விலேயே ‌மிக ‌நீ‌ண்ட கட‌ற்கரை என பெயர் பெற்றது சென்னை மெ‌ரினா கட‌ற்கரை‌ ஆகும். இக்கடற்கரையின் இய‌ற்கை அழகை மெருகூ‌ட்ட செய்ய மாநகராட்சி சார்பில் கண்ணைக் கவரும் வகையில் புல்வெளியில் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மெரினா கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கிறார்கள்.

    சென்னை மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 3.கிலோ மீட்டர் நீளத்திற்கு அங்குள்ள புல்வெளிகளை மாநகராட்சி ஊழியர்கள் சீரமைத்து அழகுபடுத்தினார்கள்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த பலத்த மழையால் மெரினா கடற்கரை மணற் பரப்பில் குளம் போல் மழைத்தண்ணீர் தேங்கி நின்றது. தற்போது வெயில் அடிக்கத் தொடங்கினாலும் அங்குள்ள கடற்கரை மணல் பரப்பில் உள்ள மழைத் தண்ணீர் தனித்தனி குட்டை தீவுகள் போல் காணப்பட்டு வருகிறது மேலும் அங்குள்ள மழைத் தண்ணீரில் பாசிபிடித்து துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் அங்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்றும் அபாயம் உருவாகி உள்ளது. கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றம் வீசுவதை கண்டு முகம் சுளிக்கிறார்கள். கன மழையின் பாதிப்பால் மெரினா கடற்கரையில் உள்ள சிறிய பெட்டி கடைகள் , மற்றும் ராட்டினங்கள் துருப்பிடித்து பழுதடைந்து அலங்கோலமாக ஆங்காங்கே கிடக்கின்றன. மழையால் இந்த கடைகள் மேலும் சிதைந்து வருகின்றன. கடைகள் மற்றும் ராட்டினங்கள் மீண்டும் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளன.

    இதனால் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் துர்நாற்றம் வீசி அலங்கோலமாக உள்ள மெரினாவை பார்த்து கவலையடைந்துள்ளனர். கடற்கரை அழகை பாதிக்கச் செய்யும் இந்த மழைநீரை உடனடியாக அகற்றி மெரினா மணல் பரப்பு பகுதியை மீண்டும் சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு பொதுமக்கள்,மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாணவர்கள் யாரும் கூட்டமாக கூடிவிடக்கூடாது என்பதற்காக மெரினா சர்வீஸ் சாலையில் தடுப்புகளை வைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    ஆன்லைனிலேயே தொடர்ந்து தேர்வுகளை நடத்தக்கோரி மதுரையில் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    இதைதொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. ஆனால் இனி ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறாது என்றும், நேரடியாகவே தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இருப்பினும் மாணவர்கள் ஆன்லைனிலேயே தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக நேற்று தகவல் பரவியது. இதைதொடர்ந்து அங்கு போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

    ஜல்லிக்கட்டுக்கு திரண்டதை போன்று ஆன்லைன் தேர்வை வலியுறுத்தியும் மாணவர்கள் அதிகளவில் கூடிவிடக்கூடாது என்பதற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் மெரினா கடற்கரை பகுதியில் குவிக்கப்பட்டனர்.

    மெரினா கடற்கரை

    சமூக வலைதளங்களிலும் மாணவர்கள் போராட்டம் தொடர்பான தகவல்களை பரப்பினார்கள். இதனை கருத்தில் கொண்டு மெரினாவில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்தவர்களை பிடித்து போலீசார் விசாரித்து அனுப்பினார்கள்.

    மாணவர்கள் யாரும் கூட்டமாக கூடிவிடக்கூடாது என்பதற்காக மெரினா சர்வீஸ் சாலையில் தடுப்புகளை வைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று மாலையில் மாணவர்கள் போராட்டத்துக்கு வரப்போவது இல்லை என்ற தகவல் பரவியது. இருப்பினும் போலீசார் இரவிலும் கண்காணித்தனர்.

    இன்று 2-வது நாளாகவும் மெரினா கடற்கரையில் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அண்ணாசதுக்கம், ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரையில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கடற்கரை மணல் பரப்பிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.


    ×