search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகம் சுழிக்க வைக்கும் குப்பைகள்- மெரினா கடற்கரையில் நோய் பரவும் அபாயம்

    • மெரினா கடற்கரையில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது.
    • மெரினா கடற்கரை மணல் பரப்பில் கூட்டம் கூட்டமாக நாய்கள் வலம் வருகின்றன.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் குவிந்துள்ள குப்பைகள், காலி மதுபாட்டில்களால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள மெ‌ரினா கட‌ற்கரை‌ ஆ‌சியா‌விலேயே ‌மிக ‌நீ‌ண்ட மணல் பரப்பு கொண்ட கடற்கரையாக திகழ்கிறது. மாநகராட்சி சார்பில் கடற்கரை புல்வெளியில் உலோக சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

    மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. அங்குள்ள புல்வெளிகளில் பச்சை பசேலென அழகிய செடி, கொடிகள் கண்ணைக்கவரும் வகையில் உள்ளன.

    கொரோனா ஊரடங்கின்போது மெரினா கடற்கரை மூடப்பட்டதால் கடற்கரை மணல் பரப்பில் அமைக்கப்பட்டிருந்த 1000-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் ராட்டினங்கள் பழுதடைந்து சிதைந்து அலங்கோலமாக கிடக்கின்றன.

    சிறுவர் ராட்டினங்கள் துருப்பிடித்து, வெயில், மழையால் மேலும் சிதைந்து வருகின்றன. கடைகள் மற்றும் ராட்டினங்கள் மீண்டும் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளன.

    இதனால் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அலங்கோலமாக கிடக்கும் இந்த கடைகள் மற்றும் ராட்டினங்களை பார்த்து வேதனை அடைந்து வருகிறார்கள். மேலும் கடற்கரை மணற்பரப்பில் காலி மதுபாட்டில்கள், குப்பைகள், சாக்குகள், நெகிழிகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கடற்கரை அழகை பாதிக்கச்செய்யும் இந்த பழுதடைந்த கடைகள் மற்றும் ராட்டினங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், மேலும் மணல் பரப்பை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மேலும் கடற்கரையில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் அங்கு பெரும் சுகாதார சீர்கேடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. கடற்கரை மணல் பரப்பில் சொறி நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. கடற்கரை மணல் பரப்பில் கூட்டம் கூட்டமாக நாய்கள் வலம் வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகிறார்கள்.

    கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அலங்கோலமாக உள்ள மெரினா கடற்கரையை பார்த்து கவலை அடைந்துள்ளனர். கடற்கரை அழகை பாதிக்கச்செய்யும் குப்பைகள், காலி மதுபாட்டில்கள், சாக்குகள், நெகிழிகளை உடனடியாக அகற்ற வேண்டும், மெரினா கடற்கரை மணல் பரப்பு பகுதியை தினமும் சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×