search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார்- மெரினா கடற்கரையில் போலீஸ் குவிப்பு
    X

    தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார்- மெரினா கடற்கரையில் போலீஸ் குவிப்பு

    • நேப்பியர் பாலத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையிலான கடற்கரை பகுதி முழுவதையும் போலீசார் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
    • மெரினா சர்வீஸ் சாலைகளுக்கு செல்லும் வழியில் தடுப்புகளை அமைத்து சந்தேக நபர்களை கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து குதித்து மர்மமான முறையில் உயிரிழந்தார்.

    இதனை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது. இதில் பள்ளிக்கூடம் முழுமையாக சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி போராட்டத்துக்கு வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக தகவல்களை பரப்பி ஆட்களை திரட்டியதும், திட்டமிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டதும் தெரிய வந்தது. இந்த போராட்டமே கலவரத்தில் முடிந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    இது தொடர்பாக தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சென்னை ஐகோர்ட்டும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் வன்முறை சம்பவங்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பதை முழுமையாக கண்டறிந்து அனைவரையும் கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கனியாமூரில் நடைபெற்ற போராட்டத்தை போன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை தீவிரமாக நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    மாநில உளவுப்பிரிவு போலீசார் இந்த எச்சரிக்கை தகவலை டி.ஜி.பி.சைலேந்திர பாபு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகள் மற்றும் போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு அருகில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் டி.ஐ.ஜி.க்கள் ஆகியோருக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

    அனைத்து மாவட்டங்களிலும் மாணவியின் மரணத்தை மையமாக வைத்து போராட்டங்கள் நடத்த திட்டமிட்டால் அதனை முன்கூட்டியே கணித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும் என்றும் உளவு பிரிவினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட மாநகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெறும் இடங்களில் தேவையில்லாமல் யாரும் திரண்டு விடக்கூடாது என்றும், அதுபோன்று யாராவது கூடினால் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தி கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்டு மாணவர்கள், இளைஞர்கள் போராடியதை போன்று பெரிய அளவிலான போராட்டத்துக்கு தயாராக வேண்டும் என்று சிலர் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பினர்.

    'ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி' என்ற பெயரில் மாணவியின் புகைப்படத்துடன் வாட்ஸ்அப் குழுக்களில் இந்த தகவல் பரப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மெரினா கடற்கரையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    நேப்பியர் பாலத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையிலான கடற்கரை பகுதி முழுவதையும் போலீசார் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    மெரினா சர்வீஸ் சாலைகளுக்கு செல்லும் வழியில் தடுப்புகளை அமைத்து சந்தேக நபர்களை கண்காணித்து வருகிறார்கள். சந்தேகத்துக்கிடமாக சுற்றி திரிபவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடைபெற்ற விவேகானந்தர் இல்லம் அருகே கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்கும் வகையில் பலர் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களில் பதிவுகளை போட்டு வருகிறார்கள். இதுபோன்ற பதிவுகளை வெளியிடும் நபர்களின் பின்னணி குறித்தும் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீமதியின் மரணத்தை மையமாக வைத்து தேவையில்லாத வதந்திகள், வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை வெளியிடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசாரும், மாநில அளவிலான சைபர் கிரைம் அதிகாரிகளும் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மாணவியின் மரணத்தை வைத்து மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெற்று விட கூடாது என்பதில் போலீசார் தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

    Next Story
    ×