search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mansukh Mandaviya"

    • கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணிவது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தியது.
    • கொரோனா விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறினார்.

    புதுடெல்லி:

    சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் புதுவகை கொரோனா பரவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.

    இந்தியாவிலும், அரசு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    கொரோனா பரவலை தடுக்க மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. முடிவில், முக கவசம் அணிவது அவசியம் என அரசு வலியுறுத்தியது.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா நெறிமுறையைப் பின்பற்றுவது சாத்தியமில்லை என்றால் தேசிய நலன் கருதி ஒற்றுமை யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

    இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராகுல் காந்திக்கு மட்டும் அரசு கடிதம் எழுதுவது ஏன்? ராகுல் காந்திக்கு கிடைத்து வரும் ஆதரவை பார்த்து மத்திய அரசு பயந்துபோய் விட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்கிறது என குற்றம்சாட்டியது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் மேலவையில் மன்சுக் மாண்டவியா பேசுகையில், நாங்கள் கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. நாடு முழுவதும் பெரிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கலன்களை நிறுவி உள்ளோம். அவை செயல்பாட்டில் உள்ளன. நாட்டில் போதிய அளவுக்கு உள்ள மருந்துகளை மறுஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

    • கொரோனா கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளில் மாநிலங்கள் கவனம் செலுத்த அறிவுரை
    • முக கவசம் அணிவது மற்றும் கைகளை கழுவுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள்.

    சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கும். உலகம் முழுவதும் தினமும் சராசரியாக 5.87 லட்சம் வரை கொரோனா பதிவாகி உள்ள நிலையில், இந்தியாவில் சராசரியாக தினசரி 153 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அடுத்து வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவச பயன்பாடு, கைகளை கழுவுவது உள்ளிட்ட கொரோனா நடத்தை விதிகளை பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உறுதி செய்வதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    கொரோனா தொற்று குறித்து தீவிர கண்காணிப்பது, தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவற்றை உறுதி செய்ய அனைத்து பரிசோதனைகளையும் அதிகரிக்க மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

    புதிய வகை கொரோனா பரவலை தடுக்க அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் குறிப்பிட்ட பயணிகளிடம் இரண்டு சதவீதம் வரை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பல்வேறு உலக நாடுகள் சைக்கிளை அதிக அளவில் பயன்படுத்துகின்றன.
    • இந்தியாவில் ஏழையின் வாகனமாக சைக்கிள் கருதப்படுகிறது.

    பூமியை காப்போம், வாழ்வை காப்போம் என்ற தலைப்பில் சைக்லத்தான் போட்டிக்கு தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. டெல்லியில் இந்த போட்டியை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். 


    அப்போது பேசிய மத்திய மந்திரி கூறியுள்ளதாவது: மக்கள் தங்கள் உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும். காற்று மாசுப்பாட்டை ஏற்படுத்தாத வாகனம் சைக்கிள். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் அது முக்கியப் பங்காற்றுகிறது. பல்வேறு உலக நாடுகள் சைக்கிளை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் ஏழையின் வாகனமாக சைக்கிள் கருதப்படுகிறது.

    வசதி படைத்தவர்களும் சைக்கிளை பயன்படுத்த வேண்டும். நமது வாழக்கையில் சைக்கிள் ஓட்டுவதை ஒரு அங்கமாக மாற்றி பசுமை பூமியை உருவாக்க வேண்டும். உடற்பயிற்சிகள் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும். இதனால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், மன வலிமையும் பெற முடியும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தடுப்பூசி பற்றாக்குறையால் உலகம் தவித்தபோது, இந்தியா சவாலை ஏற்றுக் கொண்டது.
    • மருத்துவ பரிசோதனைகளுக்கான வலுவான செயல்முறைகளை நாம் உருவாக்க வேண்டும்.

    ஐதராபாத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கு, தேசிய விலங்கு வள மையத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அவர் கூறியுள்ளதாவது: 

    இந்த மையம் 21 ஆம் நூற்றாண்டில் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கு ஆதரவாக தரமான சேவைகளை வழங்குவதன் மூலம், நாட்டின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்க முடியும்.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் உலகம் தவித்தபோது, இந்தியா இந்த சவாலை ஏற்றுக்கொண்டது. நமது விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி தங்கள் திறமையை நிரூபித்தனர். வெளிநாட்டு தடுப்பூசிகளின் இறக்குமதிக்கு 5-10 ஆண்டுகள் வரை ஆகும் போது, இந்தியா தடுப்பூசிகளை ஒரு வருட காலத்திற்குள் தயாரித்தது.

    தற்போது உலகில் தயாரிக்கப்படும் நான்கு மாத்திரைகளில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. எனவே, இப்போது இந்தியாவை மருந்து உற்பத்திக்கு மட்டுமல்ல மருந்து ஆராய்ச்சிக்கும் மையமாக மாற்ற விரும்புகிறோம். இதற்கு தேவைப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்கான வலுவான செயல்முறைகளை நாம் உருவாக்க வேண்டும். இதற்கு இந்த மையம் முக்கியப் பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • கடந்த ஓராண்டில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
    • அடுத்த 6 மாதங்களில் 50 கோடி சுகாதார கார்டுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

    பாராளுமன்ற மக்களவையில் இன்று உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளதாவது:

    ஏழை ஏழை மக்கள்தான் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணைந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். 2018 ஆண்டு தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ், 50 கோடி மக்களுக்கு சுகாதார பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும் நோயாளிகளுக்கு மருத்துவ செலவு குறைந்துள்ளது. ஆயுஷ்மான் திட்ட பயனாளிகளுக்காக தினசரி ஏழு முதல் எட்டு லட்சம் சுகாதார அட்டைகள் அச்சிடப்படுகின்றன.

    அடுத்த 6 மாதங்களில் 50 கோடி அட்டைகள் பயனாளிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும். கடந்த ஓராண்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1,500-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 22,000 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் இது குறித்து மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கொரோனா காலத்தில் கூட மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.
    • 2014-ம் ஆண்டில் இருந்து பள்ளி செல்லும் மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பாராளுமன்ற வாளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டில் உள்ள மருத்துவர்களின் தேவையை நிறைவேற்றவும், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவிலே படிப்பதற்கு மோடி அரசு முயற்சி எடுத்து வருகிறது.

    நாட்டில் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 87 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுக்கு முன்பு 53 ஆயிரம் இடங்களாக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்கள் தற்போது 96 ஆயிரமாக உயர்ந்துள்ளன. அதே வேளையில், முதுகலை மருத்துவ இடங்கள் 31 ஆயிரத்தில் இருந்து 63 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது 105 சதவீதம் அதிகமாகும். 2014-ம் ஆண்டில் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகள் 2022-ல் 648 ஆக உயர்ந்துள்ளன.

    புதிய கல்விக் கொள்கை மாநிலங்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரிடையேயும் பாராட்டை பெற்று வருகிறது. கொரோனா காலத்தில் கூட மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

    2014-ம் ஆண்டில் இருந்து பள்ளி செல்லும் மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது. பள்ளிகளில் இருந்து மாணவிகளின் இடைநிற்றலை தடுப்பதில் கழிவறைகள் முக்கிய பங்காற்றியுள்ளன. 2.5 லட்சம் பள்ளிகளில் சுமார் 4.5 லட்சத்திற்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் விளைவாக இடைநிற்றல் விகிதம் 17 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாகக் குறைந்துள்ளது என தெரிவித்தார்.

    • பேறுகால இறப்பை குறைக்கும் இலக்கை இந்தியா எட்டியுள்ளது.
    • இந்த மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் கருத்து.

    இந்திய தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014-16-ஆம் ஆண்டில் பேறுகால இறப்பு 130-ஆக இருந்ததாகவும், 2018-20-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அது 97-ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய சுகாதாரக் கொள்கையின் அடிப்படையில் பேறுகால இறப்பை 100-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதை இந்தியா எட்டியுள்ளதாகவும், தற்போது 2030-ஆம் ஆண்டுக்குள் பேறுகால இறப்பை 70-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சராசரியை விட குறைவான அளவே பேறுகால இறப்பு விகிதம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது புதிய மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும், மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு தரமான சிகிச்சை மற்றும் பராமரிப்பை உறுதி செய்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் அவரது டுவிட்டர் பதிவை சுட்டி காட்டியுள்ள பிரதமர் மோடி, பேறு கால தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளதற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. இந்த மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து, நமது செயல்பாடுகள் வலுவாக உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

    • சுகாதார சேவைகள் கிடைப்பதில் பணக்காரர், ஏழை இடையே இடைவெளி குறைந்துள்ளது.
    • சுகாதார பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவது, முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது.

    அனைவருக்கும் ஆரோக்கிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் இரண்டு நாள் ஆரோக்கிய மந்தன் என்ற திட்டத்தை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்

    மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவார், நித்தி ஆயோக் உறுப்பினர் வினோத் பால், உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர் எஸ் சர்மா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 


    நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, மிகப்பெரிய உலகளாவிய பொது சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மிக முக்கியமான பங்குதாரர்களாக இந்த திட்டத்தின் பயனாளிகள் இருப்பதாக கூறினார்.

    நாட்டில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 19 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் 24 கோடிக்கும் அதிகமான சுகாதார அட்டை எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

    இந்த நடவடிக்கை நாட்டின் சுகாதார பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதில் ஒரு முக்கிய மைல் கல் என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்து மக்களுக்கும் சுகாதார சேவைகள் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும், நாட்டில் சுகாதார சேவை கிடைப்பதில் பணக்காரர், ஏழைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

    • சுகாதாரப் பணியாளர்களுக்கு மத்திய மந்திரி நன்றி தெரிவித்துள்ளார்.
    • அனைவருக்கும் ஆரோக்கிய திட்ட பயனாளிகளுக்கு சுகாதார அட்டை வழங்கப்படும்.

    2014-ஆம் ஆண்டு முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் நாடு முழுவதும் குறைந்துள்ளதாக இந்திய மாதிரி பதிவு அமைப்பு வெளியிட்ட புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக அளவில் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இந்தியா ஒரு முக்கிய சாதனையைப் படைத்துள்ளதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராடடு தெரிவித்துள்ளார்.

    மேலும் குழந்தை இறப்பை குறைப்பதற்கு அயராது உழைத்த அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். 


    முன்னதாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் 4 வது ஆண்டு விழாவில் பயனாளிகளுடன் உரையாடிய மன்சுக் மாண்டவியா, அனைவருக்கும் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் மத்திய அரசின் நோக்கத்தை இந்த திட்டம் வலுப்படுத்தியுள்ளது என்றார்.

    ஏழை மக்களும் சுகாதார சேவையை பெறும் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சேராத மாநிலங்களும் சேருமாறு அவர் வலியுறுத்தினார். ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளுக்கும் விரைவில் முத்திரையுடன் கூடிய அட்டை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • ரத்த தானம் செய்ய முன்வருமாறு அனைத்து மக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
    • ஒவ்வொரு இரண்டு வினாடிகளிலும், இந்தியாவில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.

    விடுதலை அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாமை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். அப்போது அவர் ரத்த தானம் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    விடுதலையின் அமிர்தப்பெருவிழாவைப் போல ரத்த தான அமிர்தப் பெருவிழாவும் பெரிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். இதையொட்டி நாடு தழுவிய அளவில் நடைபெறும் மெகா தன்னார்வ ரத்த தான இயக்கத்தில் கலந்து கொண்டு, ரத்த தானம் செய்ய முன் வருமாறு அனைத்து குடிமக்களையும் கேட்டுக் கொள்கிறேன். 


    ரத்த தானம் செய்வது தேசிய தேவையை பூர்த்தி செய்யும். ரத்த தானம் செய்வது சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் ஒரு சிறந்த உன்னதமான சேவையாகும். ஒவ்வொரு இரண்டு வினாடிகளிலும், இந்தியாவில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. வாழ்நாளில் மூவரில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.

    2021 புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் ஆண்டுத் தேவை சுமார் 1.5 கோடி யூனிட்கள். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், ரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை, மேலும் 1 யூனிட் ரத்தம் மூன்று உயிர்களைக் காப்பாற்றும். ஒரு நபரின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. ஒவ்வொரு 90 நாட்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • இந்தியாவில் 13 லட்சம் காச நோயாளிகள் உள்ளனர். இவர்களில் 9 லட்சம் பேர் தங்களை தத்தெடுப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
    • உக்ரைனில் மருத்துவ படிப்பினை பாதியிலேயே விட்டு வந்த மாணவர்கள், இந்தியாவில் தங்களது படிப்பினை தொடர முடியாது.

    சென்னை:

    மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா டெல்லியில் காணொலிக்காட்சி மூலமாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உலக சுகாதார அமைப்பு 2030-ம் ஆண்டுக்குள் காசநோயை முடிவுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயம் செய்துள்ள இலக்கில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்னதாக, இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் காச நோய் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார்.

    காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காச நோயை தனிநபர் மற்றும் சமூக பங்களிப்புகளின் மூலம் நமது நாட்டில் இருந்து ஒழித்துவிடலாம். காச நோயாளிகளுக்கு சத்துணவு, மருத்துவ சிகிச்சைக்கான மருந்து, தொழில்சார்ந்த உதவிகள் செய்யும் வகையிலான தத்தெடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 13 லட்சம் காச நோயாளிகள் உள்ளனர். இவர்களில் 9 லட்சம் பேர் தங்களை தத்தெடுப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேரை அரசு சாரா அமைப்புகள், தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள், மக்கள் பிரதிநிதிகள் தத்தெடுத்துள்ளனர். மீதம் உள்ள காச நோயாளிகளும் விரைவில் தத்தெடுக்கப்படுவார்கள்.

    தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் மூலமாக சத்தான உணவு, மருந்துகள் தொடர்ச்சியாக கிடைக்கும்போது காச நோயில் இருந்து விரைவில் குணம் அடைந்துவிடுவார்கள். கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர் ரத்தத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதையொட்டி 17-ந்தேதி (இன்று) முதல் அடுத்த மாதம் (அக்டோர்) 2-ந்தேதி வரை நாடு முழுவதும் ரத்த தான முகாம் நடத்தப்பட உள்ளது.

    உக்ரைனில் மருத்துவ படிப்பினை பாதியிலேயே விட்டு வந்த மாணவர்கள், இந்தியாவில் தங்களது படிப்பினை தொடர முடியாது. மருத்துவ படிப்பினை நிறைவு செய்துவிட்டு வந்த மாணவர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கான நுழைவு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் மருத்துவ பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள்.

    12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நிபுணர்கள் குழு இன்னும் அனுமதி வழங்கவில்லை. அனுமதி கிடைத்த உடன் தடுப்பூசி செலுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய அரசு தகவலின்படி, தமிழகத்தை பொறுத்தவரையிலும் 50 ஆயிரத்து 788 பேர் காச நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 1,680 பேர் தத்தெடுக்கும் திட்டத்துக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதேபோல புதுச்சேரியில் 907 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 651 பேர் தங்களை தத்து, கொடுக்க முன்வந்துள்ளனர்.

    • திருத்தப்பட்ட தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • புற்றுநோய்க்கான மருந்து உள்பட புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    2022-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். இந்தப் பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் இடம்பெற்றுள்ளன.

    இதில் புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் ஐவர்மெக்டின், முபுரோசின் போன்ற நோய்த் தொற்றை தடுக்கும் மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

    அதே நேரத்தில் ரேனிடிடைன், சுக்ரால்பேட், எரித்ரோமைசின், ரேன்டாக், ஜென்டாக் உள்பட 26 மருந்துகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மிகவும் விலை குறைந்த மாற்று மருந்துகள் கிடைப்பதால் இவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ×