search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "madurai high court"

    • நான் எந்த தவறும் செய்யவில்லை என்று போலீசாரிடம் கூறியும் அவர்கள் கேட்கவில்லை.
    • மனுதாரரின் கணவருக்கு அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பவுசியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நானும், எனது கணவர் முகமதுஅலி ஜின்னாவும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வசித்து வருகிறோம். எனது கணவர் இருசக்கர வாகனத்தில் சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார். இதுவே எங்களது வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

    தினசரி வியாபாரத்துக்கு காலை 5 மணிக்கு சென்று இரவு 8 மணிக்கு வீடு திரும்புவார். ஆனால் கடந்த 8-ந் தேதி வியாபாரத்திற்காக சென்ற எனது கணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    எனது கணவரின் நண்பர்கள் கொடுத்த தகவலின்படி எனது கணவர் பழனி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்தது. உடனே நானும் எனது குடும்பத்தாரும் பழனி போலீஸ் நிலையத்திற்கு சென்றபோது, அவரை பார்க்கவிடாமல் போலீசார் தடுத்தனர். அடுத்த நாள் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அப்பொழுது அவர் உடம்பு முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது. அவரிடம் நாங்கள் பேசியபோது, டீ வியாபாரம் செய்தபோது ஒரு பெண்ணை நான் கேலி செய்ததாக கூறி அங்கிருந்தவர்கள் தன்னை தாக்கி புகார் அளித்ததால், போலீசார் கைது செய்தனர். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று போலீசாரிடம் கூறியும் அவர்கள் கேட்கவில்லை என்றார். தற்போது எனது கணவர் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

    எனவே எனது கணவரின் நிலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், எனது கணவருக்கு தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரரின் கணவருக்கு அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

    • கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிப்பதோ செய்யக்கூடாது.
    • கோவில்களில் ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழாவில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்க கூடாது என்றும், கோவில் வழிபாட்டில் அனைவரையும் சமமாக நடத்த உத்தரவிட கோரியும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிப்பதோ செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    மேலும், கோவில்களில் ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • சமாதான கூட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆதிதிராவிட நலத்துறை இணை இயக்குனரை இணைத்து, மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும்.
    • சட்ட, ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை:

    மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 1-ந்தேதி அன்று பொங்கல் திருநாளையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற பொங்கல் தினத்தன்று (ஜனவரி மாதம் 15-ந்தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளன.

    அவனியாபுரம் அம்பேத்கர்நகர் பகுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவனியாபுரத்தில் பிற சமூகத்தை சேர்ந்தவர்களும் வசிக்கிறார்கள். கடந்த ஆண்டில் கோர்ட்டு உத்தரவின்பேரில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஆனால் கோர்ட்டு உத்தரவின்படி அனைத்து சமூகத்தினரையும் சேர்க்காமல் குறிப்பிட்ட சமூகத்தினர் அடங்கிய குழு மட்டும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த குழுவில் ஆதிதிராவிடர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். இது ஏற்புடையதல்ல. எனவே கடந்த ஆண்டு நடத்தப்பட்டதைப்போல கோர்ட்டு உத்தரவின்படி அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து வருகிற பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தரப்பில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கென அரசு பல ஏற்பாடுகள் மற்றும் செலவுகளைச் செய்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கென நிலையான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் உள்ளன.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கென பல சமூகத்தினரும், அமைப்புகளும் கமிட்டி உருவாக்குகின்றனர். பலவகை சமாதான கூட்டம் நடத்தியும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலைமையில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    வழக்கு விசாரணையில் மனுதாரர் தரப்பில், 2022-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் படி ஒருங்கிணைப்புக் குழுவில் அதிகாரிகளும், ஆலோசனைக்குழுவில் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்றிணைத்து குழு உருவாக்கி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஆண்டும் அதேபோல் குழு அமைத்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள் ஆலோசனை குழுவின் வேலை என்ன ஒருங்கிணைப்பு குழுவின் வேலை என்ன என கேள்வி எழுப்பினர்.

    இதற்கு மனுதாரர் தரப்பில், ஆலோசனை குழுவில் கிராமத்தின் அனைத்து சமுதாய உறுப்பினர்களும் இணைந்து காளைகளை தேர்வு செய்வது, பந்தல்கால் நடுவது, விழாக்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு அரசு தரப்பில், இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பொருத்தவரை ஆலோசனைக்குழு என எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு கருத்துக்களையும் கேட்ட நீதிபதிகள், தங்களது உத்தரவில் அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து, நாளை (13-ந் தேதி) மாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும். சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அவனியாபுரம் அனைத்து சமுதாய கிராம மக்கள் இணைந்த ஆலோசனைக்குழுவை உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்.

    சமாதான கூட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆதிதிராவிட நலத்துறை இணை இயக்குனரை இணைத்து, மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும்.

    ஒருவேளை மதுரை அவனியாபுரம் அனைத்து சமுதாய மக்கள் இணைந்த ஜல்லிக்கட்டுக்குழு அமையப்பெற்று, நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏதேனும் சட்ட, ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயதுவரம்போ, தகுதியோ, எந்தவித நெறிமுறையோ வகுக்கப்படவில்லை.
    • கலையை பற்றி தெரியாதவர்களுக்கும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

    மதுரை:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. கலைமாமணி விருது 5 பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது.

    அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு "கலை இளமணி" விருதும், 19 முதல் 35 வயது வரை "கலை வளர்மதி" விருதும், 36 முதல் 50 வயது வரை "கலை சுடர்மணி" விருதும், 51 முதல் 60 வயது வரை "கலை நன்மணி" விருதும், 61 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு "கலை முதுமணி" விருதும் வழங்கப்படுகிறது.

    கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயதுவரம்போ, தகுதியோ, எந்தவித நெறிமுறையோ வகுக்கப்படவில்லை. இந்த நிலையில் 2019-2020-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 20-2-2021 அன்று வழங்கப்பட்டது. இதில் தகுதி இல்லாத பல நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்ட சான்றிதழில் அந்த அமைப்பின் உறுப்பினர், செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோரின் கையொப்பம் இல்லாமல் அவசர கதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

    தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதை திரும்ப பெற வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே தகுதியில்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கலையை பற்றி தெரியாதவர்களுக்கும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

    பின்னர் 2019-2020-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் இன்று வழங்கினர்.

    அப்போது 2019-20 ஆம் ஆண்டு தகுதியானவர்களுக்கு தான் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருந்தால், அது தொடர்பான தேர்வு குழுவை மாற்றியமைக்கவும், விருதுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

    • காலியான பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
    • கரூர் மாவட்ட துணை சேர்மன் பதவியை தி.மு.க.வினர் கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மதுரை:

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த திருவிகா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கரூர் மாவட்டத்தில் 12 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உள்ளனர். 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் 9 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாக அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். மீதமுள்ள 3 இடங்களில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர்.

    கரூர் மாவட்டத்தின் சேர்மனாக கண்ணதாசனும், துணை சேர்மனாக தனுஷ் (எ) முத்துக்குமார் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் 2021 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனுஷ் (எ) முத்துக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    பின்னர் துணை சேர்மன் பதவிக்கான தேர்தல் நடந்தது. அதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி தி.மு.க. உறுப்பினர்கள் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தினர். இதனால் அந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கரூர் மாவட்ட துணை சேர்மன் பதவியை தி.மு.க.வினர் கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் முழு தேர்தலையும் வீடியோ பதிவு செய்து கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை சேர்மன் பதவிக்கான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள், வருகிற 19-ம் தேதி கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை சேர்மன் பதவிக்கான தேர்தலை நடத்தலாம். தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். தேர்தல் முடிந்த பின் வாக்குகளை எண்ணலாம்.

    ஆனால் இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது. இது தொடர்பான அறிக்கையை சீலிட்ட கவரில் வருகிற 22-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை, மனுதாரர் அணுகலாம் என உத்தரவிட்டு, விசாரணையை 22-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
    • சாட்சிகளை கலைக்கவோ, தலைமறைவாகவோ முயற்சிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்த நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரை ரூ.4 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததாக போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த மாதம் 19-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில், அவர் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் தவறுதலாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

    அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் ஏற்கனவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது இது தொடர்பாக மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

    விசாரணை முடிவில், மனுதாரர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, தலைமறைவாகவோ முயற்சிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்த நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    • திருக்குறளை கற்பித்து, மாணவர்களுக்கு ஒழுக்கத்தை அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவை.
    • 108 அதிகாரங்களை சேர்க்கும் அரசாணையை 3 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும்.

    மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பாலில் இடம் பெற்றிருக்கும் 108 அதிகாரங்களில் உள்ள குறள்களை 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் படிக்க, கடந்த 2017-ம் ஆண்டில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. அதை கண்டிப்பாக அமல்படுத்தி, தேர்வில் இதுதொடர்பான கேள்விகள் இடம் பெறும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன், 6-ம் வகுப்பில் இருந்து பிளஸ்-2 வரையிலான வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களை சேர்க்கும் பணிகள் நடைபெறுகின்றன, திருக்குறள் சம்பந்தப்பட்ட கேள்விகளும் தேர்வில் இடம் பெற்றுள்ளன என்று தெரிவித்தார். அதுபற்றி விவரங்களையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: திருக்குறள், தனிமனித மற்றும் பொது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. அதனால்தான் உலக அளவில் திருக்குறள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. கற்பழிப்பு, பொருளாதார மோசடி, பேராசை, மதுப்பழக்கம், சகிப்பின்மை, நேர்மை இன்மை, சமத்துவம் இன்மை, பெரியவர்களுக்கு அவமரியாதை, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, மத துவேஷம் போன்ற பல பிரச்சினைகளை தற்போது உலகம் எதிர் கொள்கிறது.

    இது போன்ற தனிப்பட்ட பிரச்சினைகள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேற்கண்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் திருக்குறள் தீர்வை வழங்கி இருக்கிறது. எனவே, சகிப்புத்தன்மையும் நல்லிணக்கமும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க மாணவர்களுக்கு திருக்குறளை கற்பிப்பதன் மூலம் ஒழுக்க நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவை. எனவே திருக்குறளின் அந்த 108 அதிகாரங்களை பாடத்திட்டத்தில் சேர்க்கும் அரசாணையை 3 மாதத்தில் முழுமையாக நிறைவேற்றி, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரவு
    • கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்கும் விதமாக நடவடிக்கை

    தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் அர்ச்சகர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்கும் விதமாக செல்போன் தடையை அனைத்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர். 


    மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த ஏற்கனவே தடை உள்ளது. செல்போன்களுடன் செல்லும் பக்தர்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு அதற்கான லாக்கர்களில் செல்போனை வைத்துவிட வேண்டும். சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து விட்டு செல்போன்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் அனைத்து கோவில்களிலும் செல்போன்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைமுறை இனி அனைத்துக் கோவில்களிலும் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளை ஒட்டுமொத்தமாக பாதிக்கிறது.
    • பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது.

    மதுரையை சேர்ந்த வெரோனிகா மேரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பள்ளி மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் மாணவிகள் மனரீதியாக, உடல் ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றனர். இதை தடுக்க நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் முறையாக செயல்பட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்வு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கலாசாரம், தொழில்நுட்ப மாற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் பல்வேறு காரணங்களினால் சமூகத்தில் சில தீமைகள் ஏற்படுகின்றன. இதில் கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தலும் அடங்கும். இது கவனிக்கப்படாமல் உள்ளது. பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளை ஒட்டுமொத்தமாக பாதிக்கின்றது. எனவே கடும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

    பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது. பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க வசதியாக பாடப்புத்தகங்களில் '14417' என்ற எண் அச்சிடப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தால், அவர்களுக்கு உதவ ஒரு குழுவும் செயல்படுகிறது என சமீபத்தில் அரசு அறிவித்தது. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.

    அதே சமயம் பள்ளிகளில் நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்படாத விவகாரத்தை அப்படியே விட்டுவிட முடியாது. புகார் அளிக்க வசதிகள் அனைத்து பள்ளிகளிலும் நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் பாலியல் குற்றங்களை தவிர்க்கும் வகையில் கொள்கைகளை உருவாக்கி அவற்றை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    ஒவ்வொரு பள்ளியிலும் புகார் தெரிவிப்பதற்கும், தீர்வு காண்பதற்கும் உரிய நடைமுறையை ஏற்படுத்தி, அதை மாணவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதற்காக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு மனநல ஆலோசனை மையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கோப்புகளை உரிய நேரத்தில் சேர்க்காமல் காலம் தாழ்த்துவதை ஏற்க இயலாது.
    • ஒத்துழைக்கவில்லை என்றால், அதிகாரிகள் சிறைக்கு செல்ல நேரிடும்.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நான் தீவிர சிவபக்தை. தொன்மையான ஆதீன மடங்களில் ஒன்றான தருமபுர ஆதீன மடத்தின் நிர்வாகத்தின் கீழ் திருச்சி உய்யக்கொண்டான் மலையில் உஜ்ஜீவநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு வலதுபுறம் தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 5 ஏக்கர் நிலத்தை தனிநபர்கள் பலர் ஆக்கிரமித்துள்ளனர். இது சம்பந்தமாக கீழ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அந்த நிலம் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் அந்த நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படவில்லை. இப்படியே விட்டு விட்டால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்டு காணாமல் போகும் நிலை ஏற்படும். எனவே உஜ்ஜீவநாதர் கோவில் நிலத்தை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் இதுசம்பந்தமாக உரிய விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அ

    ப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்காக அளவீடு செய்யும் பணி தாமதமாகி வருகிறது என்று தெரிவித்தார். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் கூறினார். இதை கேட்ட நீதிபதிகள், ஒரே அலுவலக வளாகத்தில் இருக்கும் அதிகாரிகள் தங்களிடம் இருக்கும் கோப்புகளை அடுத்தவரிடம் உரிய நேரத்தில் சேர்க்காமல் காலம் தாழ்த்துவதை ஏற்க இயலாது என்று கூறினர்.

    கோவில் நில ஆக்கிரமிப்புகளை மீட்க அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்றால், பணியிடை நீக்கம் செய்யப்படுவது மட்டுமல்லாமல் சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி, விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • இளைஞர்களின் மனநிலை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
    • தவறான சிந்தனையை போக்கி, இயல்பு வாழ்க்கை வாழச் செய்ய வேண்டும்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது மகன் மீது பாலியல் சட்டப்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவனை பிடித்து வைத்துள்ளனர். தனது மகனை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும், அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர் திருவடிகுமார் ஆஜராகி வாதாடுகையில், மனுதாரர் மகன் உள்பட 2 பேர் கைதாகி உள்ளனர்.

    அவர்கள் இருவரும் சிறுவர்கள் என்பதால் சிறார் நீதிச்சட்டத்தின்படி விசாரிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மனுதாரர் தெரிவிப்பதைப்போல சட்டத்திற்கு புறம்பாக அவரது மகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, இளைஞர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேரும், 18 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்கள். தற்போது இவர்கள் பாலியல் குற்றவாளிகளாக பார்க்கப்படுகின்றனர். இதற்கு செல்போன்களே காரணம்.

    ஹார்மோன் மாற்றங்களினால் செல்போன்களில் வரும் ஆபாச படங்களை இளைஞர்கள் பார்த்து, மனக் குழப்பத்திற்கு ஆளாகி, தவறான வழியில் திசை திருப்பி விடப்படுகிறார்கள். இதனால் பாலியல் சட்டத்தின்கீழ் கைதாகி சிறையில் அடைக்கப்படுகின்றனர். இளைஞர்களின் மனநிலை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.

    குற்றச்சம்பவத்தில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பது அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அவர்களுக்கு முறையான ஆலோசனை வழங்கி, தவறான சிந்தனையை போக்கி, இயல்பு வாழ்க்கையை வாழச்செய்ய வேண்டும்.

    இதுதொடர்பாக தமிழக அரசு உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். கைதாகும் இளைஞர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அவர்கள் எதிர்காலத்தில் பெரும் குற்றங்களில் ஈடுபட கூடியவர்களாக மாற வாய்ப்புள்ளது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

    தன் மீதான வழக்கில் முன் ஜாமீன் கோரி கமல் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஒத்திவைத்தது.
    மதுரை:

    அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கமலுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை  கிளையில் கமல்  மனு தாக்கல் செய்திருந்தார்.


    அம்மனுவில், இந்து-முஸ்லிம்கள் இடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் எந்த கருத்தையும் பேசவில்லை. கோட்சேவை பற்றி மட்டுமே பேசிய நிலையில் இந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நான் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே கமலுக்கு எதிராக 76 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  கமல் பேசிய வீடியோ பதிவு விசாரணையின் போது நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.

    அப்போது கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா? என கேள்வி எழுப்பினர். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது ரேடியோவில் காந்தியை சுட்டவர் ஒரு இந்து என அறிவிக்கப்பட்டது என்று கமல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

    கமலை கைது செய்து விசாரிக்க முகாந்திரம் உள்ளதா என அரசு தரப்பிடம் நீதிபதி கேட்டார். அதற்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். அதனால் கைது பற்றி அச்சப்படதேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மேலும் தேர்தல் முடியும் வரை சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஊடகங்கள், அரசியல் கட்சிகள் விவாதிக்க வேண்டாம் என வலியுறுத்தினார். 
    ×