என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

(கோப்பு படம்)
பள்ளி பாடத்திட்டத்தில் திருக்குறளின் 108 அதிகாரங்களை சேர்க்க மதுரை உயர்நீதிமன்றம் கெடு
- திருக்குறளை கற்பித்து, மாணவர்களுக்கு ஒழுக்கத்தை அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவை.
- 108 அதிகாரங்களை சேர்க்கும் அரசாணையை 3 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பாலில் இடம் பெற்றிருக்கும் 108 அதிகாரங்களில் உள்ள குறள்களை 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் படிக்க, கடந்த 2017-ம் ஆண்டில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. அதை கண்டிப்பாக அமல்படுத்தி, தேர்வில் இதுதொடர்பான கேள்விகள் இடம் பெறும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன், 6-ம் வகுப்பில் இருந்து பிளஸ்-2 வரையிலான வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களை சேர்க்கும் பணிகள் நடைபெறுகின்றன, திருக்குறள் சம்பந்தப்பட்ட கேள்விகளும் தேர்வில் இடம் பெற்றுள்ளன என்று தெரிவித்தார். அதுபற்றி விவரங்களையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: திருக்குறள், தனிமனித மற்றும் பொது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. அதனால்தான் உலக அளவில் திருக்குறள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. கற்பழிப்பு, பொருளாதார மோசடி, பேராசை, மதுப்பழக்கம், சகிப்பின்மை, நேர்மை இன்மை, சமத்துவம் இன்மை, பெரியவர்களுக்கு அவமரியாதை, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, மத துவேஷம் போன்ற பல பிரச்சினைகளை தற்போது உலகம் எதிர் கொள்கிறது.
இது போன்ற தனிப்பட்ட பிரச்சினைகள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேற்கண்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் திருக்குறள் தீர்வை வழங்கி இருக்கிறது. எனவே, சகிப்புத்தன்மையும் நல்லிணக்கமும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க மாணவர்களுக்கு திருக்குறளை கற்பிப்பதன் மூலம் ஒழுக்க நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவை. எனவே திருக்குறளின் அந்த 108 அதிகாரங்களை பாடத்திட்டத்தில் சேர்க்கும் அரசாணையை 3 மாதத்தில் முழுமையாக நிறைவேற்றி, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.