search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallakurichi Student Dead"

    • மாணவியின் தந்தை தரப்பில் தங்கள் தரப்பில் டாக்டர் ஒருவரையும் பிரேத பரிசோதனையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • இதனை ஐகோர்ட்டு ஏற்க மறுத்த நிலையில் மாணவியின் தந்தை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் மாணவி ஸ்ரீமதி பள்ளி மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நேற்று ஐகோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய அறிவுறுத்தியதுடன் தனியாக டாக்டர் குழுவை நியமிக்க அறிவுறுத்தி இருந்தது.

    அப்போது மாணவியின் தந்தை தரப்பில் தங்கள் தரப்பில் டாக்டர் ஒருவரையும் பிரேத பரிசோதனையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஐகோர்ட்டு ஏற்க மறுத்த நிலையில் மாணவியின் தந்தை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தங்கள் தரப்பு கோரிக்கை ஐகோர்ட்டில் ஏற்கப்படாததால் மாணவியின் பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது. வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    • மாணவி உடல் ஐகோர்ட்டு உத்தரவுபடி மறுபிரேத பரிசோதனை இன்று கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற உள்ளது.
    • இதையொட்டி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த மரணத்துக்கு நீதிகேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் செய்தனர்.

    இவர்களுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கலவரமாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து இந்த மரணம் தொடர்பாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று கள்ளக்குறிச்சி வந்தனர்.

    அவர்கள் முதல்கட்ட விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மாணவி உடல் ஐகோர்ட்டு உத்தரவுபடி மறுபிரேத பரிசோதனை இன்று கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது.

    வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை நடைபெறுவதையொட்டி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பேர் கொண்ட குழுவாக சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யவந்துள்ள டாக்டர்கள் மற்றும் அங்குள்ள நிலவரங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கலவரம் நடந்த இடம், சூறையாடப்பட்ட பள்ளிக்கு சென்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    • நேப்பியர் பாலத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையிலான கடற்கரை பகுதி முழுவதையும் போலீசார் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
    • மெரினா சர்வீஸ் சாலைகளுக்கு செல்லும் வழியில் தடுப்புகளை அமைத்து சந்தேக நபர்களை கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து குதித்து மர்மமான முறையில் உயிரிழந்தார்.

    இதனை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது. இதில் பள்ளிக்கூடம் முழுமையாக சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி போராட்டத்துக்கு வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக தகவல்களை பரப்பி ஆட்களை திரட்டியதும், திட்டமிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டதும் தெரிய வந்தது. இந்த போராட்டமே கலவரத்தில் முடிந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    இது தொடர்பாக தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சென்னை ஐகோர்ட்டும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் வன்முறை சம்பவங்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பதை முழுமையாக கண்டறிந்து அனைவரையும் கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கனியாமூரில் நடைபெற்ற போராட்டத்தை போன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை தீவிரமாக நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    மாநில உளவுப்பிரிவு போலீசார் இந்த எச்சரிக்கை தகவலை டி.ஜி.பி.சைலேந்திர பாபு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகள் மற்றும் போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு அருகில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் டி.ஐ.ஜி.க்கள் ஆகியோருக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

    அனைத்து மாவட்டங்களிலும் மாணவியின் மரணத்தை மையமாக வைத்து போராட்டங்கள் நடத்த திட்டமிட்டால் அதனை முன்கூட்டியே கணித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும் என்றும் உளவு பிரிவினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட மாநகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெறும் இடங்களில் தேவையில்லாமல் யாரும் திரண்டு விடக்கூடாது என்றும், அதுபோன்று யாராவது கூடினால் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தி கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்டு மாணவர்கள், இளைஞர்கள் போராடியதை போன்று பெரிய அளவிலான போராட்டத்துக்கு தயாராக வேண்டும் என்று சிலர் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பினர்.

    'ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி' என்ற பெயரில் மாணவியின் புகைப்படத்துடன் வாட்ஸ்அப் குழுக்களில் இந்த தகவல் பரப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மெரினா கடற்கரையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    நேப்பியர் பாலத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையிலான கடற்கரை பகுதி முழுவதையும் போலீசார் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    மெரினா சர்வீஸ் சாலைகளுக்கு செல்லும் வழியில் தடுப்புகளை அமைத்து சந்தேக நபர்களை கண்காணித்து வருகிறார்கள். சந்தேகத்துக்கிடமாக சுற்றி திரிபவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடைபெற்ற விவேகானந்தர் இல்லம் அருகே கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்கும் வகையில் பலர் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களில் பதிவுகளை போட்டு வருகிறார்கள். இதுபோன்ற பதிவுகளை வெளியிடும் நபர்களின் பின்னணி குறித்தும் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீமதியின் மரணத்தை மையமாக வைத்து தேவையில்லாத வதந்திகள், வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை வெளியிடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசாரும், மாநில அளவிலான சைபர் கிரைம் அதிகாரிகளும் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மாணவியின் மரணத்தை வைத்து மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெற்று விட கூடாது என்பதில் போலீசார் தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய கல்வி மாவட்டத்தில் 346 மெட்ரிக் பள்ளிகளும், 148 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் உள்ளது.
    • இன்று பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 6 மெட்ரிக் பள்ளிகளும், அம்பத்தூர் கல்வி மாவட்டத்தில் ஒரு மெட்ரிக் பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டு:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மர்மமாக இறந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று காலை பள்ளி முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது கலவரமாக மாறியது.

    ஏராளமானோர் பள்ளிக்குள் புகுந்து பஸ்களுக்கு தீவைத்தனர். மேலும் பள்ளியில் இருந்த பொருட்கள் அனைத்தையும் நொறுக்கி சூறையாடினர்.

    இதனை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் தொடர்ந்து தனியார் பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தனியார் பள்ளிகள் விடுமுறை விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இதனால் இன்று காலை தனியார் பள்ளிகள் செயல்படுமா? அல்லது மூடப்ப டுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவியது.

    இந்த நிலையில் அரசின் எச்சரிக்கையை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் 7 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய கல்வி மாவட்டத்தில் 346 மெட்ரிக் பள்ளிகளும், 148 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் உள்ளது.

    இன்று பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 6 மெட்ரிக் பள்ளிகளும், அம்பத்தூர் கல்வி மாவட்டத்தில் ஒரு மெட்ரிக் பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    விடுமுறை அளித்துள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினர் விளக்கம் அளிக்க திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் உத்தரவிட்டு உள்ளார்.

    செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் மொத்தம் 1,702 பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் 860, 842 தனியார் பள்ளிகள் என அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டன.

    தனியார் பள்ளிகள் இயங்குவதை கண்காணித்து வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா தெரிவித்து உள்ளார்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலவரத்தில் ஈடுபட்டதாக 192 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சின்னசேலம்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரிய நெசலூர் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    இவர் கடந்த 13-ந்தேதி பள்ளி விடுதியில் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்ததாக பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது.

    பதறிபோன ஸ்ரீமதியின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்தனர். தங்களது மகள் சாவில் மர்மம் உள்ளது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சின்னசேலம் போலீசில் புகார் செய்தனர்.

    இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவியின் உடலை வாங்க மறுத்து 5 நாட்களாக போராட்டம் செய்தனர்.

    இதற்கிடையில் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மாணவி ஸ்ரீமதி உயிரிழக்கும் முன்பே உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது கை-கால்கள் உடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதனால் ஆவேசம் அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் மறியல் போராட்டம் செய்தனர்.

    தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை சமரசம் செய்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதிஅளித்ததின் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதற்கிடையில் மாணவியின் மர்மமரணம் விவகாரம் நேற்று விஸ்வரூபம் எடுத்தது. நேற்று காலை மாணவியின் உறவினர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கனியாமூரில் உள்ள பள்ளி முன்பு திரண்டனர். திடீரென்று அவர்கள் பள்ளிக்குள் புகுந்தனர். அப்போது போலீசார் தடுப்புக் கட்டைகளை அமைத்து அவர்களை தடுத்தனர். அதனையும் மீறி போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் செல்ல முயற்சித்ததால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

    ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது சரமாரி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, சேலம் போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் உள்பட 67 போலீசார் காயம் அடைந்தனர்.

    என்றாலும் போராட்டம் தணியவில்லை. நேரம் செல்ல செல்ல கலவரமாக மாறியது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசாரால் முடியவில்லை. பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கு நின்றிருந்த பள்ளி பஸ்களை அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். இதில் 15 பஸ்கள், 4 டிராக்டர்கள், 3 போலீஸ் ஜீப்புகள் எரிக்கப்பட்டன.

    இதையடுத்து பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதனால் பள்ளி வளாகம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

    நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து வஜ்ரா வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். அதன் பின்னரும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசாரின் வஜ்ரா வாகனத்தையும் கலவரக்கும்பல் சேதப்படுத்தியது.

    எனினும் நிலைமை மோசமானதால் போலீசார் வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கலவரக் கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடியது. காலையில் தொடங்கிய போராட்டம் மாலை 3 மணிக்கு பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது.

    தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சின்னசேலம் விரைந்தார்.

    அப்போது அவர் கூறுகையில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    எனினும் சட்டம்-ஒழுங்கை கருதி சின்னசேலம், கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பள்ளி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சந்தேகப்படும் நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.ஜி.பி.யின் அதிரடி நடவடிக்கையால் பள்ளி தாளாளர் ரவிக்குமார் (48), பள்ளி செயலாளர் சாந்தி (44), பள்ளி முதல்வர் சிவசங்கரன் (57) ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து பள்ளி வேதியியல் ஆசிரியர் ஹரிபிரியா (40), கணித ஆசிரியை கீர்த்திகா (28) ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது சந்தேக மரணம் 177 (ஐ) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கலவரத்தில் ஈடுபட்டதாக 192 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×